27 எதிர் கவிதைகள் - நிக்கனோர் பர்ரா தேர்வும் மொழிபெயர்ப்பும் அனுராதா ஆனந்த்
ஸ்பானிஷ் மொழியைச் சார்ந்த லத்தின் அமெரிக்க கவிஞர் நிக்கனோர் பர்ரா. இவர் தன்னைத்தானே எதிர் கவிஞர் எனச் சொல்லிக் கொண்டவர். இவருடைய கவிதைகளை எதிர் கவிதைகள் எனச் சொல்வதற்கான பின் காரணங்களாக இவருடைய கவிதை தொனிக்கப்படும் சாயலையும் அது தாங்கியுள்ள கருத்தையும் அடிப்படையாக வைத்து எதிர் கவிதை என்று ஒருவகையில் சொல்லலாம். அதேபோல கவிதையில் பயன்படுத்தப்படும் எதிரிணை வாக்கியத்தையும், நேர்க்கூற்றைச் சொல்லி அதன் எதிர்க் கருத்தை அதே தொனியில் முன்வைப்பதையும் கோட்பாட்டு ரீதியாகப் பார்த்து எதிர்க் கவிதை எனக் கருதுவதற்கான இடம் இருக்கிறது.
முதலில் சொன்ன எதிர்க்கவிதைக்கான கருத்தியல் விளக்கம் என்னவென்றால் இவரது கவிதைகளில் ஜெனரல் அகஸ்டோ பினோஷேவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்த இவருடைய குரல் கவிதைகளில் இருப்பதேயாகும். அந்த எதிர்ப்பு குரலோடு தன்னுடைய கவிதையை எதிர்ப்போரைப் பற்றிய தன்னிலை விளக்கத்தை எதிர் சொற்சேர்ப்பு முறையில் பர்ரா கவிதையாக எழுதியிருக்கிறார். நேரடியான முறையை விடுத்து எதிர் முறையில் எதிர்க்குரல் எழுப்பும் இந்த கவிதைகள் உணர்ச்சி கிளரலை எனக்கு அதிகம் ஏற்படுத்தவில்லை. மொழிபெயர்ப்பு குறித்து பர்ரா லிஸ் வர்னரிடம் “இது மொழிபெயர்ப்பு இல்லை. இது மறுகூறல். கவிதைகளை மொழிபெயர்ப்பது முடியாத காரியம். என் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்றால் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை " என்று கூறியுள்ளார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளை லிஸ் வர்னர், W.S. மெர்வின், ஆலன் கின்ஸ்பர்க், லாரன்ஸ் ஃபெர்லிங்கெட்டு, டேவிட் உங்கர் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். அந்த ஆங்கில வடிவத்தை வைத்தே தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள அனுராதா ஆனந்த் ஏற்கனவே நான் மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்புகளை தமிழுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கவிதைத் தொகுப்பு குறித்து சொல்ல வேண்டுமென்றால் இத்தொகுப்பிலுள்ள சில கவிதைகள் தமிழில் உள்ள வசன கவிதை நடையிலேயே அதிகம் இருக்கிறது. ஆதலால் பெருமளவில் அந்த கவிதைகள் என்னைக் கவரவில்லை இருந்தாலும் பர்ரா கையாண்டுள்ள எதிர் உத்தி கவி சொல்லல் வாசிக்கத்தூண்டும் வகையிலேயே இருந்தது.
நான் சொல்லிய அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்ற தலைப்பிலான கவிதையிலிருந்து பர்ரா தீவிரமான நடையில் எதிர்க்குரல் எழுப்பும் கவிதைகள் பலவற்றை இயற்றியிருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. கவிதைகளையும் கவிஞனையும் சாதாரணமாகவும் இழிவுபடுத்தும் போக்கிலும் குறிப்பிடும் பர்ரா அதனை உடனே உயர்த்தும் நடையை சிக்கல் ஏதுமின்றி கையாண்டிருப்பது தான் அவரது கவிதைப் படைப்பின் வெற்றியாக அமைகிறது. மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு எதிரான கேள்விகளில் இருந்தே இவரது எதிர் கவிதை மனோபாவம் தோன்றியிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். பர்ரா ஒரு மதப் பற்று உடையவர், மதத்தை எதிர்ப்பவர், கம்யூனிஸ்ட் சிந்தாந்த பிடிப்புடையவர்,இயற்கையை நேசிப்பவர், இயற்பியலாளர், கணிதவியலாளர் என்ற பல பரிமாணங்களை உடையவராகத் திகழ்ந்தார் என்பதற்கு மாறாக தன் வாழ்வில் இவற்றையெல்லாம் புகுத்தி மாற்றத்திற்குள்ளானார் எனச் சொல்வதே சரியாக இருக்க முடியும். இப்படியான மாறுபாடுடைய பயணம் கேள்விகளின் வழியே கட்டமைப்பு செய்யப்படுகிறது. எதிர் கவிதைகள் வாசிப்பு பற்றிய பாடங்கள் என பர்ரா சொல்லும் பகுதியிலுள்ள பல கருத்துக்கள் எதிர் கவிதைகள் என்றில்லாமல் பொதுவான கவிதை வாசிப்பிற்கே பொருந்தக்கூடியதே ஆகும். யூமா வாசுகியின் வார்த்தைகளில் சொன்னால் கவிதை என்பது ஒரு தரிசனம். அந்த தரிசனத்தை நினைத்தபடி அப்படியே விளக்க முடியும் என்பது எல்லா நேரங்களிலும் சாத்தியமாகாது.
பர்ரா ஒரு கவிதையில் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும் எதிரெதிரே நிறுத்தியுள்ளார். அது எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றைய காலகட்டத்தில் பொருத்துவதற்கு காரணம் அது பேசுபொருளாக கொண்டுள்ள கிறிஸ்தவமே ஆகும். கிறிஸ்தவ மரபுக்கு பொருந்தும் இக்கவிதை அக்காலத்திய சர்வாதிகார அரசியலைக் கருத்தில் நிறுத்தி அதற்குள் சமய எதிர்ப்பை வைத்து எழுதப்பட்டிருக்கலாம். இது எச்சரிக்கை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
“பிரார்த்தனை செய்யக்கூடாது
தும்மக் கூடாது
போற்றிப் பாடக் கூடாது
மண்டியிடக் கூடாது
வழிபடக் கூடாது
கதறியழக் கூடாது
இருமக் கூடாது
இவ்விடத்தில் படுத்து உறங்குவது
தடைசெய்யப்பட்டுள்ளது
தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது
பேசக் கூடாது
சமூகத்திலிருந்து யாரையும் தள்ளி வைக்கக்கூடாது
ஒத்திசைவாய் இருக்கக்கூடாது
தப்பியோடக்கூடாது
பிடிபடக்கூடாது
ஓடுவது முற்றிலுமாய் தடைசெய்யப்பட்டுள்ளது
புகை பிடிப்பதும் உடலுறவு வைத்துக் கொள்வதும் கூடாது."
இலங்கை தேசத்தின் விலையுயர்வு குறித்து நாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம். அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்போர் அங்குள்ள ஆளும் தரப்பைச் சார்ந்த சிங்களர்களே. இதைத் தான் விலையுயர்வு என்ற கவிதை பஞ்சத்தோடும் விலைவாசி உயர்வோடும் “வெளியே பரந்து விரிந்த மாபெரும் சுதந்திரம் மட்டுமே உள்ளது" எனச் சொல்கிறது.
இயற்கை நேசனாக நவீன காலம் கவிதையில் “எல்லாமே ஆதியிலிருந்தே மாசுபட்டிருக்கின்றன" என்கிறார். நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது கவிதையில்
“நம் முன்னோர்கள் சரியாகத்தான் வாழ்ந்துள்ளார்கள்
நாம் மறுபடியும் விறகடுப்பில் சமைத்த காலத்திற்கு
செல்ல வேண்டும்." என்று பர்ரா கூறுகிறார்.
வரக்கூடிய அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் பக்கம் எத்தனை பேர் ஈ.பி.எஸ் பக்கம் எத்தனை பேர் என தொலைக்காட்சியில் விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதும் எது வேண்டுமானாலும் மாறலாம். எதையும் தைரியமாக வெளியேச் சொல்லும் துணிச்சல் அனைவருக்கும் இருப்பதில்லை. எல்லாவற்றையும் துணிச்சல் என்ற பெயரில் உடனடி எதிர்வினை புரிந்து தம்பட்டம் அடிப்பதும் தவறான முன்னுதாரணம் ஆகும். தக்க சூழலும் சமயமும் வாய்க்கும் போதுதான் மாற்றத்திற்கான கதவு திறக்கப்படும். மாற்றத்திற்கான துணைபுரிதல் வினையும் நடைபெறும். இதைத் தான் பர்ரா தனது கவிதையில்
“அரசியல் மாற்றத்திற்கான புரட்சியின் போதுதான் யார் எந்த பக்கம் என்று புரிந்து கொள்ள முடியும்” என்கிறார்.
விருதுகளை எள்ளல் பட விமர்சிக்கும் எதிர் தொனி உடைய கவிதையை பர்ரா எழுதியிருக்கிறார். இவரது எதிர் கவிதை கருத்தாக்கத்திற்குள் அரசியல், சமயம், கவிதை, கவிஞர், தத்துவம், சடங்குகள், காதல் என்பதோடு வாசிப்பும் விருதுகளும் அடங்குகிறது. இடைநின்ற சம்போகம் என்ற கவிதையில் பறவையை நேசிக்கும் அழகான ஒரு பெண்ணை கிரேக்க கடவுளர்களின் பேரரசனான ஸ்யூஸ் பறவை உருவம் கொண்டு அவளிடம் வந்து அவளைப் புணர்கிறான். இதுபோல இந்திரன் மாற்றுருவம் பெற்று வந்து அகல்யையை புணர்ந்த புராண கதையோடு ஒத்துப் போகிறது. கிரேக்கம், சீனம், சமற்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் இத்தகைய கர்ண பரம்பரை கதைகள் ஏராளமாகவும் ஒரே தன்மை பெற்று வெவ்வேறு கதைகூறல் முறைகளிலும் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது என்பதற்கு இந்த கவிதை ஓர் உதாரணம் ஆகிறது.
கவிதை கட்டுமானம் குறித்த பர்ராவின் ரோலர் கோஸ்டர் கவிதையோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
“அரை நூற்றாண்டாக
நான் வரும் வரை
கவிதை என்பது
பரிசுத்த முட்டாளின்
சொர்க்கமாக இருந்தது
நான் வந்து என்
கவிதை ரோலர் கோஸ்டரை
கட்டினேன்
தோன்றினால் அதில் ஏறி
மேலே பயணியுங்கள்
ஆனால், மூக்காலும் வாயாலும்
ரத்தம் கக்க கீழே விழுந்தீர்களென்றால்
அது என் தப்பில்லை"
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக