மலாவி என்றொரு தேசம் - சாரு நிவேதிதா
மலாவி என்றொரு தேசம்
- சாரு நிவேதிதா
இந்த நூல் எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு மலாவியில் இருந்து ஆனந்த் என்ற வாசகர் அனுப்பிய கடிதமும் அதற்கு சாரு நிவேதிதா எழுதிய பதில் கடிதங்களும் அடங்கிய தொகுப்பு. இதில் ஆனந்தை தவிர்த்து முரளி எனும் ஒருவரின் கடிதமும் இடம் பெற்றுள்ளது. இந்த கடிதத் தொகுப்பை இரண்டு கோணங்களில் அணுகலாம் என ஆசைப்படுகிறேன். முதலில் சாருவைக் குறித்து அவரும் தொடர்ந்து கடிதம் அனுப்பும் ஆனந்தும் சொல்லிய நிலைப்பாடுகள். இரண்டாவது இந்த நூலின் மிக முக்கிய பகுதியான மலாவி எனும் ஆப்பிரிக்கத் தீவும் அங்கு வாழும் மலாவியர்களும் குறித்த தகவல்கள் ஆகும்.
ஜெ.கே ஆதரவாளர் ஒருவருக்கும் சாருவுக்கும் இடையிலான எவ்வித கருத்து மோதலுமற்ற தனிப்பட்ட முறையிலான சண்டை கவர் ஸ்டோரி சாரு எழுதியதால் வந்துள்ளது. அந்த கவர் ஸ்டோரியை வெளியிட்டதால் பத்திரிகையை நடத்திய பாயையும் சேர்த்து அவர் திட்டியதாக சாரு குறிப்பிட்டுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் இலக்கிய உலகில் அரங்கேறுவதால் எவ்வித மனநிலை பொது மட்டத்தில் உருவாகிறது என்பதை விளக்கும் பகுதியாக இது இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. யூ.ஜி குறித்து பேசும்போது ஜெ.கே விமர்சிக்கப்படுகிறார். ஜே.கே இலக்கியம் தாண்டி இந்த தொகுப்பில் பார்க்கப்படுகிறார்.
தாமஸ் பிஞ்சோன் எனும் கடினமான எழுத்தாளரின் எழுத்தில் கணிதம், பௌதிகம், உளவியல், இசை எல்லாம் இருக்கும் என்கிற செய்தி, யு.ஜி. எழுதிய தத்துவங்கள் போன்றவை பேசப்பட்டுள்ளது. அசோகமித்திரனுக்கும் அகிலனுக்கும் அடுத்து ஆரவாரம் அற்ற எழுத்தாளர் நான் தான் என சாரு ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். துவைக்காத ஜீன்ஸ் வயதைக் குறைக்கும் என்று ஆடைகள் குறித்து பேசியுள்ளார்கள்.
இணையத்தில் கருத்து தெரிவிக்கும் பைத்தியங்கள். உயிரியல் அறிஞர் ஆப்ரேஷன் செய்ததற்கு டெலிபதியில் சரி செய்யலாமே என்றார்களாம்" இந்த வரியில் இணையதளத்தில் வெற்றுக் குரல் கொடுப்பவர்களையும் அவர்களது நடப்பு வாழ்வில் உள்ள சூழலையும் அழகாக சொல்லியிருப்பார்.
மலாவி தேசத்தைக் குறித்து இனி பார்ப்போம். 1994ஆம் ஆண்டு 1 அமெரிக்க டாலர்- 6.7 மலாவி குவாச்சாவிற்கு சமமாக இருந்துள்ளதையும்
2009ஆம் ஆண்டில் 1 டாலர் - 142 குவாச்சா அளவுக்கு மாறியதும் மலாவி நாட்டில் உள்ள வளங்கள் எல்லாம் மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு மலாவியில் அதிக விலைக்கு விற்கப்படும் நிலையே அங்கு பரவலாக உள்ளது. இதன் மூலம் பெருமளவில் லாபம் ஈட்டும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் மலாவியில் சொந்த சொத்துக்களை வாங்குவதில்லை, அதற்கு காரணம் அந்த நாடு கூடிய சீக்கிரத்தில் அழிவைச் சந்திக்கும் என்பதை அறிந்து அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சொத்துக்களை வாங்குகின்றனர். வெளிநாட்டில் இருந்து அங்கு போய் வேலை பார்ப்பவர்கள் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குவதும் அங்கு உள்ள மக்கள் நூறு ரூபாய்க்கும் குறைவான அளவே சம்பளம் வாங்கும் போக்கும் காணப்படுகிறது. இதையெல்லாம் பார்த்தால் மலாவியர்கள் ஏமாற்றப்படுகின்றனர் அவர்கள் உழைப்பு திருடப்படுகிறது என்றெல்லாம் நினைத்தால் மறுபுறம் அவர்கள் வாழ்வில் அவ்வாறு காணப்படக் காரணமே அவர்களது மட்டுப்பட்ட அறிவிலித்தனமே ஆகும்.
அதிகமான போதைப் பழக்கம் உயிரிழப்பு மீது வருத்தமின்றி பல நோய்களை எல்லாம் மலேரியா என்றே சொல்லி பழக்கப்பட்ட அவர்களது மருத்துவ நிலை எதையும் சேர்த்து வைத்து நலத்தோடு வாழ வேண்டும் என்கிற அக்கறையின்மை, வெளிநாட்டில் இருந்து அங்கு செல்பவர்களை எல்லாம் தங்களை விட உயர்ந்தவர்களாக்கி அவர்களிடம் அடிமைப்படுதல், அவர்களது நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமானால் எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ டிவியை போடச் சொல்லும் போது அதைப் போட்டு உடைப்பதைத் தான் சொல்ல முடியும். அங்கு கிறித்தவம் இசுலாம், குலே வாழ்வுமுறை, அவர்கள் பொழுதுபோக்கு, டிவி, சினிமா அங்கு உள்ள இலக்கியத்திற்கு ஏற்பட்ட தடைகள், அவர்களது தனித்த நாகரீகத்தின் மீது உலக நாடுகள் கட்டவிழ்த்து விட்ட அவர்களுடைய நாகரீக திணிப்பு என அனைத்தும் பேசப்பட்டு உள்ளது.
நதிகள் இல்லாத தமிழகம் மலாவியைப் போல தான் என்கிற சாருவின் கருத்தில் உண்மை இருக்கிறது. இந்தியா வல்லரசாக வேண்டுமானால் இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளும் கல்வி முறையும் மாற வேண்டும் என்ற ஆனந்தின் கருத்தும் ஒப்புக்கொள்ளத்தக்கதாகும். சமகாலத்தில் உள்ள ஒரு நாட்டின் நிலையை அந்த நாட்டு மக்களின் கவலைகளற்ற அந்தந்த நாளை மட்டும் மகிழ்ச்சியாக கழிக்கும் வாழ்வையும் அவர்களது அக்கறையற்ற தன்மையால் அவர்கள் அடைந்து வருகிற துன்பங்கள் மேலும் அடையப் போகிற பெரும் எதிர்விளைவுகளை எல்லாம் குறித்து நாம் யோசிக்கும் யோசனையை ஏற்படுத்தும் விதமாகவே இந்த கடிதத் தொகுப்பு உள்ளது. சாரு எழுதிய கடைசி அத்தியாயங்கள் எல்லாம் அவரது தன்மையை அவரை நாடுபவர்களே வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது சிறப்பு..
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக