கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
கள்ளிக்காட்டு இதிகாசம் (புதினம்)
- வைரமுத்து
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பையும் கால்நடைகளான பிற உயிர்களை நேசிக்கும் உயரிய குணத்துக்கு சொந்தக்காரர்களான கிராமத்தவர்களை குறிப்பாக, கள்ளிக்காட்டு மக்களை அவர்களின் வாழ்வு முறையை அழகாக ஆவணப்படுத்தியுள்ள நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம்..
கள்ளிக்காட்டு இதிகாசத்தை இரண்டு நாவல்களுடன் ஒப்பிட விரும்புகிறேன். முதலாவது *பிறகு* எனும் பூமணியின் நாவல், பிறகு நாவலில் வரும் கதையமைப்புடன் ஏறக்குறைய பொருந்தி வருவதாகவே கள்ளிக்காட்டு இதிகாசம் இடிக்கிறது. பிறகு நாவலில் வரும் அழகிரியுடன் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் வரும் பேயத்தேவரை ஒப்பிட்டு பார்க்கலாம். அடுத்ததாக தமிழ்ச்செல்வி அவர்களின் *கீதாரி* நாவல், இந்த நாவலில் வரும் ராமு கீதாரியுடன் பேயத் தேவரை ஒப்பிடலாம். இந்த கதையிலும் ராமுக்கீதாரியின் மகளாக வளரும் கரிச்சாவின் குழந்தையை கீதாரியே எடுத்து வளர்ப்பது போல, கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத்தேவர் மொக்கராசை வளர்க்கிறார்.
கிராமத்து மக்கள் பணத்தைவிட தங்கள் வளர்ப்புகளையும் வாழும் மண்ணையும் அதிகம் நேசிக்கின்றனர் என்பதற்கு சிறந்த உதாரணமாக பேயத்தேவரை எடுத்துக்காட்டலாம். நிலம் தன்னை விட்டுப் போகும் போதும் நிலத்தை உழும்போது ஏற்படும் காயத்திற்கு மருந்தாக மண்ணை வைத்தே மனதை தேற்றுதல். மாடை பிடித்து போன பின்பு அழுகையால் வீட்டை நனைத்தல் போன்றவற்றை அழகாக விரித்துரைத்துள்ளார் வைரமுத்து.
சாராயம் காய்ச்சும் முறையையும், மனிதன் இறந்த பிறகு உடலை எரிக்கும் சடங்கையும் மார்க்க கல்யாண முறையையும் இந்த நாவல் அழகாக எடுத்துரைத்துள்ளது.
சின்னுவை தவறான வழியில் அனுப்பி வைத்ததும் பேயத்தேவர் தான் என்பது எனது கருத்து. வண்டி நாயக்கருக்கும் பேயதேவர்க்கும் இருந்த உறவு, அழகம்மாள் உடனான மணவாழ்க்கை நினைவுகள், இரண்டு மகள்களின் குடும்பம், மொக்கராசுவை வளர்த்தல், முருகாயிக்கும் பேயத்தேவருக்கும் இருந்த காதல் மறையாமல் பின்னாளில் முருகாயிக்கு தஞ்சம் கொடுத்தது. அரசு அதிகாரிகளுடன் வாதிடுதல், என்று மிகப்பெரிய சகாப்தத்தை ஏறக்குறைய 340 பக்கங்களுக்குள் வைரமுத்து கூறியுள்ளார்.
என்னதான் இருந்தாலும் பேயத்தேவரின் இறப்பு மூடத்தனமானது. மனிதன் பல நேரங்களில் உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்து சிந்தனையை ஒதுக்கி வைக்கிறான். அதையேதான் பேயத்தேவரும் செய்துள்ளார். கள்ளிக்காட்டு இதிகாசத்துடன் நான் ஒப்பிட்ட இரண்டு நாவல்களில் வரும் அழகிரியும் ராமு கீதாரியும் உயிருடன் இருப்பதாகவே கதை முடியும். கள்ளிக்காட்டு இதிகாசம் அதிலிருந்து மாறுபட்டு பேயத்தேவரின் இறப்பில் கதை முடிகிறது. உடல் சாகலாம் மனது சாகக்கூடாது என்று பேயத்தேவரின் தந்தை பெரிய தேவர் சொன்ன வார்த்தைக்கு தக்கதாக பேயத்தேவர் உடலளவில் முதலில் இறந்து விட்டார். தனது இறுதி நிமிடம் வரை மனதளவில் சோர்ந்து சாகாமல் இருந்ததாக கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு நல்ல முடிவையும், அதேசமயம் தவறான முடிவையும் பிணைத்து வைரமுத்து முடித்துள்ளார்.
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக