தண்ணீர்- அசோகமித்திரன் (நினைவு நாள் வாசிப்பு)
தண்ணீர்- அசோகமித்திரன்
“என்னோட அனுபவத்திலேயே பார்த்தேன் நெறைய பேரு பேர தெரிஞ்சு வெச்சி இருக்காங்க. முகத்த தெரிஞ்சு வச்சுருக்காங்க. உங்களை டிவில பார்த்தேன். பத்திரிக்கையில பார்த்தேங்குறாங்க. ஆனா படிக்குறத பத்தி ஒரு கதைய பத்தி, ஒரு வார்த்தை வரவே வராது. அவரோட ஒரு மணிநேரம் பேசினாக்கூட நம்ம படைப்பைப் பத்தி அபிப்பிராயமே வராது. அப்படின்னா என்ன அர்த்தம் அவர் படிக்கலன்னு அர்த்தம். பத்திரிகையில வரக்கூடிய அளவுக்குப் பிரபலமானவர் இதுதான். ஆகவே, ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கக்கூடிய விஷயம் என்னன்னா, அவனோடத படிச்சுட்டு நன்னா இருக்குன்னு சொன்னா போதும். அப்புறம் இந்த பப்ளிசிங் இருக்கே, நெறைய வெளியிடுறது. விற்பனை ஆறதுயெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா இந்த ஒரு கவலையும் இருக்கு. படிக்கப்படனுமே." என்று அசோகமித்திரன் தீராநதி இதழில் வந்த நேர்காணலில் சொல்லியிருக்கிறார். எல்லா எழுத்தாளர்களும் எழுதுவது வாசிப்பதற்காகத் தான். வாசிக்கப்படுவதோடு தனது எழுத்தைக் குறித்த அபிப்பிராயம் வாசகர்களிடம் காணப்பட வேண்டும் என்கிற விருப்பமும் இருக்கும். அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் கடமை வாசகருக்கு உண்டு. அசோகமித்திரனின் நினைவு நாளில் அவரது எழுத்துக்களை வாசிப்பதோடு அது பற்றி பகிர வேண்டும் என்றும் அப்படிச் செய்வது தான் அவர் நேர்காணலில் வெளிப்படுத்திய ஏக்கத்தை ஈடு செய்வதற்கான ஒரு படி என நான் நம்பியதன் விளைவாக அவரது ‘தண்ணீர்' நாவல் பற்றிய சில கருத்துக்களை பதிவு செய்கிறேன்.
அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் பற்றிச் சொல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்து மற்றும் அவரது புனைப்பெயர் குறித்து மோகனரங்கன் காலச்சுவடு வெளியிட்ட அசோகமித்திரன் சிறுகதை தொகுப்பிற்கு அளித்த முன்னுரையின் சாரத்தைக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். “அவர் ஜெமினியில் பணிபுரிந்தபோது, அவருடைய சக ஊழியராகவும் அவருக்கு ஆதர்சமாகவும் விளங்கியவர் என்.வி.ராஜாமணி. அவர் எழுதிய நாடகம் ஒன்றில், லட்சிய வேகம் மிகுந்த அரசன் ஒருவன், அவனாகவே வேறு பெயரில் புரட்சியாளர் குழுவில் சேர்ந்துவிடுவான். அந்தக் குழுவினர் அரசனை யார் கொல்வது எனச் சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்வு செய்கையில் அவன் பெயரே வந்து விடுகிறது. அவனை அவனே கொல்ல வேண்டும். அந்த கதாபாத்திரத்தின் பெயர் தான் “அசோகமித்திரன்" அந்தப் பாத்திரம் போலவே இவரும் ஓர் எழுத்தாளனாக தனது மொழியின் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, கதையின் பாத்திரங்கள் அவற்றின் வார்ப்புக்கேற்ப சுயேச்சையாக இயங்கவும் பேசவும் கூடிய பொது மொழி ஒன்றை உருவாக்கி பயன்படுத்துகிறார் என நாம் உருவகித்துக் கொள்ளலாம். தவறில்லை." இந்த கூற்றுப்படி அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் தங்களைத் தாங்களே இயக்கிக்கொண்டு செல்வதால் அவற்றுடனான அசோகமித்திரனின் தொடர்பு குறைகிறது. கதாபாத்திரங்களை படைப்பின் போது தடையின்றி செல்லவிடுவதால் கதாபாத்திரங்கள் செந்தன்மை பொருந்தியதாக மெருகேறுகிறது. அப்படியான ஒரு படைப்பு தான் “தண்ணீர்" நாவல்.
தண்ணீர் சங்க பாடல்கள் தொட்டு நவீன இலக்கியங்கள் வரை தொடர்ந்து இலக்கியத்துடன் பல நிலைகளில் பல வடிவங்களில் பயணிக்கிறது. ஐந்திணைகள் சார்ந்த பாடல்களில் வரும் நீர் நிலைகளும் பாடலின் வழியாக நாம் அந்த நீரியல் பகுதியைப் பார்க்கும் பார்வையும் தொடர்ந்து வித்தியாசப்படுகிறது. நவீன இலக்கியங்களில் பிரான்சிஸ் கிருபா, ரமேஷ் பிரேதன், ஜோ டி குரூஸ் என்பவர்கள் கடலைப் பற்றிய வியப்புக்குரிய புனைவுகளையும் வண்ணதாசன் போன்றோர் ஆறுகளையும் ஆற்றுப்படுகைகளையும் தனது புனைவுப் பிரதேசத்தில் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். இப்படியெல்லாம் பல வகைகளில் தண்ணீர் இலக்கியங்களில் பதிவாகும் நிலையில் அசோகமித்திரனின் தண்ணீர்ப் பிரச்சினையை மையமிடுகிறார். இனிவரும் காலங்களில் தண்ணீர் பிரச்சினை முற்றிலுமாக தீரப் போவதில்லை. தண்ணீர்ப் பிரச்சினையைப் போன்றே படிமத்துவத்துடன் நகர்த்தும் பெண்களின் வாழ்வியல் பிரச்சினைகளும் தீர்வினை நோக்கி நகருமா என உறுதியாக சொல்ல முடியாது. ஆகவே ‘தண்ணீர்' நாவலில் பேசப்படும் தண்ணீர் பிரச்சினைகள் செவ்வியல் தன்மை பெறுகிறது. இலக்கியத்தில் தண்ணீர் என்ற சொல்லுக்கு முகவரியாக நான் கொண்டிருந்தது வண்ணதாசனின் கவிதையைத் தான். இப்போது தண்ணீர் நாவலும் மற்றொரு முகவரியாக வந்து சேர்கிறது.
“மணல் தெரிகிற அளவுக்குத்
தண்ணீர் தெளிவு.
கூழாங்கற்கள் தெரிகிற அளவுக்குத்
தண்ணீர் தெளிவு.
அயிரை மீன்கள் தெரிகிற அளவுக்குத்
தண்ணீர் தெளிவு.
இவ்வளவு தெளிவாக இருந்தால்
தெரியுமா தண்ணீர்?"
வியப்பான கேள்விக்குறியோடு முடியும் இக்கவிதையில் பார்க்கும் போதே மூழ்கடித்து சலசலத்து ஓடும் தண்ணீரும் தண்ணீர் நாவலில் பார்க்கக்கூடிய தண்ணீரும் முழுக்க வெவ்வேறானவை.
தண்ணீரின் வளம், செழிப்பு, பஞ்சம் என இலக்கியம் தனது உயிர் ஆதாரத்தை பதிவிட்டு வருவதன் வரிசையில் 1970களை களமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தப் படைப்பு 2010களிலும் பொருத்தப்பாட்டுடன் விளங்கியது தான் இந்நாவலுக்கான அடிநாதம். நான் என்னுடைய கண்களில் பார்த்தவற்றை நினைவலைகளாக இந்த நாவலை வாசிக்கும் போதே அடைய முடிந்தது. அதில் முதலாவது மழை வரும் நாட்களில் மாடியில் இருந்து வெளியே நீட்டப்பட்ட குழாய்களுக்குக் கீழே மழையோடு மழையாக குடத்தோடு நிற்கும் கூட்டம். இரண்டாவது சாக்கடை நீர் போன்ற கலங்கிய நீர் வரும்போது அந்த நீரின் ஓட்டத்தை மிஞ்சிய சலசலப்பு. இந்த இரண்டையும் நாவலோட்டத்தில் யதார்த்தமாக அசோகமித்திரன் பூசியுள்ளார். இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் போல நானும் அடிபம்ப் அடித்திருக்கிறேன். கிராமத்தில் உள்ளவர்கள் கிணறுகளை நோக்கியே தண்ணீர் பஞ்சத்தின் போது படையெடுப்பார்கள். ஆனால், நகரத்தில் அந்த அடி குழாயில் தண்ணீர் வருகிறது என வீட்டுக்கு வீடு தேடி திரிவதும் தண்ணீர் கீழிறங்கிய போது ஒரு செம்பு தண்ணீர் ஊற்றி வேகமாக அடித்து தண்ணீரை வரச்செய்வதும் 2000களின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் தண்ணீர் டக்கர் தெருவில் வரிசையாக காத்துக் கிடக்கும் குடங்களை நனைக்கும். தண்ணீர் டக்கரில் நாளொன்றுக்கு தரும் இருபது ரூபாயைத் தாண்டி தண்ணீர் விடுவதில் கிடைக்கும் சந்தோஷத்திற்காக நான் தெருக்களில் சுற்றியுள்ளேன். காலை ஆறு மணி தொடங்கி சாயங்காலம் ஆறரை மணி வரை தண்ணீர் டக்கரிலேயே நாள் கணக்கில் சுற்றியுள்ளேன். பெரிய ஓஸ் பைப்பை தோளில் தூக்கிக் கொண்டு மாடியில் உள்ள டேங்குக்குள் போடுவது அதைத் திருப்பிக் கொண்டு வந்து லாவகமாக சுருட்டுவது, தண்ணீர் எடுக்கப் போகும் போது தண்ணீர் டேங்க் மூடியைத் திறக்கும் போது வரும் வெப்பத்தை முகத்திற்குள் உள்வாங்குவது, குடத்திற்கு கணக்குச் சொல்லி காசு வாங்குவது, கேட்லாக்கை திறந்து திறந்து மூடுவது என நான் செய்த வேலைகளின் நினைவுகள் பசுமையாக பலமுறை எனக்கு வருவதுண்டு. ஆனால், தண்ணீர் நாவலில் தண்ணீருக்காக காத்துக் கிடக்கும் லாரிகள் பற்றிய வார்த்தைகளின போது பசுமையான நினைவுகளை வெம்மை தாக்கி வறட்சியாக்கியது. தண்ணீரை சுமந்து சென்ற பெயர் தெரியாத ஒரு பெண் மூலம் தான் இந்த நாவல் எழுதப்படுவதன் தொடக்கம் என்று சொல்லும் அசோகமித்திரன் நாவல் முழுக்க பெண்களையும் அவர்கள் அகம் மற்றும் புறம்சார் பிரச்சினைகளையும் தொடர்ந்தவாறே இருக்கிறார். ஒரு பெண்ணால் இக்கதை தொடங்கியதால் தான் தண்ணீரோடு பெண்களும் எழுதப்பட்டனரா எனத் தெரியவில்லை.
இந்நாவலில் ஜமுனா, சாயா எனும் இரண்டு சகோதரிகளும் அவர்கள் இருவருடைய வாழ்வும் அதில் காணப்படும் பிரச்சனைகளும் இரு வேறு திசைகளில் இருக்கிறது. அந்தப் பிரச்சினைகளை மறப்பதற்கான உத்திகள் டீச்சரம்மா மூலம் ஜமுனாவிற்கும் ஜமுனாவிடம் இருந்து சாயாவிற்கும் கண்ணீர்த் துளிகள் மூலம் பரிமாறப்படுகிறது. டீச்சரம்மா தனது பதினைந்தாவது வயதில் காசநோய்க்கு சரியான சிகிச்சை முறைகளும் மருந்து மாத்திரைகளும் இல்லாத காலத்தில் காசநோயால் பீடிக்கப்பட்ட ஒருவனுக்கு கட்டிவைக்கப்படுகிறாள். அந்த காசநோயாளியாக இருக்கும் அவளது கணவன் விடாத இருமலோடு அறையெங்கும் இருமல் ஒலி எதிரொலிக்கும் சமயத்தில் முதலிரவுக்காக டீச்சரம்மா உள்ளே அனுப்பப்படுகிறாள். உடனே அவன் வெறி கொண்டவனாக கண்கள் பிதுங்கி, சளித் திவலைகள் மூக்கு, வாய் வழியே ஒழுக வேகமாக புணர்ச்சியில் இயங்குகிறான். அவளால் கண்களை மூடவும் முடியவில்லை. முகம் முழுவதும் வியர்வைத்துளிகளோடு சளித் திவலைகள். இப்படியான ஒரு மோசமான வாழ்வை சிறுவயதிலேயே வரிக்கப்பட்ட டீச்சரம்மா தனது வாழ்வில் ஒரு நதிநீர் போல ஓடுகிறாள். இப்படி எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை அடித்துக் கடக்கும் வேகம் அவளுக்குள் இருக்கிறது. “பொண் ஜென்மம் எடுத்தா அழலாமா? அழாம பல்ல கடிச்சுண்டு இருக்குறதுக்குத்தானே இல்லாத அவதிகளோட பொண்ணாய்ப் பிறக்கிறது" என ஜமுனாவைத் தேற்ற டீச்சரம்மா ஒருபுறமும் கண்டிப்பான பாசப் போராட்டத்துடன் தனது அக்காவை நல்வழிப்படுத்த சாயா மறுபுறமும் இருக்க பாஸ்கர் ராவ் மற்றும் தனது சினிமா கனவு என பல நிலைகளில் நிராசைகளின் திரட்சியாக கலங்கிய குட்டை நீர் போல ஜமுனா இருக்கிறாள். இராணுவத்தில் வேலை பார்க்கும் கணவன், மகன் முரளி, தீர்க்கமற்று கலங்கிய வாழ்வை தனக்கென எடுத்துக் கொண்ட அக்கா, தான் தனியே விட்டு விட்டு வந்த அம்மா என்று பலவகை வாய்க்கால்கள் வழியே பாய்ந்து செல்லும் வாழ்க்கை சாயாவினுடையது. தனது அக்காவின் பெயருக்கு நிகழப்போகும் கலங்கத்தை எண்ணி அவள் வடிக்கும் கண்ணீர், ஜமுனாவின் கண்ணீர், டீச்சரம்மாவின் பாடுகள் என்ற மூன்று நிகழ்வுகளும் ஒருவருக்கொருவர் தங்கள் மனத்தை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பாகவும் தேற்றுதலாகவும் அமைகிறது.
“உன்னைப் பத்தி யாராவது கவலைப்பட்டாத்தான் உனக்கு அவங்கள பத்தி கவலைப்பட முடியுமா? ரொம்ப சின்னத்தனமாயில்லே? ஏன் இப்படி ஏழையாயிருக்கே?" என்று டீச்சரம்மா அடுக்கும் கேள்விகள் நாவலின் திசையை பிரச்சினைகளை மட்டும் மையப்படுத்தியதாகவோ அல்லது தீர்வு சொல்வதாகவோ அமையாமல் பிரச்சனைக்குட்பட்டவர்களின் பார்வையை வேறொரு திசையை நோக்கி பார்க்க வைத்து ஒட்டு மொத்த உலகமும் ஏதோ ஒரு சிக்கலில், பிரச்சினையில் தான் இருக்கிறதென உணர்த்துகிறது. இந்த உலகத்தில் அனைவருக்கும் இலவசமாக உபயோகமாக கொடுக்கும் ஒரே பொருள் அன்பு மட்டும் தான் என்கிற உண்மையும் மற்றவர்கள் மீது நாம் காட்டும் பரிவு நம் துன்பங்களை மறக்கச் செய்யும் என்கிற மறைபொருளையும் நாவல் சுட்டுகிறது.
1970களில் நகர வாழ்வில் தன்னிச்சையாக இயங்கத்தொடங்கிய பெண்களின் வாழ்க்கை பற்றிய பதிவுகள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், குழந்தை திருமணம், காச நோய் பாதிப்பு, கனவுகளோடு ஓடும் பெண்கள், வீட்டை பெரிய உலகமாக பாவித்து அதற்குள் அடக்கிக்கொண்டு தனது பிள்ளைகளையும் அடங்கச் செய்யத் துடிக்கும் பெற்றோர்கள், தண்ணீர்ப் பிரச்சினை, தண்ணீரால் தான் குடும்பம் காப்பாற்றப்படும் என சிறுவயதிலேயே பாரமான குடத்தில் தண்ணீரோடு குடும்ப பாரத்தையும் சுமக்கும் குழந்தைகள், உடன் பிறந்தோர் மீதான அக்கறை, கண்டிப்பு, பெண்களுக்கான சொத்துப் பங்கீடு என பல தகவல்களை தனது கருத்துக்கு உட்படுத்தாமல் அப்படியே அசோகமித்திரன் இந்த நாவலில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்த நாவல் பிரச்சனைக்குள் ஆட்பட்டு தற்கொலைக்கு நேராக போகத் துடிக்கும் பெண்கள் வாசிக்கப்பட வேண்டியது.
-அழகுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக