2021ஆம் ஆண்டு தமிழுக்கான யுவ புரஸ்கார் விருது ஏற்புரை

 


எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் யுவ புரஸ்கார் விருது ஏற்புரை:


     அனைவருக்கும் வணக்கம்.


     நான், இந்த மேடையில் யாருடைய நீட்சியாக நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது வந்து குவியும் பொறுப்பும் கடமையும் அபரிமிதமானவை. கம்பன், கணியன், இளங்கோ, வள்ளுவன், ஔவையில் தொடங்கி பாரதி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் உள்ளிட்ட என் மூத்தோர்களைப் பணிந்து இவ்வுரையைத் தொடங்குவதே முறை.


     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று பாடினான் தமிழின் மகத்தான கவிஞன் கணியன் பூங்குன்றன். உலகின் ஒரு மூலையில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இவ்வேளையைவிட இவ்வரியை அழுத்தமாய்ப் பற்றிக்கொள்ள பொருத்தமான தருணம் வேறொன்றில்லை. நேற்று வரை ஒரே தேசமாக இருந்துவிட்டு, இன்று சமூக, அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இரண்டுபட்டு நிற்கும் தேசங்கள் அத்தனையையும் நோக்கி எங்கள் கவி பாடிய ஒற்றை வரி இது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட இவ்வரிகளுக்கு நியாயம் சேர்க்க இங்கே ஆட்களில்லை என்பது துரதிர்ஸ்டவசமானது.


     இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொழில்புரட்சியும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களும் உலகின் எழுநூற்றுச் சொச்சம் கோடிப் பேரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறன. மொத்த உலகமும் ஒரு சிறு கிராமமாகச் சுருங்கியிருக்கிறது. என் கல்லூரிக்காலம் வரை அண்டை மாநிலத்தவரோடு ஒரு ஹலோ சொல்லக்கூட வாய்க்காத நானே, இன்று என் பணியின் நிமித்தம் தினம் ஐந்து ஆறு தேசத்தவர்களோடு பேசுகிறேன். இப்படி தொழில்நுட்பச் சாத்தியங்கள் நம் அத்தனை பேரையும் ஒன்றிணைக்கும் அதே வேளையில் ஒரு வீட்டில், ஒரே கூரையின் கீழ் வாழும் இரண்டு பேரைக்கூட தனித்தனி தீவாய்ப் பிரித்து வைக்கும் அபத்தமும் இணைந்தே இங்கே நிகழ்கிறது.


     நாள்தோறும் கோடிகளைக் கொட்டி ஆயுதங்கள் செய்யும் தேசங்கள், அண்டை நாடுகளின் பசித்திருக்கும் வயிறுகளை மறந்துவிடுகின்றன. ஏன் என்றால் அவர்கள் எல்லைக்கோட்டுக்கு அந்தப் பக்கம் நிற்கிறார்கள். இதைப் பார்த்துதான் எம் அருந்தமிழ்ப்புலவன் வள்ளுவன் “ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்கிறான். பசித்திருக்கும் ஒருவனின் பசியைப் போக்குவதே நாம் கொண்ட வலிமைகளுள் எல்லாம் முதன்மையானது. நாமோ படை எண்ணிக்கையிலும் பீரங்கியின் முழக்கத்திலும் வலிமையை அளந்துகொண்டிருக்கிறோம்.


     பொருள் தேடி பரபரப்பாய் ஓடும் இவ்வசர யுகத்தில் அண்டை வீட்டின் ஆட்களைக்கூட நாம் அறிந்து வைத்திருப்பதில்லை. பின் எங்கே அடுத்த நாட்டுக்காரனுக்காக இரங்குவது? நம்முடைய ஒவ்வொரு செயலிலும் அவசரம் நிரந்தரமாகிவிட்டது. எப்போதும் எதையாவது நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒன்றை அடைந்ததும் மற்றொன்று, அதை அடைந்தால் அடுத்தது என்று இலக்குகளை நிறுவிக்கொண்டு ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.


இப்படியான ஓட்டத்திலிருந்து நம்மை நிதானப்படுத்தவும், அணிந்திருக்கும் கடிவாளத்தைக் களைந்துவிட்டு சுற்றியிருப்பவற்றின்பால் அக்கறை கொள்ளவுமே கலையும் இலக்கியமும் அவசியமாகிறது.



     தமிழின் மகத்தான எழுத்தாளரான கி. ராஜநாரயணனின் கதை ஒன்று உண்டு. சிறிய கதை. வெயில் தகிக்கும் கரிசல் மண்ணே களம். வெக்கையும் புழுக்கமுமாய் நகர்கிறது ஒரு பேருந்து. உள்ளே அமர்ந்திருக்கும் அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு பிரச்சினை. எனவே உள்ளேயும் வெளியேயுமாய் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். எரிச்சல் மண்டுகிறது. வாழ்வே சலிக்கிறது அப்போது உள்ளே கைக் குழந்தையோடு அந்தப் பேருந்தில் ஏறுகிறாள் ஓர் அழகிய இளம்பெண். அந்தக் கணத்திலிருந்து அப்பேருந்தின் மொத்தச் சூழலும் மாறிவிடுகிறது. அதே வெயில். அதே புழுக்கம்தான். இருந்தாலும் அப்பழுக்கற்ற அக்குழந்தையின் சிரிப்பு அந்தப் பேருந்தையே வசந்தகாலம் ஒன்றில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. அவள் இறங்கியதும் மறுபடியும் அதே புழுக்கம், வெக்கை, வேதனை. மிகப்பொருத்தமாக இக்கதைக்கு "மின்னல்” என்று தலைப்பிட்டு இருப்பார் கி.ரா.


     அந்த மின்னல்தான் கலையும் இலக்கியமும். இன்று, எழுத்து அதைத்தான் செய்யவேண்டியிருக்கிறது. அமைதியிழந்தவனை ஆசுவாசப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. அதே நேரத்தில் அறமற்ற ஒன்றை தைரியமாய் முன் நின்று கேள்வியும் கேட்க வேண்டியிருக்கிறது. லட்சம் காதுகள் கேட்காமல் மூடிக்கொள்ளட்டும், பரவாயில்லை. ஆனால், நல்லதோர் எழுத்தாளன். தான் உண்மையென்று உணர்ந்ததை உரைக்காமலிருக்கக்கூடாது. அப்படி உண்மையின் வழி நிற்பதற்கு அந்தக் குழந்தையைப் போன்ற கபடமற்ற உள்ளம் வேண்டியிருக்கிறது ஒரு படைப்பாளிக்கு. அவ்வுள்ளம் நிலைத்திருக்க இந்நேரத்தில் எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி வணங்குகிறேன்.




     நான் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணமாயிருக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள். எப்போதும் உடனிருக்கும் நண்பர்களுக்கும் சக படைப்பாளிகளுக்கும் அன்பு. என் படைப்புகளைப் பிரசுரித்த பதிப்பகங்களான யாவரும் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும், நம்பிக்கையின் சிறுவேர் பற்றி காத்திரமாக இயங்கிவரும் சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களுக்கு என் நன்றிகள். கனவில் பாதி நினைவில் மீதி என்று வாழும் ஓர் எழுத்தாளனோடு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதென்பது அத்தனை சாதாரணமானது அல்ல. என் எல்லாப் பிழைகளோடும் என்னைப் பொறுத்துக்கொண்டிருக்கும் மனைவி திவ்யாவுக்கும் அன்பு மகன் வியனுக்கும் முத்தங்கள். இவ்விருதை எனக்களித்துச் சிறப்பித்த சாகித்திய அகாடமிக்கு நன்றிகள்!


     என்னுடைய இவ்விருதை அமைதியை நோக்கிச் செயல்படும் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.


‘எல்லோரும் சற்று நிம்மதியாக வாழும் காலம் ஒன்று வரும்’ என்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் வாக்கியத்தைக்கூறி இவ்வுரையை நிறைவு செய்கிறேன். அனைவருக்கும் நன்றி!


                -கார்த்திக் பாலசுப்ரமணியன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்