காடு - ஜெயமோகன்

 

காடு -ஜெயமோகன்


     ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் சிறுகதையை சில வருடங்களுக்கு முன்பு படித்திருந்தேன், என்னமோ தெரியவில்லை, என் மனசுக்கு ரெம்ப நெருக்கமானதாக அது மாறிப்போனது.யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளாய் சூழலியல் சார்ந்த விடயங்களை மிக அழுத்தமாக, அதே சமயம் கோப முகமாக ஜெயமோகனின் எழுத்துமழை பொழிந்திருந்தது. 

      அது போன்றதொரு நாவல் என்கின்ற எதிர்பார்ப்பில் தான் காடு என்கிற நாவலை படிக்க ஆரம்பித்தேன். ஆனால், அது நான் நினைத்த காடாகவும் இருந்தது, இன்னொரு விதமான காடாகவும் இருந்தது. இரண்டு காடுகளை அங்கு நான் பார்த்தேன். ஒன்று வானுயர்ந்த பேச்சி மலை அடிவார, விலங்குகள் வசிக்கும் காடு. மற்றொன்று, மனிதர்களே மரங்களாய் உருவான காடு. இரண்டு காடுகளும் ஒருவாறு உள்ளளுற அச்சமூட்டுவதாக இருந்தது, இரண்டில் எதில் வழி தவறினாலும் கஷ்டம் தான்! தவறினபாதையை கண்டுபிடித்த போது கிரிதரன் அடைந்த மகிழ்ச்சி பல வார்த்தைகளில் பல பாடங்களுடன் நகர்கிறது. 

     பேச்சி மலை காட்டில் கிரிதரன் வழி தப்பி மீண்ட போதும், மீண்டும் அவனால் காட்டைவிட முடியவில்லை, விரும்பவும் இல்லை. ஆனால் மனிதக்காட்டில் வழி தப்பி மீண்ட கிரி, திரும்பவம் வழி தவற விரும்ப வில்லை., மிகவும் கவனமாக நகர்ந்தான். பேச்சி மலை காட்டில் இருந்த கிரிதரனுக்கு கிட்டத்தட்ட எனது வயதை ஒத்த வயது,நண்பனின் வாழ்கை போலவே ஒரு உணர்வு. 

     தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவாலை தீர்ப்பது பற்றி தீர்க்கமான தீர்ப்பும் கிடைத்து. Just a play என்கிற ஒரே வரியில். 

     ஒவ்வொரு கதாபாத்திரமும் பல வாழ்க்கை பாடங்களை கற்பிக்கின்றன. ரவ்சாலம், குட்டப்பன், குருசு, சினேகம்மை, மாமா... என ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒன்றை தீர்க்கமாக உரைக்கின்றனர். 

     எனக்கு குட்டப்பன் தான் மிகவும் நெருக்கமாக இருந்தான். தவறு செய்தவன் எவனாக இருந்தாலும், ஏமானாக இருந்தாலும் சிறுத்தை போல சீறினான், காட்டின் மீதும் காட்டு யானைகளின் மீதும் இவனது அன்பு இவனது பேச்சில் தெரிந்தது. 

     ஆரம்பத்தில் நீலி ஒரு காட்டு பேயாக தென்பட்டாள், பிறகு மெல்ல பெண் ஆனாள். அவளது பேச்சு " தம்பிரான் போனுமே, அச்சான் வருமே" என்கிற குறல் காட்டில் பயணித்து கொண்டிருந்த போது தூக்கத்தில் எனக்கும் கேட்டது.! 

ஒரு இலக்கியவாதியாக, இயற்கை ஆர்வலராக, இரசிகனாக, அய்யர் கதாபாத்திரம் நகர்ந்தது. காடு கொள்ளையடிக்கப்படும் போது எழுந்த எதிப்புக்குரல் அய்யர் உடையது. "காட்டை அழிக்க முடிஞ்ச அளவு அழிக்க வேண்டியது பிறகு எதெல்லாம் அழிஞ்சதுனு கணக்கு பார்க்கிறது... உங்கள் பைத்தியக்காரத்தனதில் எனக்கு பங்கில்லை" காட்டில் கணக்கெடுக்க வந்தவரிடம் அய்யரின் காட்டமான பதில்கள் மனதில் ஆழமாக பதிந்தது. 

     பல நேரங்களில் காடு பலவாறு வருணிக்கபட்டிருந்து, மலையிலிருந்து பார்க்கும் போது காடு , இலை கடலாக காட்சியளிக்கிறது. காடு இரவில் பயங்கரமானதாகவும், பிறகு மழை பெய்கின்ற நேரத்தில் பயங்கரமானதாகவும் தெரிந்தது. 

     கிரிதரனின் முதல் காதலை பற்றி சொல்லுகிற போக்கில் காதல் வகுப்பு நடத்தியிருந்ததை மறக்க முடியாது. 

     மனிதக்காட்டினை பற்றி கூற வேண்டுமே,  சுயநலம் நிறைந்தவர்கள் சிலராலும், தவறான பொருளாதார முடிவுகளாலும் வேலையில்லாத ஒருவனாக, வெறுமையானவனாக மாறி போயிருந்தான் கொச்சேமான் கிரி. பல சோக கதைகளை இந்நாவலுக்குள் காண முடிந்தது. 

     கிரிதரனின் வாழ்க்கையின் இருவேறு துருவங்களும் காவியமாகி இருந்தது. பேச்சி மலை காட்டில் கிரிதரன்  இருந்த காலத்தில், மழைவோயாத காலத்தில் கிரியும் நீலியும் உச்சி மலையில் குறிஞ்சி மலரை பார்க்க பயணித்த போது. கிரிதரன் முதுகில் குளிர் அடித்த போது, ஏனோ தெரியவில்லை நான் அந்த குளிருக்கு நடுங்கினேன், கைகளை கட்டி கொண்டிருந்தேன். அப்போது தான் தெரியும் நான் அதுவரை கிரிதரனுடன் அயணி மரத்தடியில் குட்டப்பன், ரவ்சாலம்,... ஆகிறோருடன் பேசிக்கொண்டும் கிரியுடன் காடு முழுக்க அவனுக்கு அய்யர் கொடுத்த சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு பயணித்து கொண்டு இருந்திருக்கேன். நீலியை சந்தித்த அந்த பதினைந்து நாட்களும் அந்த கரிய பாறைக்கு பின்னால் அமர்ந்து வேவு பார்த்து கொண்டு இருந்திருக்கிறேன். 

     ஆரம்பத்தில் எதுவுமே புரியாத புதிராக இருந்த காடு எனக்கு பிடிக்க ஆரம்பித்திருந்தது. மீண்டும் இளம் கிரிதரனுடன் பயணிக்க முடியாது என்கின்ற வருத்தத்துடன் காடு புத்தகத்தை மூடினேன். 

     சூழலியல் கருத்தினை மட்டும் தேடி வந்திருந்த எனக்கு வாழ்வியலை கற்றுத்தந்திருக்கிறது காடு... 

என்னவொரு அருமையான படைப்பு... 

                                         - த. செயபிரகாசு

கருத்துகள்

  1. இது போன்ற நாவல்களை தாங்கள் படித்து அதன் உள் நோக்கு கருத்துகளையும் நன்கு அறிந்து எங்களை போன்ற மாணவர்களுக்கு இந்த நாவலை படிக்க ஆசை தூண்டியதற்கு நன்றி அண்ணா! நீங்கள் பதிவிட்ட அனைத்து தகவல்களையும் படித்தேன் இது போன்ற தகவல்களை பதிவிட்டதன் நாங்கள் காடு நாவல் பற்றி அறியா விடிலும் இந்த நாவல் பற்றி சில தகவல்களை நான் கற்றேன்... நீங்களும் உங்கள் வாழ்வில் இயற்கை சம்மந்த பட்ட ஒரு நாவலை படைக்க வேண்டும் என்று உங்களிடம் ஓர் கோரிக்கையையும் முன் வைக்கிறேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.. நாவலை வாசித்து உங்களுடைய வாசிப்பனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்