மணல் - அசோகமித்திரன்
சென்னை நகரத்தில் 70 களில் வாழ்ந்த குடும்ப கதையை பேசக்கூடிய குறுநாவல் மணல். இந்த மணல் கதையை பொருத்தளவில் வெகுஜன எழுத்துநடையில் சாதாரணமாக எழுதப்படும் ஒரு குடும்ப கதை தான் இது என்ற எண்ணம் ஆரம்பத்திலேயே உருவாகிறது. ஆனால் அந்த எண்ணத்தை போகிற போக்கில் எந்த அதிர்வும் இல்லாமல் சாதாரணமாக உடைத்துப் போடும் வித்தையை அசோகமித்திரன் இந்த குறு நாவலில் செய்திருக்கிறார். தண்ணீர் நாவலில் பெண்களின் பாடுகளையும் இயல்புகளையும் நீரோட்டத்தின் படிமமாக அசோகமித்திரன் எழுதியிருப்பதை இந்த தளத்தில் வெளியான முந்தைய பதிவின் மூலம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதே போல இந்த குறுநாவலில் குடும்ப கட்டுமானத்தில் இருக்கும் பெண் தான் மணலாக இருந்து அந்த குடும்பத்தைக் கட்டுகிறாள் என்பதை அசோகமித்திரன் சித்தரித்திருப்பதாக நான் உணர்ந்தேன்.
மணல் கதையில் வரும் மணலை அதனுடைய பொருள் சார்ந்து பல்வேறு கோணங்களில் நாம் பொருத்திப் பார்த்து இப்படி இருக்குமா என்ற கேள்வி எழுவதற்கு ஏதுவான இடத்தை அசோகமித்திரன் தனது படைப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார். அரவிந்தன் இந்த மணல் குறுநாவலுக்கு கொடுத்துள்ள மதிப்பீட்டில் ஆண்களைப் போல பெண்கள் அல்ல. பெண்கள் தான் குடும்பத்தில் யதார்த்தமாக தனது மகிழ்ச்சி, வருத்தம் முதலான உணர்வுகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் என எழுதியிருப்பார். இதன் உட்பொருளை இந்த கதையில் வரும் சரோஜினியின் அண்ணன்கள் மற்றும் அவளது அப்பாவோடு பொருத்திப் பார்த்து பெற முடியும். இந்த கதையில் வரும் ஆண்களை ஒருவகையில் மணலாக நாம் கொள்ளலாம். மணல் எப்போதும் தண்ணீரோடு ஒட்டி சகதி ஆகாது. அதேபோல் தான் இந்த கதையில் வரும் ஆண்கள் குடும்பத்தோடு ஒட்டி உறவாடி தனது உணர்வுகளை குடும்பத்தின் மத்தியில் வெளிப்படையாக வைப்பதில்லை. இது இந்த கதையில் வரக்கூடிய ஆண்களுக்கு மட்டுமே உடைய தனித்தன்மை அல்ல. பெரும்பாலான ஆண்களினுடைய மனோபாவமே அதுதான். தன்னுடைய குடும்பத்தின் வளர்ச்சிக்காக வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று தங்கி பணம் சம்பாதிக்கும் ஆண்களிடம் மட்டுமே குடும்பத்தின் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்த முயலும் பரிதவிப்பைக் காண முடியும். ஏனைய ஆண்களிடமும் கூட அத்தகைய பரிதவிப்பு படிந்திருப்பினும் அவர்களால் அதை வெளிப்படுத்தும் மனோதிடம் இல்லை என்பதாகவே என்னால் சொல்ல முடிகிறது. காரணம் என்னவென்றால் ஒரு குடும்பத்திற்குள்ளேயே ஒருவருக்கொருவர் பெரிதும் சம்பந்தமில்லாவர்களாக செயல்படுபவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை இணைத்து குடும்ப சக்கரத்தை சுழல வைக்கும் அச்சாணியான மைய நபரும் அந்த குடும்பத்தின் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய நபரும் இருவேறாக இருக்கும் போது அந்த குடும்பத்தில் ஏற்படும் இழப்பு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த கதை மூலம் அறியலாம்.
இந்த கதையில் வரும் மணலாக நாம் சரோஜினியின் தாயை கருதலாம். ஒரு குடும்ப கட்டுமானத்திற்கு செங்கல் சிமெண்ட் என எல்லாம் இருந்தாலும் கூட மணலும் தண்ணீரும் இல்லையென்றால் அந்தக் கட்டுமானத்தைக் குறித்து நம்மால் யோசிக்கக் கூட முடியாது. கட்டுமானம் மணல் என வருவதனால் இன்றைய கால கட்டுமானத்தின் சாரத்தைப் பற்றிய ஒரு குறிப்பை மட்டும் முன்வைக்கிறேன். இன்று கட்டுமானத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மணல் எம் சாண்ட் மணலாக இருப்பதை அதிகம் பார்க்க முடிகிறது. இந்த எம் சாண்ட் கட்டுமானமும் பூச்சும் சுவரில் விரிசலை ஏற்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த கதையில் வரும் மணலாக இருக்கக்கூடிய சரோஜினியின் தாயார் எம் சாண்ட் மணலாக இல்லாமல் ஆற்று மணலாக இருந்து தனது குடும்ப கட்டுமானத்தின் மீது எந்த விரிசலுமின்றி பார்த்துக்கொண்டது நாவலின் முதல் பாதியில் புலனாகிறது. சரோஜினியின் தாயுடைய இறப்பிற்குப் பின்பே அந்த குடும்பம் விரிசலை காண ஆரம்பிக்கிறது. அந்த விரிசலால் ஏற்படும் பிளவை எவராலும் தடுக்க முடியாது என்பது சரோஜினியின் இரண்டாவது அண்ணன் தான் காதலித்த பெண்ணை கல்யாணம் முடிப்பதற்காக குடும்பத்தை முறிப்பதன் மூலம் உறுதிபடுகிறது.
மூன்றாவது மணலாக ஒட்டுமொத்த குடும்பத்தையும் முன் வைக்கலாம். நிறைய பேர் சாபம் விடும் போது மண்ணோடு மண்ணாக போகட்டும் என்பர். ஆனால் இந்த கதையில் வரும் குடும்பம் ஒரு மணல் திட்டாக வெற்று பிண்டமாக காட்சியளிக்கிறது என்பதை அசோகமித்திரன் சித்திரித்திருக்கிறார். இதை அசோகமித்திரன் சித்தரிப்பதற்கான தேவை என்னவென்பதை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். வெகுஜன எழுத்துகள் பேசிய குடும்ப வாழ்க்கையை சற்று சீர்தூக்கி தனது கலாப்பூர்வ சித்திரத்தை கதைக்குள் தீட்டுவதன் மூலம் இந்த கதைக்கு செவ்வியல் தன்மையை பெற வைத்திருக்கிறார். இரண்டாவதாக சரோஜினியின் அப்பாவுடைய இயலாமையை கொஞ்சம் கொஞ்சமாக காட்சிப்படுத்தி குடும்பத்தின் மீது அளவற்ற அதிகாரத்தைச் செலுத்தக்கூடிய ஆண்கள் மீதும் குழந்தைகள் பேசுவதற்கு நாணுகிற அல்லது பயப்படுகிற அப்பாக்கள் மீதும் சம்மட்டி அடி அடித்து மணற்கட்டிடத்தை இடித்து வெறும் மணற் குவியலாக்கிவிட்டார்.
எந்தப் பெரும் பொறுப்புமின்றி வீடு திரும்பும் பெண்ணானவள் பெறும் சுமைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு தனக்காக வெளியேறுவதில் இந்த கதை முடிகிறது. இந்த கதையில் மணி கல்யாணத்தை ஒதுக்குவதையும் அவன் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்வதையும் ஆத்மார்த்தமாக விசாரிக்க எவரும் முன்வரவில்லை. அப்பு குழந்தைகளுடன் அதிகம் விளையாடுவதை அசோகமித்திரன் சொன்னதன் மூலமாக அவன் கண்கள் காதல் வயப்பட்டு பிற மனிதர்களை நோக்கி சங்கடப்படுவதைக் காட்டிலும் குழந்தைகளின் குழந்தைமையோடு இருக்கட்டும் என விளையாடி இருக்கின்றான். அது மட்டுமன்றி அப்பு பிராமண சடங்காச்சார குடும்பத்திற்கு ஒத்துவராதவள் என சொல்லப்படும் வேறு சாதிப் பெண்ணை காதலிப்பதால் தனது சுயசாதியத்தின் மீது கவலை கொண்டவனாகவோ அல்லது தனது சுய சாதியின் மீதான வெறுப்பினாலோ சாதியத்திற்குள் சிக்கியுள்ள அந்த குடும்பத்திலுள்ள பெரியவர்களை வெறுத்திருக்கலாம். ஏனென்றால் உயிரியல் படிக்கும் பிராமண மாணவி சரோஜினி என்கிற வடிவம் இந்த கதையின் தொடக்கத்திலேயே தெளிவாக முன்வைக்கப்படுகிறது.
சரோஜினியின் பெரியம்மா சரோஜினியின் வீட்டிற்குள் வருவதில் காட்டும் தயங்குவதற்கு பின் மற்றொரு கதை இருக்குமென எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் இந்த கதையில் சொல்லப்படவில்லை. வனஜா, பவானி என்ற இரண்டு பெண்களும் வேறுபட்ட வாழ்க்கையை வாழ்வதற்கான மையமாக அவர்களது அம்மா தான் இருக்கிறாள். ஒரு பெண் தனது அம்மா இருக்கும் போது பிள்ளைப்பேறு அடைவதற்கும் தனது தாயின் துணையின்றி பிள்ளைப் பேறு அடைவதற்கும் இடையிலான வித்தியாசம் இந்த கதையில் காட்டப்படுவதன் மூலம் தாய் வழியாகவே குடும்ப கட்டுமானம் எளிதாகவும் முறைமையோடும் நிகழ்கிறது என்கிற அறைகூவல் மறைமுகமாக விடுக்கப்படுகிறது. சரோஜினி என்ற பெண் மற்றும் சரோஜினியின் தாயுடைய இறப்பு ஆகிய இரண்டு கருக்களை வைத்து மணல் உருப்பெற்றிருக்கிறது.
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக