அரிதாரம் - இறையன்பு
அரிதாரம் என்ற சிறுகதைத் தொகுப்பின் வாயிலாக இறையன்பு இ.ஆ.ப அவர்கள் நவீன காலகட்டத்தில் இயந்திரங்களால் மாற்றமடைந்துள்ள தொழில் முறைகளைப் பற்றிய தொழிலாளிகளின் அச்ச உணர்வையும் பழையவற்றை மறக்கக்கூடாது என்கிற உணர்வு நிலையையும் கலைகள் பற்றிய கலைஞர்களின் மதிப்பீடு இணையும் புள்ளியையும் மரணம் வாழ்வில் கொண்டு வரும் மாறுதல்களையும் நாய்கள் முதலான விலங்குகளின் நன்றி உணர்ச்சியையும் தக்க இடத்தில் சொல்லியுள்ளார்.
தலை மாணாக்கன் என்ற சொல்லைக் கேட்டவுடன் நன்னூல் பக்கம் நம்முடைய கவனம் திரும்புவது இயற்கை தான். இங்கு தலை மாணாக்கன் என்ற தலைப்பின் கீழ் வரும் கதை துரோணாச்சாரியாரையும் ஏகலைவனையும் பற்றிய எச்சமாக இருக்கிறது எனக் கொள்ளலாம். நாரத ராமாயணத்தில் புதுமைப்பித்தன் செய்த வேலையை தலை மாணாக்கன் கதையில் இறையன்பு செய்திருக்கிறார் என நாம் எடுத்துக் கொள்ளலாம் இருந்தாலும் இரண்டு புனைவுகளும் முழுக்க முழுக்க வெவ்வேறு திசையைக் கொண்டு பயணிப்பவை. ஏகலைவன் துரோணரிடம் எப்படி வில்வித்தை கற்றான் என்ற கதையெல்லாம் நமக்குத் தெரியும். இறுதியில் துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை காவு வாங்கும் காட்சி கூட நம்மில் பலருக்கு கண்முன் கொடூரமாக இன்று வரை நிச்சயமாக நிற்கும். ஒரு எழுத்தாளனிடம் இருந்து பேனாவை பிடுங்குவதற்கும் பேச்சாளனிடம் இருந்து மைக்கை பிடுங்குவதற்கும் சிற்பக்கலைஞனிடம் இருந்து உளியைப் பறிப்பதற்கும் ஒப்பான ஒன்று தான் அத்தகைய நிலை. இருந்தாலும் ஏகலைவன் தன் கட்டை விரலை எந்த வருத்தமுமின்றி கொடுக்கிறான். “நாங்க கத்துக்கிற வித்தையெல்லாம் எங்களைச் சுத்தியிருக்கிற அபாயத்திலிருந்து எங்களை காப்பதிற்காகத் தான். என ஏகலைவன் சொல்லும்போது துரோணருக்கு “தான் கற்ற நூல்கள் ஏதும் உதவாதவாறு வார்த்தை வரவில்லை" என்ற இடத்தில் கதையை மற்றொரு தளத்திற்கு இறையன்பு நகர்த்திச் செல்கிறார். இருந்தாலும் கூட துரோணரினுடைய வர்ண மேட்டிமையை ஏகலைவன் கொடுத்த “பழங்களை சமைக்காமல் இருந்ததால் துரோணர் உண்டுவிட்டார் போல" என எள்ளல் கலந்த அதேசமயம் பொருள் பொதிந்த வார்த்தைகளை இறையன்பு பொருத்தியுள்ளார். ஏகலைவனும் கட்டைவிரலை கொடுத்தப்பின் காடு காடாக சுற்றுகிறான். காணாமல் போன தன் குருவைக் காண்பதற்கு ஆவல் கொள்கிறான். அதேபோல் வேடர் குல சிறுவர்களுக்கு வில் வித்தை பயிற்றுவிக்கும் தன் குருவைக் கண்டு ஆச்சரியம் கொள்கிறான். அதற்கு அடுத்த ஆச்சரியமாக துரோணர் இதுதான் உங்கள் குரு என சிறுவர்களிடம் ஒரு சிலையைக் காட்டுகிறார். அந்தச் சிலையில் உள்ள கையில் கட்டைவிரல் இல்லாததைக் கண்ட ஏகலைவன் உணர்ச்சிப் பெருக்குடன் இனி நான் எனது குருவைப் பார்த்தால் அது நலம் பயக்காது என திரும்புவதாக கதையை விரிக்கிறார் இறையன்பு. கட்டைவிரல் காட்சி வரை மட்டுமே ஏகலைவன் கதையில் தொக்கி நின்றதை விரித்து கதையை இறையன்பு நன்றாக முடித்திருக்கிறார். எல்லா மனிதர்களும் உயர்ந்த நிலையை அடைந்த பின்பு சிலவற்றைச் செய்வது அந்த நிலையை நாம் உருக்குலைப்பதற்கு சமம் அல்லது ஏதோ ஓர் தர்மசங்கடத்தை அந்தச் செயல் ஏற்படுத்தும் என்பதை ஏகலைவன் துரோணரைப் பார்க்காமல் திரும்பியதை வைத்துக் காட்டுகிறார்.
சூடிய பூ சூடற்க தொகுப்பில் நாஞ்சில் நாடன் எழுதியுள்ள கதைகளில் அவரது சுய அனுபவங்கள் குறிப்பாக பயண அனுபவங்கள் மேலதிகமாக நின்றிருக்கும். கதை சொல்லும் பாணியைக் கட்டுரை வடிவத்திற்கு உள் சென்று ஊசியை உள்ளிறக்கி தைத்து சிறுகதையைப் போல வெளியே கொண்டு வந்து தைக்கும் முறையில் ஏறக்குறைய அமைந்திருக்கும். அதேபோன்ற ஒன்றாகத் தான் இறையன்புவின் மாயைகள் கதையும் இருக்கிறது. இரயிலில் சௌத்ரி குடும்பத்தினரிடம் அவர் உரையாடியதும் உரையாடலின் இறுதியில் ஒரு புத்தகம் கொடுத்ததும் தான் இந்த கதை. பொதுவாக இரயில் பயணம் என்பது பேருந்து பயணத்தைக் காட்டிலும் சக பயணிகளுடன் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பைத் தரும். இரயில் நிலையங்களின் தோழமை என்ற பெயரில் எஸ்.ரா ஒரு புத்தகம் எழுதியுள்ளார். எனக்கும் கூட இரயிலில் தொடர்ச்சியாக ஒரு சில நாட்கள் பயணப்பட வேண்டும் என்ற ஆசையும் கூட உண்டு. இரயில் பயணத்தின் போது தான் சக பயணிகளோடு பேசுவது என்பதைக் கடந்து பல மனிதர்களை கூர்ந்து நோக்குவதற்கான சாத்தியம் ஏற்படும். மாயைகள் கதையில் என்னென்ன பேச்சுக்கள் வந்துது எந்த புத்தகம் பரிசளிக்கப்பட்டது என்பதை எல்லாம் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். கதையின் முடிவை மட்டும் நான் சொல்கிறேன். இரயிலில் பேசிய பேச்சுக்களை கவனித்த ஒரு பெண் விசிட்டிங் கார்டுக்கு பின்புறம் “ஐ லைக் யூ. ப்ளீஸ் ரைட்" என்று எழுதி வைத்துவிட்டு இறங்கிச் செல்கிறாள். சாளரம் வழி பார்க்கும் போது ஒரு புன்முறுவல் உதிப்பதாக கதை முடிகிறது.
அடுத்ததாக, வழுக்கை முகம் என்ற கதை. சவரக்கடைகள் பலரது வாசிப்பிற்கான அடித்தளமாக இருந்திருக்கிறது. டீக்கடைகளில் செய்தித்தாள்கள் படிப்பது மட்டுமே அதிக கவனம் பெறுகிறது. சலூன் கடையில் பேசும் செய்தித்தாள் அரசியலைப் பற்றி எத்தனை புத்தகங்கள் பேசியிருக்கிறது எனத் தெரியவில்லை. இந்த கதையில் வரும் சவரக்கடையில் ஒருவர் தான் அந்த கடையின் முதலாளி, தொழிலாளி என சகலமுமாக இருக்கிறார். அப்போது இராக்கெட் விழுந்த இடத்தில் புல் பூண்டு முளைக்காது என்ற செய்தி வருகிறது. ஒரு வேளை முடியும் முளைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் வருகிறது. கடைசியில் தடவிப் பாரக்கும் முகத்தில் தாடி இருக்கிறது. இப்படியாக இந்தக் கதை முடிகிறது. ஒரு தொழிலாளி தனது வாழ்விற்கான ஆதாரமாகிய தொழிலின் அடிப்படையில் செய்திகளை அணுகுகிறான் அல்லது ஒரு செய்தி தானாக மனதில் இருந்து அவனது தொழிலைப் பற்றிய ஆதார சார்போடு வெளிப்படுகிறது. பின்பு ஏதாவது ஒன்றை வைத்து தனது மனதைத் தேற்றிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கிறான். தொழில்நுட்ப வளர்ச்சி தொழில்களை முடக்கிவிடுமோ என்கிற அச்சம் பரவலாக இருக்கத்தான் செய்கிறது.
மயானம் சிறுகதையை வழுக்கை முகம் சிறுகதையோடு ஒத்ததாக நான் பார்க்கிறேன். காரணம் என்னவென்றால் இந்த இரண்டு கதைகளிலும் தொழில் சார்ந்த அச்ச உணர்வு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுகிறது. இங்கு காலம் காலமாக வலம் வந்து துக்கம் அனுஷ்டித்து பல சடங்குகள் செய்து சவத்தைப் புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்கின்றனர். ஆனால் இப்போது ஒரு இயந்திரம் வந்துவிட்டது. அதில் சவத்தைப் போட்டால் சாம்பல் மட்டும் வருகிறதாம் என்ற செய்தியால் மக்கள் கூடிய கூட்டத்தை இந்த கதை சொல்கிறது. சொல்லப்போனால் இந்த கொரோனா காலகட்டத்தில் இப்படிப்பட்ட இயந்திரங்களின் வருகை என்பது முக்கியமான ஒன்றாகும். நாம் கடந்த ஆண்டு பிணத்தை எரிப்பது பெரும் செய்தி ஆனதையும் அதன் தொடர்ச்சியையும் பார்த்திருக்கிறோம். இந்த கதையில் சிவப்புக் கண்களோடும் கைலியோடும் கொடூரமாக காட்சி தரும் இந்த வெட்டியான் நல்லவன் அவனைப் பற்றி பயப்பட வேண்டாம். ஆனால், வெள்ளை வேட்டி சட்டையும் சவ்வாதும் போட்டு நிற்கக்கூடியவன் சாகக் கிடப்பவனை கொல்லக்கூடிய கொடூரன் என மனிதனின் வெளித்தோற்றம் மற்றும் உள்வெட்டு எப்படியானது என்பதை இந்த கதையின் மூலம் இறையன்பு சொல்லியிருக்கிறார்.
சுயம் என்ற கதை கனவின் அச்சுறுத்தலை காட்சிப்படுத்தி இருக்கிறார். கனவில் காளை வருகிறது. அதைப்பற்றி கேட்டபோது காளை சிவனின் வாகனம், மாட்டுப்பொங்கல், கரும்பு என பல கதைகளை தீட்டுகின்றனர். மனநல மருத்துவரிடம் போனால் அவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் காளைக்கு மூக்கனாங்கயிறு போட்டு இழுப்பதைப் போன்று தொடுக்கிறார். இதையெல்லாம் விட்டு சுயமாக அவன் கனவில் இருந்து விடுதலை பெறுவது எப்படி என்பது தான் கதை.
இன்னுமோர் இரவு மற்றும் தனித்திரு ஆகிய இரண்டு கதைகளும் தன்னுணர்வின் பிரதிபலிப்பாக இருக்கிறது. தனக்கு தானே பேசுவதாக அல்லது தனக்குள் உறைந்து கிடக்கும் நினைவுகளை எல்லாம் எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் பலர் முனுமுனுத்துக் கொண்டே இருப்பார்கள். அதற்கு மாறாக அதை எழுதினால் எப்படி இருக்கும் என்பதன் அடையாளமாக இந்த இரண்டு கதைகளையும் நாம் கொள்ளலாம். அந்த உணர்வு நிலைகளை எல்லாம் கதைகளாக்குவதன் மூலம் நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய சூழலின் கவித்துவம் புனைவோடு மெருகேறும் என்பது நான் அறிந்த ஒன்று. ஒரு இரவையும் அதன் சூழலையும் தனித்திருப்பதன் காரணத்தையும் தனித்திருக்கச் சொல்வதையும் லாவகமாக கதையாக்கியுள்ளார்.
அழுக்கு எனும் கதை பதின் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டிய கதை. மனிதர்கள் எல்லாம் பாவத்தில் பிறந்தவர்கள் என விவிலியம் சொல்கிறது. அந்த பாவம் கண்முன் தன் தாய்க்கு நிகழ்வதைப் பார்க்கும் சிறுவனை அவனது அறிவியல் பாடத்தோடு தொடர்புபடுத்தி நினைவுகூற வைக்கிறார் இறையன்பு. தன்னுடைய ஆசபாசங்களை எல்லாம் ஒளிவு மறைவின்றி தன் தாயோடு கலந்து பேசிய சிறுவனுக்கு அவளின் தொடுதல் கூட கரப்பான்பூச்சி ஊறியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைதாகும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. வன்கொடுமை ஒரு புறம் அதிகரிக்கிறது மறுபுறம் ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு அவசியமான வாழ்க்கை கல்வியை தருவதற்கு அச்ச உணர்வும் ஏற்படுகிறது. இன்று அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமைக்கு கத்தார் தீர்வாக பொதுத்தளத்தில் ஆக்கப்பூர்வமான பாலியல் சார்ந்த உரையாடல் எழும்ப வேண்டும். முறைப்படுத்தப்பட்ட பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்படுவதோடு அதனை சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். இயற்கையான நிகழ்ச்சியை எல்லாம் ஆபாசமாக சித்தரித்து தன்னை யோக்கியர்களாக காட்டிக்கொள்பவர்களால் தான் இந்த சிக்கல் மேலும் வலுவடைகிறது. இதே புத்தகத்தில் வரும் பலவீனம் கதையில் வரும் பெண்ணைப் பற்றியும் அவளது குணத்தைப் பற்றியும் சொல்கிறார். அப்போது அவள் தனியாளாக இருக்க விரும்புவதற்கான காரணங்களை அடுக்கும்போது குடும்ப அமைப்பு மீது அவளுக்கு வெறுப்பு போல, தன் தாய் தந்தை கூடுவதையோ அல்லது ஏதோ காமத்தையோ அவள் கண்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இயற்கையாக நடப்பது ஒன்று மனதளவில் இத்தனைப் பெரிய தாக்கம் ஒரு சிறுவனுக்கும் இளம்பெண்ணுக்கும் எப்படி ஏற்படுகிறது என்பதை இரு வேறு கதைகள் மூலம் இறையன்பு உணர்த்துகிறார்.
விபத்து கதை கலைஞனின் உள்ளப்பாங்கை வெளிக்கொண்டு வரக்கூடியதாக அமைந்துள்ளது. தான் ரசிக்காத எதையும் உணவுக்காகவும் வெறும் இருத்தலுக்காகவும் செய்தால் அது எந்தத் தொழிலாக இருந்தாலும் விபச்சாரம் தானே என்ற குரல் ஒலிக்கிறது. மனிதர்கள் பணத்திற்காக ஓடித் திரியும் இந்தச் சூழலில் பணத்தை மனம்தான் முக்கியம் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது. மனிதத்தன்மை என்பதே மனச்சாட்சிக்கு உண்மையான வேலைகளைச் செய்து மனமகிழ்ச்சி அடைவதே ஆகும். அந்த மனமகிழ்ச்சி தான் வேலையைச் செய்ததற்கான உண்மையான பலன். கலையுணர்வால் மட்டுமே மனிதனை புவியீர்ப்பு விசையைத் தாண்டி பறக்கச் செய்ய முடியும். மனிதனுக்கு கிடைத்த பரிசு கலையை அனுபவிப்பது என்பதையொத்த கருத்து வெளிப்பாடு அமைந்துள்ளது. இந்தக் கதையில் இரண்டு நண்பர்கள் வருகிறார்கள். இருவருக்கும் இடையிலான நட்பு, அன்பு, அறிவுரைகள் ஆகியவற்றை இந்த கதையில் பார்க்க முடிகிறது. ஒருவனுக்கு விபத்து நேரிடும்போது அந்த விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தை மையப்படுத்திய மனத்தாங்கல் இருவருக்கும் ஏற்படுகிறது.
கிராமத்திற்கு கலெக்டர் வரும் போது அந்த கிராமமே கொண்டாட்டம் பூண்டு காணப்படும். அப்படி கலெக்டர் ஒரு ஊருக்கு வரும்போது அந்த ஊர் எப்படி மாறுகிறது என்பதை அந்த ஊர்மக்கள் கூட்டத்தில் ஒருவனாக நின்று இறையன்பு இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் கதை தான் விசிட். அந்த கிராமம் முழுவதும் அரசின் நலத்திட்டப் பணிகள் முயல் வேகத்தில் முடுக்கி விடப்பட்டு அந்த ஊரை மையம் கொண்டு கிராம, நகர அதிகாரிகள் எல்லாம் பரபரப்புடன் இயங்குவதையும் தடல்புடலான விருந்துகள் ஆயத்தமாகிறதையும் இந்த கதை அழகாக காட்டுகிறது. வழக்கமாக ஒன்னுக்கு போகும் இடத்திலிருந்து சிறுவர்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் வேறு இடத்தை நோக்கி ஓடுகின்றனர். சம்பிரதாயமாக கலெக்டர் ஒரு ஊருக்கு விசிட் வரும்போது என்னென்ன நடக்கிறது என்பதை எல்லாம் இந்த கதை மூலம் நம்மால் பார்க்க முடிகிறது. எல்லா கலெக்டர் போல இல்லாமல் சைவ உணவு மட்டும் போதும் என சொல்வதையும் சுற்றி நடக்கும் ஒருநாள் வேடிக்கைகளை எல்லாம் கலெக்டர் பார்ப்பதையும் லாவகமாக கதையாக்கியுள்ளார். விசிட் என்பது அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை சூழலைப் பார்த்து அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான படியாக இல்லாமல் மேற்பூச்சு பூசப்பட்ட அட்டைப்பெட்டி போல் இருப்பதை இந்த கதை சொல்கிறது.
ஒரு மனிதன் தன்னுடைய சக மனிதன் ஒருவனை அவனது உடலியல் அமைப்பின் அடிப்படையில் கேலி செய்வதும் சில சமயங்களில் குற்றப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. அதேபோல் தனக்கு ஒரு திறமை இருந்தால் எந்நேரமும் அந்த திறமை குறித்து தம்பட்டம் அடித்து பேசித் திரிவது இயல்பாகவே பலருக்குள் ஒளிந்து கிடக்கிறது. கால்கள் என்ற கதையில் கால்கள் பலப்பட்ட கால்களை தன் அடையாளமாக கொண்ட ஒருவன் மேட்டிமை எண்ணத்தால் கால்கள் மரத்துப்போய் கர்வம் அழிந்தவனாக மாறுதை கால்கள் என்ற கதை சொல்கிறது. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் எதையும் வைத்து பெருமை கொண்டு அதிகம் ஆடக்கூடாது. ஆடினால் ஆட்டம் நிற்கும் போது நம்மால் நிற்கக்கூட முடியாது என்பதை இந்தக் கதை அழகாக சொல்கிறது.
கோயில்கள் தமிழகத்தில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தமிழக கோயில்கள் ஒவ்வொன்றும் சிறப்புக்குரியதாகவும் அதேசமயம் பல மர்மங்கள் நிறைந்தும் காணப்படுகின்றன. அத்தகைய கோவில்களின் வரலாறு தல புராணமாகவும் கல்வெட்டுகளாகவும் பதிவாகி இருப்பதைத் தாண்டி வாய்மொழிக் கதைகள் எல்லாக் கோயில்களிலும் உண்டு. இன்று இந்த கதைகள் பெரும்பாலும் சொல்லப்படாமல் இருந்தாலும் கோயில்களுக்கான கதைகளை விதந்தோதும் காலமும் இருந்திருக்கிறது. தமிழகத்தில் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா வருவதில் கோயில்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்தக் கோயில்களின் அமைப்பு, சிலைகள் என ஒவ்வொன்றுக்கும் தனி கட்டிட பாணியும் கதைகளும் உண்டு. கோயிலை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும் என்பது போன்ற ஆகம விதிகள் அது இது என எத்தனையோ இதில் உண்டு. இதையெல்லாம் விளக்குவதற்கு கைடு இருப்பார்கள். அப்படி மனிதப் பிறவியும் வேண்டுவதே என்ற கதையில் கணபதிப்பிள்ளை கைடாக இருக்கிறார். அவரது மகன் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைக்கிறார். உடனே இவர் தனக்கு பிடித்த வேலையை விட்டு விட்டு அமெரிக்கா செல்ல தயங்குகிறார். ஏற்கனவே விபத்து கதை பற்றி சொல்லும் போது மனிதன் விரும்பும் தொழிலைச் செய்ய வேண்டும் என சொன்னது போல தான் இந்தக் கதையின் உட்கருத்தும் இருக்கிறது. உடனே அவர் பல மர்மங்களும் புகழும் நிறைந்த கோவிலைப் பற்றி தானறிந்ததை எழுதத் தொடங்குகிறார்.
கலைகளில் திறமை பெற்று விளங்குபவனுக்கு திமிர் இருப்பது புதிதல்ல. அதேபோன்ற ஒரு கலைஞர் தான் நடராஜ ஸ்தபதி அவரைப் பற்றிய கதைதான் ஸ்தபதி. இந்தக் கதையில் ஸ்தபதி உரையாடுவதற்கு தயங்குபவர் அல்லது உரையாட விரும்பாதவர் போன்ற தோற்றம் காட்டப்படுகிறது. தமிழின் சிறந்த கவிஞர்கள் எழுத்தாளர்கள் இலக்கிய ஆளுமைகளில் சிலர் எனக்குப் பேச வராது எனச் சொல்வதை நான் கேட்டதுண்டு. ஆனால் அவர்களது எழுத்தில் ஒலிக்கும் குரல் அவர்கள் சொல்லிய எனக்குப் பேச வராது என்ற தொடருக்கு முற்றிலும் முரணானதாக தெரியும் வகையில் அவர்களது வீச்சு காணப்படும். இந்த நிலையைப் பெற்ற ஒருவராக நாம் நடராஜ ஸ்தபதியை வைக்கலாம். “படைப்பாளி நேரடியாக பேச விரும்பாததனால தான் படைப்புகள் மூலமா பேசுறான்" என்ற வார்த்தை இந்தக் கதைக்கும் ஸ்தபதி கதாபாத்திரத்திற்கும் உயிரோட்டம் தருகிறது. படைப்புகள் குறித்து சொல்லும் போது “அவன் மேல இருந்த கோபம் தான். அவனோட படைப்பு நல்லா இல்ல. என் படைப்பு நல்லா இருக்கனும்" என பல மனிதர்களை கடவுள் இப்படி படைத்துவிட்டாரே என்ற வேதனையோடு தனது படைப்பு நேர்த்தியாக இருக்க வேண்டுமென சொல்கிறார். அவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டாக கல் ஒன்று அவருக்கு முன் கொண்டு வரப்படுகிறது. அதைப் பார்த்தவுடன் இது சிற்பத்துக்கு ஆகாதென ஒரு தட்டு தட்டுகிறார். கல் இரண்டாகப் பிளக்கிறது. உள்ளே இருந்து தேரை தாவி ஓடுகிறது. பின்பு சிற்பம் செதுக்குவது குறித்து ஆழ்ந்த தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். அதையொட்டி கதை முடிகிறது. இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு வரிகளும் கதைக்கான அர்த்தத்தை பேசுகிறது என்று கூட சொல்லலாம்.
உள்ளுக்குள் ஒரு நதி கதையை வண்ணதாசனின் தீராநதியோடு சற்று ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்தக் கதையில் நதி பற்றிய விவரனை இருக்கிறது. “எண்ணங்கள் முதிர்ச்சியடைவதற்கும் கிழடு தட்டிப் போவதற்குமான வேறுபாடு அவனுக்கு நன்றாகப் புலப்பட்டது" என்ற வார்த்தையில் அனுபவ அறிவுக்கும் வயதிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் வெளிப்படுகிறது. வயசானவங்க ரொம்ப அனுபவசாலிகள் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என அடிக்கடி சொல்வார்கள். அதனை இந்தக் கதை கேள்விக்கு உள்ளாக்கி கதை என்பதைத் தாண்டிய தத்துவப் பிரக்ஞையை ஒரு நொடியில் உண்டாகும் முயற்சியை எடுத்து அப்படியே விட்டு விடுவதாக இந்தக் கதை இருக்கிறது.
பலவீனம் கதை ஒரு பெண்ணின் அகவாழ்வு அவளது புற வாழ்வின் மீது செலுத்தும் ஆதிக்கத்தை சொல்கிறது. அவளது தீராத தனிமைக்கான மருந்தாக நாய்க்குட்டி ஒன்று கிடைப்பதும் அந்த நாயை அவளது அகம் நெருங்கிய உயிராக பாவிப்பதும் நாயின் செயல்பாடு அவளது மனதில் புதைந்து கிடக்கும் தொடக்கூடாத ஏதோ ஒன்றைத் தோண்டி எடுத்துப் போடவும் அவளுக்கு நாய் மீது சொல்ல முடியாத வெறுப்புணர்வு தட்டுப்படுகிறது. “மென்மையாய் இருப்பது ஒருவகையான கௌரவமான பலகீனம் தான்" என்கிற வரி கதையை இரு வேறு தளத்தில் பிரிக்கிறது. ஸ்னோபார் என்ற நாய் தான் ஒரு இளம்பெண்ணுக்கான கவலைகளை மறக்க வைக்கிறது. பின்பு கோபத்தை ஏற்படுத்துகிறது. மீண்டும் அவள் கோபம் தனிந்து வரும்போது மனிதர்கள் போல முகத்தை கோணாமல் அவளிடம் பழைய அன்பை வெளிப்படுத்துகிறது. இந்த கதையில் நாய்க்கு உரிய இடத்தைத் தவிர்த்தால் கதை நன்றாக இருந்திருக்காது எனச் சொல்லும் வகையில் நாய் இருக்கிறது.
தனிமையுணர்வு மனிதனாக பிறந்த அனைவருக்கும் காலம் கட்டாயம் கொடுக்கும் நினைவுப்பரிசு ஆகும். இரண்டு வகைப்பட்ட தனிமை உண்டு. முதலாவது யாரோ ஒருவரால் அல்லது ஒரு கூட்டத்தால் தனித்து விடப்படுதல். இரண்டாவது யாரோ ஒருவரை அல்லது ஒரு கூட்டத்தை பிரித்திருப்பது நமக்கு தனிமையாகத் தோன்றுதல். இதில் எந்தவகைத் தனிமை நமக்கு ஏற்படுகிறது என்பதைப் பொருத்து அந்த தனிமை தோன்றியச் சூழலை நம்மால் ஓரளவு வரையறுக்க முடியும். அந்தத் தனிமைக் காலம் நமது நினைவில் நீங்காத இடம் பெற்றிருப்பதோடு அந்த தனிமைக்கான காரணம் தோன்றும் போதெல்லாம் ஒருவித இயலாமை இணைந்தவாறே வெளிப்படும். இசைதலும் பிரிதலும் வாழ்வின் இரு பெரும் இயக்கம் அந்த இயக்கத்தின் இரண்டாவதாகிய பிரிதலின் விளைவாகிய தனிமையை தனித்திரு என்கிற கதை சொல்கிறது. கொரோனா காலத்தில் நம்மில் பலர் தனிமையை அடைந்திருக்கலாம். அதுவும் ஒரு வகை அனுபவம். அதுபோல, இந்த தனித்திரு கதை ஒருவகைத் தனிமையைப் பேசுகிறது.
தமிழ்த் திரையில் வந்த பல படங்களில் முதலாளி ஒரு வேலைக்காரனைக் கண்டடைந்து அவனுக்கு வேலை கொடுத்து அவனது பிள்ளைகளை படிக்க வைப்பதையும் அந்தப் பிள்ளை வளர்ந்து அந்த முதலாளியை எதிர்ப்பதையும் நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். இலக்கியம் என்று பார்த்தால் பஞ்சும் பசியும் நாவலில் கைலாச முதலியார் இருளப்பக் கோனாரை அவ்வாறு தான்
கண்டடைகிறார். அதேபோல் தான் வைக்கோல் கன்றுகள் கதையில் பொன்னன் எனும் வேலைக்காரன் முதலாளியால் கண்டெடுக்கப்படுகிறான். அதேபோல உயிர்நேயம் கொண்ட அந்த முதலாளியால் காயம்பட்ட அணில் ஒன்றும் கண்டெடுக்கப்படுகிறது. அந்த அணிலுக்கு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்து அதனை தன்னுடனே வளர்க்கிறார். பொன்னனுக்கு கல்யாணம் பண்ணுவித்து அவனது குழந்தையை படிக்க வைக்கிறார். அணிலும் குட்டி போடுகிறது. முதலாளி அணிலைக் காணும் என தேடியபோது அது குட்டியெல்லாம் போட்டதுனால வேற எங்கேயாவது போயிருக்கும் எனச் சொல்கிறான். அந்த சமயத்தில் பொன்னனின் மகன் முதலாளியை எதிர்த்துப் பேச பொன்னன் அவனைத் தடுக்கிறான். அங்கே சலசலப்பு ஏற்பட்டு ஓயும்போது நன்றி மறக்காத அந்த அணில் தனது குட்டிகளுடன் முதலாளியோடு விளையாடுவதாக கதை முடிகிறது. மனிதர்களிடம் இல்லாத நன்றி உணர்வு விலங்குகளிடம் இருப்பதை இந்த கதை உணர்த்துகிறது.
மயானம் கதையில் மரணம் வந்ததைப் போல பரிச்சயம் கதையிலும் மரணம் தான் கதையின் முக்கிய பகுதியாக இருக்கிறது. தியாகு என்ற இளைஞன் அவனது அப்பாவைப் போல சிறுவயதிலேயே சாகிறான். அந்த மரணம் ஒவ்வொருவராலும் எப்படி பார்க்கப்படுகிறது. அவன்மீது ஒவ்வொருவரும் வைத்திருந்த மதிப்பு எப்படிப்பட்டது என்பதை பரிச்சயம் கதை வெளிப்படுத்துகிறது. தியாகுவிற்கு பரிச்சயமான ஒருவரின் வரிகள் “அந்தச் சூழலில் நான் எதைச் சொன்னாலும் அது அர்த்தமற்றதாகி போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு. மௌனித்திருந்தேன். எப்படித் தேற்றி விட முடியும். நிச்சயம் எந்த வார்த்தைகளுக்கும் அந்த சக்தியில்லை என்றபோது வீண் பிரயத்தனம். கண்களில் கசிந்திருந்த நீர் துளிகள் என் கரிசனத்தை புரிய வைத்திருக்க வேண்டும்.இப்படியாக இருக்கிறது. இதே போல தான் தலை மாணாக்கன் கதையில் ஏகலைவன் சொன்ன பதிலுக்கு மறுமொழி சொல்ல முடியாமல் துரோணர் இருந்தார். சிலவற்றை சொல்வதற்கு எந்த மொழியிலும் வார்த்தை இல்லை என்பதை இந்த இரண்டு கதைகளும் உணர்த்துகிறது.
ஸ்தபதி, விபத்து போன்ற கதைகள் கலைகள் பற்றிய வெளிப்பாட்டை தனது கதைக்களத்திற்கு ஏற்ப ஆழமாக பேசியிருக்கிறது. அதேபோல் அந்தக் கதைகளுக்கு நிகராக நடனக்கலை பற்றியதாக திருச்சிற்றம்பலம் என்ற கதை இருக்கிறது. தியாகராஜர் என்பவர்தான் இந்த கதையின் மையம். நடனத்தை தொழிலாகப் பார்க்காமல் பிழைப்புக்கான வழியாகப் பார்க்காமல் உன்னதமான கலையாக எண்ணி மதித்தவர். “இந்த நடனமெல்லாம் நமக்கு தெரியாதத அடையறதுக்காக நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அழித்துக் கொள்கின்ற ஒரு கேள்வி தான்." என்பது நடனம் குறித்த அவரது கருத்தாக இருக்கிறது. அவரிடம் நடனம் கற்றவர்கள் பெரிய நிலையை அடைந்தாலும் அவர் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது வேலையை செய்வதில் கவனமாக இருந்தார். அதனால் தான் நடனப் பின்புலம் ஏதுமின்றி நடனத்தை ஆசையாக கற்ற தியாகராஜரின் மாணவர்கள் நடனப்பின்புலம் அற்றவர்களாக இருந்தனர். அவர்களை எல்லாம் பெரும் உயரம் அடைய வைத்தவர் தனது மகனுக்கு நடனம் கற்றுக்கொடுக்கவே இல்லை. ஒரு நடனக் கலைஞரின் மகன் என்பதாலேயே அவரது மகனுக்கு நடனம் கற்றுக்கொடுக்காத அளவு தனது கொள்கையில் வைராக்கியம் நிறைந்த அவரது வாக்கியம் “மாலை வேண்டாம் என மேடையிலேயே தலைதூக்கி சொல்வதே பெரிய மாலையை மாட்டிக் கொண்டதாகி விடுவது போல், தன் சத்தியம் உதடுகளின் விளிம்பில் இருந்து குதித்தால் கூட அது புனிதத் தன்மையை இழந்து விட்டதாகக் கருதப்படும்.” என்பதாகும்.
அரிதாரம் எனப் பெயர் பெற்றுள்ள இந்த நூலில் உள்ள அரிதாரம் என்ற தலைப்பிலான கதை கடைசி கதையாக இடம் பெற்றிருக்கிறது. இந்தக் கதையில் நாய் முக்கியமான இடம் பெறுகிறது.
பலவீனம் கதையில் நாய் நாயாகவே ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், இந்த கதையில் ஆங்கிலேயர்களுக்கு சீமை நாய் என்ற அரிதாரமும் நம் நாட்டு விடுதலை போராட்டக்காரர்களுக்கு உள்ளூர் நாய்கள் என்ற அரிதாரமும் பூசப்பட்டுள்ளது. இது ஒன்றே அந்த கதை எப்படி இருக்கும் என்கிற ஒரு தோரணையை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கும்.
பத்தொன்பது கதைகள் அடங்கிய இந்த தொகுப்பு இறையன்பு எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு ஆகும். முழுவதுமான நவீன இலக்கியத்தை வாசித்த திருப்தியை தரவில்லை என்றாலும் கூட வாசிப்பதற்கு ஏற்ற ஒரு புத்தகமாகவும் விலங்குகளின் அன்பு நிலை, நன்றியுணர்வு, கலைகள் பற்றிய சிந்தனை, தொழில்நுட்ப வளர்ச்சி, உணர்ச்சி நிலைகள் என பலவற்றை வெளிப்படுத்தி புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளது. .
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக