காந்தியைக் கொல்வது தவறுதான் எனினும் கொல்லப்பட்டார் காந்தி காந்தியைக் கொன்றது தவறுதான்
காந்தியைக் கொல்வது தவறுதான்
எனினும் கொல்லப்பட்டார் காந்தி
காந்தியைக் கொன்றது தவறுதான்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் உடலைக் கொல்வதற்கான முயற்சிகள் மொத்தம் ஐந்து முறை நடந்துள்ளது இன்றளவும் கூட கோடிக்கணக்கில் அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர் யாரிடமிருந்து விடுதலை பெற எண்ணினாரோ அவர்கள் இவரைக் கொல்லவில்லை. ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும் அவர் நம்மை எதிர்க்கவில்லை நமது ஆதிக்க உணர்வைத்தான் எதிர்க்கிறாரென்று. அதனால் அவர்கள் அவரைக் கொல்ல நினைக்கவில்லை அவரை செயலிழக்க மட்டுமே செய்ய விரும்பினர் அதுவும் கூட அவர்களால் முடியவில்லை. இருந்தாலும் கூட அவர் சாகவில்லை கொல்லப்பட்டார்.
1934ஆம் ஆண்டு புனேவில் ஹரிஜன் யாத்திரைக்கு சென்ற போது காந்தியின் கார் மீது குண்டு வீசப்பட்டது. அதில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அடுத்ததாக, 1944ஆம் ஆண்டு கடும் பயணங்களுக்கு மத்தியில் பஞ்சகிரிக்கு ஓய்வுக்காக சென்ற காந்தியை கத்தியோடு ஒருவன் கொல்ல வந்தான். அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டது. காந்தியும் குத்த வந்தவனை அப்படியே விட்டுவிட்டார். அதே வருடத்தில் வர்தா ரயில் நிலையத்தில் காந்தியை ஒரு சிறுவன் பயங்கரமாக தாக்க முற்படுகிறான்.1945ஆம் ஆண்டு மும்பையிலிருந்து புனேக்கு காந்தி இரயிலில் சென்ற போது அவர் சென்ற ரயில் விபத்திற்குள்ளாக வேண்டுமென தண்டவாளத்தில் கல் மற்றும் கட்டைகள் கொண்டு அடுக்கப்படுகிறது. எப்படியோ இரயில் நிறுத்தப்பட்டதால் அந்த விபத்து நிகழவில்லை. புனேக்கு சென்ற காந்தி “என்னைக் கொல்ல வேண்டுமானால் நீங்கள் கொல்லலாம். ஆனால் என்னோடு வருபவர்களை தொந்தரவுக்குள்ளாக்க வேண்டாம்" என்கிற சாரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். பின்பு 1948 ஜனவரி 20ல் குண்டு வீசி கூட்டத்தைத் திசை திருப்பி கலைத்துவிட்டு காந்தியை சுட்டுக் கொல்ல கோட்சே குழுவினர் முயற்சிக்கின்றனர். அதுவும் தோல்வியில் முடிகிறது. ஆறாவதாக, கடைசி முயற்சி நடந்த பத்து நாட்களுக்கு பின் காந்தி கொல்லப்படுகிறார். கொல்லப்பட்ட பின்பு காந்தியை கொன்ற கோட்சே தண்டிக்கப்படக்கூடாது காந்தி அவ்வாறு தண்டிக்கப்படுவதை விரும்பமாட்டார் என அவரது மகன் ராம்தாஸ் அரசைக் கேட்டுக் கொள்கிறார். அவரது கோரிக்கையை ராஜாஜி ஏற்க மறுக்கிறார். காந்தியைக் கொன்ற கோட்சேயும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.
காந்தி கொல்லப்பட்டதை மட்டுமே பல்வேறு கோணங்களில் நிறுத்தி பத்து கவிதைகளாக நமக்குத் தந்திருக்கிறார் ரமேஷ் பிரேதன். பிரேமை விட்டு பிரிந்து தனித்து எழுதிய முதல் கவிதை நூலான இதில் காந்தி, அம்பேத்கர், புத்தர், லுமும்பா, இராமலிங்க அடிகள், இயேசு என அமைதியை விரும்பிய அனைவரும் இவரது கவிதைகள் நெடுக வருகின்றனர். காந்தி கொல்லப்பட்ட நாளாகிய இன்று இந்த கவிதை தொகுப்பில் உள்ள காந்தியைக் கொன்றது தவறுதான் தலைப்பில் உள்ள பத்து கவிதைகளின் மூலம் ரமேஷ் பிரேதனுக்குள் உள்ள காந்தி பற்றிய கவித்துவ வெளிப்பாடுகளைப் பார்க்கலாம்.
காந்தியைக் கொன்றது தவறுதான்-1
நான் காந்தியைக் கொன்றது
தவறுதான் - அதுமட்டுமல்ல இயேசுவைக் கொன்றதும்
சேகுவேராவைக் கொன்றதும்
லுமும்பாவைக் கொன்றதும்
தவறுதான் - என்ன செய்வது
எனது தவறுகளை
ஒவ்வொருமுறையும் நீ மன்னித்துவிடுவதால்
நேரும் தவறு இது
ஒவ்வொருவரையும் கொல்வதற்கான
காரணங்கள் என்னிடம் உண்டு வலுவான காரணங்கள்
அவற்றை உன்னால் மறுக்கமுடியாது
நான் கொல்வதும்
நீ கொல்லாதிருப்பதும்
ஒரே வினைதான்
ஆனால் ஒவ்வொருமுறையும்
நீ என்னை மன்னிப்பது போல நடிப்பதால்
குற்றமற்றவளாகிவிடமாட்டாய்
வரலாறு நெடுக்கவும்
ஆணாகிய நான் கொலைத்தொழிலைத்
தொடர்கிறேன்
பெண்ணாகிய நீ என்னை மன்னித்தபடியே இருக்கிறாய்
கடைசியாக என்னை நானே கொன்றுகொள்ளும்போது
உனது கைகளில் ரத்தக்கறை படியும்
மறந்துவிடாதே
நீ ஆயுதமற்ற கொலைகாரி
நான் கொலை செய்யும் நிரபராதி
சதாம் உசேனைப் போல
நான் காந்தியைக் கொன்றது
தவறுதான்-ஆனால்
என்னை நீ மன்னித்தது
பெருந்தவறு
எனது ஆயுதத்தை எப்படியேனும் உன்னிடம் தந்துவிட வேண்டும்
ஆயுதம் கைமாறும் அக்கணம்
நான் உன்முன் செத்துவிழுவேன்
நீ உனது முதல் கொலையை என்னிலிருந்து ஆரம்பிப்பாய்
நான்
காந்தி ஆவேனா
இயேசு ஆவேனா
செத்த பிறகு சொல்
கோட்சேவுக்கு காந்தியை கொல்வதற்கான காரணம் இருந்தது. அது சரியோ தவறோ ஆனால் ஒரு காரணம் இருந்தது சதாம் உசேன் தீவிரவாத செயல்களில் தன்னை ஈடுபடுத்துவதற்கு காரணங்கள் இருந்தது போல. காந்தி கொல்லப்படுவதற்கு முன்பு ஐந்து முறை அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்தும் அதை நிகழ்த்தியவர்களை எல்லாம் காந்தி மன்னித்து விட்டுவிட்டதன் விளைவே இந்தக் கொலை. ரமேஷ் பிரேதனின் தனிமனித வாழ்வியலும் கூட இந்தக் கவிதையில் சிறு படிமமாக வெளிப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது.
காந்தியைக் கொன்றது தவறுதான் - 2
காத்தியைக் கொன்றது தவறுதான் என்றால் என்னை நீ கொன்றது தவறில்லையா
காந்திக்கும் எனக்கும்
என்ன வித்தியாசம் சொல்
மனிதர்க்கு இடையே வித்தியாசம் என்பது
எதன்பாற்பட்டது
தயவு செய்து காந்தியைக் கடவுளாக்கி என்னைச் சாத்தானாக்கிவிடாதே
கடவுள் இதுநாள்வரை கொன்றிருக்கிறார்.
சாத்தான் இதுவரை யாரையும் கொன்றதில்லை.
என்னை நீ கொன்றது தவறில்லையா காந்தியும் நானும் ஒன்றா
அதே பழுதடைந்த பழைய துப்பாக்கியால்
ஏன் என்னைச் சுட்டாய்
வேறு புதியன எவையும்
கிடைக்கவில்லையா உனக்கு
அந்தக் கிழவனைச் சுட்ட துப்பாக்கி உனக்கு எப்படிக் கிடைத்தது
அதைத் தேடிக் கண்டடைய எடுத்துக்கொண்ட காலங்கள்
கொடூரமானவை
அகிம்சாவாதியைக் கொன்ற துப்பாக்கி
ஒரு அகிம்சைக் கருவி
என்னைக் கொல்ல அந்த அகிம்சைக் கருவியை நீ இத்தனை காலம் தேடித் திரிந்திருக்கிறாயே அச்செயல் எனக்குப் பயத்தைத் தருகிறது
என்னை நீ கொன்றதற்கு
அந்த காந்தியைக் கொன்ற
துப்பாக்கி தேவையில்லை
ஏனென்றால்
காந்தி தன்னைக் கொன்றுகொள்ள நியமிக்கப்பட்ட மிக அந்தரங்கமான ஆயுதம் நான்
எனது ஆயுதத்தால் என்னைக் கொல்லாதே என்றேன்
ஏனென்றால் நீ இன்னுமொரு காந்தியைக்
கொல்வதிலிருந்து பிறப்பிக்கிறாய்
என்னைச் சுடாதே
சுட்டுவிட்டாய்
ஹே - ராவணா
இந்து இஸ்லாமிய பிரச்சினையில் காந்தி எடுத்த உண்ணாவிரதம் உள்ளிட்ட பல முயற்சிகளே அவரைக் கொல்வதற்கான ஆயுதங்கள் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். காந்தியைக் கொன்றால் அனுதாப அலையைக் கடந்த வேறொரு உணர்ச்சி வெளிப்பட்டிருக்குமென கொலையாளி நினைத்திருக்கலாம். ஆனால் நடந்தது வேறு. காந்தியைக் கொன்ற கோட்சே கொல்லப்பட்டதைப் பற்றி கீழுள்ள வரிகள் இந்தக் கவிதையில் பேசுகிறது.
“அகிம்சாவாதியைக் கொன்ற துப்பாக்கி
ஒரு அகிம்சைக் கருவி
என்னைக் கொல்ல அந்த அகிம்சைக் கருவியை நீ இத்தனை காலம் தேடித் திரிந்திருக்கிறாயே அச்செயல் எனக்குப் பயத்தைத் தருகிறது"
காந்தியைக் கொன்றது தவறுதான் - 3
உலகில் எந்தப் புரட்சியாளனும்
காந்தியைப் போல
பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்ததில்லை
தானாகவே சாகவிருந்த அக்
கிழவனைச் சுட்டேன்
அதன் மூலம் கிழவன்
வெற்றிபெறுவார் என்ற எண்ணத்தில்
அவர் ஒரு புரட்சியாளர் அல்லர்
சராசரி இந்திய ஆன்மீகவாதி. சுடப்பட்டதால் புரட்சியாளர் ஆகிவிட்டார்
எனது தவறினால்
சுட்டதற்கான பலனை நான் அனுபவித்துவிட்டேன்
சுட்டதற்கான கூலியை அவர்
இன்னும் எனக்குத் தரவில்லை
ஆம், ஒரு கொலைகாரன் புரட்சிக்காரனையும்
மகாத்மாவையும் உருவாக்குகிறான்
கோட்சேவின் எண்ணப்படி காந்தி ஒரு மகாத்மாவாக இருந்திருக்க முடியாது. காந்தி இந்தியாவில் உள்ள இந்துக்களை மறுதலித்து ஒடுக்கும் ஒரு இந்து என்பது தான் கோட்சேவின் எண்ணமாக இருந்திருக்க முடியும் காந்தியை அகிம்சை வழி சுதந்திரம் ஈட்டித்தந்த புரட்சியாளனாக கட்டாயம் ஏற்றுக் கொண்டிருக்க முடியாது. ஒருவேளை காந்தி இந்தியாவை இந்துக்களுக்கான ராஜ்யமாகவோ அல்லது இஸ்லாமியரை பாகிஸ்தானைச் சேர்த்த அன்றைய இந்தியாவின் அதிகாரமற்ற சிறுபான்மையினராக வைத்திருந்தாலோ ஒரு புரட்சியாளனாக நினைத்திருக்கலாம். எது எப்படியோ காந்தியை கோட்சே கொன்று காந்தியை மேலும் ஒருபடி உயர்ந்தவராக மாற்றிவிட்டார் என்பதையே இக்கவிதை சொல்வதாக அறிகிறேன்.
காந்தியைக் கொன்றது தவறுதான் - 4
மோகன்தாசை நான் சுடவில்லை
அவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்தான் - பாவி
உன் கையிலிருந்துதானே
துப்பாக்கி வெடித்தது.
ஆம், அது எனது துப்பாக்கி அல்ல மோகன்தாஸ் எனது கனவில் வந்து சொன்ன முகவரியில்
நான் பெற்ற துப்பாக்கி
மேலும் ஓர் உண்மையைச் சொல்கிறேன்
எனக்குச் சுடத்தெரியாது
அத்துப்பாக்கி தன்னைத்தானே.
இயக்கிக்கொண்டது
எனது கையிலிருந்து
என்னால் பயன்படுத்த இயலாத
இடது கையிலிருந்து
இச்சம்பவம்
மோகன்தாஸின்
தற்கொலை என்கிறாயா
கொலைக்கும் தற்கொலைக்கும் இடைவெளியும் இயங்கு மனமும்
வேறுவேறு
எனக்கும் மோகன்தாசுக்கும் உள்ள இடைவெளி வேறுவேறு
மோகன்தாஸ் ஒரு கோழை
அவன் ஒருபொழுதும் தற்கொலைக்குள்: அமிழமாட்டான்
தான் ஒருபொழுதும் கோழையைக் கொள்ளமாட்டேன்
சரி தோழி
நீ யாரைக் கொல்ல விழைகிறாய்
யாரைப் பிறப்பிக்க விழைகிறாய் இக்கணம்
உடனே சொல்
மோகன்தாசையும்
மோகன்தாஸையும்
தோழா
“மோகன்தாசையும் மோகன்தாஸையும்" என ஒரு கொலையுண்ட மனிதனிடத்தில் தனித்தமிழ் எப்படி நுழைந்துள்ளது என இந்த கவிதை பேசுகிறது. மீரா ஊசிகள் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையில் “ஜாதி ஒழிக - சாதி ஒழிக” எனும் எழுத்தில் தான் உங்கள் பற்று இருக்கிறதே தவிர அந்த வார்த்தையில் வெளிப்படும் பொருள் மீது உங்களுக்கு அக்கறை இல்லையென்பதை சொல்லியிருப்பார். இந்த கவிதைக்கான கருவாக இருப்பது கடைசி வரிகளாகத் தான் இருக்கக்கூடும்.
காந்தியைக் கொன்றது தவறுதான் - 5
நீ கட்ட முதல் குண்டு
என் உடம்புக்குப் போதுமானது
மீண்டும் மீண்டும் ஏன் உனது தோட்டாக்களை என்பொருட்டு
வீணாக்கினாய் நண்பா
என்னை உடம்பு ரீதியாகத் துளைத்த
முதல் வலி
இவ்வலி அபூர்வமானது
மரணத்தின் தித்திப்பும் வாசனையும்
கலந்த வலி
அது வலி அல்ல
மாபெரும் சுவை - அதை
எனக்கு ஊட்டிய உனக்கு
ஒரு வாய் ஊட்டமுடியாமல்
நான் சரிந்துவிட்டேன் நண்பா
நான் செத்த அக்கணம்
எனது வாய்க்கு நானே உணவாகினேன் தான் இத்தனை ருசியா
என்னை எனக்கு ஊட்டிய உனக்கு
நன்றி நண்பா
மரணத்தை ருசிபார்க்கும் காந்தி இந்தக் கவிதையில் படுத்துக் கொண்டு பேசுகிறார். மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் என்ற நூல் வால்டெர் ஏரிஷ் ஷேபெர் எழுதிய ஜெர்மன் நூலின் மொழிபெயர்ப்பு இதனை ஜி.கிருஷ்ணமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இது ஒரு நாடக நூல். இந்த நூல் முழுக்க காந்தி சுடப்படும் போது சுடப்பட்ட பின்பு என தன்னைச் சுட்ட தோட்டா, வானம், நிலம் என தன்னைச் சுற்றியுள்ளவற்றிடம் உரையாடும் நாடக வடிவிலானது. அந்த நூலும் இந்தக் கவிதையைப் போன்றதே ஆகும்.
காந்தியைக் கொன்றது தவறுதான் - 6
எனக்குத் தெரியாது
என்னைச் சுட்டவனைப் பற்றி
ஆனால் எனது மரணத்திலிருந்து நீள்கிறது
அவனது வாழ்க்கையைப் பற்றிய வாக்கியம்
முடிவற்ற வாக்கியம்
எனது மரணத்தைப் போல
எனது மரணத்தைப் பற்றி
எனக்குத் தெரியாது
அவன் என்னைச் சுட்டபோது
அவனது உயிர்த்திருப்பிலிருந்து நீளப்போகிறது எனது
மரணத்தின் வாழ்க்கை என்பது
உண்மையாகத்தான் சொல்கிறேன்
நான் இன்னும் சாகவில்லை ஏன் அவனை என்பொருட்டு
கொன்றீர்
உண்மையைத்தான் உங்களிடம் கேட்கிறேன்
என்னைக் கொன்றவனை நீங்கள் கொன்றீர்
இப்போழுது நானும் அவனும் ஒரே நிறையல்லவா
என்னை அவன் கொன்றது
தவறுதான் - ஆனால்
அவனை நீங்கள் கொன்றது
என்னை மீண்டும் ஒருமுறை கொன்றது
கோட்சே பற்றிய பேச்சு நாடு முழுவதும் தோன்றியது காந்தியை கோட்சே கொன்றதலிருந்து தான். கோட்சே காந்தியை கொல்ல மட்டும் செய்யவில்லை தன் பெயரை உலக முழுவதும் தெரிய வைக்கவும் செய்து விட்டான். காந்தியின் மகன் ராம்தாஸ் காந்தியின் கொலைச் சம்பவத்திற்கு பின்பு இந்திய அரசிடம் என்ன கேட்டுக் கொண்டாரோ அதைத்தான் காந்தியும் விரும்பியிருப்பார் கோட்சோவைக் கொன்று காந்தியை கொல்கிறோம் என கடைசி வரிகள் சொல்கின்றன.
காந்தியைக் கொன்றது தவறுதான் -7
காத்திக்கு நாம்
செய்ய வேண்டியதெல்லாம்
காந்திக்கு காந்தியை
பலியிட்டுக் காட்டுவது
கடவுளுக்குக் கடவுளையே
பலியிட்டோம் நாம்
ஆனால், காந்திக்குத் தெரியாது
தான் ஒரு கடவுளாவோம் என்று
பாவம்
பலஹீனமானவர்களைக் கடவுளாக்கிவிடுவது நமது இயல்பு
தூரத்திலிருந்து சிரிக்கிறான் புத்தன்
கண்கள் விரிய பற்கள் தெரிய
முதன்முதலாக
சிரிப்பு
பெருஞ்சிரிப்பு
துள்ளிக் குதித்தோடும்
புத்தன்
காந்தியின் மீது மோதிக்கொள்கிறான்
இப்படியாக
அவனை இக்கவிதையில்
கொன்றது தவறுதான்
“கடவுளுக்கு கடவுளையே பலியிட்டோம் நாம்" என்கிற வரி இயேசுவுக்கு பொருந்தக்கூடியதாகும். காந்தி கொல்லப்பட்ட பின்பு அவருக்கு கிடைத்த அனுதாபங்கள் அவரை இன்றளவும் மகாத்மாவாக உயர்த்திக் கொண்டே இருக்கிறது. ஆனால், காந்தி என்ற சித்தாந்தம், புத்தரின் கொள்கைகள் மறைந்தது போல மறைந்து கொண்டே இருக்கிறது என்பதை புத்தருக்கும் காந்திக்கும் இடையிலான சிரிப்பினால் நாம் மறந்து விடக் கூடாது.
காந்தியைக் கொன்றது தவறுதான் - 8
ஆட்டுப்பால் பொது பானமில்லை.
மாட்டுப்பால் பொது பானம்
ஆட்டை அருந்துவது மனிதர்க்கு இயல்பன்று
நீ ஆட்டுப்பாலைக் குடித்தாய்
ஆட்டின் மடி அதன் இரண்டொரு
குழந்தைகளுக்கு மட்டுமே
என்பது தெரிந்தும்
ஆட்டுப் பால் அருந்தி வாழ்ந்த நீ
எப்படி மகாத்மா ஆவாய்
நாளொரு இடைச்சி
பசிக்கும்போது
குளிந்து அம்மாவின் காம்பிலிருந்து
பாலைத் திருடி என்
வாய்க்குள் பீய்ச்சிக்கொள்வேன்
மகாத்மாவை எனது ஆடுகளில் ஒன்று சுட்டுக் கொன்றது
1948 ஜனவரி 30 அன்று
எனது ஆட்டைப் பிடித்து அடித்து
அதன் இறைச்சியை நீங்கள் பகிர்ந்தளித்தீர் தேசம் முழுமைக்கும்
என் பங்குக்கு ஒரு வாய்
அதில் மகாத்மாவின் சாம்பல் தரதரத்தது
காந்தி ஆட்டுப்பாலையும் அந்த பாலில் கிடைக்கும் பால்கோவாவையும் தனது உணவாகக் கொண்டவர். ஆடு மாட்டைப் போல தொடர்ச்சியாக லிட்டர் கணக்கில் பால் கொடுப்பதில்லை. ஆனால் காந்தி ஆடு தனது குட்டிக்கு வைத்த பாலைத் தான் குடித்தாரென ஆடுகளில் ஒன்று அவரைச் சுட்டதாக இந்த கவிதை அமைந்துள்ளது.
காந்தியைக் கொன்றது தவறுதான் - 9
நிலாவில் எனக்கொரு முகவரி உண்டு அது பூமியில் கிடைக்கும் எனது
முகவரி அட்டையில் இருக்காது
நிலாவில் ஒரு சிறு பகுதியைச் செப்பனிட்டு
அதற்கு காந்தி நகர் எனப் பெயரிட்டு நான் மட்டுமே வாழ்கிறேன்
வேறு யாரும் அந்த மண்டலத்தில் இல்லை
முதல் மனிதன் நான்
பூமிக்கு மேலே அந்தரத்தில்
ஒரு மணல் தீவு
காந்தியை நான் கொன்ற பிறகு நிலாவுக்கு வந்துவிட்டேன்
கொன்றதன் காரணம் இங்குக் கூறத் தேவையில்லை
ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு கொன்றதற்கு நன்றி சொல்ல
காந்தி இங்கு வந்தபோது
நானும் அவரும் ஒருவரை ஒருவர் முகம்கொள்ளக் கூசினோம்
காலம் எங்களைச் செப்பனிட்டது
இன்று கைகோர்த்து உலாவருகிறோம். யாருமற்ற அந்தரத் தீவில்
காந்தியை யார்வேண்டுமானாலும் கொல்லலாம்
ஆனால், நான் காந்தியைக் கொன்றது தவறுதான்
காந்தி கொல்லப்பட்ட பின்பும் கூட அவரது கொள்கைகள் இருக்கிறது. ஆனால் இன்னும் அவை நவீனப்படவில்லை. சில சொற்ப காரணங்களுக்காக காந்தியவாதிகளே காந்தியின் கொள்கையை காலத்திற்கேற்ப கடத்த முனைவதில்லை. அவர்களால் காந்தி மீண்டும் மீண்டும் கொல்லப்படுகிறார். இந்த கவிதையின் நான்காவது பத்தியில் வரும் சந்திப்பு வாசிக்கும் போது ஏதோ ஒரு மாயத்தை நிகழ்த்துகிறது. ரமேஷ் பிரேதனின் வரிகள் சாதாரணமாகவே ஒரு மாய உணர்வை வாசிக்கும் போது கொடுத்து விடும். அந்த உணர்வு காந்தியை கொன்றது தவறுதான் எனவரும் பத்து கவிதைகளில் இந்த கவிதையில் தான் நிகழ்த்தியுள்ளது. இந்த பத்து கவிதைகளைக் கடந்து இந்த தொகுப்பில் உள்ள பல கவிதைகள் அந்த உணர்வை தொடர்ந்து அதிரவைத்துக் கொண்டே இருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
காந்தியைக் கொன்றது தவறுதான்-10
நேற்று எனது கனவில்
காந்தி வந்தார்
எனது இருக்கையிலிருந்து எழுந்து அவரை அமர்த்திவிட்டு
தரையில் அமர்ந்தேன்
என் கனவில் வந்த காந்திக்கு
வயது முப்பத்தியாறு
என்னைவிட மூன்று வயது இளையவர்.
ஆழ்ந்த இறுக்கத்தில் இருந்தார்
சில நிமிடங்களுக்குப் பிறகு
ஆழ்ந்த மௌனத்திலிருந்து
கண்ணீர் வழிந்தது
சப்தமின்றி அழுதார்
மழை போலவோ
அருவி போலவோ
பேரோசை எழுப்பாத நீரின் வீழ்ச்சி
சப்தமற்ற அழுகைதானே
என்னிடம் ஒரு துப்பாக்கியை எடுத்து நீட்டினார்
நான் பதற்றத்தோடு பெற்றுக்கொண்டேன்
தன்னைச் சுடச்சொல்லிச் சைகை செய்தார்
நான் தயங்கினேன்
பல மணி நேரம் வார்த்தையின்றி மன்றாடினார்
ஒரு கட்டத்தில் என்மீது
வெறித்த பார்வை நிலைகொள்ள கண்களிலிருந்து முடிவற்று நீர்வழிய
ஆழ்த்த இறுக்கத்தில் சமைந்தார்
வலி தாளமுடியவில்லை
அவரது நெற்றியில் பொருத்தி
வெடித்தேன்
ரமேஷ் பிரேதனின் இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும் அன்றைய காலத்தையும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களையும் அவர்கள் அன்று எழுதிய கொள்கைகள் மற்றும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை முதலியவற்றை கொக்கி போட்டு திரையை இழுத்து அந்தத் திரையினுள் படமாக காட்டி திடீரென திரையைக் கண்ணாடியாக மாறச் செய்து நம்மையும் நமது வாழ்க்கையையும் காட்டி அதனை ஓடச்செய்கிறது. அவ்வளவு எளிதாக இந்தக் கவிதைகளை கடந்து சென்று விட முடியாது. சில கவிதைகள் அந்தத் திரையின் வழியே ஒரு மாய உலகிற்குள் இழுத்து செல்கிறது. இதுவரை நான் இந்த கவிதை தொகுப்பிலுள்ள காந்தி பற்றிய கவிதைகள் குறித்த எழுதியவற்றை எல்லாம் புறவயப் பார்வையினூடே அணுகியுள்ளேன் என்பதையும் சொல்லியாக வேண்டும். இந்த கவிதைகளை அக உணர்வோடு அணுகுவது தான் இன்பம் தரக்கூடியதாக இருக்கும். காந்தியை இந்த நாளில் நினைவுகூறி எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாலேயே நான் இந்த கவிதைகளை புறவயமாக பார்த்தேன் அப்படி பார்த்ததன் மூலம் காந்தியின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தி பிரம்மிப்பை அடையவும் முடிந்தது.
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக