காலம் கலை கலைஞன்- சி.மோகன்
காலம் கலை கலைஞன் - சி.மோகன்
படைப்பாளி, படைப்பு, வாசகன், கலை இலக்கியம் எனும் நான்கு தளங்களில் ஒவ்வொன்றின் இருப்பும் எப்படியானதாக இருக்கிறது எப்படி இருப்பது ஆரோக்கியமான போக்கு என்பதை தெளிவாக கூறக்கூடிய கட்டுரை தொகுப்பே காலம் கலை கலைஞன்.
காலத்திற்கேற்ப மாற்றம் நிகழ்வது மட்டுமே நமது இருப்பை உறுதி செய்யக்கூடிய ஒன்று. அப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும் போது நமது முந்தைய பண்பாட்டின் தன்மையை கூர்ந்து இனம் காண்பது முக்கியமானது. அதைத் தவறவிடும்போது எத்தகைய பாதிப்புகள் மாற்றங்களால் நிகழும் என்பதை கலை மற்றும் இலக்கியத்தை மையப்படுத்தி பேசியிருக்கக் கூடிய கட்டுரைகள் தான் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
இவை என் உரைகள் என்ற சுந்தரராமசாமி அவர்கள் உரையாற்றிய உரைகளின் தொகுப்பில் வெளிப்படும் கருத்துக்கள் இந்த நூலில் எதிரொலிக்கிறது. கிட்டத்தட்ட தீராநதியில் சி.மோகன் எழுதிய காலமும் இவை என் உரைகள் புத்தகம் வெளியாகிய காலமும் 2002,2003 ஆகிய வருடங்கள் தான். இந்த இரண்டு நூல்கள் மூலமும் அன்றைய காலக்கட்டத்தில் தீவிர இலக்கியத்தை நோக்கிப் பயணித்த இலக்கியவாதிகளின் கருத்து என்பது சிறந்த இலக்கியங்கள் அதிகம் வாசிக்கப்படவும் கொண்டாடப்படவும் இல்லை என்கிற ஏக்கத்தின் குமுறல் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். படைப்பு, படைப்பாளர்கள், வாசிப்பு சார்ந்த கருத்துருக்கள் இரண்டு நூல்களிலும் பெருமளவு ஒத்துப்போவதால் அன்றைய காலகட்டம் தமிழ் கலைஇலக்கியப் போக்கை நின்று அனுமானிக்கக்கூடிய காலமாகத் தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
படைப்பு எனும் சொல்லின் பொருளில் இருந்து படைப்பு குறித்த கருத்தாக்கங்கள் சொல்லப்படுகிறது. கலை தோன்றும் புள்ளியில் இருந்து கலைகளின் நகர்வு குறித்தும் நல்ல வாசகன் யார் என்ற கேள்வியோடு நூல் தேர்வில் காட்டும் கவனத்தையும் எழுத்தாளர்களின் அனுமானத்தையும் சி.மோகன் வரிசையாக அடுக்குகிறார்.
இலக்கிய மேதைமைகளின் வரிகளோடு ஒவ்வொரு கட்டுரைகளும் கட்டுரையின் உட்பொருளுக்கு ஏற்ப தொடங்குவது சிறப்பானதாக உள்ளது. சி,மோகன் கதை, கவிதை, நாவல் என ஒவ்வொரு இலக்கியத் துறையிலும் முன்னோடிகளாகவும் தனது பணியை படைப்பு மனத்திற்கு ஏற்ப செய்பவர்களாகவும் கருதி அவர் தரும் பட்டியலும் தமிழ் இலக்கியச்சூழலில் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தக் கட்டுரைத் தொகுப்பு அனைத்து தமிழ் வாசகர்களும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான நூலாகும்.
-அழகுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக