கமலி - சி.மோகன்
கமலி- சி. மோகன்
தி.ஜானகிராமனின் நடையும் இமையம் அவர்களின் எங்கதெ முதலான படைப்புகளின் போக்கும் கொண்டதாக நான் கமலி புதினத்தைப் பார்க்கிறேன். ஆனால், இது கொண்டுள்ள காதல், காமம், பிறப்பு, இறப்பு முதலான கருத்தியல்கள் இந்த நாவலில் தனித்தன்மை வாய்ந்தே காட்சியளிக்கிறது.
"குடும்ப அமைப்பின் மீது அவனுக்கு இளம் வயதிலேயே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அது மனிதனை வளர்ப்புப் பிராணியாக ஆக்கும் ஓர் அதிகார அமைப்பு என்று கருதினான்." என கண்ணனைக் குறித்து சொல்லக்கூடிய வரிகள் இன்னும் மனதில் நின்றுகொண்டிருக்கிறது.
குடும்ப அமைப்பிற்குள் வந்த ஒரு பெண் காதல் எனும் உணர்வு நிலையை அணுகும் விதம் புதுமையானதாக இந்த நாவலில் காட்சியளிக்கிறது. காதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான மனநிலையில் கருத்துருவாக வெளிப்படுவது இயற்கை. அதேபோல் கமலிக்கு காதல் குறித்த புரிதலினை அவள் அடையும்போது சுற்றியுள்ள சூழலை குடும்ப அமைப்பினுள் நின்று குடும்ப அமைப்பின் தொடர்பில்லாத ஒருவரிடம் வெளிப்படுத்துவதை நேர்த்தியான முறையில் சி.மோகன் கையாண்டு இருக்கிறார்.
“நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர் இறந்துவிடவில்லை, இன்னமும் நம்மோடுதான் இருக்கிறார் என்று நாம் நம்ப விரும்பினால் அவருடைய கனவுகளைக் கைக்கொண்டு வாழ்வைத் தொடர்வதுதான் ஒரே வழி" என்கிற கருத்தை இந்த நூலின் முக்கிய பகுதியாக நான் பார்கிறேன். ஏனென்றால் சி.மோகனின் இரகசிய வேட்கை நூலில் உள்ள கதைகளில் மரணம் குறித்து வரக்கூடிய செய்திகளை அவர்முன் நேரடியாகவே சுதந்திர சிந்தனை நிகழ்ச்சியில் வியாபித்ததுண்டு. அதேபோல் இந்த நூலில் மரணம் குறித்த செய்திகளை சொல்லும் இடமும் அந்த சிறுகதைகளை எல்லாம் கண்முன் கொண்டு வந்தன. மரணம் குறித்த சி.மோகன் அவர்களின் புரிதல்கள் அவரது ஒவ்வொரு படைப்பையும் அந்த படைப்பின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.
குறியீடுகளும் கண்ணன் என்ற கதாபாத்திரம் சொல்லும் தத்துவமும் கலையும் பொதிந்த வார்த்தைகளும் கமலி என்கிற பெண்ணை அவளது கோணத்தில் சரியானவளாக சித்தரித்து இருப்பதும் இந்த நாவலில் குறிப்பிடத்தகுந்தவையாகும். என்னைப் பொறுத்தவரை குடும்ப அமைப்பினுள் உள்ள கணவனும் மனைவியும் குடும்ப அமைப்பினுள் நுழையும் முன்பும் பின்பும் வெளிப்படைத்தன்மை உடையவர்களாக தங்கள் கருத்துக்களை பரிமாறுவது மிக முக்கியமான ஒன்றாகும். அதைக் கமலியும் ரகுவும் செய்தாலும் கூட கண்ணன் என்ற கதாபாத்திரத்தின் நுழைவில் தான் இந்த கதை மையம் கொள்கிறது.
-அழகுராஜ்
நல்ல தகவல்
பதிலளிநீக்குநன்றி அம்மா
நீக்கு