2010க்குப் பின்னால் வெளிப்பட்ட நவீன தமிழ் கவிஞர்கள் - இடைவெளி 2ஆம் இதழ்- சிறப்பாசிரியர் றாம் சந்தோஷ்
2010க்குப் பின்னால் வெளிப்பட்ட நவீன தமிழ் கவிஞர்கள் - இடைவெளி 2ஆம் இதழ் - சிறப்பாசிரியர் றாம் சந்தோஷ்
றாம் சந்தோஷிடம் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வைக்கப்படும் கேள்வி எதுவாக இருக்கும் என்றால் அன்று “2010க்கு பின் வெளிப்பட்ட நவீன தமிழ் கவிஞர்கள்" இதழில் இவரைப் பற்றி இப்படி சொன்னீர்களே இப்போது மாற்றி சொல்கிறீர்களே என்ற கேள்வியாகத்தான் இருக்கும். அதனால்தான் முன்னுரையில் “நிச்சயம் இம்முடிவுகள் பலவும் திரும்ப திரும்ப பரிசீலிக்கதக்கவையே. வாய்ப்பமையும் போது அதையும் செய்வேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கவிதை திறனாய்வின் தலைப்பும் அவருடைய கவிதைகளையே அவர் கட்டுரைக்கு உட்படுத்தி இருப்பதும் பெருத்த சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. அதற்கான விளக்கத்தையும் அவர் வாச்சியத்திற்கு எடுக்கப்பட்டுள்ள கவிஞர்கள் பற்றிய தேர்வின் அடிப்படை அலகையும் பகுதி 1ல் உள்ள “சில முஸ்தீபுகள்" என்ற பகுதியில் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையிலேயே றாம் கவிஞர்கள் தேர்வில் அவரது கவனத்திற்கு வந்தவர்களை நேர்மையாக பதிவு செய்திருக்கிறார் என்பதை அவருடைய எழுத்துக்கள் மூலமாக உணரமுடிகிறது.
“சரி கட்டுரையில், நான் கண்ணியத்துடன் பதில் சொல்ல வேண்டிய இடத்தை கடந்து விட்டதால், இனி இந்த அச்சர சுத்தமான ஆய்வு நடையிலிருந்து, எனது சொந்த நடைக்கு போய்விடுகிறேன்." என்று அவர் சொல்லி சிறுபத்திரிக்கை திறனாய்வு பகுதிக்குரிய உள்ளடக்கத்திற்குள் கவிதை மற்றும் கவிஞர்கள் பற்றிய தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்துகிறார். அதுவரை தன்னுடைய சுயகருத்தையும் கட்டுரைக்குத் தேவையான விளக்கங்களையும் தனித்தனியாக பேசிய றாம் பிந்தைய பகுதிகளில் சுயகுரலாகவே ஒலிக்கிறார்.
இக்கட்டுரை கட்டாயம் வினையன் மற்றும் முத்துராசா குமார் முதலானோரின் படைப்புகளை பலரை வாசிக்கச் செய்யும் என்பது மட்டும் தெளிவு. ஏனென்றால் அவர்கள் இருவருடைய கவிதைகளும் சில சொற்களின் பயன்பாட்டைக் கொண்டே ஆழமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.
மற்றொரு பக்கம் வே. நி. சூர்யா, பெரு. விஷ்ணு குமார், ச.துரை. றாம் சந்தோஷ் ஆகியோருடைய கவிதைகள் மீள் வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டிய வெளியை இந்த இதழ் ஏற்படுத்தியுள்ளது. நெகிழன் மற்றும் சதீஸ்குமார் சீனிவாசன் ஆகியோருடைய கவிதைகள் பல புள்ளிகளில் வெவ்வேறு கவித்துவ வெளிப்பாட்டில் ஒன்றிணையக்கூடியது என்பது என்னுடைய கருத்து. இந்த இதழில் றாம் கிட்டத்தட்ட அந்த புள்ளியில் நெருங்கி வருவதாக தெரிகிறது. இருவருமே வரும் நாட்களில் முக்கியமானவர்களாக இருப்பர்.
கவிதையின் வழியாக கவிஞர்களைப் பற்றிய தனது பார்வையை அவர்கள் பற்றிய அறிமுகத்தில் தெரியப்படுத்துவதால் அந்த இடத்திலேயே அவர்கள் பற்றிய மதிப்பீடு வெளியாக தொடங்கிவிடுகிறது. கவிஞர்கள் ச. துரை மற்றும் மதார் ஆகியோரின் கவிதைகள் மெய்நிகர் காட்சிகளின் விளக்கமாக இருப்பதை அப்பட்டமாக்கிய றாம் ச.துரைக்கு கொடுத்த மதிப்பீட்டு விஸ்தாரத்தை மதார்க்கு கொடுக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகளையும் பந்துகளையும் மதார் மாறுபட்ட சில நிலைகளில் நின்று பார்த்திருப்பதாக எனக்கு தோன்றுகிறது. கிட்டத்தட்ட ச.துரையைப் போன்ற மேஜிக்கல் அவரிடமும் உண்டு.
ஞா. தியாகராஜன் மற்றும் ரா.த. ஜீவித்தா ஆகியோரிடம் இந்த இதழ் மேலதிக உழைப்பை கோருகிறது. தன்னுடைய கவிதைகளில் வரக்கூடிய அரசியல் பகடிகள் பற்றிய குறைகளை றாம் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த கவிதை நிகழ்ந்த சூழல் நினைவிலிருக்கும் அனைவருக்கும் அவை நல்ல அனுபவத்தையே தரும் என நான் நினைக்கிறேன்.
கவிஞர்களிடம் கவிதை குறித்த அவர்களது நிலைப்பாட்டையும் கவிதை எழுதும் காரணத்தையும் கேட்டிருப்பதோடு அவர்களுடைய முன்னோடிகள் பற்றியும் றாம் பேசியுள்ளார்.
கவிதைக்காக தொடங்கப்பட்ட இடைவெளி காலாண்டிதழில் கவிதைகள் பதிப்பிக்கப்படுவதன் சூழலும் பதிப்பகங்களும் பேசு பொருளாகியுள்ளது. இந்த இதழுக்கான தரத்தை உயர்த்துவதாக பிரம்மராஜன், தமிழவன், க. மோகனரங்கன் ஆகியோருடைய கருத்துக்கள் இருக்கின்றன. இதழில் நான் பார்க்கும் குறை இதழுக்கென இத்தனை ஆசிரியர்கள் இருந்தும் ஓரிரு இடங்களில் எழுத்துப்பிழை வந்ததே. மற்றபடி இந்த இதழ் நவீன கவிதையியலில் குறிப்படத்தக்கது எனினும் றாம் சந்தோஷிடம் இருந்து இன்னும் அதிகமான உள்ளடக்க விஷயங்களை எதிர்பார்த்தேன். அவர் குறிப்பிட்டபடி இதழுக்கான கால அளவு அதற்கான தடையாக இருந்திருக்கலாம். ஆனால், வரக்கூடிய நாட்களில் இது நூலாக வெளிவரும் விரிவாக்கப்பட்டு முழுமையடையும் என்று நம்புகிறேன். இப்படியான ஓர் பணியைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் மிகுந்த மணல்வீடு ஹரிகிருஷ்ணன் அவர்களை றாம் மறவாமல் குறிப்பிட்டிருப்பது அவர் அப்போது இருந்து இந்த பொருண்மையில் கட்டாயம் எழுத வேண்டும் என்ற முடிவில் இருந்ததை தெரிவிப்பதாக இருக்கிறது. சி. மோகன் சொன்னபடி இந்த இதழ் நல்ல தொடக்கமே.
- அழகுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக