மாலை பூக்கும் நோய்க்குள் உய்த்திடவே - அழகுராஜ்
மாலை பூக்கும் நோய்க்குள் உய்த்திடவே - அழகுராஜ்
இசை சமகாலத்தைக் கொண்டு இலக்கிய பனுவல்களை அணுகும் இயல்புள்ளவர். அவரது கட்டுரைகள் பகடி தொனித்திடினும் ஆழ்ந்த பொருள் இருப்பும் சிறுக சிறுக சுற்றி வருவதே மறுக்க முடியாது. இந்த சுழல் அவரது கலை, பண்பாட்டியல், பழக்கவழக்கம் மீதான பார்வைகளாக வெளியே தெரிகிறது. “உய்யடா உய்யடா உய்" கட்டுரை நூலில் இடம் பெற்றுள்ள ஆ. இரா. வெங்கடாசலபதியின் எழுக நீ புலவன் நூல் பற்றிய கட்டுரையில் இசை பாரதியின் சின்ன சங்கரன் கதை பற்றியும் அவருக்கு நெருக்கமான பகடி பற்றியும் பேசுகிறார். இந்த இடத்தில் வ.ரா கூறிய வாசகத்தை மேற்கோளிடுவது பொருத்தமாக இருக்கும். சின்ன சங்கரன் கதையை குறித்து வ.ரா “நமது ஜனங்கள் இப்படியும் வாழத் தகுமோ என்ற துக்கம் தோய்ந்த கிண்டலாக தான் நாங்கள் அந்த புத்தகத்தில் கண்டோம்." எனக் கூறுகிறார். அதே மாதிரியான துக்கத்தின் சாயலைக் கடந்து எதார்த்தத்தை பேசும் பகுதியாக இசையின் உரைநடை இருக்கிறது. இது இசையின் கவிதைக்கும் பொருந்தும். பாரதியின் பகடிக்குள் துயரம் இருந்ததென்றால் இசையின் பகடிக்குள் இன்றைய சூழலின் எதார்த்தம் இருக்கிறது. இவ்விரண்டின் நோக்கமும் சமூகத்தினை வெளிப்படுத்துதல் என்ற இடத்தில் கிளை பரப்பி பிரிகிறது எனலாம்.
வாட்சப் காலத்தின் வழியே நாம் வந்த வழியே பின்னோக்கி பார்த்து எப்படி இருந்தத நான் இப்படி ஆயிட்டேன் என்பது போன்ற பகடி இசைக்குள் இருந்தாலும் எக்காலத்துக்கும் மாறிடாத பசியைப் போன்ற காதலையும் அதனுள்ளான சுகத்தையும் திருவள்ளுவரின் காதல் கசியும் கவிமனத்தையும் காட்டுகிறார் இசை. அகராதிகளின் அருஞ்சொற்களோடு அன்றாடம் காதலுக்குள் நடக்கும் இன்றைய செயல்பாடுகளும் சேர்ந்து பேசப்படுவது இக்கட்டுரையின் சிறப்பு. இன்றைய காலத்தில் காதல் மனத்தோடு ஒன்றிய கவிதைகளை குறித்து பேசும் போது மனுஷ்யபுத்திரனை நாம் அவ்வளவு எளிதாக கடந்து சென்று விட முடியாது. “மனுசின் கவிதைப் புத்தகத்தைப் புரட்டும் புது வாசகன் சில பக்கங்களிலேயே தன்னை அதில் பார்க்க துவங்கி விடுகிறான். அவனை பரவசம் பற்றிக் கொள்கிறது அவன் கண்கள் நிறைந்து நிறைந்து வழிகின்றன." என்ற வரிகளில் அதிக உண்மை உண்டு. மனைவிக்கு நெருக்கமான அனுசரணையான சொற்களை சேர்க்கும் வித்தை மனுஷிடம் உண்டு. அவரது கவிதைகள் காதலின் இன்பத்திலும் இன்பம் கலந்த துன்பத்திலும் இருப்பவன் நினைக்கும் நனவு நிலையை சொற்களாக்குகிறது. அச்சொற்களே பரவசம் கொள்ளச் செய்கிறது. அந்தப் பரவசத்தின் முடிவில் அதனை கொடுத்த கவிஞனின் பக்கம் பார்வை திரும்பும் போது அங்கு மனுஷ் நிற்கிறார். அவரை ஆரத்தழுவ வாசகன் முயல்கிறான். அந்த தழுவலுக்குள் பரவசத்தின் உச்சம் குலைந்து கண்களின் முன் தனக்குரியவள் வந்து கண்ணீராக அமுதசுரபி ஆகாரம் போல் கொட்டிக் கொண்டிருக்கிறாள்.
தாகத்தினை தணிக்க முடியவில்லை எனினும் தான் தாகத்தில் இருப்பது ஏதோ ஒரு வடிவத்தில் பிறர் மூலம் உணர்த்தப்படுவதில் இருக்கும் நிறைவு மனுஷ் கவிதைகளில் கிடப்பதே இசை தனது வாசிப்பனுபவத்தின் வழிபட்டு சில கவிதைகளை மேற்கோளாக்கி “நகை மொக்குள் உள்ளது ஒன்று" என்கிற மனுசின் “தித்திக்காதே" கவிதை தொகுப்பு குறித்து எழுதியுள்ள கட்டுரையில் முன்வைக்கிறார். அந்தரங்கத்தின் ரகசியம் பேசப்படுவதில் உள்ள ஆர்வம் கலந்த அச்சத்தின் வழியே நீளும் மனுஷின் கவிதைகள் தேங்கி விடாமல் செல்வதில்தான் அதன் மேலோங்கிய தன்மை இருக்கிறது. மனுஷ் தொடக்கூடிய மிக முக்கியமான இன்றைய கால்களுக்கு அவசியப்படும் புள்ளி “புரிதல்". அந்தப் புரிதலை புரிந்து கொள் என்பதாக வழிந்துரைக்காமல் கூறியது கூறியிடும் பரவாயில்லை என்று தன்னிலை விளக்கத்தை பல கோணங்களில் மனுஷ் நிகழ்த்துகிறார்.
மனுஷ்யபுத்திரனின் கவியுலகு குறித்தான மற்றொரு கட்டுரை “மொழி அலங்காரங்களை குப்பை கூடைக்கு அனுப்பியவன்". இக்கட்டுரை மனுஷ் கையாளும் மொழி மற்றும் புத்திகளை அவரது கவிதைகள் மற்றும் கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கொண்டது. தமிழ் கவிதை மரபு நூற்றாண்டு பழைமை கொண்டது. இக்கவிதை மரபிற்குள் பல்வகை மாற்றங்கள் காலந்தோறும் பல கவிஞர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டே தான் இருந்துள்ளது. அத்தகைய மாற்றத்தை முன் கொண்டு வந்தவர்களில் மனுஷீம் ஒருவர் என்பதை அவரது கவிதையின் துணை கொண்டு நிறுவுகிறார் இசை. மனுஷின் கவிதை மொழிக்கான வரையறையை அவரது “நீராலானது" கவிதை தொகுப்பின் முன்னுரை வழியே “இதயபூர்வமான உரையாடலின் அணுக்கமான மொழி" என்று கொடுக்கிறார் இசை. இதன் வழியே அந்த இதயத்தை தொடும் மனுஷ் அகவய காதலைக் கடந்து புறவய சிக்கல்கள் வாயிலாகவும் மனதை தொடக்கூடிய பாதைகள் மீது இக்கட்டுரை கவனம் செலுத்துகிறது. அதேசமயம் காதல் மொழியையும் அதன் சைகைகளையும் கவனிக்க தவறவில்லை. இன்றைய காதலுக்கான ஊடகமாக வாட்ஸ் அப் இருக்கிறது போல கொஞ்ச காலத்திற்கு முன் தொலைபேசி அந்த ஊடகமாக இருந்ததன் குறிப்புகளோடு அந்தக் காலத்தினுடைய காதல் பற்றிய எல்லாவித விவரங்களும் பெருகியதாகவே மனுஷின் கவிதைகள் இருக்கிறது. அதை மெதுவாகத் தொட்டு செல்லும் இடமாக இசையின் இந்த கட்டுரை இருக்கிறது.
இத்தொகுப்பின் தலைப்பின் வழியே நாம் கவனிக்கத்தக்க கட்டுரைகள் சுகுமாரனை பற்றியவை. கவிதைக்குள் எளிய மொழியில் காத்திரமாக செயல்பட்டவர் சுகுமாரன். அவரை தனது ஆதர்சமாக இசை கொண்டிருந்ததும் அவர்கள் இருவருக்கும் ஆன இலக்கியம் சார் உரையாடல், வளர்ந்த உணர்வு நிலையோடு பெருகிய உறவையும் பேசும் கட்டுரையில் சுகுமாரனின் கவிதை மீதான விமர்சனமும் வைக்கப்படுகிறது. எல்லா மனிதர்களும் எல்லாரிடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. “வார்த்தையில் வாழ்தல்" கட்டுரையில் கவி மொழியும் பொன் மொழியும் சேர்த்து பேசப்படுகிறது. பொன்மொழிகள் எல்லாம் என்றுமே கவிதைத்தனம் கொண்டிருக்காது. எனினும் சில வாசகங்கள் கவிமொழி கொண்டும் பொன்மொழியாகியும் இருப்பதை அந்த கட்டுரை அலசுகிறது. “மனிதன் மகத்தான சல்லிப்பயல்" என்று ஜி. நாகராஜன் கட்டுரையை தொடங்கி வைக்கிறார். இக்கட்டுரையில் ஷங்கர் ராமசுப்பிரமணியனின் “குட்டி இளவரசியின் அறிதல்கள்" கவிதை கட்டுரையை வேறொரு தளத்திற்கு நகர்த்துவதாக நான் உணர்ந்தேன். அது பொன்மொழியை தாண்டிய கிறுக்குத்தனங்கள் பொருந்திய கவிதைத் தளம். சலபதியைப் பற்றிய கட்டுரையில் ஆய்வுக்குரியவர் சலபதி என்பதை அவரது ஆய்வு முடிவுகள் மற்றும் தரவுகள் வாயிலாக அழுத்தமாக வழிமொழியும் இசை “கவிதை முட்டாள்தனத்தில் தான் சுவாரஸ்யம் கொள்கிறது, உச்சமடைகிறது என்பது என் எண்ணம்." என்கிறார். அந்த முட்டாள்தனத்தை அல்லது அப்பாவித்தனத்தை பற்றிய கவிதைகளில் ஒன்று தான் ஷங்கர் ராமசுப்பிரமணியனின் “குட்டி இளவரசியின் அறிதல்கள்" மற்றொரு கவிதை கலாப்ரியாவை பற்றி பேசும் போதெல்லாம் அவரை அடையாளப்படுத்தும் கவிதையாக அல்லது அவரது அடையாளமாகிப் போன கவிதையாக விஜய் அய்யப்பன் அண்ணன் சொல்லும் “சுண்டல்" கவிதை. அதுவும் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.
கலாப்ரியாவை பற்றி பேச்சு வரும்போது எல்லாம் பக்கத்தில் பெரும் ஆடை தொங்கலுடன் வண்ணதாசன் நிற்பார். “என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன்" என்ற கட்டுரை வண்ணதாசனை பற்றியது. வண்ணதாசனின் மொழியின் மீது தான் எத்தனை பெரிய பிடிப்பு வாசகர் மத்தியில் இருக்கிறது. அதில் உள்ள கனிவு அப்போதைக்கானதாக மட்டும் விடாமல் பொழுதை தள்ளிப் போடச் சொல்லி உட்கார செய்யக் கூடியது. இசை தனது வாசிப்பின் வழி “வண்ணதாசன் கதைகள் போய் சேரும் இடத்தில் அல்ல, போகும் வழியில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த அவசரக்குடுக்கைக்கு கொஞ்ச காலம் பிடித்தது " என்கிறார். இந்த கட்டுரைக்குள் சாம்ராஜ் பங்களிப்பு அதிகம். அவரது வழியாகத்தான் பொன்மொழி பற்றிய கட்டுரை எழுதிய இசை “மகத்தான மனிதர்களால் மகத்தான காரியங்களை மட்டுமல்ல மகத்தான தூக்கத்தையும் அருள முடிகிறது." என்றொரு பொன்மொழியை அருளியுள்ளார்.
கலாப்ரியாவின் அடையாளமாக “சுண்டல்" இருப்பது போல சுகுமாரனுக்குரிய அடையாளமாக “கையில் அள்ளிய நீர்" இருக்கிறது. அந்த கவிதையை தொட்டும் தொடாமல் பகடியோடு “உய்யடா உய்யடா உய்" கட்டுரை தொடங்குகிறது. இக்கட்டுரையில் கவிதை செயல்பாட்டுடைய முக்கிய அம்சத்தை சுகுமாரனின் கவிதை வழியாக உயிர் கொள்ளும் ஆறுதல் அல்லது பதற்றம் என்கிறார் இசை. பொய்களின் பித்தலாட்டமாக விளங்கும் சுகுமாரனின் கவிதைகளும் அதற்கான தலைப்பாக்கமும் வள்ளுவரின் வழி நின்று பேசப்படுகிறது. மாலை மலரும் நோய் உருவாக்கத்தில் சுகுமாரனும் துணைக்கு இருக்க வேண்டும் என்ற ஆசை இசைக்குள் இருந்ததை தொகுப்பின் முதல் கட்டுரையிலேயே தெரிந்து கொள்ளலாம்.
“பழகப் பழக பெண்
உடல் மட்டும் ஆவாளா?
முட்டாளே, நான்
மழையில் திளைக்கும் பெரு நிலமில்லையா?
ஈரம் கசிய விரியும் என் மழிக்கப்படாத உறுப்பு
சிறையல்ல, முட்டாளே தபோவனம்
ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
உய்யடா! உய்யடா! உய்!..." என்ற கட்டுரையில் இடம்பெறும் கவிதை மேற்கோள் வழி நாம் “ஆண்பால்-பெண்பால்-அன்பால்" கட்டுரைக்குள் செல்லலாம். பெண்கள் குறித்தான பார்வையை முன் வைக்கிற இக்கட்டுரையில் ஆண் மைய மொழியாளர்கள் ஆண்கள் எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் உண்மையை ஒத்துக் கொண்டு காதல் உணர்வுக்குள் செல்கிறார் இசை. “வெறும் காமம். நாம் பயப்படும் படி வேறொன்றுமில்லை… என்பது காதலில் இருந்து தப்ப முயல்பவர்கள் கைக்கொள்ளும் எளிய வழிமுறை. ரயில் முன் பாய்ந்து இரண்டு துண்டாகப் போவதை வெறும் காமம் என்று எப்படி சுருக்குவது? பிச்சைதான் பிரதான மீனில் கள்ளக்காதல் ஜோடிகள் ஏன் கட்டியணைத்தபடியே விடுதி அறைகளில் விஷம் அருந்தி மடிக்கிறார்கள்?" என்கிற ஆழமான கேள்வியை முன்வைத்து காமத்திற்கும் காதலுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பிற்கு காதல் அர்த்தம் கொடுக்கிறார். இந்தக் கட்டுரையின் முடிவு “ ஒரு கவிஞனின் எல்லா பித்தலாட்டங்களையும் பொறுத்துக் கொண்டு எப்போதும் அவனை ஏந்தி பிடிக்க எல்லா பருவத்திலும் ஒருத்தி இருக்கிறாள். அவள் பொருட்டே அவன் காணி மும்மாரி காண்கிறது."என்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் வழியே “மாலை மலரும் நோய்" நூலுக்குள் சென்று வரலாம். இசையின் ஆழ்மன விருப்பத்தினுடைய வெளிப்பாடோடு அவருக்கு பிடித்த திருவள்ளுவர் என்ற கவிஞன் இணைந்து கொண்டதால் வெளிப்பட்ட பிறப்பே மாலை மலரும் நோய் நூல். திருவள்ளுவரும் பாரதியும் அடிக்கடி இசையும் கட்டுரைக்குள் வந்து செல்வதை வைத்து அவர்களது எழுத்துக்கள் மீது இசை வைத்துள்ள அபிமானம் வெளிப்படையாகிறது.
அறம் பொருள் காமம் எனும் முப்பிரிவில் அறம் மற்றும் பொருளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து செயல்பட்ட தமிழ் அறிஞர்கள் மொழிபெயர்ப்பாளர்களை எல்லாம் சொல்லிவிட்டு காமத்துப்பாலை மட்டும் மொழிபெயர்த்த ஃப்ரான்ஸ்வா குரோ எனும் பிரெஞ்சுக்காரரே சலபதி வாயிலாக இசை முன் வைக்கிறார். கூடுதல் தகவலுக்காக மொரிசியஸ் மொழியிலும் திருக்குறளின் காமத்துப்பால் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்கிற செய்தியை ஒரு கருத்தரங்கம் மூலமாக நான் அறிந்ததை பதிவு செய்கிறேன். காமத்துப்பாலை களவியல் கற்பியல் என இரண்டு நிலைகளில் பிரிக்கலாம் கலவிகளில் முதல் ஏழு அதிகாரங்கள் இருக்கிறது இவை காதல் தரும் இன்பத்தை பேசுகிறது கற்பியல் மனதிற்கு பின்னான பிரிவு துன்பத்தை பேசுகிறது இதில் புணர்ச்சியை கடந்த மன ஒருமைப்பாடு உள்ளான காதலை வள்ளுவர் முன் வைக்கிறார்.
மாலை மலரும் நோய் கட்டுரையில் கடைசி பத்தியில் இசை சொல்வது “எல்லா அறிஞர்களும் ஒத்த மனம் என்று விடாது சத்தம் செய்கிறார்கள். ஆனால் இன்றைய இல்லறம் அப்படி ஒத்த மனங்களிடையே தான் நிகழ்கிறதா என்பது பிரதானமான கேள்வி" எனக் கேட்டு பகடி கொண்டு இசை இதனை வேறுவிதமாக முடிக்கிறார். இசை சொல்லக்கூடிய அறிஞர்களின் சத்தத்தின் மீது சற்று கவனம் வைக்க வேண்டி இருக்கிறது. இல்லறம் என்ற வார்த்தையை காதலாக கொள்ளலாம் காதலில் அன்பு மட்டும் உறவாகி விடாது. விட்டுக் கொடுப்பதும் புரிந்து கொள்வதும் பிரிந்தாலும் பிரிவின் துளியை அனுபவித்து சேர்வதுமே காதல். மொத்த மனம் என்பதை புரிந்து கொள்ளுதல் என எடுத்துக் கொள்ளலாம். புரிதல் இன்றி உறவின் நீடிப்பு சாத்தியமே இல்லை வெற்று அன்பை வைத்துக்கொண்டு வேண்டுமானால் உஷாவுக்குள் நிஷாவையும் சுரேஷுக்குள் ரமேஷையும் கூடுபாய விடலாம். காதலுக்குள் அதற்கு இடமிருக்கிறதா?
காதலுக்குள்ளயே பிரிவு புணர்ச்சியும் நாட்காமமும் அடக்கமாகிறது. அதன் ஒரு பகுதியாக புரிதலையும் குறிக்க வேண்டியுள்ளது. காமத்துப்பாலுக்குள் வரும் பிரிவு துயர் புரிதலின்பாற்பட்டு நிற்பதாலேயே காதலுக்குரிய தூண் ஆகிறது. காதல் தோன்றும் போது அது நீடித்து நிற்க வேண்டும் என்ற விருப்பம் இருக்க வேண்டுமே தவிர நாமும் காதல் செய்கிறோம் என்கிற ஒப்பந்தத்திட்டம் புரிதலை குலைக்க வல்லது. நவீன காதலில் நிலவில் தலைவியின் முகத்தை பல முகமாகக் காட்டும் இடத்திலும், சாலமன் பாப்பையாவின் உரையை மனைவி என்று எழுதும்போது காதல் இன்பம் குறைந்து போவது நம் துரதிஷ்டம் என்று விமர்சிக்கும் இடத்திலும் இருக்கும் இசை, நவீன காதல் பற்றிய விவரணையில் புரிதலின் மீது பிரிவு குறித்த அதிகாரங்களில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதற்கான இடத்தை வள்ளுவர் கொடுத்திருக்கிறாரா என்பதையும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
களவுக் காதல் குறித்த அதிகாரங்கள் சுவாரஸ்யம் கூடியவை. எல்லோரும் ஒரே மாதிரியாக காதலிப்பதில்லை காதலில் ஈடுபடக்கூடியவரின் தன்மையைப் பொறுத்து காதலிக்கும் விதங்கள் மாறுபடுகிறது. அதில் பார்வை குறித்த விவரங்கள் தகை அணங்கு உறுத்தல் அதிகாரத்தில் வருகிறது. இதில் 1082,1085,1086 ஆகிய குறட்பாக்கள் மட்டுமே எனக்கு அதிகம் உவப்பளிக்கிறது. இதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். அவை அனைத்திற்கும் வள்ளுவர் இடமளித்திருப்பது தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
1061,1092 ஆகிய குறட்பாக்கள் காதல் வாழ்வில் முக்கிய பங்களிக்கும் அனுபவங்களை பேசக்கூடியவை. 1091ஆம் குறளின் தொடர்ச்சியை 1102ஆம் குரலுக்குள் வள்ளுவர் வைத்திருக்கிறார். முள்ளை முள்ளால் எடுப்பது போல நோயும் நோய்க்கான மருந்தும் முள்ளைப் போல இருக்கும் பார்வை தான் என்பதை முதலில் சொல்லி அதன் அனுபவத்தை 11 குறள்கள் தாண்டி கொடுத்துள்ளார். காதலிக்கும் போது உருட்டுகளுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் உருட்டி பேசுவது தான் காதலுக்கான பைத்தியக்காரத்தனமும் கூட. லூசு என்கிற விழிப்பை பற்றிய செய்தியிலும் கூட இசை அதைத்தான் சொல்கிறார். 1127,1128,1129 ஆகிய குறட்பாக்கள் காதலுக்குள்ளான உறுப்புகள் பற்றியவை. இசையின் “பழைய யானைக்கடை" நூலை தனித்து பேச வேண்டியதே முறையாகினும் அதில் உள்ள அகப்பாடல்களில் சொல்லப்படும் உவமைகள் இத்தகைய உருட்டு வகைக்குள் அடங்கும் வகையில் அதிகமாக தெரியக்கூடியது.
அகப்பாடல்கள் குறித்த கட்டுரையில் “படர்கூர்ந்து எல்லறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனார்" போன்ற பாடல்களில் மாலைப் பொழுது பற்றிய குறிப்பு உரமேறிக் கிடக்கிறது. மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மாலை எனக் கொள்ளப்படுகிறது. இன்று பள்ளி கல்லூரி முடியும் 4:15 முதல் 11:00 மணி வரை மாலை என்றும் காதலுக்கான நேரம் என்றும் நாம் மறுவரையறை கூட செய்யலாம். திணையியல் அடிப்படையில் முல்லைத் திணையின் கார்கால மாலைப் பொழுதே களவுக்கான காலமாக குறிக்கப்படுகிறது. அதனையொட்டியே திருக்குறளும் அமைந்துள்ளது. 1167,1169 ஆகிய குறள்களோடு பொழுது கண்டிரங்கல் அதிகாரத்தின் குறட்பாக்கள் பொழுதுக்கு அதிக முக்கியத்துவத்தை தருகிறது. ஆசுவாசமடையும் மாலைப்பொழுது அனிச்சம் பூப்பது போல நினைவை பூக்க செய்து மனத்தை கிளரும் உண்மையை மாறி மாறி வள்ளுவர் சொல்கிறார். இந்த மலர்தலைத் தொடர்ந்து வரும் அலர் பரப்பல் தலைவன் தலைவிக்கு உள்ளூர பிடித்துள்ளது. கிட்டத்தட்ட அலரின் மீதான அச்சத்தைக்காட்டிலும் கிளறிவிடப்படும் நாணுதல் மீது காதலர்க்கு அதீத ஆசை இருக்கத்தான் செய்கிறது. காதலை சமூகத்திடம் வெளிப்படுத்த முனைவதும் கூட ஒருவித உறுதிபாட்டின் ஸ்திரத்தன்மையே. அதேசமயம் மடல் ஏறுதல் அந்தரங்க அழகை கெடுத்து விடும் என்கிற கருத்தும் உண்டு.
சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு தலைவியின் பிரிவு துயருக்கும் பசலைக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் தலைவனின் மடல் ஏற்றத்திற்கு கொடுக்கப்படுகிறதா என்கிற கேள்வியும் உண்டு. காதலில் தற்போது ஆண், பெண் என பால் அடிப்படையில் காதலிக்கும் கூறுகளை நாம் பிரிப்பது பொருத்தமாகாது. ஆண் தன்மைகளை பெண் அடைந்து காதல் கொள்வதும் பெண் தன்மைகளை நான் அடைந்து காதல் கொள்வதுமான கலப்பு உணர்வாக்கம் தற்போது பெருகி உள்ளதை நாம் புரிந்து கொள்வது அவசியம் இத்தொகுப்பில் குறிப்பிடப்படும் பால் குறிப்பீட்டின் அடிப்படை ஆக்கத்தில் இசை இதனை தெளிவுபடுத்தி இருக்கலாம்.
கள்ளின்பத்தோடு ஒப்பிட்டு காதலை பெரிதாக்கியதும் கூடலோடு ஒப்பிட்டு நோக்குதலை பெரிதாக்கியதும் வள்ளுவர் செய்த கூர்மையின் அனுபவ நினைவாக்கத்திற்குரிய அலகீடு எனலாம். 1109ஆம் குரலில் காமத்தின் பயன்களாக சண்டையையும் சண்டைக்குப் பின் சரியான கால அளவுக்குள் மீண்டும் சேர்வதையும் பின்பு இணைந்து இருப்பதையும் வள்ளுவர் கூறுகிறார். காதலுக்குள் ஒளிவு, மறைவு, வெட்கம், கோபம் முதலானவை தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். பிரிவு என்பது தவிர்க்கவொன்னாத ஒன்றாகும் பட்சத்தில் பிரியும் போதான துன்பமும் பிரிவை அனுபவிக்க முடியாது மாறும் துன்பமும் பசலையாக படர்கிறது.
தூக்கமின்றி காதலை கடக்க முடியாது வருந்தும் வருத்தப்பாட்டிற்கு மட்டும் 15 அதிகாரங்களை வள்ளுவர் ஒதுக்கி உள்ளார். இசை தனது காமத்துப்பால் உரைக்குள் மணக்குடவரையும் பரிமேலழகரையும் கொண்டுவந்துள்ளதோடு இதில் குடவரை விட அழகரை அதிகம் சீண்டுவதும் பாராட்டுவதுமாக இருக்கிறார். உளவியல் வல்லுநர்கள் செய்யும் ஆய்வுகளையும் கூட விட்டு வைக்காமல் கிண்டல் அடிக்கிறார். உரையை விளக்கமாக கொடுக்காமல் குறளையே உரையாக வைத்துள்ளனர் என்று விமர்சனத்தை வைத்ததோடு கூகுள் தேடு பொறி, முகநூல் என்ற நவீன சமூக ஊடகங்களோடு காதல் செய்யும் இளைஞர்களுக்கும் தன் உரைக்குள் இசை வாய்ப்பளித்துள்ளார்.
காதலைப் பற்றி பேசும்போது திரைப்பாடல்களை குறித்தும் பேசியாக வேண்டியுள்ளது. திரைப்பாடல்களை பற்றிய சிந்தனையில் நகலிசைக் கலைஞர்களை நாம் ஒதுக்கி விட முடியாது. “அனாதைகளின் அமர காவியங்கள்" என்ற கட்டுரையில் ஜான் சுந்தரின் நகலிசைக் கலைஞன் பேசு பொருளாகியுள்ளது. இதில் இசையின் பாடும் ஆர்வம் அவராலேயே மெச்சிக் கொள்ளப்படுகிறது. பாரதியும் கூட அழகாக பாடக்கூடியவர் என்ற செய்தி உண்டு. பாரதியை குறித்து பலவித செய்திகள் தொடர்ந்து உலாவிக் கொண்டிருக்கும் பட்சத்தில் தரவுகள் அடிப்படையில் பாரதியை ஆய்வு செய்வதில் முன்னோடியானவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. அவருடைய “எழுக நீ புலவன்" நூலுக்கான விமர்சனம் பலவித கோணங்களில் அணுகப்பட்டுள்ளது. அவரது துயரத்தை சலபதி ஆய்வு அடிப்படையில் முன் வைத்துள்ளார் .பாரதி எட்டயபுர வரலாறான “வம்சமணி தீபிகை" மீது கொண்டுள்ள நாட்டம் கலை மற்றும் வரலாறு வயபட்டது என நாம் கொள்ளலாம்.
தன் கலையின் மீது நம்பிக்கை மிகுந்த கலைஞனாக மிஸ்கினை நாம் கொள்ள முடியும். மிஷ்கினின் திரையாக்கம் குறித்த பகுதியில் “ஒரு திரைக்கதை ஆசிரியராக எளிதாக எழுதி விட முடிந்ததை, ஒரு இயக்குனராக அவ்வளவு எளிதாக இயக்க முடிவதில்லை. ஒரு இயக்குனராக எளிதாக சொல்ல முடிந்ததை, ஒரு நடிகராக எளிதில் நடித்து விட முடியவில்லை."என்கிற வரிகள் உணர்த்தும் செய்தி பெரியது. எல்லைத் தாண்டி நிற்கும் மிஷ்கினின் குணாம்சம் குறிப்புணர்த்தும் திரைக்கதை அமைப்பு முறையே. அந்தக் குறிப்புணர்த்தும் திரைக்கதை முறையை காரணங்களுடன் சொல்லக்கூடியதாக அவருடைய “‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' திரையாக்கமும் திரைக்கதையும்" நூல் இருக்கிறது அதனை குறித்த கட்டுரைதான் “தொப்பிக்குள் கோழி குஞ்சு வந்து சேரும் வழி" என்கிற இசையின் கட்டுரை.
இசையின் இக்கட்டுரைகள் பகடி தெறிக்கும் பொருள் பொதிந்து கலை இலக்கிய அக்கறை கொண்டதாக இருக்கிறது. இசை குறி வைத்தது போல மாலை மலரும் நோய் இன்றைய இளைஞர்களின் வாசிப்பிற்கு உகந்த நூலாகவே அமைக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்
கருத்துரையிடுக