பாரதிதாசன் பிறந்தநாள்


     இன்று பாரதிதாசனின் பிறந்தநாள்‌. பாரதிதாசன் ஒரு கவிஞனே இல்லை என்று சொல்லக்கூடிய  ஒரு கூட்டமும் பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் என தூக்கிக் கொண்டாடும் ஒரு கூட்டமும் தமிழ் இலக்கிய உலகில் உண்டு. 

     பொதுவாக தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருதுகோள்களுடன் தங்கள் தனித்துவ பார்வையோடு இலக்கிய வரலாற்றை எழுதியுள்ளனர். இதில் பலர் எழுதிய இலக்கிய வரலாற்று நூல்கள் நகல் எடுத்தது போன்ற உணர்வைக் கூட கொடுக்கலாம். சில நூல்களில் உள்ள வரலாற்றைப் பார்க்கும் போது வியப்பும் அபத்தமும் கூட தோன்றலாம். ஆனால் இந்த இலக்கிய வரலாற்று நூல்களில் எல்லாம் அடிப்படையான வகைமைகளாக கால வாரியான பகுப்பு பொதுமையாக உள்ளது. சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால அற இலக்கியம், காப்பிய காலம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம் என ஒவ்வொரு தனித்துவ வகைப்பாட்டு இலக்கிய வகைமை அதிகம் படைக்கப்பட்டு இருக்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு அற இலக்கியம் தோன்றிய காலங்களில் காப்பியங்கள் தோன்றவில்லை என்றோ சிற்றிலக்கியம் அதிகம் படைக்கப்பட்ட நாட்களில் அறம் சார்ந்த நூல்கள் எழுதப்படவே இல்லை என்றோ சொல்ல முடியாது. பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய அறத்தைப் பேசும் ஒரு நூலை அது அற இலக்கியம் இல்லை என்று ஒதுக்கவோ முடியாது. இன்றும் கூட நவீன கவிதைகளில் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட திணை ஒரு களமாக முன்வைக்கப்படுகிறது. இப்போது சொன்ன இலக்கிய வரலாற்றுக்கும் பாரதிதாசனுக்கும் என்ன தொடர்பு என குழம்ப வேண்டாம். இதையெல்லாம் சொன்னதற்கான காரணம் என்னவென்றால், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரே இலக்கிய கொள்கை மட்டுமே கவிஞர்களாலும் எழுத்தாளர்களாலும் மையமிட்டு பார்க்கப்பட்டது கிடையாது. இதை பாரதிதாசனுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.  பாரதிதாசன் வாழ்ந்த காலகட்டத்தில் எழுந்த கவிதைகளுள் பாரதிதாசனின் கவிதைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. அவருடைய கவிதைகளை விமர்சனத்திற்கு உட்படுத்தலாமே தவிர அவரே கவிஞரே இல்லை எனச் சொல்லக்கூடிய போக்கை நான் மறுக்கிறேன்.

     பாரதியை மகா பெரிய கவிஞனாக பிரம்மித்து பார்க்கக் கூடியவர்கள் பாரதிதாசனை கவிஞனே இல்லையென ஒதுக்குவது உண்டு. பாரதிதாசனை துடிப்புள்ள கவிஞராக மதிக்கக் கூடியவர்கள் பாரதியை பெரிதளவு பேசுவது கிடையாது. இதெல்லாமே நம் கண்முன் நிற்கக்கூடிய எடுத்துக்காட்டுகள். என்னைப் பொறுத்தவரை பாரதியின் பன்மைத்துவ பரிமாண வெளியின் ஒரு நீட்சி பாரதிதாசன். பாரதியினுடைய பாடல்களுக்கு நிகராக அல்லது கொஞ்சம் கூடுதலாக பாரதிதாசனின் கவிதைகள் பேச்சுப் போட்டிகளில் பேச்சைத் தொடங்குவதற்கான முன்னொட்டாக பழக்கத்தில் உள்ளது. பாரதிதாசனிடம் கவித்துவம் இல்லை அதனால் அவர் கவிஞர் கிடையாது எனச் சொல்வோர் உண்டு. ஒவ்வொரு கவிஞர்களும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்கின்றனர் அல்லது ஒரு குறிப்பிட்ட எழுத்து முறைமை அவர்களிடம் இருந்து தானாகவே வெளிப்படுகிறது. அந்த மாதிரியான ஒரு வகைமையாக பாரதிதாசனின் கவிதைகளை நாம் அணுகலாம். பாரதிதாசனிடம் இருந்து கவிதைகள் வெளிப்பட்ட காலத்தில் அது அவர் வாழ்ந்த காலத்திற்கான தேவையாக இருந்திருக்கிறது. அந்தத் தேவை எத்தனை வருடங்கள் நீடிக்குமோ அது வரை அவருடைய கவிதைகளும் நீடித்திருக்கும். இன்று சங்கப் பாடல்களில் இருக்கக்கூடிய சில பாடல்கள் இந்த காலத்திற்கு பொருந்தாததாக இருக்கும் பட்சத்தில் அந்த பாடலை இயற்றியோரை புலவரே இல்லை என எப்படி ஒதுக்க முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது.

      இன்று தமிழில் பெருகி நிற்கக்கூடிய கவிஞர்களிடம் இவர்கள் கவிஞர்கள் இல்லை என ஒதுக்கக்கூடிய மனப்போக்கும் சேர்ந்து பெருகி இருக்கிறது. யார் கவிஞர்? யாரெல்லாம் கவிஞர் இல்லை? யாரெல்லாம் முக்கிக் கொண்டு கவிதை எழுதுகிறார்கள்? யாருக்கெல்லாம் சளசளவென கவிதை ஊற்று பெருகி வருகிறது? அவன் எழுதுவதெல்லாம் கவிதை கிடையாது வெறும் பகடி என்கிற கருத்துகளுக்குள்ளும் விமர்சனங்களுக்குள்ளும் சென்று விவாதிப்பதை விட ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது உத்தமமென நான் நினைத்தாலும் கூட கவி எனும் சொல்லை ஒட்டி  கவிதைவெளியின் கலைச்சொற்களை உருவாக்கி தங்கள் பெயருக்கு பின்னால் நீளமாக போட்டிருப்பவர்களினுடைய  கூட்டத்திற்குள் பாரதிதாசனை போய்ச் சேர்ப்பதை எண்ணி எனக்கு வருத்தமுண்டு. 

      பாரதிதாசனின் கவிதைகளுக்குள் ஒரு கொள்கை உண்டு. அந்த கொள்கையினை பறைசாற்றும் கருவியாக அவர் கவிதையை பயன்படுத்தி இருக்கிறார் அது இலக்கியப் பார்வையில் வெற்றியும் பெற்றிருக்கிறது. நவீனத்துவம் பாரதியிடம் இருப்பது போல பாரதிதாசனிடமும் இருக்கிறது ஆனால் பாரதிதாசன் ஒரு திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேசும் கவிஞர் என்கிற போர்வையைப் போர்த்தி அவற்றை மறைக்கக்கூடிய வேலை நடைபெறுகிறது. மற்றொன்று என்னவென்றால் இன்று விமர்சனம் விமர்சகர்கள் எனச் சொல்பவர்களிடம் தமிழைப் பாடமாக படித்துக் கொண்டிருப்பவர்களினுடைய அல்லது தமிழ் பாடத்தை நடத்தும் ஆசிரியர்களினுடைய எழுத்துகளில் தொடர்பு நிலை அறுபட்டு காணப்படுகிறது என்கிற கருத்தை வெளிப்படுத்துகின்றனர். அதற்கு எடுத்துக் காட்டாக, பெருமாள் முருகன், சுகிர்தராணி போன்றவர்களைப் பற்றிய விமர்சனங்களை சொல்லலாம். இப்படியான விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர்கள் தமிழ் ஆசிரியர்களுக்கு படைப்பு நுட்பம் கைகூடாது. அவர்களிடம் படைப்பு மொழி கிடையாது என்கிற முன்னனுமானத்தோடும் ஒவ்வாமையோடும் அணுகுவதே காரணமாக இருக்குமென நினைக்கிறேன். எது எப்படியோ பாரதிதாசனின் பிறந்தநாள் என்றவுடன் இப்படியான பேச்சுகள் மற்றும் விமர்சனங்கள் பற்றிய நினைவுகள் மீண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி. 


                                     - அழகுராஜ்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்