நடைவெளி நினைவுகள் - சி. மோகன்
நடைவெளி நினைவுகள் (நான்கு தொகுதிகள்) - சி.மோகன்
நடைவெளி நினைவுகள் என்ற பெயரிலான 16 ஆளுமைகள் குறித்த 64 கட்டுரைகள் அடங்கிய இந்த தொகுப்பு மற்ற கட்டுரைத் தொகுப்புகளில் இருந்து மாறுபட்டது. ஒரு மனிதனைக் குறித்து எழுதப்படும் கட்டுரை அவனது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவடைவதாகவே பெரும்பாலும் இருப்பதுண்டு. ஆனால் இந்த கட்டுரைகள் அப்படிப்பட்ட அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. நினைவுகள் குறித்த கட்டுரைகள் என்பதால் நினைவில் நீங்காத் தன்மையுடன் படிந்திருக்கும் ஒரு நிகழ்வை முன்னிருத்தியே கட்டுரை தொடங்குகிறது.
சிறு பத்திரிகைகள் தமிழுக்கு தந்த ஆளுமைகளையும் அவர்களின் தனிமை, பிரக்ஞை, தொடர்புத்திறன், எழுத்தின் மீதான பரிகரிப்பு முதலானவை எல்லாம் இக்கட்டுரைகளில் பேசப்பட்டிருப்பதோடு சி.மோகன் அவர்கள் ஒவ்வொரு படைப்பாளர்களோடு பழகிய நெருக்கத்தையும் அந்த படைப்பாளர்களின் இலக்கியம் சார்ந்த கருத்துருக்கள் மற்றும் பங்களிப்புகள் குறித்த பகிர்தலாகவும் இக்கட்டுரைகள் அமைந்துள்ளதால் வாசிக்கும் போது நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த பதிவில் ஒவ்வொரு ஆளுமைகளையும் குறித்த சிறு தகவல்களை மட்டும் முன்வைக்கலாமென இருக்கிறேன்.
க.நா.சு எனும் மகத்தான ஆளுமையின் பன்முகத்திறனும் கூரிய விமர்சனமும் நவீன இலக்கியம் குறித்த நகர்வும் வாசகன் பற்றிய அவரது எண்ணங்களும் மரணம் குறித்த கவலையின்மையும் அவரைப் பற்றிய நான்கு கட்டுரைகளிலும் இருக்கிறது.
சி.சு. செல்லப்பா எழுத்து இதழ் தமிழுக்கு தந்த கவிஞர்கள் என்றும் தமிழ் இலக்கியச் சூழலில் வியந்து பார்க்கத்தக்கவர்கள். அவருடைய அரசியல் மற்றும் இலக்கியப் பணியும் அதற்காக அவர் செலவிட்ட உழைப்பையும் அவர் அடைந்த சோர்வுநிலைகளையும் ந.பிச்சமூர்த்தி முதலான பெரியவர்களோடும் இளம் இலக்கியவாதிகளோடும் ஒருமித்த அன்போடு அவர் பழகிய தன்மையையும் நாடகம் கதைகள் என அவர் தமிழில் மேற்கொண்ட முயற்சிகளையும் நான்கு கட்டுரைகளில் காண முடிகிறது.
ப.சிங்காரம் குறித்த நான்கு கட்டுரைகளும் அவர் எவ்வாறெல்லாம் நிராகரிக்கப்பட்டு தனிமையை தனதாக்கிக் கொண்டு இருந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. ஒரு சிறந்த படைப்பாளனுக்கான அங்கீகாரம் தடைப்படுவதனால் தமிழுக்கு கிடைக்க வேண்டிய சிறந்த இலக்கியங்கள் தடைப்படுவது குறித்த வேதனையை சி.மோகன் வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது. எழுத்தாளர்கள் சிட்டி, சிவபாதசுந்தரம் இணைந்து எழுதிய தமிழ் நாவல்: நூறாண்டு: வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலில் தமிழின் சிறந்த நாவல்களான ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களும் ஜி.என் நாவல்களும் இடம்பெறவில்லை என்கிற நேர்மையான விமர்சனத்தை சி.மோகன் இக்கட்டுரையில் முன்வைக்கிறார். நாவல் இலக்கியப் போக்குகள் என்ற நூலிலும் கூட இதே விமர்சனம் முன்வைக்ப்பட்டு இருக்கிறது. தகுந்த காலத்தில் சரியாக கவனிக்கப்படாத அதேசமயம் வெளியுலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாத சி.மோகன் எந்த படைப்பாளரின் தாக்கத்தில் எழுத்துலகிற்குள் நுழைந்தார் என்பதை அவர் குறித்த கட்டுரைகள் மூலம் அறியலாம்.
தி.ஜா எனும் கதைகள் மூலம் வசீகரிக்கும் ஒரு மேதைமைப் படைப்பாளர் குறித்த கட்டுரைகளில் அவருடைய கர்வம் இல்லாத எளிமை மனமும் அவரது படைப்புகள் குறித்த சி.மோகனின் பார்வையும் சொல்லப்பட்டுள்ளது.
நகுலனின் படைப்புகள் உருவாகும் இடம் அந்த படைப்புகள் பேசும் தனிமை எளிமையாகவும் அர்த்தப்பூர்வமாகவும் அவர் எழுதும் கவிதை நனவோடை உத்தியின் பயன்பாடு முதலானவற்றை அவர் குறித்த கட்டுரைகள் மூலம் அறியலாம்.
ஜி.என் குறித்த சி.மோகன் எழுத்துக்களை சாகித்திய அகாதமியின் வெளியீட்டில் வந்த இந்திய இலக்கியச் சிற்பிகளில் வாசித்ததுண்டு. அந்த நூலின் அதே நினைவை மறுவாசிப்பாக கைக்கொண்ட உணர்வை நான்கு கட்டுரைகளும் தந்தன. ஜி.நாகராஜனின் வாழ்வும் அவரது படைப்பும் அவர் கைக்கொண்ட பழக்கங்களும் நினைவாற்றலும் படைப்பாற்றலும் ஆங்கில அறிவும் கட்சி ஈடுபாடும் என அவரது வாழ்வின் அனைத்து நிலைகளையும் அவர் நிராகரிக்கப்பட்டதையும் அவரை கதாபாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகளையும் சாவு குறித்த அவரது எண்ணப்பாடுகளையும் அவர் குறித்த கட்டுரைகள் விளக்குகிறது.
சார்வாகன் பற்றிய கட்டுரைகள் அவர் மருத்துவராகவும் இந்திய தத்துவ மரபு குறித்த தேடல் உடையவராகவும் சிறுகதை கவிதை என அவ்வப்போது தனது படைப்புகளை எழுதிய எழுத்தாளராக திகழ்ந்ததையும் அவருடைய புனைவுகள் குறித்த தன்மைகளை விளக்குவதாகவும் அவரைப் பற்றிய நான்கு கட்டுரைகள் அமைந்துள்ளது.
தனது விழிகள் சிறு பத்திரிகை மூலம் அறிமுகமாகி இலக்கிய வாழ்வில் தொடர்ந்து தன்னை வழிப்படுத்திய ஆளுமையாக சுந்தரராமசாமி இருந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதாகவே அவர் குறித்த கட்டுரைகள் இருக்கின்றன. இருவருக்கும் இடையிலான அன்பும் நட்புறவும் ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் பற்றிய வெளிப்பாடும் பொதிந்துள்ள கட்டுரைகளாகவே சுந்தர ராமசாமி பற்றிய கட்டுரைகள் உள்ளன.
அசோகமித்திரனின் பரிவான எழுத்தும் அவர் எழுதி குவித்த படைப்புகளும் அவரது எளிமையும் அன்பும் கூடிய நடவடிக்கைகளும் அவர் குறித்த கட்டுரைகளில் பேசப்படுகிறது இருக்கிறது.
மா.அரங்கநாதனின் கவித்துவ ஈடுபாடும் மெய்ஞான அறிவும் ஜோதிட ஞானமும் கொண்டு அவர் விளங்கியதைக் குறித்தும் க.நா.சு மறைவிற்கு பின் அவரது பதிப்பிக்கப்படாத எழுத்துக்களை பெற்றவருமாக அவர் இருந்ததைப் பற்றியும் கட்டுரைகள் இருக்கின்றன. ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படம் மா.அரங்கநாதன் பற்றிய மிக முக்கியமான பதிவு அதை இந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது சிறப்பு.
வெங்கட் சாமிநாதனின் விமர்சனப் போக்கு குறித்த பல தகவல்களை உள்ளடக்கியதாகவும் அவரது கலை இலக்கிய ஆர்வத்தின் தன்மையை வெளிப்படுத்துவதாகவும் சுந்தர ராமசாமிக்கும் அவருக்கும் இடையிலான உறவு பற்றியும் இந்தக் கட்டுரைகள் பேசுகிறது. அதே சமயம் விமலாதித்த மாமல்லன் எழுதிய இருவருக்கும் இடையிலான மோதல் போக்கு பற்றிய நூலும் அவர்களது இறுதி நாட்களில் கொண்டிருந்த முரண்பாடுகளை அறியலாம். பாவண்ணன் எழுதிய தொடர் பற்றிய அறிமுகத்தை இந்தக் கட்டுரையின் முக்கிய பகுதியாக நான் பார்கிறேன். அது இப்போது நூலாகவும் வெளிவந்துள்ளது.
ந.முத்துசாமி குறித்த கட்டுரைகள் அவருடைய கலை ஆர்வத்தை மையப்படுத்தியே இருக்கிறது. அவருடைய எழுத்துக்களும் கூட கலைகள் குறித்தும் நாடகம் குறித்தும் பல இடங்களில் வெளிப்பட்டதை அறிய முடிகிறது.
ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழக எழுத்தாளராக திகழ்ந்த பிரமிள் குறித்த கட்டுரைகள் அவருடன் சி.மோகன் பழகியதன் அடிப்படையிலான அவரது போக்குகளை சொல்லக்கூடிய வகையில் உள்ளது. மா. அரங்கநாதனைப் போன்று இவரும் சோதிட நுட்பம் அறிந்தவராகவும் தனது பெயரை எண்ணியல் அடிப்படையில் அடிக்கடி மாற்றுவதையும் விநோத நடவடிக்கைகளையும் அவரது காத்திரமான விமர்சனங்களையும் பற்றிய சி.மோகனின் வெளிப்பாடாக பிரமிள் குறித்த கட்டுரைகளை பார்க்க முடிகிறது.
சம்பத்தின் படைப்புகள் பற்றிய ஆதர்ச எழுத்தாகவே அவர் குறித்த கட்டுரைகள் இருக்கின்றன.
பிரபஞ்சன் பல இடங்களில் பணியாற்றினாலும் எழுதுவதை மட்டுமே தனது ஒரே விருப்பத் தொழிலாக கைக்கொண்டிருக்கிறார். ஜெயகாந்தன் மற்றும் ஜானகிராமனின் எழுத்துக்களுடைய பிணைப்போடு இருப்பதாகவும் மனித நேயப்பண்பை வெளிப்படுத்துவதாகவும் கட்டுரைகள் இருக்கின்றன. அவரது நாவலின் வரலாறு சார்ந்த பின்னணித் தகவல்களும் ஒழுக்கம் பற்றிய மதிப்பீடும் பிரபஞ்சன் பற்றிய கட்டுரையில் முக்கிய பகுதியாக உள்ளது.
முதன்முதலில் கோபிகிருஷ்ணன் தனது எழுத்துக்களை என்னிடம் வாசிக்கக் கொடுத்ததாக நெகிழும் சி.மோகன் யூமா வாசுகி அவரிடம் நடத்திய நேர்காணல் பற்றியும் சொல்லியுள்ளார். உளவியல் அடிப்படையிலும் மனநலம் குன்றியவர்களின் கதையையும் அவர் எழுதியிருப்பதைக் குறித்த பின்னணி தகவல்கள் இக்கட்டுரைக்குரிய வலுவான பகுதிகளாகும்.
நடைவழி நினைவுகள் என்கிற இந்த தொகுப்பில் பல படைப்பாளர்களின் தனிமை குறித்த தகவல்கள் மிக முக்கியமான ஒன்றாகும். சோதிடம் சார்ந்து இயங்கிய மா.அரங்கநாதன், பிரமிள் பற்றியும் அதேபோல் பிரமிள், வெங்கட் சாமிநாதன், ந.முத்துச்சாமி எனும் மூன்று ஆளுமைகளும் தனது கலை இலக்கிய வாழ்வின் தவிர்க்கமுடியாதவர்களாக விளங்கியதை இந்த கட்டுரைத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. சுந்தர ராமசாமி க்ரியா ராமகிருஷ்ணன் முதலானோர் எல்லாம் இந்தக் கட்டுரையின் நினைவு வெளியில் அவரோடு பயணித்திருக்கின்றனர்.
-அழகுராஜ்





















கருத்துகள்
கருத்துரையிடுக