அக்கரைச் சீமையில்- சுந்தரராமசாமி
அக்கரைச் சீமையில் - சுந்தரராமசாமி
புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலை சில மணித்துளிகள் சிந்திக்க வைப்பதாக முதல் இரண்டு கதைகளான அக்கரைச் சீமையிலே மற்றும் அடைக்கலம் ஆகியன உள்ளன. தமிழ்ப் பண்பாட்டைத் தேடிக் கொண்டிருக்கும் மனமுடைய புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலையும் பண்பாட்டு சிதைவையும் வெளிப்படுத்தும் கதைகளாக இவை தொடக்கத்திலேயே அமைந்திருப்பது ஏதோ ஒன்றை நமக்கு இந்த சிறுகதை தொகுப்பு தரும் என்கிற நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது.
அக்கரைச் சீமையில் கதை ஆப்பிரிக்கப் பகுதியில் அரங்கேற்கிறது. தமிழ்நாட்டில் இருந்து ஆப்பிரிக்க பகுதிக்கு வேலைத் தேடி சென்றவனின் நிலையையும் தாய் மண்ணை பிரிந்து வாழ்வதால் அவன் மனதிற்குள் இருக்கக்கூடிய வலியையும் சொல்வதோடு தமிழ்ப்பண்பாடு மீதான அவனுடைய பார்வையும் இந்த கதை மூலம் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. காப்பிரிச்சிப் பெண்ணைக் குறித்த நிலைப்பாடு அங்குள்ள சுரண்டல் முதலானவை சாரு நிவேதிதா மலாவி பற்றி எழுதியிருந்த தகவல்களை நினைவூட்டின. தமிழ்நாடு இலங்கை பகுதிகளில் தேயிலை உற்பத்தி இருப்பது போல அங்கு புகையிலை உற்பத்தி இருப்பதை என்பதை இந்த கதை மூலம் அறியமுடிகிறது.
அடைக்கலம் கதை இந்தியா ஒரு ஒன்றிய நாடு அதில் பலதரப்பட்ட பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. டெல்லியில் மிராட்டியர் போல வாழும் தமிழர்களைப் பற்றி ஒரு மூதாட்டி என்னவெல்லாம் நினைக்கிறாள் என்பது இந்த கதையின் ஒரு முக்கியமான பகுதி என நான் கருதுகிறேன்.
முதலும் முடிவும் சிறுகதை ஒரு பெண் முடிவெடிப்பது செயல்பட முடியாதச் சூழல் அவளுக்கு எவ்வாறான பாதிப்பைத் தருகிறதுஎன்பதை சொல்கிறது. அழகு எனும் பெண் தான் காதலித்த ராசாவின் தந்தை ஆறுமுகம்பிள்ளைக்கே மறுமனையாட்டியாக கொடுக்கப்பட்டதைக் குறித்ததே இந்தக் கதை.
காக்காமுட்டை படத்தில் காசு கொடுத்து பீட்சா வாங்கப் போகும் சிறுவர்களை கடை முதலாளி அடிப்பார். இந்தக் கதையில் சாப்பிட்டு போட்ட எச்சில் இலையைப் பொறுக்கித் தின்னும் சிறுவனின் மீது ஒரு உணவுண்டி முதலாளியின் வாரிசு நடத்தும் தாக்குதலும் அது தரும் எதிர்வினையும் தான் இந்த கதை. ஒரு நாய் எச்சில் இலையை தின்னும்போது வராத கோபமும் கூச்சமும் ஒரு மனிதன் எச்சில் இலையை எடுக்கும் போது வருவதாக கூறும் சுரா மனிதன் சிந்திக்கக்கூடியவன் உணர்வுகளை நன்றாக புலப்படுத்தக்கூடியவன் என்பதை இந்தக் கதையில் மறைபொருளாக சொல்லியிருப்பதாகவே எனக்குப் படுகிறது.
அணையில் இருக்கும் தண்ணீரை மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தாமல் கோவில் தெப்பத்தில் தண்ணீர் இல்லாமல் தெப்பத்திருவிழா நின்றுவிடக்கூடாது என்பதற்காக தெப்பத்திற்குள் விடும் செய்தியை மையப்படுத்தியதாக இந்தக் கதை இருக்கிறது. மகிழ்ச்சி என்பது திருவிழா கொண்டாடுவதில் இருப்பதை விட சக மனிதனுக்கு வாழ்வளிப்பதில் தான் இருக்கிறது என்பதை இந்தக் கதையை வாசித்து முடிக்கும் போது அறியலாம்.
உணவும் உணர்வும் என்கிற கதை ஒரு குழந்தையின் பசியையும் அந்தப் பசியின் போது குழந்தையின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளையும் பசியைப் போக்குவதற்கு ஏழைத் தாய் செய்யும் செயல்களும் தான் இந்தக் கதை.
கோவில் காளையும் உழவு மாடும் என்கிற கதை வாசிப்பதற்கு சுவாரசியமானதாக எனக்கு இருந்தது. பனையேறியாக இருந்த ஒரு கிழவன் நிர் ஆதரவாக நின்றபோது பண்டாரம் உதவுவதையும் அதனைத் தொடர்ந்து உழைக்காமல் சாப்பிட்டு பழகாத கிழவன் தனி ஆளாக நின்று கிணறு தோண்டி அதில் தண்ணீர் வரச் செய்ததையும் காய்ச்சல் படுக்கையில் கிடந்த கடைசி நிமிடத்தில் அந்தக் கிணற்றுத் தண்ணீரை குடித்து தன் உடலை விட்டு பிரிந்தது தான் இந்த கதையின் சுருக்கம். இதில் கிழவனின் இரண்டாம் மகன் அவள் அம்மா செத்தபோது பாம்படத்தை காதோட அறுத்தாவது தனக்குரியதாக்க வேண்டும் என நினைத்த வெறியைப் பற்றிய குறிப்பு வரும் போது கோபல்லகிராமத்தில் கள்வன் பாம்படத்திற்காக ஒரு கம்மாளப்பெண்ணைக் கொன்றது நினைவுக்கு வந்தது.
கணவனை கவனிக்கும் மனைவி அவனைக் கைக்குழந்தை போல் கவனித்ததை முடிவாகக் கொண்டது கைக்குழந்தை எனும் கதை.
அகம் என்ற கதை வெளிநாட்டிற்கு கணவன் வேலைககுச் சென்ற பிறகான மனைவியின் செயலையும் அதனால் பாதிக்கப்படும் குழந்தையையும் பற்றியது. ஜானு என்கிற பள்ளியில் படிக்கும் பெண்குழந்தை தன் தாய் அம்புஜம் ஒரு டாக்டரோடு தகாத உறவில் இருப்பதையும் சுற்றுவதையும் அறிந்து தன் தந்தை குறித்த நினைவுகளை வரச் செய்து தன் தாயை வெறுத்து கடைசியில் அந்த டாக்டரின் காரைக் கொளுத்துகிறாள்.
செங்கமலமும் ஒரு சோப்பும் என்கிற கதை நான் பள்ளிக்காலத்தில் படித்த போது நகைச்சுவையை மட்டுமே தந்தது. ஆனால் இந்த முறை வாசித்த போது அது எனக்கு வேறொரு அனுபவத்தை தந்திருக்கிறது. செங்கமலம் என்ற பெண்ணுக்கும் அவளது மகள் கௌரிக்குட்டிக்கும் இடையில் நடக்கும் கதை தான் இது. சுத்தத்தை முக்கியத்துவப்படுத்தும் செங்கமலம் தன் மகளை நாள்தோறும் சோப்புப் போட்டுக் குளிக்கச் சொல்வதோடு அதைக் கண்காணிக்கும் செங்கமலம் குளிக்காமல் இருந்ததாக இந்தக் கதை முடிகிறது. ஒருவர் அதிகமாக ஒரு செயலைப் பற்றி பேசி அதில் தான் ஒரு நிபுணர் எனக் காட்டிக்கொண்டு தான் அது குறித்த விழிப்புணர்வின்றி மற்றவர்க்கு வெறுமனே போதகம் மட்டும் செய்துவிட்டு தன் செயலை சரிவரச் செய்யாமல் இருப்பது எவ்வளவு வேடிக்கையானது என்பதை இந்த கதையின் மூலம் அறியலாம்.
இப்படியாக அக்கரைச் சீமையில் தொகுப்பில் உள்ள பத்து கதைகளும் ஏதோ ஒரு செய்தியை அல்லது கருத்துக்களை சிறப்பான முறையில் பதிவு செய்பவையாக இருக்கிறது.

நன்று
பதிலளிநீக்குநன்றி மா
நீக்கு