பாட்டையாவின் பழங்கதைகள் - பாரதிமணி
பாட்டையாவின் பழங்கதைகள் - பாரதி மணி
ஒரு சிலருக்கு மட்டுமே இளமை முதுமை வரை வாய்க்கும். அது பாட்டையா பாரதிமணி அவர்களுக்கு வாய்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நூலுக்கான அணிந்துரையை கவிஞர் கலாப்ரியா உட்பட ஐந்து பேர் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இடையில் ஒருமித்து இருக்கக்கூடிய ஒரு கருத்து பாட்டையா எழுதாமல் விட்ட கதைகள் ஏராளம் என்பது மட்டும் தான். இந்த நூலுக்கான அவருடன் உரையாடிய பொழுதுகளை எண்ணி ஒவ்வொருவரும் பலவாறாக சிலாகிப்பதைப் பார்க்க முடிகிறது. தன்னை எழுத்தாளர் என்று ஒத்துக் கொள்ளாத பாரதி மணி அவர்கள் நாடகமும் வெள்ளித்திரையும் தனக்குக் கொடுக்காத வெளிச்சத்தை புத்தகங்கள் தான் கொடுத்தது என்கிறார். ஆனால் அவர் எழுதிய புத்தகங்களோ அல்லது அவரது கட்டுரைத் தொகுப்புகளோ சொற்பம் தான்.
ஒரு நாடகக்கலைஞனுக்கு சில பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்கிற வேட்கை இருப்பது இயல்பு தான். ஆனால் பாட்டையா தான் படித்த கதைகளில் வரக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் கொண்டவராக தி.ஜானகிராமனிடமே அவரது மரப்பசு நாவலை நாடகமாக எழுதித்தர முடியுமா எனக் கேட்டுள்ளார். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்றியாக வாழ வேண்டுமென்பது அந்த நாவலைப் படித்த அனைவரின் எண்ணமாகவும் நிச்சயம் இருக்கும். பாட்டையா அப்படி வாழ்கிறோமோ இல்லையோ ஒருமுறை நடித்தாவது விடவேண்டும் என ஹென்றி கதாபாத்திரத்தையும் தனது விருப்பத்தேர்வுகளில் வைத்திருந்திருக்கிறார்.
அண்ணா, கலைஞர் என திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளில் பாட்டையாவின் பகடி வாடையோடு சில ரகசியங்களும் தெறிக்கிறது. அதுமட்டுமின்றி முன்னோடி என்று பலர் பல துறைகளில் இருப்பதுபோல பாட்டையாவும் சிலவற்றில் முதலாவதாக இருந்திருக்கிறார். 1968 ஆகஸ்ட் 10ல் தில்லான மோகனாம்பாள் படத்தை மீனாட்சிபுரம் இலட்சுமி தியேட்டரில் ஒலிப்பதிவு செய்து பைரசியை (piracy) இந்தியாவில் தொடங்கி வைத்த கதையை சொல்லும் பாட்டையா அத்துடன் நிற்காமல் 1958ல் லாம்ப் ரெட்டர் வண்டி வாங்கியது 1965ல் அம்பாசிடர் கார் வாங்கியது என தனது பழம்பெருமைகளை சுவைபட பதிவு செய்துள்ளார்.
அண்ணாத்த பட விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் கீழடிக்குக் கீழே பத்தடி தோண்டினால் எனச் சொல்வது போல பாட்டையா அரிவாள்மணை அருகாமனை ஆனது பற்றிச் சொல்லும் போது அரிவாள்மணையின் வரலாற்றை ஆராய்ந்தால் கீழடிக்கே போகலாம் எனச் சொல்லியுள்ளார். க.நா.சு.வின் மகள் ஜமுனாவை பாட்டையா கைபிடித்த கதைக்குள் இருக்கும் கதையை இந்நூலில் உடைத்துக் காண்பித்துள்ளார். மாதோக், அத்வானி, வாஜ்பாய் என அரசியல் கதைகளை தன்வினை தன்னைச்சுடும் என்கிற பழமொழிக்கு சான்று கொடுப்பது போல எழுதியுள்ளார். எழுத்தாளர் முகில் எழுதிய உணவு சரித்திரம் பரவலாக பேசப்படுகிறது. அது போல தன்னை சமையல் கலைஞர் என பெருமையோடு சொல்லும் பாட்டையா கடுகு பற்றிய தகவல்களையும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடுகு கதையும் தமிழ்பரப்பின் உணவு சரித்திரத்தின் ஒரு பகுதி என்பதை நாம் மறுக்க முடியாது.
'அச்சோ நிங்களெப்பொலெ ஒரு ஆளெ இதுவர கண்டில்லெ' என அன்று ஒரு மலையாளிப்பெண் சொல்வது போல அவரோடு நெருங்கிப் பேசிய அனைவரும் அவரது மறைவுக்குப் பின் சொல்கிறார்கள்.
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக