அசுரகணம் -க.நா.சுப்ரமணியம்

 


     க.நா.சு-வின் பிறந்தநாளாகிய இன்று வாசித்த நூல் தான் இந்த அசுரகணம். ஒரு எழுத்தாளன் பிறந்ததற்கான சாட்சியாக வைத்துவிட்டு போவது நூல்களை மட்டும் தான். அந்த நூல்களுக்கு இறவாமல் உயிர்பெற்று இருக்கும் திறம் உண்டு. 
"இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என பாரதி பாடியுள்ளார். அப்படி இறந்து போகாத நூல்கள் படைக்கும் படைப்பாளி  அவரது புத்தகம் இருக்கும் வரை பேசிக்கொண்டே இருப்பார். தமிழில் செவ்வியல் தன்மையுடைய இலக்கியங்களைப் பலர் படைத்துள்ளனர். அதில் க.நா.சு முக்கியமான ஒரு எழுத்தாளுமை ஆவார். இந்த நூல் அவருடைய செவ்வியல் படைப்பு என சொல்லத்தகும் வகையில் அமைந்துள்ளது.

     அசுரகணம் நாவலைப் பொறுத்தவரை இது ராமன் என்கிற ஒரு மனிதனின் மனவியல் ஓட்டத்தை அணுகக்கூடிய கதை. இந்த நாவல் முழுவதும் சரடு போட்டு இழுத்துச் செல்லும் இரண்டு சொல்லாடல்கள் உண்டு. 

1. நான் பைத்தியம், நான் ஷெமி, நான் கிராக்கு

2. நாதஸ்வர ஓசை கேட்கும் போதெல்லாம் எனக்கு சாவுதான் நினைவுக்கு வருகிறது.

     ராமன் தனது கற்பனைகளையும் தன்னுடைய வாழ்வியல் நிலையையும் எண்ணி ஒரே தன்னை பைத்தியம் என நாவல் முழுக்கச் சொல்கிறான். இரண்டாவது நாதஸ்வர இசை, நாவல் முழுவதிலும் அதாவது தொடக்கம் முதல் இறுதி வரை அங்காங்கே நாதஸ்வர இசை கேட்கிறது. நாதஸ்வர இசை கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒரு சாவு குறித்த நினைவு வந்து அதைக் குறித்த சிந்தனையில் ராமன் ஆழ்ந்த போகிறான். ராமனுக்கு விதி, ஜோஸ்யம், பூர்வஜென்மம், சொர்க்கம் முதலானவற்றகன் மீதெல்லாம் நம்பிக்கையற்றவன் என்பதைச் சொல்லிவிட்டு இருந்தபோதிலும் கூட அவையெல்லாம் ‘இருந்தால்' என்கிற தொனியில் அதனையொட்டிய கதை நகர்வை க.நா.சு கையாண்டுள்ளார். இந்த இடங்களிலெல்லாம் முரண் இருப்பினும் கூட புனைவில் அதனை லாவகமாக கையாண்டுள்ளார். 

      படித்தவர்கள் எல்லாம் அறிவிலிகள் என்ற கலகக்குரலை நாவலின் ஆரம்பத்திலேயே வைத்துவிட்டு, நடுப்பகுதியில் கல்விமுறை மற்றும் பாடத்திட்டம் பற்றி “மாணவர்களில் இரண்டு ரகம், படித்து குட்டிச்சுவராகிவிடுகிற ரகம், படிக்காமல் குட்டிச்சுவராகிவிடுகிற ரகம். படிப்பிக்கப்பட்டு வீணாவதற்கு பதில் மாணவர்கள் படிப்பிக்கப்படாமல் வீணாகட்டுமே என்று கல்வி அதிகாரிகளுக்கு தாராள சிந்தனை."  என பாடத்திட்டம் மற்றும் பாடம் படிப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்தின் மீதும் விமர்சனம் வைக்கிறார். அரசு விடுமுறை நாட்களையும் கூட பகடியாக ராமன் மூலம் க.நா.சு முன்வைக்கிறார். 

      விடுதலை என்பது வீடுகளற்று இருத்தல், தனக்கென எதுவும் இல்லாமல் சுற்றித்திரிதல் என்பதை உணர்த்தும் விதமாக “மனிதன் என்றுமே விடுதலையை நாடியதாக சொல்ல முடியாது. ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு தாவுகிறான். வீடே ஒரு சிறை தான்‌. சாவுதான் விடுதலை."  என்றும் “ சுலபமாக சிரமப்படாமல் யாரையும் சிரமப்படுத்தாமல் வாழ்ந்து விட்டு இறப்பவனே சிறந்த மனிதன்" என்றும் சொல்கிறார். இந்த இரண்டு வாக்கியங்களும் உண்மையை வெளிப்படுத்துபவை. முதல் வாக்கியத்தின்படி பார்த்தோமானால் இந்திய குடும்ப அமைப்பு என்பதே விவாதத்திற்கு உரிய ஒரு விஷயம். அது இப்போது நமக்கு வேண்டாம் அதைக் கடந்து விடலாம். ஆனால் இரண்டாம் வாக்கியத்தை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து விடமுடியாது. காரணமென்னவென்றால் நான் கண்கூட பார்த்த அல்லது அனுபவித்த சம்பவங்களை வைத்துச் சொல்கிறேன். மரணத்தோடு போராடும் மனிதனும் மரணத்திடம் பேரம் பேசும் மனிதனும் சிறந்த மனிதனாக இருக்க முடியாது. மரணத்தோடு ஒரு மனிதன் போராடுவதற்கு அல்லது பேரம் பேசுவதற்கு இடைப்பட்ட நாட்கள் அந்த மனிதனை சாதாரணமான வசைகளுக்கும் கேலி கிண்டல்களுக்கும் ஆளாக்கி அரைகுறை நிதானத்தோடு பலவித சொற்களை எல்லாம் கேட்கவைத்து வருத்தும். ஒரு மனிதன் திடீரென சாகும்போது ஏற்படும் வலி என்பது அந்த மனிதன் சாதாரணமானவனாக இருந்தாலும் கூட ஒருபடி உயர்த்திக் காட்டும். அதேவேளையில் ஒரு உயிர் பலகாலம் தன்னைச் சுற்றியுள்ளவர்களே பணிவிடை செய்ய வைத்து சிரமப்படுத்தி சாகும் போது வலியை விட நிம்மதியைத் தான் அதிகம் உணர வைக்கும். ஒருவரின் உயிர் பிரியும்போது நிம்மதி அடைவது என்பதே அந்த மனிதரின் சிறப்புக்கு இழுக்கினைத் தேடி தருவதாக அமைந்துவிடும். 

      எதிர் கருத்துக்கள் மட்டும் தான் நம்மை உரத்த சிந்தனையை நோக்கி நகர்த்தும். இந்த நாவலில் தன்னுடைய கருத்துக்களுக்கு ஜால்ரா தட்டுபவர்களையெல்லாம் ஆமா சாமி போடுபவர்களை எல்லாம் ராமன் வெறுக்கிறான். கம்பனின் கம்பராமாயண பாத்திரங்களை வைத்து ராமனின் உளவியல் போக்கை க.நா.சு நிகழ்த்தி காண்பிக்கிறார் இதன் உச்சநிலை என்பது சூர்ப்பனகையாக உருவகிப்படும் ஹேமாவின் தாயை ராமன் கழுத்தைக் குறி வைத்து கொலை நிகழ்த்துவதும் அந்த குருதி படிந்த கையோடு காவல் நிலையத்தில் சரணடைவதும் தான். “அலங்காரங்களை அழகு என்றும் கானல் நீரை உண்மை என்றும் நினைத்து ஏமாறுகிற உலகம் தான் இது."“மனிதர்களுக்கு ஏமாற்றத்தைப் போன்ற அருமையான படிப்பினை வேறு எதுவும் கிடையாது என்பது தான் என் அனுபவம்" என தன் அனுபவத்தையும் மனிதர்கள் ஏமாறும் எளிய காரியங்களையும் குறித்து சிந்திக்க வைக்கிறது இந்த நாவல். புத்தர், ஏசு முதலான அன்பைப் பிரதானப்படுத்துவோரை எல்லாம் நாவலில் அங்காங்கே வைத்து அலங்காரப்படுத்தும் க.நா.சு காதல், கல்யாணம் முதலானவை வரக்கூடிய இடங்களை அபாரமாக காண்பித்துள்ளார். காதல் எனும் சொல்லை விவாதத்திற்கு உள்ளாக்கியிருக்கும் இடத்தில் கதாபாத்திரங்கள் மூலம் பகிர்ந்து பேசப்படும் கருத்துக்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றன. நாவலை தமிழ்படங்களில் வருவது போல கல்யாணத்தில் முடிப்பதோடு நாதஸ்வர ஓசை கேட்கும்போதெல்லாம் வரும் மரண நினைவுகளை கயிறு போட்டு இழுத்து ராமன் தன் தாயை நினைவுகூர்வதாகவும் ஹேமா தன் தந்தையை நினைவுகூர்வதாகவும் சொல்லி இழுத்து கட்டுகிறார். கல்லூரி மாணவர்களுக்கு அல்லது கல்லூரி படிப்பை இப்போது தான் முடித்தேன் என்பவர்களுக்கு இந்த நாவல் வாசிப்பனுபவம் தருவதில் சலைக்காது.

                                                       -அழகுராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்