அறியப்படாத தமிழகம்- தொ.பரமசிவன்


 

அறியப்படாத தமிழகம் -  தொ.பரமசிவன்


      பண்பாட்டு மானிடவியல் அறிஞரும் பேராசிரியருமான முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் எழுதியுள்ள அறியப்படாத தமிழகம் என்ற இந்த நூல் தமிழ் வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், சின்னச் சின்ன விடயங்களையும் யோசனைக்கு உட்படுத்தி அதனைப் பண்பாட்டியல் பார்வையில் ஆராய்ந்து நம்மிடையே தெரியப்படுத்தியதே காரணமாகும். இந்த நூலை வாசித்ததற்குப் பின் பழங்குடியின மக்கள் என நாம் ஏன் அழைத்து வருகிறோம் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. நான் யோசித்தபோது எனக்கு புலப்பட்டது என்னவென்றால் “பழமையான மரபுகளை காரணங்களோடு இன்றுவரை அவர்கள் கடைப்பிடிப்பதால் தான் பழங்குடிகள்" என அழைக்கப்படுகிறார்களோ என நான் நினைத்துக்கொண்டேன். இப்படியான சிந்தனையை ஒவ்வொரு வாசகர்களிடமும் இந்த நூல் தோற்றுவித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிறந்த நூல் வாசிப்பவரை வெறுமனே வாசகனாக மட்டுமே வைத்துக்கொள்ளாமல் சிந்தனையாளனாக மாற்றும் என்பதற்கு ‘அறியப்படாத தமிழகம்' சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். ‘அறியப்படாத தமிழகம்' பரவலடைந்ததற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த நூலின் பெயரும் ஆசிரியரின் பெயரும் பேசப்படுவதற்கு முன்பே இந்த நூலில் உள்ள கருத்துகள் கேள்விகளாகவும் ஆச்சரியமான பதிலாகவும் பேசப்பட்டு இந்த செய்தியை அறிந்தது ‘அறியப்படாத தமிழகம்' என்ற புத்தகத்தின் மூலம் தான் என்று  உரையாடலுக்குள் சென்றுவிட்டதே ஆகும். அப்படி பிரபலமடையும் அளவுக்கு இந்த நூலில் என்னென்ன கருத்துக்கள் இருக்கிறது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.


     மொழி எவ்வளவு உதவிகரமானது என்பதை நாம் பேசும் திறனற்றவர்களைப் பார்க்கும்போதும், நீர், காற்று, இருப்பிடம், உணவு போல மொழி இன்றியமையாத தேவையென்பதை மொழி தெரியாத பிரதேசத்திற்குள் நுழையும் போதும் தான் அறியமுடியும். அதில் நம்முடைய தமிழ் மொழி எத்தனை சிறப்புகளைத் தாங்கி நிற்கிறது என்பதை இந்த நூல் வாயிலாக அறியலாம். மொழி வெறுமனே பேசக்கூடிய தொடர்பு கொள்ளக்கூடிய தொடர்புக்கருவி மட்டுமே அல்ல. அது பல கலைப்புலமை வாய்ந்தது என்பதையும் பண்பாட்டு தொடர்புடையது என்பதற்கான பல்வித சான்றுகளுடன் இந்த நூலில் அடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மொழியின் பெயரையும் தனது பெயராகவோ தனது பெயரோடு இணைத்தோ தங்கள் வசிக்கும் ஊர்களின் தன்மைக்கேற்றவாறு பலவகையில் பொருத்தியோ அமைக்க முடியாது. தமிழில் அது சாத்தியப்பட்டுள்ளது என்பதை நம் முன் இருக்கக்கூடிய சாட்சியங்களை வைத்தே தொ.ப உறுதிப்படுத்துகிறார். தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழூர், தமிழ்ப்பாடி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம்.


      யாகம் வளர்த்தல், நெருப்பு முதலானவை ஆரியர்கள் வழிப்பட்டது. திராவிடர்கள் நீருக்கு முதன்மை கொடுப்பவர்கள் விழாக்களில் நீர்ப்பந்தல் வைக்கும் வழக்கம் உண்டு. அதுமட்டுமின்றி நீர்நிலைகளின் பெயர்களை காரியவினை வகையில் வைத்துள்ளனர் என்பது நிறுவப்பட்டுள்ளது. குளிக்க பயன்படுத்தும் நீரைக் குளம் என்றும்,

உண்பதற்கு பயன்படுத்தும் நீரை ஊருணி என்றும்,  

ஏர்த்தொழிலுக்கு பயன்படுத்தும் நீரை ஏரி என்றும்,

கண்ணாறு உடைய நீரைக் கண்மாய் என்றும்,

அரிந்து வரும் நீரை அருவி என்றும்,

மழைநீரை ஏந்தி நின்றால் ஏற்றம் என்றும் தொ.ப பெயர்க்காரணத்தை விளக்குகிறார்.


     உணவு முறைகளில் எத்தனை பெரிய பண்பாட்டுத் தொடர்பு உள்ளது என்பதையும் உணவுப் பொருட்களின் பெயர்கள் எவ்வாறு வந்தது என்பதையும் இந்த நூல் பதிவு செய்துள்ளது. சமைத்தல் அல்லது சமைந்தல் என்றால் பக்குவப்படுதல்/பக்குவப்படுத்துதல் என்பதே பொருள் என்பதை உணர்த்தி சோழ மற்றும் விஜயநகர அரசர்களின் கல்வெட்டில் அக்கார அடிசில், பணியாரம், இட்லி, அடை, அதிரசம் என பல உணவுப் பொருட்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ள செய்தியும் மாலை நேரத்தில் மட்டும் செயல்படும் மிட்டாய் கடைகளை அந்திக்கடை என பண்டைத் தமிழகத்தில் அழைத்துவந்ததையும் லாலா கடை என்பது இந்திச் சொல் என்பதையும் தொ.ப அறியத் தருகிறார். 


     உப்பு என்றால் சுவை சுவைகள் எல்லாமே உப்பை அடிப்படையாகக் கொண்டவை எனச் சொல்லும் தொ.ப சம்பளம் என்ற சொல்லே பண்டமாற்ற முறையில் இருந்து பிறந்ததென அர்த்தம் புகட்டுகிறார். சம்பளம் என்ற சொலில் வரும் சம்பா நெல்லையும் அளம் என்பது உப்பளத்தையும் குறிக்கக்கூடியது. அரிசிக்கும் உப்புக்கும் மக்கள் வேலை பார்த்துள்ளனர் என்கிற உண்மை உரைக்கப்பட்டுள்ளது. உப்பு நன்றியுணர்தலை எடுத்துக் காட்டுவதையும் இறப்புச் சடங்கில் சேர்க்கப்படாத காரணத்தையும் கல்மரவைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டதற்கான காரணத்தையும் இந்த நூல் விவரிக்கிறது. துவையல் என்ற பெயர் அரைத்து துவைத்து கிடைப்பதால் வந்தது என்றும் எள்ளை ஆட்டி அரைக்கும் போது கிடைத்த நெய் எண்ணெய் என்றும் பின்பு எண்ணெய் பொதுப்பெயர் ஆனதையும் விசயநகர நாயக்கர் காலகட்டத்திலேயே எண்ணெய் பயன்பாடு மிகுதியானதையும் இந்த நூல் வாயிலாக அறியலாம். 


     சோறு என்ற பிரதானமான உணவுப்பொருளின் பெயர் ஏன் கொச்சை வார்த்தையாக இன்று பார்க்கப்படுகிறது. சாதம் என பிறமொழிச் சொல்லை உயர்வாக கருதி பயன்படுத்தி பண்பாட்டுத் தொடர்புடைய சோறு என்னும் சொல்லை மறக்க முயல்வது பண்பாட்டு சிதைவிற்கு ஊக்கமளிக்கும் செயல் என்கிற தொனியில் சோறு என்ற சொல்லுக்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. தமிழரது பண்பாட்டில் ‘சோறும் நீரும் விற்பனைக்கல்ல’ என்கிற வழக்கு ஒழிந்ததையும், சோறு, மருந்து, கல்வி, அடைக்கலம் ஆகியன தமிழர்களது நால்வகைக் கொடையாக இருந்து இன்று நான்கும் விற்பனைக்கு வந்தது பதிவாகிறது. விசயநகர காலத்தில் சோறு விற்றதும் ஆங்கிலேயர் காலத்தில் உணவு விடுதிகள் வந்ததும், மடங்களும் சத்திரங்களும் காணாமல் போவதையும் குறித்து தொ.ப எழுதியுள்ளார்.  பிச்சைக் கேட்டல், பிச்சையிடுதல், உள்ளிட்ட செயல்பாடுகளுக்குப் பின் உள்ள வரலாறு ஆகியனவற்றை இந்நூல் வாயிலாக அறியலாம். 


      கற்காலத்தில் கற்களில் பொருட்களைச் செய்ய ஆரம்பித்த காலத்தில் உரல், அம்மி வந்ததையும் கருங்காலி மரத்தாலான உலக்கை, திருகை முதலானவை தோன்றியதையும் உலக்கைக்குத்தும் போது வள்ளைப்பாட்டு பாடும் வழக்கம் இருந்ததையும் குந்தாணி என்ற சொல்லுக்கான காரணத்தையும் தென்னை மரம் தமிழ்நாட்டிற்கு வந்ததையும் தேங்காய் படையல் உள்ளிட்ட பல்வற்றில் பயன்படுவதற்கான காரணத்தையும் இந்த நூல் வாயிலாக அறியலாம். நாட்டுப் பொருட்கள் மற்றும் சீமைப்பொருட்களுக்கு இடையிலான வேறுபாடுகளும் பதிவாகியுள்ளது.


     கட்டிட அமைப்புகள், பலியிடும் வழக்கம், வீடு என்ற சொல்லின் பொருள், உடைகள், விளையாட்டுகள், கருவிகள், சாதிய பிளவுகள் உள்ளிட்ட பல்வற்றை சிரத்தையோடு ஆய்வுப் பூர்வமாக தொ.ப இந்த நூலில் நிறுவியுள்ளார். சித்தர்கள் சித்தர் பாடல்கள், இசுலாமிய பக்கிரிசாக்கள், சூஃபிக்கள், சமணர்கள், மத மோதல்கள் பற்றிய தகவல்களோடு கல்லறைகள், பள்ளிகள், சிறு தெய்வ வழிபாடு என தமிழகத்திற்குள் காலம்காலமாக வழக்கத்திலுள்ள செயல்பாடுகளுக்கான அறியப்படாத காரணத்தை ஆவணப்படுத்தியுள்ள நூலாக ‘அறியப்படாத தமிழகம்' திகழ்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இந்த நூலைப் பற்றி பேசியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

                                              -அழகுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்