வெங்கட் சாமிநாதன் சில பொழுதுகள் சில நினைவுகள் - பாவண்ணன்


 வெங்கட் சாமிநாதன் சில பொழுதுகள் சில நினைவுகள்  

                          - பாவண்ணன்


     வெங்கட் சாமிநாதனைக் குறித்து பாவண்ணன் அவர்கள் தீரா நதியில் பன்னிரண்டு மாதங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். வெங்கட் சாமிநாதன் என்கிற சமரசமற்ற விமர்சகரிடம் பேசுவதே பெரும் சவாலான காரியம். ஏனென்றால் அவரது விமர்சனங்கள் மட்டுமன்றி அவரது விமர்சனத்திற்கு எவராவது எதிர்ப்பு அல்லது மறுப்பு தெரிவித்தால் அதற்கு பின் அவர் எழுப்பும் சில வரிகள் மட்டுமே உடைய ஆழமான கேள்விகளுக்கு விடை கொடுக்க முடியாமல் தடுமாறத் தான் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட பல கலைகள் மற்றும் இலக்கியம் மீது ஆழமான புரிதல் கொண்ட ஓர் ஆளுமையுடன் பாவண்ணன் உரையாடியதை இந்த நூல் அழகாக சொல்கிறது. முன்னுரையிலே நரேந்திர குமார் குறித்து பாவண்ணன் குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது. நரேந்திர குமார் அவர்களின் ரசனையை நேரில் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் அவர் அதை வெளிப்படுத்தும் பாங்கு. 


     தனிமனித சிந்தனை படைப்பாளிக்கு மிக முக்கியம். அது தமிழ் படைப்பாளர்களிடம் இல்லை எனச் சொல்லி அதற்கு அளிக்கும் விளக்கம். பின்னர் தனி மனித சிந்தனைக்கும் சமூக சிந்தனைக்கும் இடையிலான உரையாடல் முதலானவை நம்மை அதிகம் சிந்திக்க வைக்கக்கூடியவை. தமிழை வெறியாக கொண்டிருக்கக்கூடியவர்களுக்கான சவுக்கடிகள் இந்த தொகுப்பின் பல பகுதிகளில் உள்ளன. முத்தமிழ் எனச் சொல்லி பெருமைப்படும் ஓர் இனத்தின் நாடகக் கலையின் நிலை எப்படிப்பட்டது என்பது பேசப்பட்டு இருக்கிறது. நாடகங்கள் குறித்து இருவர் பரிமாறும் தகவல்கள் இந்த நூலில் அதிகம் நிரம்பியிருக்கிறது. வஞ்சமகள் நாடகமும் அதில் சூர்ப்பனகையாக தமிழச்சி தங்கப்பாண்டியன் நடித்த செய்தியும் அவரது நடிப்புத்திறனும் பேசப்பட்டு இருக்கிறது. கன்னடத்தையும் தமிழையும் நாடகம், இலக்கியம், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பல நிலைகளில் ஒப்புமைப்படுத்தி தமிழின் பின் தள்ளப்பட்ட போக்கும் தமிழ் வாசகர்கள் மீது புதுமைப்பித்தன், மௌனி, பிச்சமூர்த்தி போன்றவர்கள் மீது போதிய வெளிச்சம் படவில்லை என்பதை வேதனையுடன் பல இடங்களில் வெ.சா பதிவு செய்கிறார். கன்னடத்தில் சிவராம கராந்த் எனும் பெரும் படைப்பாளி கொண்டாடப்படுவது போல தமிழகத்தில் எந்த எழுத்தாளரும் மதிக்கப்படுவது கிடையாது. படைப்பாளர்கள் மீது பட வேண்டிய வெளிச்சத்தை எல்லாம் திரைக்கலைஞர்கள் தட்டிப் பறித்ததையும், திரைத்துறை கலையை மறந்து பணம் போட்டு பணம் எடுக்கும் தொழிலை மட்டுமே செய்து வருகிறது என்கிற விமர்சனத்தையும் சேர்த்தே வைக்கிறார். அதேசமயம் தமிழ் எழுத்தாளர்களிடம் செல்ஃப் அசெஸ்மண்டு குறைவாக இருப்பதையும் சுட்டுகிறார். கன்னட நாடகங்களில் நேரடி மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் வந்த பல நாடகங்கள் குறித்து பேசப்படுகிறது. 


      மழையைப் பற்றி பேசும் போது மழை குறித்த செய்திகளை சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பித்துப் பிடித்தது போல சொல்லும் வெங்கட் சாமிநாதன் தீராநதி குறு நாவலில் வரும் சுடலைத்தேவருக்கு ஒப்பாகவே காட்சியளிக்கிறார். நவீன கதைகளை வெகு அழகாக புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் கட்டமைத்த பாணியையும் நவீன கதைகளில் வாசகனையும் சிந்திக்க வைக்கக்கூடிய அவனுக்குள் இருக்கும் படைப்பாளரை வெளிக் கொண்டு வரக்கூடிய போக்கை குறித்தும், பல கதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் குறித்த செய்திகளையும் அதனுள் ஒழிந்துள்ள அசாத்திய கலைத்திறனையும் சொல்லும் வெ.சா விமர்சனங்களில் மட்டுமே கறாராக இருந்துள்ளார். தனிமனித வாழ்வில் இயற்கையை பெரிதும் நேசிப்பவராகவும் தனக்குத் தெரிந்ததை பிறருக்கு யார் எவரென்றே அறியாமல் சொல்லும் அறிவுக் கொடையாளியாகவும், பலருக்கு தானங்களை செய்யக்கூடியவராகவும், சிறுவயது முதல் நேற்று நடந்தது வரையிலான அனைத்து தகவல்களையும் நினைவுபடுத்தி சொல்லும் ஆற்றல் படைத்தவராகவும் இருந்த வெங்கட் சாமிநாதன்வி ருது எனக்கு எதற்கு என இயல் விருது அறிவித்த போது கேட்டு தனது நிலையை உயர்த்தியுள்ளார். ஆனால் சுந்தரராமசாமிக்கும் வெ.சா.வுக்கும் விருதுக்குப் பின் நடந்த மோதலை விமலாதித்த மாமல்லன் ஒரு நூலாக கிண்டிலில் எழுதியுள்ளதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். எழுத்தாளர் பாவண்ணன் போன்ற சிலரால் மட்டுமே வெங்கட் சாமிநாதனுடன் ஈடு கொடுத்து பேச முடியும் என்பதை பல பகுதிகள் உறுதிப்படுத்துகிறது. 

                                         -அழகுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

நரகவாசிகளின் வியர்வை -தீனன்