மானாவாரிப்பூ - மேலாண்மை பொன்னுசாமி
மானாவாரிப்பூ - மேலாண்மை பொன்னுசாமி
மேலாண்மை பொன்னுசாமி எழுதிய சிறுகதைகள் அடங்கிய இந்த தொகுப்பில் வரும் கதைகள் எல்லாம் கரிசல் மணம் பரப்புவதோடு சூழலியல் மற்றும் சாதிய பாகுபாட்டோடு பெண்ணியத்தையும் பேசுகிறது. மற்ற கதைகளில் வருவது போல கீழ்ச்சாதி என ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழ்மையையும் வேதனையையும் மட்டும் சொல்லாமல் அவர்களுல் இருக்கும் திறமை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் கோபம், சுயமரியாதை, தன்மானம் ஆகியவற்றை வெளிப்படுத்தி தீண்டாமையை கடைபிடித்தால் மேல்சாதியினருக்கே அழிவு என உரக்க சொல்லி அவர்களை சமூகத்தில் சமநிலைப்படுத்துவதோடு மேல் சாதியனரை எதிர்த்து தன்னை உயர்ந்தவனாக கட்டமைக்கும் வகையிலான கதாப்பாத்திரங்களை அமைத்து அதற்கேற்றவாறு சுடுகாடு, துணி துவைக்கும் குளம், முடிவெட்டும் மரத்தடி நிழல் பன்றியை அடைக்கும் தட்டி என பல கதைக்களத்தை வைத்து வித விதமாக கதைகள் எடுத்தாளப்பட்டு இருக்கிறது. விதவைகள் பற்றிய கதைகளிலும் குடிகார கணவன் இருப்பது போலான கதைகளிலும் கீழ்சாதிப் பெண்களாக இந்த சமூகம் சிலரை வகைப்படுத்தி அவர்களோடு ஊடாடல் செய்வது போன்ற கதைகளிலும் பெண்களின் வலிமையையும் அவர்கள் வெறுமனே அடங்கிப் போகும் குணமுடையவர்கள் அல்ல மாறாக அதிக பொறுமை உடையவர்கள் எனக் கூறுவதோடு பெண் பிள்ளை பிறப்பதை எண்ணி மருண்டு பார்ப்பதையும், பெண் குழந்தை தொழிலாளராக போகும் இடத்தில் சந்திக்கும் அவமானங்கள், ஒரு சிறுபெண் பூப்படைவதை ஊர் பலவாறாக பேசுவதும், பூப்படையாமல் பாவாடை கட்டுவதை பெரும் குற்றமாக எண்ணும் மக்களின் வெள்ளந்தி மனுதும் வெளிப்படுத்தப்படுவதோடு விதவைப் பெண் தனியாளாக நின்று குடும்பம் நடத்துவதால் ஏற்படும் அங்கலாய்ப்பு மற்றும் தொல்லைகள் என பல பிரச்சனைகளையும் பேசுகிறது. அதோடு நில்லாமல் பெண்ணின் சாமர்த்தியமும் அவளுக்குள் இருக்கும் உணர்வு நிலைகளும் எப்படிப்பட்ட நிலையாயினும் தவறான பாதைக்கு செல்லக்கூடாது என வைராக்கியமாக நிற்கும் கரிசல் பெண்களின் வட்டார மனநிலையும் அதோடு சேர்த்து எழுகிற யோசனைகளும் செயல்களும் பேசப்பட்டு பெண்களுக்குள் இருக்கும் தியாகத்தையும் தைரியத்தையும் சொல்லி ஆணும் பெண்ணும் சமமென நிறுவும் போக்கில் கதைகள் இருக்கின்றன.
பஸ்ஸில் நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையில் ஏற்படும் வாக்குவாதம் கடந்த அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் மனிதனை வெளிப்படுத்தி இருவரையும் குற்றவாளியாக்காமல் நிராபராதிகளாக மாற்றிக் காண்பித்து உள்ளார். விவசாய நிலமும் அந்த நிலத்தின் ருசியும் காற்றும் பேசப்படுகிறது. ஆடு மேய்த்தல், தீப்பெட்டி தொழிற்சாலை, கடைகள், கடைக்காரர்கள், துணி துவைத்தல், முடி வெட்டுதல், சுடுகாட்டில் பிணத்தை எறித்தல், கூரை வேய்தல், குழந்தைக்கு பிரசவம் பார்த்தல் என பல தொழில்களைப் பேசுவதோடு அதிலுள்ள நுணுக்கங்களும் சொல்லப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஆண்களின் போக்கும் அவர்கள் வாழ்வை நினைத்து உழைப்பில் கருத்துள்ளவர்களாக உழைத்து குடும்பத்தை மறக்கும் போக்கும் ஒரு ஆண் இறந்தற்கும் அல்லது அவனுள் அவனே மாற்றம் பெற்றதற்கும் பிறகு குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களும் சண்டைகளை கடந்து மனிதநேயமும் இரத்த பாசமும் சமரச உறவுநிலையும் பல கதைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. சூழலியல் பற்றி பேசும் கதைகளில் மரங்களும் மாறிப்போன நிலங்களும் நிலங்களோடு சேர்ந்தே மாறிய மனிதர்களின் வரட்டு மனமும் வறழ்ச்சியும் கால மாறுதல்களும் காலத்தோடு சேர்ந்த சமூக அமைப்பும் இயற்கை வளங்களும் மாறிப்போன சூழல் மகிழ்ச்சியாகவும் ஏக்கமாகவும் இன்னும் பிற உணர்வு நிலைகளை அடக்கியும் பேசப்பட்டு இருக்கிறது. சில கதைகளில் வரும் கதையைமைப்பையும் கதாபாத்திர பெயர்களையும் பொருத்திப் பார்த்தால் தொடர் கதையைப் போன்று இருந்தாலும் கதைகள் நூலிழையில் வேறுபடுகிறது.
இந்த கதைகளில் வரும் இராஜபாளையம், ஆலங்குளம், சிவகாசி, கம்மாப்பட்டி, கரிசல்குளம், சத்திரப்பட்டி, கலிங்கப்பட்டி என ஊர்களும் சாலைகளும் வார்த்தைகளும் எங்கள் ஊரையும் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பேசுவதால் இங்கு நான் பிறப்பதற்கு முன்பான எனக்கு முந்தையவர்களின் வாழ்வும் அவர்கள் பயணப்பட்ட வழித்தடங்களும் இப்படிப்பட்டதாகத் தான் இருந்தது என்பதை காட்டுவதோடு இப்போது நான் பார்ப்பதையும் இருபது முதல் நாற்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்திருக்கிறது என்பதையும் பல நிமிடங்கள் பொருத்திப் பார்க்க வைக்கக்கூடிய கதைகளாக சில கதைகள் இருந்தது. இந்த கதைகள் எல்லாம் விகடன், செம்மலர் உள்ளிட்ட இதழ்களில் வெளியானவையாகவும் பரிசுகள் பெற்றதாகவும் சாகித்ய அகாதமி கூட்டம் போன்ற கூட்டங்களில் வாசிக்கப்பட்டதுமாக காணப்படுகிறது. இதன் கடைசிப் பகுதியில் விவசாயி என்ற பெயரில் பலரது சிறந்த கவிதைகளை தாங்கிய வண்ணம் இந்த புத்தகம் இருக்கிறது..
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக