இவை என் உரைகள்- சுந்தர ராமசாமி

 



இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி


     முன்னுரையில் க.நா.சுவின் கருத்தோடும் பேச்சுக்கலை குறித்த சுராவின் நிலைப்பாட்டோடும் இந்த நூல் தொடங்குகிறது. இந்த நூலில் சுரா கல்லூரிகள், இலக்கிய மேடைகளென பல இடங்களில் தான் ஆற்றியுள்ள உரைகளைத் தொகுத்து தந்திருக்கிறார். 


   முதல் கட்டுரையில் படைப்பாளி என்கிற சொல் எழுத்துத் துறையைத் தாண்டி விரிவடைய வேண்டும் என்பதோடு கலைஞர்களை எல்லாம் படைப்பாளிகளாக சுரா அணுகுவது அவரது பேச்சின் வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது. கலைஞர்களை படைப்பாளிகளாக பார்ப்பதோடு படைப்பாளி என்றால் யார் என்கிற தனது கருத்தை வெளிப்படுத்தும் இடத்தில் மு.வரதசானாரை படைப்பாளி இல்லை ஆனால் தமிழ்ப்புலமை உள்ளவர் என கூறுகிறார். அதற்கு காரணம் அவரது நூல்களில் உள்ள மிதமிஞ்சிய மேற்கோள்கள் என காரணத்தையும் தெளிவுபடுத்துகிறார். படைப்பாளி சொன்னதை சொல்பவராக இராமல் புதியதை படைக்க வேண்டும் என்பது சுரா வின் கருத்தாக இருந்திருக்கிறது. படைப்பு மனம் மற்றும் படைப்பாளர்களின் சொத்துக்களான சொற்கள் குறித்த மகத்தான கருத்துக்களையும் படைப்பாளி கற்பனையைக் கையாள வேண்டிய முறைகளையும் சொல்வதோடு படைப்பு சமூகத்தைப் பாதிக்க எத்தகைய வலு பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி படைப்பு மரபு இருக்கும் அளவு விமர்சன மரபும் சிந்தனை மரபும் இல்லையென நொந்து கொண்டுள்ளார். கற்பனை குறித்துப் பேசும் போது கற்பனை படைப்புகள் தான் அறிவியல் முறைக்கு உட்படுத்தப்பட்டு கண்டுபிடிப்புகள் ஆகின்றன என்பதையும் சொல்கிறார்.


     மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் கல்வித்தரத்தை குறித்தும் துறையைத் தேர்வு செய்வதில் எந்த அளவு கவனம் காட்டவேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார். பண்பாட்டையும் பண்பாடு குறித்த அடிப்படையான ஆனால் நுண்ணிய தன்மையிலான பார்வையை சுரா பகிர்ந்திருப்பது அவரது உரை குறித்த மேலான எண்ணங்கள் மனத்தில் சித்தரிப்பதாக உள்ளது. தமிழர்களின் பண்பாட்டை உற்று நோக்கிய வெளிநாட்டு அறிஞர்களைப் பற்றியும் குறிப்பிடுவதோடு மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டு வீழ்ச்சிக்கான காரணமாக இருப்பது போலிகளுக்கும் தரமற்றவைகளுக்கும் கிடைக்கும் அங்கீகாரமே என்கிற குற்றச்சாட்டும் அவரது உரையின் வாயிலாக வெளிப்படுகிறது. இரண்டாம் தர எழுத்தாளன் என்றால் தனது காலத்திற்கேற்ற படைப்பைக் கொடுக்காதவன் என்கிறார். ரம்பை, மேனகை இன்னும் கவிதைகளில் இருப்பதை எள்ளல்பட தெரிவிக்கிறார். அதோடு சாகித்திய அகாதமியின் குறைகள், லட்சக்கணக்கில் விற்பனையாகும் இதழ்களில் உள்ள மலிந்த எழுத்துக்கள், தமிழ் எழுத்தாளர்கள் போகப் போக வளர்வதில்லை என்றும் ஆரம்ப கால படைப்புகளில் உள்ள வீரியமும் சிறப்பு பிற்காலப் படைப்புகளில் இல்லையென்றும் விமர்சனத்தை வைக்கிறார். தனது படைப்புகளைக் குறித்து பேசும் போது ஜேஜே சில குறிப்புகள் நாவலின் ஜோசம் ஜேம்ஸ் கதாபாத்திரம் மலையாள எழுத்தாளர் சி.ஜெ.தாமஸ் என்றும் ஒரு புளியமரத்தின் கதை நாவலில் வரும் புளியமரம் தன் ஊரில் உள்ள வேப்பமரம் என்பதையும் பல இடங்களில் கூறுகிறார். படைப்புகளை வகைப்படுத்தும் போது புளியமரத்தின் கதை நாவலை காலமும் இடமும் சார்ந்த படைப்பாகவும் ஜேஜே சில குறிப்புகள் நாவலை கருத்தும் கருத்து சார்ந்த படைப்பாகவும் வகைப்படுத்துகிறார். 


     பாரதியை உலகத்தரம் வாய்ந்த படைப்பாளராகவும் அவரது பன்முகத்தன்மையையும் சொன்னதோடு புதுமைப்பித்தன் தன்னை பாதித்த விதத்தையும் அவரால் நிகழ்ந்த இலக்கிய பாதிப்பையும் சொல்லும் சுரா எழுத்தாளன் உருவாக்கப்படவில்லை உருவாகிறான் என்பதோடு புதுமைப்பித்தன், மௌனி, க.நா.சு, தொ.மு.சி போன்றோருடனான தொடர்பைப் பற்றியும் அவர்களுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் சுராவின் உரையெல்லாம் சுவாரசியமானவை. 21ஆம் நூற்றாண்டில் உள்ள இலக்கியப் பங்களிப்பு குறித்து பெருமைப்படும் சுரா அரசியலில் நடக்கும் கருத்து மோதல்களுக்கு ஆவணம் உள்ளதுபோல இலக்கிய உலகில் நடக்கும் கருத்து மோதல்களுக்கு சரியான ஆவணம் இல்லை என்றும் புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் கண்டுகொள்ளப்பட்ட அளவு புதுமைப்பித்தன் கண்டுகொள்ளும் படவில்லை என்றும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார். மௌனிக்கும் சுராவுக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் பாரதியார், ந.பிச்சமூர்த்தி முதலானோர் எல்லாம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். மௌனியின் விமர்சனங்கள் மீது சுராவுக்கே முழு ஈடுபாடு இல்லை என்பதும் சில இடங்களில் வெளிப்படுகிறது. 


     சிறுகதை, புதினம், கவிதை முதலானவற்றில் சிறந்தவர்கள் என்ற ஒரு பட்டியலுடனான படைப்புகளையும் சுரா சொல்கிறார். அதில் சிறுகதைகளில் கோணங்கி, மௌனி, எஸ்.ரா, ஜெமோ, பெருமாள் முருகன், குமார செல்வா, ச.தமிழ்ச்செல்வன், விமலாதித்த மாமல்லன் போன்றோரின் சிறுகதைகள் பற்றிப் பேசியதோடு கதை வேறு சிறுகதை வேறு என்று சொல்லும் கி.ரா தமிழின் முதல் சிறுகதை பி.எஸ்.ராமையா எழுதிய நட்சத்திரக்குழந்தை என்கிறார். கீரனூர் ஜாகிர்ராஜா அவர்கள் எழுதிய குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை என்கிற நூலிலும் முதல் சிறுகதை குறித்து அவர் தரும் தகவல்களில் முதல் சிறுகதை குளத்தங்கரை அரசமரம் இல்லை என வாசித்த நினைவு. தமிழ் சிறுகதையின் தோற்றம் தாண்டி வந்து சிறுகதைகள் அமைவு குறித்து பேசும் போது தேவைக்கு அதிகமாக தகவல்களை கொண்டிருக்கக் கூடாது என சுரா கூறுகிறார். 



      புதினங்களில் ஜெமோ, தோப்பில் முகமது மீரான், பெருமாள் முருகன், ரமேஷ் பிரேம் முதலானோரை நல்ல புதினங்களைத் தந்தவர்களாக சொல்வதோடு அவர்களது புதினங்களான ரப்பர் (ஜெமோ), சாய்வு நாற்காலி (தோப்பில் முகமது மீரான்), ஏறு வெயில் (பெருமாள் முருகன்) போன்றவற்றை குறித்த சில தகவல்களையும் முன்வைக்கிறார். கவிதைகளில் தேவதேவன், விக்ரமாதித்யன், யூமா வாசுகி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களைப் பற்றி பேசுகிறார். இதைத் தவிர்த்து ஒட்டுமொத்தமாக தமிழில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்களாக வள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார், பாரதிதாசன், பெரியசாமி தூரன், உ.வே.சா., வ.வே.சு., மயிலை சீனி வேங்கடசாமி, வையாபுரிப்பிள்ளை, தெ.போ.மீ., புதுமைப்பித்தன், டி‌.எஸ்.சொக்கலிங்கம் என ஒரு பட்டியலை முன்வைக்கிறார். இந்த நூலைப் பொருத்தவரை அங்காங்கே நிறுத்தி வாசிப்பதன் மூலம் நிறைய தகவல்களை உள்வாங்கலாம். ஒரு பேச்சாளனின் பேச்சில் எத்தகைய கருத்துச் செறிவும், தகவல்களும் இருக்க வேண்டும் என்பதை சான்றாக கூற இந்த நூலை முன்வைக்கலாம்.


-அழகுராஜ்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்