ஈசாப் கதைகள்
ஈசாப் கதைகள்
நாம் அனைவரும் சிறு குழந்தைகளாக இருக்கும் போது, ஆடு, மாடு, நாய், கோழி போன்றவற்றை கண்டு சிறிய பயமும் அளவற்ற மகிழ்ச்சியும் அடைந்திருப்போம். அதேபோல், தொலைக்காட்சியில் மிருகங்கள் வரக்கூடிய நிகழ்ச்சிகளை இடைவிடாது கண்டு ரசித்திருப்போம். ஏன் இன்றும் கூட அதுபோன்ற கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சில நேரங்களில் நம்முடைய நினைவுகள் நிழலாடுவதைக் காண முடியும். அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் விலங்கு கார்ட்டூன்களும், கதைகளும் நீங்கா இடம் பெற்று நிறைந்திருக்கிறது. அந்த கார்ட்டூன்களும் கதைகளும் அதைப் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய, வாசிக்கக்கூடிய சிறுவர்களது வாழ்வில் நீதிக் கருத்துக்களை விதைத்தால் அதுவும் பசுமரத்தாணி போல அவர்களது உள்ளத்தில் பதிந்து விடும் தானே. அதைத்தான் ஈசாப் தனது கதைகள் வாயிலாக சொல்லியுள்ளார்.
கிரேக்க நாட்டில் ஒரு அடிமையாக வாழ்ந்த அவர் தனக்கு பின் வரக்கூடிய குழந்தைகள் நீதியைப் பின்பற்றுவதுடன் கூட புத்திசாலித்தனமான காரியங்களையும் செய்ய வேண்டும் என்று தான் இந்த கதைகளைக் கூறியிருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பழமொழி நம்மிடையே வழக்கில் இருக்கிறது. அதன் படி வளைக்க நினைப்பதை ஐந்திலேயே வளைத்து விட்டால், ஐம்பதிலும் வளைந்து தானே இருக்கும். அந்த வளைக்கும் பணியைத் தான் தனது கதைகளின் வாயிலாக ஈசாப் செய்திருக்கிறார். அறிவுரை, ஆலோசனை போன்றவற்றை நம்மைப் போன்ற ஒரு மனிதன் நம்மைப் போன்றே இருக்கக்கூடிய மனிதர்களை நமக்கு சான்றாக வைத்து கூறும்போது, அறிவுரை கூறுபவர் மீதும் அவர் எடுத்துக் காட்டாக நம் முன் வைத்த மனிதர்கள் மீதும் ஒருவித கசப்புணர்வு ஏற்படும். ஆனால், ஈசாப் கதைகள் நமக்கு இனிப்பை போன்ற சுவையான உணர்வை நமக்கு தருகிறது. அதற்கான காரணம் என்னவென்றால், அவர் நமக்கு முன் வைக்கக்கூடிய கதாபாத்திரங்கள் அனைத்துமே விலங்குகளும் பறவைகளும் தான். விலங்குகள் மற்றும் பறவைகள் வாயிலாக நமக்குள் நீதியையும் சிந்திக்கும் உணர்வையும் இனிமையாகப் புகுத்த முடியும் என்பதை நிறைவேற்றி காட்டியுள்ளார் ஈசாப்.
இந்த நீதிக் கதைகள் அனைத்துக்குமான பழமொழிகள் நம்முடைய தமிழில் உண்டு. இதன் மூலம் தொன்மையான குடியாக விளங்கிய தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையிலான ஒற்றுமையைக் காண முடியும். வௌவாலை மையமாக வைத்த ஒரு கதை விதியைக் கூட மதியால் வெல்ல முடியும். எந்த நிலையிலும் துவண்டு விடக்கூடாது என்கிற தன்னம்பிக்கையை நமக்கு தருகிறது. எலிகள் போட்ட மாநாடு என்ற கதையின் மூலம் அரசியலின் நுட்பத்தைக் கூட எந்த அளவுக்கு எளிமையாக ஈசாப் சொல்லியிருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு கதையும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிக்கருத்துக்களை கொண்டதாகத் தான் அமைந்துள்ளது.
நட்பு, உண்மை, ஒற்றுமை, அன்பு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், உதவும் மனப்பான்மை, துன்பத்தை எதிர்கொள்ளும் திறன், இன்பத்தை தக்க வைக்கும் திறன், சிந்தித்து செயல்படும் தன்மை, மனஉறுதியுடன் செயல்படும் தன்மை, தைரியம், தனித்தன்மை, பணிவு, தொடர் முயற்சி, பொறுமை, பொறாமையை அகற்றுதல், சக்திக்கேற்ப செயல்படுதல் என பல கருத்துக்களை எளிமையான முறையில் குழந்தைகளுக்கு விதைப்பதற்கான சரியான பரிந்துரை இந்த புத்தகமாகத் தான் இருக்கக்கூடும்.
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக