விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் - சி.மோகன்
விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் - சி.மோகன்
ஓவியர் ராமானுஜம் பற்றிய புனைவு தான் இந்த நாவல். கலைஞர்களுக்குள் எப்போதுமே விந்தைத் தன்மை ஒரு பிரக்ஞையாக இருப்பது அவசியம். ஆனால் அதையே தன் வாழ்வாகக் கொண்டு மனம் பிறழ்ந்து மரணித்த இராமன் அவர்களைப் பற்றிய இந்தக் கதையில் அவரது கலைத்தன்மை பற்றிய செய்திகளும் மனிதர்களால் புறக்கணிக்கப்பட்ட செய்திகளும் நிரம்பியுள்ளன. கனவு புனைவின் ஆதாரம் என்பதை நிறுவக்கூடிய காட்சிகள் பல இந்த கதையில் அரங்கேறுகிறது. அதிலும் குறிப்பாக ஓவியர் இராமனின் கதையை நவீனப்போக்கில் சொல்லும் போதே கதைக்கு ஏற்ற தகவல்களை சி.மோகன் இடையீடாக வந்து அறியத் தருவது இந்தக் கதையின் சிறப்பம்சம் ஆகும்.
ஓவியம் என்பது மனித நாகரிக வளர்ச்சியிலும் வரலாற்றுப் பதிவிலும் மன ஆசுவாசத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது. இன்றைய செய்தித்தாளில் கூட புற்றுநோய் மருத்துவமனையில் சுவர் ஓவியம் தீட்டப்பட்டு நோயாளிகளின் மனத்தை ஆசுவாசப்படுத்துவதாக ஒரு செய்தியை வாசிக்க நேரிட்டது. இவ்வாறு ஓவியக்கலை ரசனை மனதை மயக்கும் தன்மை உடையதாக உள்ளது. அப்படிப்பட்ட ஓவியங்களை நேரில் பார்க்கும் சிற்பங்களை வைத்தும் கனவில் தோன்றும் காட்சிகளை வைத்தும் விசித்திர காட்சிகளாக நாட்டார் கலை மரபோடும் கதைப் போக்கோடும் இணைத்து கண் முன் கொண்டு வந்த ஓவியக் கலைஞராக இராமன் விளங்கியதை இந்த நூல் நமக்கு அறிய தருகிறது.
ஒரு கலைஞன் செய்யக்கூடிய வேலையில் அவனுடைய மனப்பொருத்தம் ஒன்றியிருந்தால் மட்டும் தான் அவன் தனது பணியை சிறப்பான வடிவத்திற்கு கொண்டு வர முடியும் அப்படிப்பட்ட மனம் கலையில் ஒன்றாத நிலையையும் கலையை மட்டுமே தனது வாழ்நாட்களாக கடத்திய நிலையையும் ஒரே கோணத்தில் இந்த நூல் கொடுக்கிறது.
மரணம் குறித்த செய்திகள் சி.மோகன் அவர்களின் படைப்புகளில் அதிக முக்கியத்துவமும் ஒவ்வொரு படைப்பிலும் மரணத்தை குறித்த அவரது கருத்துக்களும் அவரது நூல்களில் முக்கியத்துவம் பெறுவதாக நான் கருதுகிறேன். இந்த படைப்பில் "பூமியில் மனிதன் தன் பணி முடிந்ததும் உலக வாழ்விலிருந்து துண்டித்துக்கொண்டு, விடைபெற்றுக்கொள்ள முடிந்தால் அதுவே விவேகமான காரியமாக இருக்க முடியுமென்று தோன்றுகிறது. இளம் மேதைகள் விஷயத்தில் இதுதான் நிச்சயம் அழகான முடிவாக இருக்கமுடியும். இளம் மேதைகள் இளம் பிராயத்திலேயே தங்கள் கனவுகளின் உச்சத்தை எட்டிவிடுவதோடு அவ்வுலகில் பரிபூரணமாக வாழ்ந்தும் விடுகிறார்கள். தங்கள் துறை சார்ந்த மேதைமையின் சிகரத்தை எட்டிவிட்ட பிறகு, முதலில் மரணம் நேர்வது அவர்களுடைய கனவுகளுக்குத்தான். கனவுகளின் மரணத்துக்குப்பின் வாழ நேர்வது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல; அவலமும்கூட. அப்படி நேராமல் தடுத்தாட்கொள்ளும் அழகிய சாதனம்தான் மரணம்." இப்படியாக ராமனின் மரணம் குறித்து சி.மோகன் எழுதுகிறார். அது மட்டுமன்றி ராமனோடு இருந்த தேவி என்ற நாயின் இழப்பும் இந்தக் கதையில் சொல்லப்பட்டிருப்பது கதைக்கான பூரண வடிவம்.
-அழகுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக