கானகத்தின் குரல் - ஜாக் லண்டன் மொழிபெயர்ப்பு- பெரியசாமி தூரன்

 


கானகத்தின் குரல்- ஜாக் லண்டன் 

மொழிபெயர்ப்பு- பெரியசாமி தூரன்


     நாய்கள் குறித்த திரைப்படங்களும் நாய்களை மையப்படுத்திய கதைகளும் பெரும்பாலும் மேலை நாடுகளில் பெருத்த வரவேற்பை பெறக்கூடியதாக இருப்பதை அனைவரும் அறிவர். நாய்களை குறித்த திரைப்படங்கள் எப்படி தமிழில் அதிக வரவேற்பைப் பெற்றதோ அதே அளவு வரவேற்பைப் பெறக்கூடிய கதையாகத்தான் தூரன் மொழிபெயர்த்த இந்த நாவல் இருக்கிறது. நாய்கள் வண்டி இழுத்துச் செல்வதை கிறிஸ்துமஸ் தாத்தா கதைகளிலும் பல ஹாலிவுட் படங்களிலும் பார்த்ததை விட இந்த கதையில் வாசிக்கும் போது ஒரு வித புது தொடுதல் வெளிப்படும் அளவு நாவல் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் நகர்கிறது. 


     மனிதனுக்கு இருப்பது போல நாய்களுக்கும் நாய்களுக்குள்ளும் இரண்டு பக்கங்கள் ஒழிந்துள்ளது என்பதை பக் எனும் ஒரு நாய் மூலம் அது இடம்பெயர்ந்து செல்லும் போதும் அதன் முதலாளிகள் மாறும் போதும் மறக்காமல் கதையாசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வீட்டு நாய் கடத்தி விற்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வண்டி ஓட்டப்பழகியதையும் பனிச்சூழலில் வாழப்பழகி தனக்கு போட்டியாக இருந்த நாய்களை வீழ்த்தியதையும் எஸ்கிமோ நாய்களின் வளைவில் சிக்காமல் தன்னை நிலைநிறுத்தியதையும் இறுதியில் கானகத்தில் எழுந்த குரலோடு கானகத்தோடும் அங்குள்ள நாய்களோடும் தன்னை இணைத்துக் கொண்டதாக கதை முடிகிறது. 

     ஜப்பான், நியூபவுண்டுலாந்து, மெக்சிகோ, ஸ்காட்லாந்து என பல நாட்டு நாய்களையும் அதன் தோற்றம் மற்றும் திறன்களை இந்த கதை போகிற போக்கில் சொல்லி செல்கிறது. ஒரு புதிய நாயை வண்டி ஓட்டச் சேர்க்கும்போது அனுபவம் வாய்ந்த பழைய நாய்கள் அந்த புதிய நாயை எவ்வாறு நடத்துகிறது என்பதையும் மனிதனைப் போல நாய்களும் பசி எனும் காரணத்தை வைத்து நுட்பத்தோடு உணவைத் திருடுவதையும் இந்த கதை காட்சிப்படுத்தியுள்ளது. பக் ஒரு வீட்டு நாயாக இருந்து தன்னை பனிப் பிரதேச சூழலுக்கு மாற்றியது மட்டுமல்லாமல் பனிப்பிரதேச சூழலை நன்கு புரிந்து கொண்ட நாயாக தனது உயிரைக் காத்துக் கொண்டது வரையில் பக்கின் சித்திரத்தை பிடிவாதம் கொண்டதாகவும் தைரியமானதாகவும் அமைதியானதாகவும் பொறுமையானதாகவும் பிற நாய்களிடம் இருந்து வேறுபட்டு கூர்ந்த கவனிப்பு திறன் கொண்டதாகவும் பல கோணங்களில் எழுத்தாளர் காட்டியுள்ளார். 


     இந்த கதையில் நீதிபதி, பிரான்சுவா, பெரோல்ட், ஹால், சார்லஸ், தார்ண்டன் என பல முதலாளிகளின் வளர்ப்பாக பக் இருந்ததும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கான நன்மதிப்பை வளர்த்துக் கொண்டதையும் அதே சமயம் பக்கை வளர்த்த முதலாளிகள் அனைவரும் மற்ற நாய்களைவிட பக்குக்கு பல சலுகைகள் கொடுத்ததையும் நாவல் நெடுகிலும் காண முடிகிறது. நாவலில் எஸ்கிமோ நாய்களையும் ஓநாய்களையும் வரவழைத்தது விறுவிறுப்பைக் கூட்டக்கூடியதாகவே இருந்தது. இறுதியில் ஈஹட்டுகள் பேய்நாய் கானகத்தின் இடையிலான குரல் கானகன் நாவலில் வரும் சடையன் போன்ற ஒரு சடை மனிதனென ஒருவித இறுதிநிலையை நாவல் அடைகிறது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நாவலில் பல மைல் தூரம் நாய்கள் வண்டியை இழுத்துச் செல்கிறது. அவ்வாறு வண்டியிழுத்துச் சென்ற இடங்களை நாவலின் இறுதியில் குறிப்பிட்டது சிறப்பானதாகும். இந்த மாதிரியான நாவல்களில் அது சொல்லப்படும் தன்மை முக்கியமான ஒன்றாகும் அதை கவிதைகளில் மட்டுமே எனக்கு அறிமுகமாகியிருந்த தூரன் மொழிபெயர்ப்பில் சலிப்பில்லாமல் கொண்டு சென்றுள்ளார். 

                                    -அழகுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

நரகவாசிகளின் வியர்வை -தீனன்