எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை - சி.மோகன்
எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை - சி.மோகன்
இலக்கிய வடிவங்களில் புதினம், சிறுகதை, கட்டுரை, நாடகம் முதலானவற்றை தொடர்ச்சியாக வாசித்து ஒரே நாளில் கூட முடித்து விடலாம். ஆனால், கவிதைகளை அவ்வாறு வாசிக்க என்னால் முடியாது. ஏனென்றால் கவிதைகளைப் பொறுத்தவரை அவை உடனடியாக தாக்கத்தை ஆழமாக ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். கவிதைகள் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்த பார்வை இருக்கும். அதேபோல் சி.மோகன் "உணர்ச்சிகள் எண்ணங்களில் சரணடைவதும், எண்ணங்கள் வார்த்தைகளில் சரணடைவதுமான ஒரு மாய விளையாட்டுதான் கவிதை" என்கிறார்.
இந்த கவிதை தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும் உணர்வில் கிளர்ச்சி தரும் வகையிலேயே அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தனிப் பாணிக்குள்ளாக இந்த கவிதைகளை அடக்க முடியாததற்கு காரணம் இதில் வரும் கனவு, தோட்டத்துச் செடிகள், சின்னஞ்சிறு குருவிகள், பல்லி, தவளைகள் எல்லாம் ஒவ்வொரு கவிதையிலும் மாறுபாடோடு காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி உறவு நிலைகளைச் சொல்லும்போதே கனவின் பக்கமும் இயற்கையின் பக்கமும் கவிதைகள் திசைதிருப்பி நம்மை நடத்திச் செல்கிறது.
நான் எப்போதுமே சி.மோகன் அவர்களின் படைப்புகளில் மரணம் குறித்த பதிவுகளை வாசிப்பதில் தனி ஆர்வம் காட்டுவேன் என்பதை எனது முந்தைய பதிவுகளை வாசித்தவர்கள் அறிந்திருப்பீர்கள். இந்த கவிதை தொகுப்பிலும் கூட மரணத்தோடு பேசும் கவிதைகள் இருக்கிறது. மரணம் அருகில் வரும்போது அவரே தன்னை மரணத்திற்கு சமர்ப்பிப்பதையே மாறுபட்ட வார்த்தைகளால் மாறுபட்ட சூழலில் இருந்து அவர் சொல்வதைப் பார்க்க முடிகிறது.
பல்லி மற்றும் தவளைகள் குறித்து பல கவிதைகள் இருக்கிறது. இதில் அவற்றின் இருப்பு எப்படியானதாக இருக்கிறது என்பதை கூர்ந்த கவனிப்பின் வசம் கிடைத்த வார்த்தைகளால் வடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆளுயர நிற்கும் கண்ணாடி அதில் அரங்கேறும் சம்பவங்கள் தோட்டத்துச் செடிக்கும் தனக்குமான உறவு நிலை, ஒரு ஆண் தனித்திருக்கும் போது தோன்றும் உணர்வு நிலை என்று இந்த கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் முழுவதும் ரசிக்கும்படியாகவும் சில உண்மைகளை தைப்பதாகவும் காணப்படுகின்றன. தனித்து ஒரு ஆண் இருக்கும் வீடு மாடமாளிகையாக இருந்தாலும் அறையாகவும் சிறியதொரு அறைக்குள் ஒரு குடும்பமே வசிக்கும் போது அந்த அறை வீடாகவும் காட்சியளிப்பதையும் கனவுகளின் அலைக்கழிப்பில் நடப்பதையும் பேசக்கூடிய இந்த கவிதைகள் வாசிப்பவர்களை கட்டாயம் ரசனைக்குள் ஆழ்த்துவதாகவே அமையும்.
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக