தேவிபாரதி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - தன்னறம் வெளியீடு
தேவிபாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்-தன்னறம் வெளியீடு
தன்னறம் தன்னுடைய ஆக்கபூர்வமான இலக்கியப் பணியை தேவிபாரதியைக் கௌரவித்ததன் மூலம் செய்துள்ளது. தேவிபாரதிக்கு விருது வழங்குவதும் அவரது சிறுகதைகளை தொகுத்து இலவசமாக வாசகர்களுக்கு வழங்கி அவரை கவனம் பெற வைப்பதும் இருட்டில் கிடந்த கலைஞனை வெளிச்சத்திற்கு இழுத்துவந்து ஒளியை அவன் மீது பாய்ச்சும் பணியாகும் இந்தச் செயல்பாட்டை தன்னறம் நேர்த்தியுடன் நிகழ்த்தியுள்ளது. விருதளிப்பதோடு நின்றுவிடாமல் அவரது சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்து பரவலாக்கும் பணியையும் சேர்த்துச் செய்யக்கூடிய இந்தச் செயல்பாடு உயரியது. இந்த இலக்கிய முன்னெடுப்பில் தேவிபாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுப்பினை இலவசமாக பெற்றுக்கொண்டவர்கள் அதனை படித்து விட்டு மற்றொருவருக்கு வழங்குவதன் மூலம் தன்னுடைய பங்களிப்பையும் செய்ய முடியும்.
இந்த சிறுகதை தொகுப்பை பொருத்தவரை தன்னறம் சிறுகதைகளைத் தேர்வு செய்த வகைமை சிறப்புக்குரியதாக இருக்கிறது. காந்தி, புத்தர், இயேசு, டால்ஸ்டாய், காமராசர், மணிமேகலை, மாதவி, கண்ணகி, நல்லதங்காள், விவேகானந்தர், பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ஞானக்கூத்தன், அசோகமித்திரன் என்ற பெயர்களையும் அவர்களது அடையாளங்களையும் அந்தப் பெயர்களுக்கான நிகழ்காலத்திய சமூக, இலக்கிய இருப்பையும் தேவிபாரதி தனது கதைகளுக்குள் ஓடவிட்டிருக்கிறார். ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் வரக்கூடிய இந்தப் பெயர்களையும் பெயர்களை தாங்கிய மனிதர்களையும் அவர்கள் செய்த செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை நிகழ்கால சூழலின் மீது போர்த்தி குறியீட்டுக் காட்சிகளுடன் தேவிபாரதி யதார்த்தமான சோதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
‘கருப்பு வெள்ளை கடவுள்' கதையின் நிகழ்விடம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுப்ரமணிய கவுண்டர் கட்டிய சத்திரம் மண்டபம். பக்தர்களுக்காக கட்டப்பட்ட அந்த மண்டபத்தின் தற்போதைய அமைப்பு பற்றிய விவரணைகளோடு அங்கு தங்கியிருக்கும் பரதேசிகளைப் பற்றியும் வருடந்தோறும் நிகழும் தற்கொலை மற்றும் கொலைகளைப் பற்றியும் தகவலளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த மண்டபத்தில் காமராசர் எனும் ஒரு அரசியல் ஆளுமை இறந்துபட்டிருப்பதை பரதேசி தகவலளிப்பதும், அந்தச் சடலத்தை அப்புறப்படுத்த வரும் போலீஸ் அதிகாரியின் மூலம் காவல்துறை அதிகாரிகள் பற்றிய சித்திரம் வரையப்படுகிறது. 15 வயது சிறுவன் பொக்லைன் இயந்திரத்தை அரசு சட்டத்தை மீறி காவல்துறை அதிகாரிகளுக்கு முன்பே இயக்குவதும், பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் பெரும் பொறுப்பிற்குரிய இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் செய்யும் பல வழிகளில் சென்று அந்த சடலத்தை அகற்றும் போது வரக்கூடிய பெரிய திருப்பத்தோடு அந்தக் கதை முடிகிறது. காமராசரை புனைவுக்குள் நகர்த்தி அவர் மீது மக்கள் கொண்ட மதிப்பு மற்றும் மரியாதையோடு ஏனைய சில சிக்கல்களையும் தனது மொழியில் தேவிபாரதி அசைவாடச் செய்துள்ளார்.
காந்தியை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை ‘பிறகொரு இரவு' இதில் காந்தி படேல் சந்திப்பு, காந்தி வேடமிட்டு வங்காள இளைஞன் பகவதி சரண் என பலவற்றை தேவிபாரதி எழுதியுள்ளார். இயேசு, டால்ஸ்டாய் என்போர் வழியில் உயிரை பொருட்படுத்தாமல் போராட்டத்தின் போது அவர் மேற்கொண்ட பயணம் இந்தக் கதை. காந்தியை வேறொரு கோணத்தில் அவரது உள்ளுணர்வோடு தேவிபாரதி படைத்திருப்பதும் அவரது மொழியும் இந்தக் கதைக்கு உரமேற்றியுள்ளது. இந்தக் கதையில் வரும் காந்தி தனது பயணத்தின் போது நீங்கள் யார் என கேட்டவர்களிடம் எல்லாம் நான் காந்தி என்கிற உண்மையைச் சொல்லும் போது அவர்கள் கூறக்கூடிய மறுமொழியானது தெனாலிராமன் படத்தில் அரசனாக இருந்த வடிவேல் சாதாரண மனிதனாக தனது நாட்டின் நிலையை அறியச் செல்லும்போது தன்னை அரசன் என பிரகடனப்படுத்தும் நேரத்தில் அரசன் என்று பொய் சொல்லாதே மக்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள் எனச் சொல்வது போன்ற நிலைக்கு ஒப்பானது. காந்தி அமிர்தசரஸுக்கு செல்லும் போது அவரைப் போன்றே வேடமிட்ட பலரை ரயில் நிலையத்தில் சந்திக்கிறார். அவர்களை காந்தி சந்திக்கக்கூடிய இடமானது சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்ட உண்மையான சார்லி சாப்ளின் போட்டி முடிவில் இருபதாவது இடத்தை அடைந்தது போல காந்தியைப் போன்ற வேடமணிந்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த பலர் அந்த இரயில் வண்டிக்குள் இருக்கின்றனர். அப்போது இரயில் நிலைய மாஸ்டர் உண்மையான காந்தியை கண்டுபிடித்து விடுகிறார். அவர் எப்படி காந்தியை கண்டுபிடிக்கிறார். அவருக்கும் காந்திக்கும் இடையில் நடந்த உரையாடலில் பரிமாறப்படும் கருத்துக்கள் ஆகியன இந்தக் கதையில் முக்கியத்துவம் பெறுகிறது. குறியீட்டு காட்சிகளுடன் தேவிபாரதியின் கற்பனை இணையும் புள்ளி இந்தக் கதையில் சாத்தியமாகியுள்ளது.
‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்' என்ற கதை பௌதிக மாணவியான சசிக்கும் அவளது கணவன் விஷ்வத்திற்கும் இடையில் நடக்கும் சண்டை, அவளுக்கும் அருணுக்கும் இடையிலான காதல் தொடர்பு, விஷ்வத்தைக் கொலை செய்தல் என்று கதையின் நிகழ்ச்சிகள் இருக்கிறது. இந்தக் கதையில் கைக்கடிகாரமும் நேரமும் தான் கதையின் முழு நகர்வோட்டமாக விளங்குகிறது. அருணோடு இணைந்து கணவன் விஷ்வத்தை சசி கொலை செய்கிறாள். அருண் சடலத்தை அப்புறப்படுத்த வண்டியைத் தயார்படுத்தச் செல்லும் அந்த இரவில் இவள் குருதியின் மரணவாடையைக் களைத்துப்போட வீட்டைச் சுத்தம் செய்யும் போது பரிசளிக்கப்பட்ட கைக்கடிகாரம் கிடைக்கிறது. கடிகாரத்தில் நேரம் பின்னோக்கி நகர்கிறது. நேரத்தோடு சேர்ந்து அந்த அறையும் செயல்பாடுகளால் விளைந்த மாற்றங்களும் காலத்தால் திரும்பப் பெறப்படுகிறது. மாநாடு படத்தில் சிம்புவுக்கு உயிர் திருப்பி அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது போல விஷ்வத்திற்கும் உயிர் காலத்தால் திரும்ப அளிக்கப்படுமா? என்பதில் தான் கதையின் முடிவு இருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் திகில் சூழ்ந்த கதைப்போக்கு விஷ்வம் உயிரோடு வந்தால் அவனை சசி அதற்குப்பின் எப்படி அணுகுவாள். அதுவரை பின்னோக்கி நகர்ந்த கடிகாரம் அவனுக்கு உயிரை அளிக்கும் நேரத்தில் மட்டும் முன்னோக்கி நகர்ந்தால் அல்லது அப்படியே நின்றுவிட்டால் என்ன ஆகும் என்கிற கற்பனைகள் எழுகிறது. ஆண் பெண் உறவுச்சிக்கலை தேவிபாரதி இருளுக்குள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
‘மீதி' கதை ஒரு தந்தையின் இறப்பிற்குப் பின் அவர் வசித்த வீட்டில் உள்ள மீதிப் பொருட்களை எடுக்க வந்த மகனுக்கும் அந்த வீட்டின் அருகாமையிலுள்ள அவரது தந்தையின் நண்பர்கள் அவர்மீது மீதி வைத்திருந்த அன்பையும் சொல்லும் கதை. உறவில் உயிரை விட்டபின் இருக்கும் பொருள்களுள் எந்தப் பொருளுமற்ற அன்பும் ஓர் அடக்கம் என்பதை பற்றிய இந்த கதையை தனது தந்தையின் நினைவாக தேவிபாரதி எழுதியிருக்கிறார்.
தங்கராசு டெய்லர் தனது மனைவி கொண்டு வந்த தையல் மிஷினை அவளை விட அதிகமாக நேசித்ததையும், அந்த தையல் மிஷின் மூலம் அதிக புகழை அந்த ஊரில் அடைந்தவனாகவும் இருந்ததை சொல்லும் கதை அந்த தையல் மிஷின் விற்கப்பட்டு தங்கராசு டெய்லர் புலம்புவதாக கதை முடிகிறது. சுதந்திரத்திற்கு பிந்தைய சூழலில் ஏற்பட்ட பெறும் மாற்றத்தின் காரணமாக கிராமங்களில் உள்ள பல தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். சுதந்திரத்திற்கு பிந்தைய மாற்றங்கள் பற்றி சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல் அழுத்தமாக பதிவு செய்திருக்கும். கரிசல் கதைகளிலும் சுதந்திர போராட்ட நடவடிக்கைகள் மூலமும் அதற்கு பிந்தைய இந்திய வளர்ச்சி காலகட்டங்களிலும் கிராமங்களில் உள்ள தொழிலாளர்களெல்லாம் நவீனத்தை அடையச் சிரமப்பட்டு எவ்வாறெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகினர் என்பது பதிவாகி இருக்கிறது. அப்படியான ஒரு தொடர்ச்சியாகத் தான் இந்த கதை எனக்குத் தெரிகிறது. ஊருக்கு ஒன்றென இருந்த தையலகம் நான்காக மாறும்போது அந்த ஊரின் பழைய தையல்காரனின் வாழ்வாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை கிராமத்தில் உள்ள எல்லாத் தொழில்களுக்குமான சாட்சியாக ‘கருவி’ கதை மூலம் தேவிபாரதி முன்வைக்கிறார்.
‘கழைக்கூத்தாடியின் இசை’ கலைமீதான நம்பிக்கையோடும், குடும்பச் சூழலின் காரணமாகவும் சென்னை நகரில் உள்ள ட்ரிபிள்கேனில் தங்கியிருக்கும் மனிதர்களையும் அவர்களது வாழ்வியல் சூழலையும் கௌதம நீலாம்பரன் மற்றும் மிஸ்டர் எக்ஸ் என்ற இரு கதாபாத்திரங்கள் மூலம் இந்த கதை பதிவு செய்துள்ளது. வெட்டியாகத் திரியும் ஒருவனுக்கு விரக்தியும் விரக்தியினுள் ஒளிந்துள்ள தேடலும் கைக்கூடும்போது தனது பார்வையில் படும் ஒவ்வொன்றையும் பல்வேறு கோணங்களில் ரசித்து ஆய்வுக்கு நகரும்போது தனக்கு இருக்கும் சுயபிரக்ஞையை வைத்து பொருத்திப் பார்த்து தனது நனவு நிலையை சோதிக்கும் சூழல் அமையும். அதுதான் இந்த கதையிலும் நுண்ணிய குறியீட்டுப் பதிவுகளாக உரையாடலின் உட்புகலோடு பதிவாகி இருக்கிறது. கண்ணகிக்கும் அவளது சிலைக்கும் அருகில் காந்திக்கும் அவரது சிலைக்கும் அருகில் தற்போது என்ன நடக்கிறது அவையெல்லாம் அவர்களது வாழ்வோடு அல்லது கருத்துக்களோடு கொஞ்சமாவது பொருந்துகிறதா அவர்கள் ஏன் வெற்றுச் சிலையாக இருக்கின்றனர் என்ற கேள்வியை வாசகர் மனதில் எழுப்புகிறது. பெயர்களுக்கான சொற்களில் பஞ்சம் என்ற பகடியான உரையாடல் வளர்ச்சியின் மூலம் எழுத்துத்துறையில் நிகழ்ந்த மாற்றங்களும் மாறாமைகளும் என்று எத்தனையோ பார்வைகளை ஒரே கதைக்குள் தேவிபாரதி புகுத்தியுள்ளார். தனது சுயபிரக்ஞையோடு எழுத்தாளர்களின் பெயர்கள் சினிமா சூழல் என்பனவற்றையும் கதைகளுக்கு தேவையான இடத்தில் சுட்டியதோடு இரண்டு கதாபாத்திரங்களினுடைய தனிப்பட்ட வாழ்வைக் குறித்த மறைமுக வெளிப்பாட்டையும் நிகழ்த்தி காண்பித்திருக்கிறார்.
மணிமேகலை, கண்ணகி, மாதவி, சித்ராபதி என்று காப்பிய கதாபாத்திரங்களின் வழியே கூத்துக்களையும் யாக்கையின் நிலையாமையையும் கூறக்கூடிய கதையாக ‘ஊழி' இருக்கிறது. மூன்றாம் தமிழாகிய நாடகத் தமிழைப் பற்றிய கண்ணகியின் பழங்கதைகள் கதையை நீளச் செய்கிறது. உடலின் அழிவும் இழிவும் எவ்வித பூச்சுமின்றி இக்கதையில் வெளிப்பட்டிருப்பது தெரிகிறது.
பார்ப்பனியத்தையும் பெண்ணிய அடிமைத்தனத்தையும் ஒரே புள்ளியில் நிறுத்தும் வித்தை தேவிபாரதி மூலமாக ‘பழி' சிறுகதையில் சாத்தியமாகி இருக்கிறது. ஒரு பிராமண பெண் தாழ்த்தப்படுவதும் ஒரு தலித் ஆண் ஆதிக்கத்தை செலுத்தும் நிலையில் அமைவதுமே இக்கதையின் மையம். அந்த மையத்தை வேசித்தன கூடாரத்தின் வழி நுழைய வைக்கக்கூடிய இக்கதை இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்க ஒரு கதை.
மனப்பிறழ்வும் கனவும் மாறி மாறி ஒருவனை பாடுபடுத்தி அழிவிற்கு நேராக தள்ளுவதை சித்தரிக்கக்கூடிய கதையாக அழிவு இருக்கிறது.
சாதிய சிக்கலுக்குள் நின்று கொண்டு பெண்ணியத்தை பேசும் கதை ‘பரமனின் பட்டுப்பாவாடை' மாய எதார்த்த வெளிக்குள் நின்று பச்சை வண்ணத்தை உடைய பாவாடையின் நினைவாட்டத்தில் இக்கதையானது அமைந்துள்ளது. கல்வி பெண்ணியத்திற்குள்ளும் சாதியத்திற்குள்ளும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உள்ளபடியே இக்கதை எடுத்துக்காட்டுகிறது.
நல்லதங்காளை நவீன வடிவத்திற்குள் ராட்டினம் சுற்ற வைக்கும் கதையாக ‘உயிர்த்தெழுதலின் சாபம்' கதையை சொல்லலாம். ராட்டினக்காரனுடன் ஏற்பட்ட தொடர்பிலிருந்து நல்லதங்காளின் ஏராளமான ஏக்கங்கள் நீட்சியடைகிறது. நல்லதங்காளை சுதந்திரத்தோடு உலாவ விடுவதிலேயே இக்கதை அதன் உச்ச எல்லையைத் தொட்டுள்ளது.
சந்தேகம், காமம், குடும்ப உறவின் அகச் சிக்கல், கனவு என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்குரிய விடையாக கேள்வியின் மீது தொடுக்கப்படும் மற்றுமொரு கேள்வியாக வீடென்ப கதை இருக்கிறது.
இத்தொகுப்பில் உள்ள கதைகளை காமம், வேசைத்தனம், சாதிய தாழ்வுமனம், மாற்றத்தை எல்லாம் பழைய கண்களில் இருந்து பார்க்கும் ஒளி, தத்துவார்த்த தேடலின் படிகள், பழந்தமிழ் இலக்கியத்தின் மறு உருவாக்கம், கனவின் வழிப்பட்ட கலை பிறழ்வு மனம், மாயவெளியில் திரியும் பதட்டம் என கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.
-அழகுராஜ்
படைப்பு தகவு மின்னிதழில் வெளியான கட்டுரை: https://padaippu.com/thagavu/54

கருத்துகள்
கருத்துரையிடுக