மருதுபாண்டியன் சரித்திர நாடகம் - தொ.மு.சி.
புத்தகம்: மருதுபாண்டியன் சரித்திர நாடகம்
எழுதியவர்: தொ.மு.சி. ரகுநாதன்
தொ.மு.சி.யின் ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் உலகில் நீங்காத ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்பேற்பட்ட சிறந்த ஆய்வாளர் சில புனைவுகளுடன் எழுதிய நாடகம் தான் இந்த மருதுபாண்டியன் சரித்திர நாடகம். நாடகத்தை மேடையில் ஏற்றுவதற்கு எளிமையாக தோன்றும் வகையில் பின்குறிப்புகளோடு நாடகத்தை எழுதியிருக்கிறார்.
இந்தியாவில் முதன் முதலில் ஆங்கிலேய எதிர்ப்புக் குரல் பதிவு செய்யப்பட்ட இடம் தென்னிந்தியா தான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் ஆட்சி செலுத்திய பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோர் தான். பூலித்தேவனுக்குப் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை, முத்துவடுகநாதர் என்ற வரிசையில் வந்தவர்கள் மருது சகோதரர்கள். முத்துவடுகநாதருடைய அரசின் படைத்தளபதிகளாக விளங்கியவர்கள் முத்துவடுகநாதர் நவாப் மற்றும் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டபின் திண்டுக்கல்லில் ஹைதர் அலியிடம் தலைமறைவாக இருந்து பின்பு நவராத்திரி விழாவின் போது சரியான திட்டமிடலுடன் வேடதாரிகளாக சிவகங்கை கோட்டைக்குள் நுழைந்து கோட்டையைக் கைப்பற்றுகிறார்கள். இவர்கள் சிவகங்கை கோட்டையைக் கைப்பற்ற முற்பட்ட நேரமும் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனை எதிர்த்து ஆங்கிலேயர் போரிட்ட நேரமும் திட்டத்திட்ட ஒரே சமயம். ஆகையால், இவர்கள் எளிதாக சிவகங்கை கோட்டையைக் கைப்பற்றி வேலுநாச்சியாரை அரசியாக அறிவிக்க வேலுநாச்சியார் பெரிய மருது எனப்படும் வெள்ளை மருதை தனது இரண்டாவது கணவனாக ஏற்கிறார்.மருது சிவகங்கையில் தனது ஆட்சியை நிறுவி வரிகளை எல்லாம் குறைத்து கோவில் திருப்பணியில் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுக் கொண்டு வந்த சமயத்தில் ஆங்கிலேய கலெக்டரிடம் இருந்து வாரிசுரிமை பத்திரம் கேட்டு ஓலை வருகிறது. அதற்கு பதிலாக மருது அதை உன்னிடம் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு காட்ட வேண்டுமெனில் வாள் முனையில் காட்டுகிறேன் என பதிலளிக்கிறார். அந்த சமயம் பார்த்து சின்ன மருது மூலம் ஊமைத்துரை மற்றும் அவர் தம்பி சிவத்தையா சிவகங்கை கோட்டைக்கு வருகை புரிகின்றனர். ஆங்கிலேயரும் படையெடுத்து வருகின்றனர். சிறுவயலில் இருந்து காளையார் கோவிலுக்கு வெள்ளை மருது, ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோர் செல்ல சின்ன மருது தலைமையில் சிறுவயலில் போர் நடக்கிறது. இறுதியில் சிறுவயல் தீக்கிறையாக்கப்பட்டு காட்டில் போர் நடக்கிறது. திக்கு தெரியாமல் ஆங்கிலேயப் படை காட்டினுள் பெரும் சேதத்தை சந்திக்க ஆங்கில கலெக்டர் மூலம் சாதிக் கலவரம் தூண்டப்பட்டு மறவர்கள் தான் சிவகங்கையை ஆள வேண்டும். மருது சகோதரர்கள் போன்ற அகமுடையார் ஆளக்கூடாது. முத்துவடுகநாதரையும், வேலுநாச்சியாரையும் திட்டமிட்டு கொன்று அகமுடையாரான மருதிருவர் ஆட்சியைப் பிடித்துள்ளனர் என கலவரத்தை மூட்டி படமாத்தூர் உடையத்தேவர் எனும் மறவரை ஆங்கிலேயர் ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்ய மருது சகோதரர்களுக்கு மக்கள் அளித்து வந்த ஆதரவு முற்று பெறுகிறது.
வழக்கு விசாரணை என்ற பெயரில் பெயருக்கு விசாரித்து மருது சகோதரர்கள் தூக்கலிடப்படுகின்றனர் என நாடகம் முடிகிறது.
முத்துவடுகநாதர் போரில் ஈடுபடுதல், வேலுநாச்சியார் இறப்பு, ஒற்றர்கள் செய்தி சொல்தல் என பல இடங்கள் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையாது சுருக்கமாகவே முடிகிறது. சில இடங்களில் நாடகத்தை மேலும் சில கட்டம் நகர்த்தி சென்றிருந்தால், வாசித்ததற்கான முழு திருப்தியை அடைந்திருக்கலாம்.
-ரா. அழகுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக