யூதாஸின் நற்செய்தி - கே.ஆர்.மீரா (தமிழில் மோ.செந்தில் குமார்)
யூதாஸின் நற்செய்தி - கே.ஆர்.மீரா (தமிழில் மோ.செந்தில் குமார்)
யூதாஸின் நற்செய்தி தொன்மத்தின் வேர்களுக்குள் ஒழிந்திருக்கும் உணர்ச்சியை திரும்பத் திரும்ப மேலிட்டு 1950களுக்கு பின் இந்தியாவிற்குள் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான 1975 நெருக்கடி சூழலையும் அதற்கு முன் 1967-ல் நிகழ்ந்த கிளர்ச்சியின் விளைவினையும் கொலைக்களங்கள் மற்றும் நிபந்தனையும் எதிர்பார்ப்பும் மிகுந்த அதே சமயம் பின்வாங்காத காதலை கொண்ட பிரேமா என்ற பெண்ணையும் சேர்த்து செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவலை கே.ஆர்.மீரா மலையாளத்தில் எழுதியுள்ளார். இதனை மலையாள மூலத்திலிருந்து மோ.செந்தில் குமார் சிறப்பான முறையில் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
இந்த நாவலை இரண்டு மையங்களின் வாயிலாக நாம் அணுக வேண்டி இருக்கிறது. முதலாவது யூதாஸ். விவிலியத்தில் அடுத்தடுத்த தலைமுறைகளில் இரண்டு யூதாஸ்கள் வருகிறார்கள் முதலாவது நாம் அதிகம் அறிந்த யூதாஸ் ஸ்காரியோத் இந்த யூதாஸை விவிலியம் கேட்டின் மகன், திருடன், துரோகி, பிசாசு என முத்திரை அடிக்கிறது. யூதாஸ் என்ற பெயருக்கு கர்த்தரை துதிப்பவன் என்று மூல அர்த்தம் இருக்க ஒரே ஒரு சம்பவத்தால் துரோகி என்று அடையாளத்திற்குரியதாக அந்தப் பெயர் மாறிப்போனது. இந்த நாவலில் தாஸும் தன்னை ஒவ்வொரு முறையும் யூதாஸாகவே மாற்றி நம்முன் நிற்கிறார். ஸ்காரியோத் என்பதற்கு காரியோத் என்ற ஊரிலிருந்து வந்தவன் என்று பொருள். காரியோத் என்கிற ஊர் மோவாபியர் காலத்தில் கீரியோத் கேரியோத் என அழைக்கப்பட்டிருக்கிறது. யூதேயா தேசம் உருவான போது காரியோத் என்று மாறிய இந்த ஊரில் சீமோனின் மகனாக யூதாஸ் பிறக்கிறான். இயேசுவின் 12 சீடர்களில் கிழக்குப் பகுதியான யூதேயாவில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தல சீடர் யூதாஸ் ஒருவன் மட்டுமே. மேலும் நன்கு படிப்பறிவு கொண்ட சீடர்களில் ஒருவனாகவும் யூதாஸ் இருந்திருக்கிறான். யூதாஸுக்கான பின்னணியை எடுத்துப் பார்த்தோமானால் ரோமருக்கு எதிரான புரட்சிக்காரனாகவும் நன்கு படித்தவனாகவும் யூதனாகவும் யூதஸ்காரியோத்து இருந்ததால் மற்ற சீடர்களுடன் சற்று தனித்த குணம் கொண்டவனாகவே இவனை அடையாளம் காண முடிகிறது. இயேசுவின் மூன்றரை வருட கால பயணத்தில் வரவு செலவுகளை கணக்கிடும் பொருளாளர் பணி யூதாஸுடையது. யூதாஸ் பணப்பழக்கத்தை கையாண்டதால் அவனுக்கு பண ஆசை வந்துவிட்டதென்றும் அதனாலேயே இயேசுவை முப்பது வெள்ளி காசுக்கு காட்டி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த 30 வெள்ளிக்காசை நாம் குறியீடாககா கொண்டு அதன் பின்னணியை அறிவது அவசியம். அன்றைய ரோமர் ஆட்சி காலத்தில் ஒரு அடிமையை வாங்குவதற்கு ரோமர்களால் கொடுக்கப்படும் அடிப்படை விலையாக 30 வெள்ளிக்காசு இருந்ததாக சில தரவுகள் சொல்கிறது. இயேசுவைப் பொறுத்தவரை அவர் காட்டி கொடுக்கப்பட்டு கொல்லப்படுவார் என்பதும் யாரால் காட்டி கொடுக்கப்படுவார் என்பதும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு காலத்திலேயே ஏற்கனவே சொல்லப்பட்ட செய்தியாக இந்த இடத்தில் மிஞ்சி இருக்கிறது. ஏசு தோழனாக சினேகிதனாக பாவித்த ஒரே சீடனாக யூதாஸை விவிலியம் காட்டுவதால், பழைய ஏற்பாட்டின் “என் பிராண சிநேகிதனும் நான் நம்பினவனும் என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும் என் மேல் தன் குதிகாலை தூக்கினான். (சங்கீதம் 41:9)" என்ற வசனம் அவனோடு பொருந்திப்போகிறது.
இயேசுவை ஏற்கனவே பலமுறை கொலை செய்யவும் தாக்கவும் முற்பட்டபோது அவர் தப்பி இருப்பதால் இந்த முறையும் தப்பித்து விடுவார் என்ற எண்ணம் கூட யூதாஸுக்குள் இருந்திருக்கலாம். பணத்துக்காக இயேசுவை காட்டிக் கொடுக்காமல் வேறு எதற்காக இயேசுவை அம்பலப்படுத்தி இருப்பார் என யோசிக்கும்போது அந்த நிகழ்வு நடந்த காலத்தையும் யூதாஸின் பின்னணியையும் நாம் நேர்கோட்டில் நிறுத்தி புரிய வேண்டியுள்ளது. ரோமருக்கு எதிராக கலகம் செய்த யூதாஸ் ஏன் ரோமரிடம் இயேசுவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்புவதும் முக்கியம். இயேசு சுற்றித்திரிந்த காலத்தில் மிக பிரபலமானவராகவும் அன்பை மட்டுமே பிரதானமாக போதித்தவராகவும் சடங்குகளையும் சதித்திட்டங்களையும் எதிர்த்தவராகவும் இருந்ததால் இஸ்ரேலிய மக்களுக்கு அவர் மீது நல்லெண்ணமும் அன்பும் இயல்பாக பீடித்துக் கொண்டது. பஸ்கா பண்டிகையை கொண்டாடும் நேரத்தில் இயேசுவை கைது செய்ய ரோமர் படை வந்தால் அந்த இடத்தில் ஒரு கிளர்ச்சியை இயேசுவை முன்வைத்து நடத்தலாம் என்கிற திட்டமும் யூதாஸுக்கு இருந்திருப்பதாலேயே இப்படியான செயலுக்குள் அவன் குதித்து இருக்கிறான். தான் தீட்டிய திட்டத்தின் தோல்வியை பொறுக்க முடியாமல் தவறான யூகத்தால் உயிர்பலி ஏற்பட்டு விட்டதே என்ற துயரத்தில் இயேசுவுக்கு முன் நாம் செத்து விட வேண்டும் என்ற நீ கொல்கத்தா மலைத்தொடரில் இயேசு சிலுவையுடன் ஏறிக் கொண்டிருந்த நேரத்தில் அதன் தாழ்ந்த மலைத்தொடரும் பள்ளத்தாக்கும் கொண்ட பகுதியின் ஓரத்தில் இருந்த மரம் ஒன்றில் தூக்கு கயிறு போடுகிறான். கயிறு அறுபட கீழே விழுந்து குடல் சரிந்து வயிறு வெடித்து செத்திருக்கிறான். யூதாஸின் நற்செய்தி நாவல் “நெஞ்சுக்கூடு பிழைக்கின்ற வேதனையோடு நானோ அவனோ யார் பள்ளத்தாக்கில் இன்னொருவரை எறிய போகிறோம் என்று யாருக்குத் தெரியும். சவத்தை நீந்தி எடுப்பதற்கு இருவரில் ஒருவர் கரையில் காவல் இருக்க வேண்டும். மீன்கள் கொத்தி பவளப்பாறைபோலாகிவிட்ட சவங்கள் கரை சேரும்போது வெள்ளைத் துணி போர்த்துவதற்கும் ஊதுபத்திகள் பற்ற வைப்பதற்கும் இருவரில் ஒருவர் உறங்காமல் காத்திருக்க வேண்டும். இருவரில் ஒருவர். ஒருவேளை, நாம் எல்லோரும்." என்று முடிகிறது. யூதாஸ் ஸ்காரியோத்துக்கு காத்திருக்க எவருமேயில்லை. தாஸ் என்னும் முதலை யூதாஸுக்கு காத்திருக்க ஒருவரோ அல்லது எல்லாரும் என்று ஒரு கூட்டமோ இருப்பதே ஒரு நற்செய்தி தான்.
யூதாஸ் ஏன் ஏசுவை முத்தமிட்டு காட்டி கொடுத்திருக்கிறான் என்பதற்கு இரண்டு விதமான கற்பித்தங்கள் சொல்லலாம். இயேசு உட்பட அவரின் சீடர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பெருத்த வேறுபாடுகள் எதுவும் இல்லாத உடைகளையே அணிந்திருந்தனர். மேலும் அவர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே விதமான முகச் சாயல்கள் கொண்ட தோற்றமும் இருந்திருக்கிறது. இயேசு தனித்து தெரியாமல் அவர்களில் ஒருவராக இருந்ததால் அவரை பிரித்தறியும் அடையாளமாக முத்தம் இருந்திருக்கிறது. ஏன் முத்தத்தை அடையாளமாக கொண்டிருக்க வேண்டும்? சுட்டிக்காட்டி இவர்தான் இயேசு என்று அவரை சொல்ல முடியாது. யூதாஸ் இயேசுவை குற்றவாளியாக கருதியிருந்தால் சுட்டிக் காட்டி இருக்க முடியும். வழி நெடுகில் அவன் மனம் இந்த வேலையில் எதுவும் நடக்கலாம் என்ற ஓட்டத்தில் இருந்திருப்பதால் அன்பும் துரோகமும் கலந்த முத்தமிட்டு காட்டிக் கொடுக்கிறான். தனது திட்டத்தில் தவறு நிகழ்ந்ததால் 30 வெள்ளிக்காசை திருப்பி அளித்து இயேசுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும் தோல்வியே கிட்டுகிறது அந்த முத்தம் தான் யூதாஸை துரோகி என பறைசாற்றி அன்பிற்கான உணவுப்பூர்வ செயலை துரோகத்தின் குறியீட்டு அர்த்தமாக மாற்றுகிறது.
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் போல யூதாஸும் தன் பார்வையிலான வரலாற்றை எழுதியுள்ளதாக குறிப்புகள் உண்டு. 1978ல் எகிப்தின் கொடெக்ஸ் பகுதியில் கிடைத்த “யூதாஸ் ஸ்காரியோத் சுவிசேஷம்" என்ற நூல் யூதாஸ் எழுதிய இயேசுவின் கடைசி மூன்று நாட்களை ஒட்டிய வரலாற்றில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட நூல் என்றும் சொல்லப்படுகிறது. இதனை எழுதும் மனநிலை அந்த நேரத்தில் யூதாஸுக்கு வாய்ப்பு இருக்குமா? என்ற கேள்வியும் நாம் இத்துடன் கேட்டுக் கொள்ள வேண்டும். ஒருவேளை எழுதப்பட்டிருக்கும் பட்சத்தில் யூதாஸை துரோகியாக மதவாதிகள் கருதியதால் அதனை ஏற்காமல் விவிலியத் தொகுப்பில் விட்டு விடவும் செய்திருக்கலாம்.
ஏற்கனவே சொல்லியபடி மற்றொரு யூதாஸும் இருந்திருக்கிறான். அப்போஸ்தலர் 5ஆம் அதிகாரத்தில் பரிசேயர் இயேசுவுக்கு எதிராக பேசும் போது இரண்டு நபர்களை முன்னுதாரணமாக வைக்கிறார். அதில் இரண்டாவதாக யூதாஸ் என்பவனை முன்வைக்கிறார். அந்த யூதாஸின் காலகட்டம் எது என்பதை அறிவதற்கான குறிப்பாக குடி மதிப்பின் நாட்களை சுட்டுகிறார். ரோம ஆட்சி காலத்தில் அகுஸ்துராயன் ஆண்ட போதே குடி மதிப்பு எழுதும் சட்டம் உருவாகியுள்ளது. அப்போது சிரியா நாட்டில் சிரேனியு தேசாதிபதியாக இருக்கிறார். அந்த நாட்களில் தான் இயேசுவும் பிறக்கிறார். இதன் மூலம் இயேசு பிறப்பதற்கு முன் யூதா என்ற ஒருவன் தன்னை கடவுள் எனச் சொல்லி மக்களை ஏமாற்றியதாக அறிய முடிகிறது. இந்த இரண்டு யூதாஸ்களும் ஏமாற்றம், துரோகம் முதலானவற்றுக்கான குறியீடாக மாறிப் போயுள்ளனர். இந்த நாவலிலும் யூதாஸ் தன்னை ஒரு துரோகியாக தன்னால் செய்யப்பட்டது பெரிய குற்றம் எனும் குற்ற உணர்வு கொண்டவனாகவும் நாவல் முழுவதும் ஓடித் தப்பிக்க முயல்கிறான்.
இந்நாவலின் கதைக்களம் நிகழும் காலத்தை நாம் இரண்டாவது மையமாக எடுக்கலாம். 1975 ஒட்டிய மற்றும் அதற்கு பிறகான காலப்பகுதிகளில் கதை நடக்கிறது. இந்த காலத்தை இந்தியாவின் தர்ம சங்கடமான காலமாக குறிப்பிடலாம். அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட அந்த காலத்தில் அதிகம் பாதிக்கப்படும் நபராக காணப்படும் யூதாஸ் யார்? அவன் எப்படிப்பட்டவன்? அவன் என்ன செய்தான்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்? நேரடியாக அவனைப் பாதிப்புக்கு உள்ளாக்கியவர்களின் நிலைமை இப்போது என்னவாக இருக்கிறது? அவனது மனம் முழுவதும் எதைத் தொடர்ச்சியாக நோக்கி ஓடுகிறது? என்ற அடுக்கடுக்கான கேள்விகளோடு காதலையும் கைவிடுதலையும் துரோகத்தையும் சூடிக் கொண்டு மூழ்கித் திரியும் ஒரு மனிதனின் கதையாகவே நாவல் கண் முன் நிற்கிறது.
இந்த நாவலில் நக்சலைட் இயக்கத்தவனாக யூதாஸ் காட்டப்படுகிறான். நக்சலைட் இயக்கமானது 1967ல் மேற்கு வங்க மாநிலம் நக்சல்பாரி கிராமத்தில் நடந்த விவசாயிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் இடையிலான கிளர்ச்சியில் பிறந்தது இது கம்யூனிசத்தில் மாவோவின் கொள்கைகளை உள்ளடக்கியதாக காணப்பட்டது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இடதுசாரிகளும் இதில் அடக்கம். மாவோவின் கொள்கையை எளிமையாக “கிராமங்களை விடுவித்தல், நகரத்தைக் கைப்பற்றல், புரட்சியை வென்றெடுத்தல்" ஆகிய மூன்று வாக்கியங்களில் கொள்ளலாம். நக்சல்பாரி கிராமத்தில் நிகழ்ந்த கிளர்ச்சியின் அறுவடையாக நக்சலைட் மாவோயிஸ்ட் இயக்கம் தோன்றுகிறது. பின்னாட்களில் நெருக்கடி நிலை அமலானபோது அன்றைய இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம் நக்சலைட்டையும் அதனோடு தொடர்புடைய பொதுமக்களையும் தீவிரமாக விசாரிக்கிறது. அப்போதைய நேரத்தில் காவலர்களும் ராணுவ வீரர்களும் கட்டற்ற சுதந்திரம் பெற்றவர்களாக திரிகின்றனர். கடுமையான பாதிப்புக்கு உள்ளான நக்சலைட் இயக்கத்தவரையும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளையும் இந்நூல் இரத்தம் ஒழுக விவரிக்கிறது. நக்சலைட்டுகளின் வாழ்க்கை அலைச்சல்களால் நிரம்பி, திடீர் கூடல்களும் பிரிவும் நேரும் எல்லா சாத்தியங்களையும் கொண்டது என்பதற்கு இந்நூல் சாட்சி.
யூதாஸ் எனும் தொன்மம் தொடர்ந்து அலைக்கழிக்கிறதை இந்நாவலில் நேரடியாக காண முடிகிறது. தவறுகளும் அவனது சாவும் நினைவு கூறப்படுகிறது. நக்சலைட்டாக இருந்த தாஸ் என்னும் யூதாஸ் இந்த நாவலில் அனாதையாகவும் முதலையாகவும் தெரிகிறான். எப்படி விவிலிய யூதாஸ்க்கென நான்கு அடையாளப்படுத்தும் கீழ்மையான குணத்தை தரமிட்ட பெயர்கள் இருந்தது போல இந்த நாவலில் வரும் யூதாஸ் அனாதையாக இருக்கிறான். முதலையைப் போல தண்ணீரிலும் நிலத்திலும் வாழ்பவனாக காணப்படுகிறான். கழுகு படத்தில் மலையில் இருந்து விழுந்து சாகுபவர்களின் பிணங்களை இறங்கி எடுப்பார்கள். அதேபோல இந்த நாவலில் ஆற்றில் விழுந்து சாகும் நபர்களின் சடலங்களை சுமந்து வரும் சுமைகார முதலையாக யூதாஸ் இருக்கிறான். தொடர்ந்து விழுந்த அடிகளும் வேதனையும் கக்கிய வார்த்தைகள் அவன் வாழ்வு முழுக்க தொடர்ந்து துரத்தி அச்சுறுத்துகின்றன. சுனந்தா மீது அதிக பிரியம் கொண்ட யூதாஸுக்கு வலிக்கான மருந்தாகவோ அல்லது அவனது முயல் உடலில் இருந்து சொல்லும் கடைசி சொல்லாகவோ சுனந்தா என்ற பெயர் அந்தச் சூழலில் இருந்திருக்கலாம். அந்த ஒற்றைச் சொல் தைரியமும் துணிச்சலும் வேட்கையும் கொண்ட சுனந்தாவின் உயிரை கொன்றளிக்கும் என்ற பிரக்ஞை கட்டாயம் யூதாஸுக்கு இருந்திருக்காது.
நக்சலைட் இயக்கத்தவர்களின் பெயர்கள், பயிற்சிகள், வாழ்வோடு இணங்கிப் போகும் இந்த நூல் அவர்களை கொடுமைப்படுத்திய காவலர்களையும் உலுக்கி எடுக்கிறது. காவல்துறை அன்று கையாண்ட வெறிகள் அனைத்தும் அவர்களது கைகளில் இரத்த கரையாக ஒட்டியிருந்தும் அதற்கான காரண கர்த்தா அரசாங்கம் எனும் பெரிய பூதம் என்பதை உணர அவர்களுக்கு வயோதிகம் தேவைப்பட்டுள்ளது. லாக்கப் மரணங்களும் ஓயாத அடியுமாக இருந்த காவலர்களுக்கு மனதளவில் பாதிப்புடன் கூடிய மிருககுணமும் இயல்பாக ஒட்டி இருக்கிறது. அப்படிப்பட்ட காவலன் வாசுதேவனின் மகள் தான் பிரேமா. பிரேமாவின் அப்பா இவள் மீது காட்டிய கோபமும் வசையும் அவரது நடவடிக்கைகளும் உளவியல் ரீதியாக நக்சலைட் மீதான ஆர்வத்தை அவளுக்கு அதிகப்படுத்தி இருக்கிறது. தாக்குதல், பயம், ஆதிக்கம், கொலை, வெறி, மூடத்தனம், கௌரவம், கொள்கை, விசுவாசம், தைரியம், சத்தியம் ஆகிய ஒவ்வொரு குணத்திற்கும் இடையில் புரட்சியின் காரணமாக நடக்கும் மோதல்களும் அவசரநிலை முகாம்களும் அதில் பகடை காய்களாக்கப்பட்ட மனிதர்களும் அவர்களது மீட்புக்கான இயக்கமுமாக இக்கதை எஞ்சி நிற்கிறது. இந்த வரலாறுகள் எல்லாம் பதிவு செய்யப்படுவதும் பேசப்படுவதும் அவசியகரமான செயல்பாடு ஆகும். நாவலில் யூதாஸ் வாயிலாக கே.ஆர்.மீரா, “சொல்லிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி இந்தக் காலம் இனிமேலும் வரும். சொல்லிச் சொல்லி ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கனும்" என்கிறார்.
பிரேமாவுக்கு யூதாஸ் மீது காதல் ஏற்பட்டு யூதாஸ் மாற வேண்டும் தன்னோடு இருக்க வேண்டும் என்று தனது வயதுக்கு மீறி ஆசைப்பட்டாலும் அதில் ஒரு பிழை இருக்கத்தான் செய்கிறது என்பதை அவள் கடைசி வரை உணரவே இல்லை. பிரேமா காதலிக்கும் யூதாஸ் சுனந்தாவினை காதலித்து நக்சலைட்டில் பங்களித்த யூதாஸ். இந்த தாஸ் தன்னிலை மாறினால் பிரேமாவுக்கு எப்படி ஆண்மை தான் ஆர்வமும் விருப்பமும் அப்படியே இருக்கும் என்பதோடு அப்படி உள்ள ஒரு மாற்றம் நிகழும் பட்சத்தில் தாஸ் யூதாஸ் எனும் தொன்ம அடிமையில் இருந்து விடுதலையும் பிரேமாவிடமிருந்து ஏமாற்றத்தையும் சந்திக்கும் வாய்ப்புகளை அதிகம் இருக்கிறது. இதனிடையே நாவலின் இறுதி அத்தியாயங்களில் வரும் அவர்களுக்கு இடையிலான மனம் திறந்த உரையாடல்களையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. அதில் இதனால்தான் காதல் செய்கிறேன் என்பதை அறியாதவளாக பிரேமா பேசும் இடமும் வருகிறது. “அடித்து ஒடுக்கப்பட்டவனாலேயே தாக்கியவனின் இதயசுத்தி அறிய முடியும்." என்ற வார்த்தைக்கு ஏற்ப தாஸ் தன்னைத் தாக்கிய ஒவ்வொருவருடைய பாவ கலைகளையும் உணர்ந்து அவர்களது கடமையான குற்றத்தை எள்ளி நகையாடும் சந்தர்ப்பமும் அவனது தொழில் நிமித்தம் வாய்கிறது அதில் அவன் செய்ததாக கருதிய துரோகத்தின் விரக்தியும் கலந்திருப்பது கதையின் உச்சமான பகுதியாக காணப்படுகிறது.
“ காதல் ஒரு அர்த்தசூன்யமான உணர்ச்சியே" காதலின் முதல் நிலையாக இந்த நாவலில் யூதாஸ் சுனந்தா இருக்கின்றனர். சுனந்தாவின் தைரியம் யூதாஸை ஆட்கொள்கிறது. இரண்டாம் நிலையில் பிரேமா வருகிறாள். பிரேமாவுக்கு யூதாஸ் மீதும் அவனது தோற்றக் குணத்தின் மீதான ஈர்ப்பும் அவனுடன் உரையாட வைத்து பின் உயிரை பகிரும் நிலை அடைந்து அவனைத் தனக்கு பாத்தியமானவனாக மாற்றத் துடிக்கிறது. அவளது எதிர்பார்ப்பில் அர்த்தம் இல்லாதது போன்றே யூதாஸிடமும் பிரேமா சுனந்தாவைப் போல் அல்ல என்ற அடிமன ஓட்டத்தில் நியாயம் இல்லை. “காட்டிக்கொடுப்பவனுக்கு மட்டுமல்ல அவன் காதலிக்கும் தூக்கம் வராது" என்ற வரி சுனந்தாவின் இறப்பு மூலமும் பிரேமா கைதாகும் போதும் மெய்ப்பு நிலையை அடைகிறது. கைதாகும்போது புரிதலில் மேம்பட்டவளாகவும் அதேசமயம் யூதாஸ் தன்னுடையவன் அவனது குற்றத்தை நிவாரணிக்க வேண்டும் என்றும் எண்ணியவளாக சுனந்தா குடும்பத்தோடு நட்பு பாராட்டுகிறவளாகவும் இருக்கிறாள் பிரேமா. “ஜெயிப்பதும் தோற்பதும் முக்கியமல்ல பிரேமா. புரிஞ்சிக்கிறதும் எதிர்த்து நிற்பதும் தான் முக்கியம்" என்று யூதாஸ் பிரேமாவிடம் சொல்லும் போது ஒரு முழுமையான நக்சலைட்டாக உருமாறி நிற்கிறான். இந்தச் சொல்லை உறுதியாக பிடித்துக் கொண்டதன் விளைவாகவே அவளது கைது நடவடிக்கையும் அமைகிறது.
யூதாஸின் நிலையற்ற ஓட்டத்தின் பின்பு அவன் காட்டிக் கொடுத்தவன் என்ற குற்றவுணர்வுடன் கூடிய பயமும் நீ தவறு ஏதும் செய்து விடக்கூடாது என்ற கவனமும் நிரம்பியுள்ளது. “காட்டிக் கொடுப்பவனுக்கு ஒரு இடத்திலும் நிலைத்து நிற்க முடியாது. அவன் எப்போதும் தப்பியோடிக்கொண்டே இருப்பான்" என்பதற்கிணங்க யூதாஸ் தப்பி ஓடுபவனாகவே இருக்கிறான். பிரேமாவும் அவனை தொடர்ந்து பிடித்துக் கொண்டிருக்கிறாள். தெரிந்தோ தெரியாமலோ சந்தர்ப்பங்களும் உணர்ச்சிகளுக்குரிய காயங்களும் சுருக்கென்ற வலியும் தாஸை யூதாஸென்னும் அடையாளத்துக்குள் நுழைத்து விடுகிறது. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னை யூதாஸாகவே கருதுகிறான். இந்த கருதுகோள் வழியே அவன் தனிமைப்படுத்தப்பட்டவனாக அல்லது தனியனாக மாறி தன்னைத்தானே அலைக்கழித்து நீந்துகிறான். எப்படி அந்த யூதாஸுக்கு 30 வெள்ளிக்காசு பெரிதாக தெரியவில்லையோ அதன் மதிப்பின் மீது துச்சமான பார்வை இருந்ததோ அதே பார்வை தான் இந்த யூதாஸுக்கும் இருந்துள்ளது. ஆனால் முதலை யூதாஸின் நற்செய்தி அவன் தொன்மமாக கிடக்கும் அந்த யூதாஸ்களின் தவறுகளை உணர்ந்தவனாக இருந்ததே.
தொடர்ந்து சாவுகளும் தற்கொலைகளும் சவங்களும் கொடூர தண்டனைகளும் நம்மை நிலைகுலைய வைப்பதை கடந்து இது இப்படித்தான் என்று கடந்து போக வைத்தாலும் சுனந்தாவின் அக்கா மகள் உடைய மரணம் மீண்டும் ஒருத்தி பிளம்பாக பற்றி எரிந்து வாசிக்கும் போது திடுக்கிட வைக்கிறது. பெண்களின் காதலும் காதலுக்காக அடையும் துயரங்களும் ஓடி ஒளிந்து தன் தரப்புக்காக நியாயம் செய்ய நினைக்கும் போராளிகளும் தனது இறந்த காலத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் துடிக்கும் காவலர்களும் வளங்களையும் நலத்தையும் சூறையாடுவதை எதிர்த்துப் பேசும் வைராக்கியமும் திடீர் திடீரென கூடி கலைந்து ஒளிந்து மறையும் தலைமறைவான வாழ்க்கையும் அயராது தேடிச் செல்லும் ஓயாத மனமும் கூடி நிற்கும் இந்த நாவல் நிறைவான வாசிப்பனுபவத்தை தரக்கூடியதாக இருக்கிறது.
-அழகுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக