ஒரு புளியமரத்தின் கதை -சுந்தரராமசாமி

 



      ஒரு புளியமரத்தை மையப்படுத்தி அதனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை எடுத்துச் சொல்லும் வகைமையில் அமைந்த நாவல் ஒரு புளியமரத்தின் கதை. சுந்தரராமசாமி நாகர்கோவிலில் பார்த்த வேப்பமரம் புளியமரமாக மாறி இருப்பதாக இந்த நாவலைப் பற்றி சொல்லும் போது குறிப்பிடுகிறார். ஏற்கனவே சொன்னது போல ஒரு புளியமரம் மன்னராட்சி காலத்தில் எப்படி இருந்தது சுதந்திர போராட்ட காலத்தில் எப்படி இருந்தது சுதந்திரத்திற்கு பிறகு எப்படியாக மாறியது என்பதை விளக்குவதோடு நாஞ்சில் வட்டார மக்களது மனநிலை மூன்று வகைப்பட்ட காலங்களிலும் எவ்வாறு மாறியுள்ளது என்பதை சுந்தரராமசாமி பதிவு செய்துள்ளார்.


     1966ல் வெளியான இந்த புதினம் 2019வரை மொத்தம் 26 பதிப்புகளைக் கண்டுள்ளது. அதுமட்டுமின்றி மலையாளம், ஆங்கிலம்,இந்தி, எபிரேயம் என நான்கு மொழிகளில் மொழிபெயர்ப்பான இந்த நாவல் ஸ்லோவேனியா மொழியிலும் மொழிபெயர்ப்பாக இருக்கிறது. முதன் முதலில் எபிரேயத்தில் மொழிபெயர்ப்பான இந்திய நூல் என்கிற வரலாறு ஒரு புளியமரத்தின் கதை புதினத்துக்கு உண்டு. 


      மன்னராட்சி காலத்தில் புளியமரம் எப்படி இருந்தது என்கிற கதையை தாமோதர ஆசான் தான் சொல்கிறார். மங்காத்தாயரு அம்மாள் கோபல்லகிராமத்தில் கதை சொல்வது போல இங்கு தாமோதர ஆசானின் கதைகள் இருக்கிறது. இதைக் கடந்து சுதந்திர போராட்ட மற்றும் அதற்கு முந்தைய சம்பவங்கள் இந்த இரண்டு புதினங்களிலும் பதிவாகியுள்ளது. அத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த கரிசல் மக்களையும் அவர்களின் மனநிலையையும் கோபல்லகிராமம் புதினமும் நாஞ்சில் மக்களையும் அவர்களது மனநிலையையும் ஒரு புளியமரத்தின் கதை புதினமும் பதிவு செய்கிறது. அதே நேரத்தில் ஒரு புளியமரத்தின் கதை நாவலில் சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியலும் வலுவாக பதிவு செய்யப்படுவதில் இருந்து இது கோபல்லகிராமம் புதினத்தில் இருந்து வேறுபடுகிறது. புளியமரமும் அதைச்சுற்றி எழில் தங்கி இருந்த புலிக்குளமும் கொழிக்கும் காட்சியையும் புலிக்குளம் மூடப்பட்டு புளியமரத்தைச் சுற்றி சாலைகள் போடப்பட்டு புளியமர ஜங்சன் ஆனதும் கடைசியில் புளியமரமே இல்லாத புளியமர ஐங்சன் மாறி நின்றதுமே இந்தக் கதையின்‌ மையச்சரடு. புளியமரத்தைச் சுற்றியுள்ள மாந்தோப்பை அழித்து அங்கு சர்வதேச சங்கத்தார் ஒரு பூங்கா கட்டுவதும் அதைப்பார்த்த பெரியவர் ஒருவர் மரத்தை வெட்டிட்டு செடியை வளர்க்கான் எனச் சொல்வதும் இந்தக் கதைக்கு ஒரு சூழலியல் சார்ந்த அர்த்தத்தை கொடுப்பதை உணர முடிகிறது. புளியமரத்தை இரண்டு முறை வெட்டுவதற்கான முயற்சிகள் நடக்கிறது அதில் முதல் முறை செல்லாயி புளியமரத்தில் தூக்குப்போட்டதை தொடர்ந்த பகுதியில் தாமோதர ஆசான் மரத்தை வெட்டக்கூடாதென தடுக்கிறார். இரண்டாவதாக தனது வியாபார காரணங்களுக்காக தாமு புளியமரத்தை வெட்டுவதைத் தடுக்கிறார். இந்த இரண்டு இடங்களும் கதையின் முக்கியமான பகுதிகளாகும். புளியமரத்தை வெட்டும் முயற்சிகள் குறித்துப் பேசப்படும் இடங்களை சுந்தர ராமசாமி மிகச் சரியாக கையாண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த இடங்களில் சற்று பிசகி இருந்தால் ஒட்டுமொத்த கதையும் மாறியிருக்கும் என்பதாக நான் நினைக்கிறேன். 


      சர்வதேச சங்கம் கட்டிய பூங்காவில் தலித் சிறுவர்கள் விளையாடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் இடத்திலும் புளியம்பழம் திருடுபோன போது தோட்டிகள் தான் திருடியிருப்பர் என்ற தொனியில் ஒலிக்கும் வள்ளிநாயகம் பிள்ளையின் குரலும் சாதிய ஒடுக்குமுறையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அதே போல் காதர் மற்றும் தாமுவுக்கும் இடையிலான பகுதிகள் வணிக அடிப்படையிலானது என்பதைத் தாண்டி சமய முரணையும் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் காட்டுகிறது. இருந்தாலும் கூட அவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலான வணிகம் சார்ந்த போட்டிதான் கதையை சுவாரஸ்யமாக நகரச் செய்கிறது. ஜனார்த்தனன் என்கிற ஒரு பொதுவுடைமை பேசும் வழக்கறிஞரும் பத்திரிக்கையாளர் இசக்கியும் கூலி ஐயப்பனும் தேர்தலில் வெற்றி பெறும் கடலைத் தாத்தாவும் கதைக்கு ஏற்ற பாத்திரங்களாக கதையில் எந்த ஒரு மாறுதல் தன்மையும் ஏற்படாமல் நன்கு பொருந்தி அமைந்திருப்பது இந்த நாவலைத் தனித்துவமாக நிறுத்துகிறது எனலாம். ஒட்டுமொத்தத்தில் பாரத்தால் கும்மி அடிக்கும் போது நடுவில் விக்கிரகம் இருப்பது போல இந்தப் புதினத்தின் நடுவில் புளியமரமும் சுற்றிக் கும்மி அடிப்பவர்களாக மூன்று காலக்கட்டத்தைச் சார்ந்தவர்களும் கும்மிப்பாட்டாக அரசியல் நுணுக்கம், வணிக உத்தி, சாதிய வெறுப்பு, சமய முரண் முதலானவை இருக்கிறது.


‌‌ -அழகுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்