ஆர் விகுதி புரட்சி- ரா. அழகுராஜ்
ஆர் விகுதி புரட்சி
- ரா.அழகுராஜ்
முன்னுரை:
ஆர் விகுதி புரட்சி என்னும் இக்கட்டுரை மூலம் 'ஆர்' எனும் பின்னொட்டு கொண்ட மூன்று பெரும் புரட்சியாளர்களை குறித்து காண இருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டு கண்ட அல்லது பதினெட்டாம் நூற்றாண்டில் உருவெடுத்த மூன்று புரட்சியாளர்களின் பெயர்கள் ஆர் என்னும் விகுதியை கொண்டு முடிகின்றது. அவர்கள் தான் வள்ளலார், பெரியார், பாரதியார் ஆவர். மூன்று பேருக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை இக்கட்டுரை தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். அவர்களது கொள்கைகள், குணங்கள் மற்றும் செயல்பாட்டு ரீதியிலான ஒப்புமை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கணத்தில் ஆர் பின்னொட்டு:
“அர் ஆர் பவ்வூர் அகரமார் ஈற்ற
பல்லோர் படர்க்கைமார் வினையோடு முடிமே” என்ற நன்னூல் நூற்பா பலர் பால் படர்க்கை வினைமுற்றை வகைப்படுத்துகிறது. இதில் “ஆர்” எனும் பின்னொட்டு பலரை படர்க்கையாக குறிப்பிட்டு வினையின் இறுதியில் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆர் எனும் சொல்லுக்கு சில பொருட்களையும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். ஆர் என்ற சொல்லுக்கு பொருந்துதல், ஒத்தல், அடைதல், தங்குதல் என்ற பொருள்களும் உண்டு. இந்தக் கட்டுரை வள்ளலார், பெரியார், பாரதியார் ஆகிய மூன்று சிந்தனையாளர்களையும் பொருத்தி ஒப்பிட்டு பார்க்கிறது. அவர்கள் மூவரும் அடைந்துள்ள வெற்றி மற்றும் இன்றும் பல மக்களின் மனதில் தங்கி உள்ளதையும் அதற்கான காரணங்களையும் இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது. இதன் மூலம் “ஆர்” என்னும் சொல்லை அடிப்படையாக வைத்து, 18ஆம் நூற்றாண்டில் பிறந்த மூன்று தமிழ் சிந்தனையாளர்களின் ஒற்றுமை வேற்றுமைகள் ஆராயப்பட்டு இருக்கிறது.
பிறப்பு:
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்தவர் வள்ளலார்,பெரியாரும் பாரதியாரும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர்கள். பெரியார் பாரதியாரை பாராட்டவும், விமர்சிக்கவும் செய்துள்ளார் மூன்று பேருக்கும் இடையில் பல இடங்களில் கருத்துப் பிணக்குகள் ஏற்பட்டுள்ளதை பலர் தெளிவுபடுத்தியுள்ளனர். எந்த ஒரு சிந்தனையாளரும் மற்றொரு சிந்தனையாளரிடமிருந்து மாறுபடுவது இயற்கை. கைரேகை எவ்வாறு ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபட்ட தன்மை கொண்டு விளங்குகிறதோ அது போல சிந்திக்கும் தன்மை மிகுந்தவர்கள் கருத்துக்கள் அடிப்படையில் மாறுபட்ட தன்மை கொண்டே விளங்குவர்.
இந்த கட்டுரை மூவரையும் ஒப்பிட்டுப் பார்க்க முற்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை பலதரப்பட்ட காலங்கள் ஆய்வாளர்களின் ஆய்வு நிலைக்கு தகுந்தவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இலக்கியங்கள் அடிப்படையிலான கால வகைப்பாடு, நாகரீகம் அடிப்படையிலான கால வகைப்பாடு,, ஆட்சியாளர்கள் அடிப்படையிலான கால வகைப்பாடு என பலவகையில் காலங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தமிழக நில வரைபடத்தில் கடலூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களையும் இணைத்து பார்த்தால் ஒரு முக்கோணம் தோன்றும். அதிலிருந்து மூன்று நபர்களும் வெவ்வேறு திசையில் பிறந்த தமிழ் வழித்தோன்றல்கள் என்பதை அறிய முடியும்.
மூவரின் பிறப்பும் வர்ணாசிரம அடிப்படையில் அதிக அளவு தீண்டாமையை கொண்ட சாதி இல்லை எனினும் சாதிய முறைகளை எதிர்த்த சிந்தனையாளர்கள் ஆவர். சிறுவயது முதலே சிந்திக்க தொடங்கியவர்கள் வள்ளலார், பெரியார், பாரதியார் ஆவர். இதில் பாரதியார் பாரதி எனும் பட்டத்தை பெற்ற வயதிலிருந்து அறியமுடிகிறது. இதிலிருந்து சிறுவயதில் நாம் சிந்திக்க தொடங்குவது எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற பேருண்மையை உரைக்கிறது.
கடவுள் நம்பிக்கை:
மூன்று பேருக்கும் இடையிலான பெரிய வேறுபாடு கடவுள் பற்றிய அவர்களது மாறுபட்ட சிந்தனையில் பிறக்கிறது என்று கொள்ளலாம். பாரதியார் ஒரு இந்துத்துவ நம்பிக்கை கொண்ட ஆன்மீகவாதி, பெரியார் “கடவுளை மற மனிதனை நினை” என பலமுறை சொல்லி கடவுள் இல்லை என்று வன்மையாக மறுத்தவர். வள்ளலார் “இறைவன் ஜோதி வடிவானவன்” என்று கூறியவர்.
வள்ளலார் சமுதாய தொண்டை நினை, உயிர் குல தொண்டை நினை, அதுவே கடவுள் நிலையை அடையும் வழி என்று கூறுகிறார். வள்ளலாரின் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே” எனும் வரி உயிர்களிடத்தில் அவள் கடவுளை கண்டதை மெய்ப்படுத்துகிறது, பெரியார், கடவுள் ஒழிந்தால் தான் சாதி பேதம் ஒழியும் என்கிறார். கடவுள் என்ற உணர்ச்சியால் தான் சாதி மத வேறுபாடு தோன்றியது என கூறும் பெரியார் கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் அனைவருக்கும் சமமானவராகத் தானே இருக்க வேண்டும் என்கிறார். பாரதியாரிடம் இதிலிருந்து எதிர் நிலையை காணலாம். அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்த ஒரு நாத்திகரை அரவிந்தர், வ. வே.சு. அய்யரிடம் அனுப்புகிறார்.அவர், பாரதியிடம் அந்த நாத்திகரை அனுப்புகிறார். பாரதியும் அந்த நாத்திகரும் பேசிக்கொண்டிருந்தபோது, பாரதியின் மகள் மாடியிலிருந்து கீழே விழுகிறாள்.அச்சமயம் பாரதி சாதாரணமாக உட்கார்ந்திருக்கிறார் அந்த நாத்திகர் கேட்டபோது பாரதி பராசக்தி இருக்க பிள்ளையை காப்பாற்ற நான் ஏன் போக வேண்டும் என்று கூறியுள்ளார். இதிலிருந்து பாரதியின் நம்பிக்கை வெளிப்படுகிறது. அதே ஆன்மீக நம்பிக்கை கொண்ட பாரதி தான், “தெய்வம் பல பல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர்” எனவும் சாடுகிறார்.
வள்ளலாரும் பெரியாரும் வைதீக எதிர்ப்பை முன்னிறுத்தியவர்கள். வள்ளலார் அருட்பா பிரசங்கம் மூலம் மிதவாதமாகவும், பிற்காலத்தில் வந்த பெரியார் தனது மேடைப்பேச்சின் மூலம் தீவிரமாகவும் எதிர்த்ததை காணமுடிகிறது. வள்ளலாரின் பல அருட்பா வரிகள் பொய்யான கதைகளை புறந்தள்ள வேண்டும் என பகுத்தறிவு சார்ந்து விளங்குகிறது. பெரியார் தனது குடியரசு இதழில் வள்ளலாரை குறித்து சில இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளார்,வள்ளலார் பெரிய புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். பெரியார் பெரிய புராணத்தை சாதி பேதத்தை புகட்டும் நூல் என்று பழிக்கிறார் இதில் இருவருக்கும் இடையில் வேற்றுமையே காணப்படுகிறது.
புதுமை புகுத்தல்:
புதுமை புகுத்தல் என்னும் தலைப்பினை ஐந்து பகுதிகளாகப் பிரித்து,. ஐந்து பகுதிகளிலும் மூவருக்கும் இடையிலான ஒற்றுமைகளை தொகுக்கலாம். சமூக மாற்றத்தில் புதுமை காண தன் வாழ்நாளை மூவரும் அர்ப்பணித்துள்ளனர்.
1. சாதிய எதிர்ப்பு,
2. பெண்ணடிமை,
3. முற்போக்கு எண்ணம்,
4. வெறுப்புணர்வு,
5. இலக்கியத் தொண்டு
என ஐந்து நிலைகளில் நாம் மூவரையும் பொருத்திப் பார்க்க முடியும். ம.பொ.சி வள்ளலார் வழியில் பாரதியார் இயங்குகிறார் என சொல்லுமளவு அவர்களிடையே ஒருமித்த கருத்து ஒற்றுமை இருந்திருக்கிறது. சீர்திருத்தம் என்பதில் பெரியார் பழைமையை ஒழிக்க எண்ணினார் என்பதை அவரது கருத்துக்களே புலப்படுத்தும். ஆனால், வள்ளலார் மற்றும் பாரதியார் பழைமையில் புதுமையை புகுத்தும் வேலையைச் செய்தனர். எது எப்படி இருந்தாலும் மூவருமே பிராமணர்களின் வெறுப்புக்கு உள்ளாகி ஒரே நேர்கோட்டிலேயே தங்கள் கொள்கை மற்றும் செயல்களால் நிற்கிறார்கள்.
*சாதிய எதிர்ப்பு:
வள்ளலார் சாதியை எதிர்த்து சமத்துவ நிலை பரவ சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவி சுத்த சன்மார்க்க சிந்தனைகளை பரப்பினார். ஏற்றத்தாழ்வற்ற மனிதகுல உண்மைகளை கூறுவேன் என்னை வைத்தாலும் பரவாயில்லை என்று பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வள்ளலார் தனது சிந்தனைகளை முன்வைக்கிறார். சமபந்தி முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியவர். உணவில் மட்டுமன்றி கல்வியிலும் மாற்றத்தை புகுத்த முயன்று சமரச வேத பாடசாலை நிறுவி கல்வி கற்று தந்துள்ளார். “சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்” என அருட்பாவில் பாடுகிறார் இதிலிருந்து,சாதியை வன்மையாக எதிர்த்து அதை தனது போதனைகளிலும் வாழ்விலும் வள்ளலார் வெளிப்படுத்துவதையும் காணமுடிகிறது.
சாதியை எதிர்த்து பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியவர் என்று ஒருவரை கூறினால், அவர் பெரியார் மட்டுமே ஆவார்.உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே சாதிச் சண்டை என்ற நெருப்புக்கு ஊற்றும் நெய் எனக் கூறுகிறார் பெரியார். பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது, புத்தகம் உணவு உடை ஆகியன தீண்டத்தகாதவர் என சொல்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று போராடியவர் அதனைப் பெற்றுத் தந்தவர் பெரியார் ஆவார். தீண்டாமைக்கு எதிராக போராடியவர்களில் முதன்மைப் பங்கு பெரியாருக்கு உரித்தானது. அறியாமையை அகற்றுவதிலும் சமத்துவத்தை நிலவச் செய்வதிலும் பெரியார் முனைப்புடன் தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதை தமிழகம் நன்கு அறியும்.
“சாதிகள் இல்லையடி பாப்பா” என பாரதி தனது சாதி எதிர்ப்புக் குரலை வலுவாக தன் கவிகளில் வெளிப்படுத்தியுள்ளார். “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்ற வரியில் சாதி ஒழிப்பை அழகாக அடிக்கோடிட்டு காட்டியுள்ளார். சாதியத்தை தன் நிலையிலிருந்து வலுவாக எதிர்த்துள்ளார் பாரதி. “காக்கை குருவி எங்கள் ஜாதி”, ” அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்” என பல பாடல்களை இயற்றியுள்ளார். வள்ளலாரைப் போன்று இவரும் உயிர் நேயத்தை பாடியுள்ளார்.
சாதியத்தை எதிர்த்த மூவருமே மனிதநேயத்தையும் சமத்துவ மனப்பான்மையையும் பரப்பினர். சாதியை தங்களுக்கேற்ற முறைகளில் தொடர்ந்து எதிர்த்து வள்ளலார் போதனைகளாகவும், பெரியார் மேடைப்பேச்சு களாகவும், பாரதியார் கவிதைகளாகவும் தீட்டியுள்ளனர். இவர்கள் சாதிய எதிர்ப்பை நடைமுறைக்கு கொண்டு வந்ததன் மூலம் இன்று ஓரளவு சாதிய மேலாதிக்கம் பிளவுபட்டு சாதிக்கு எதிராக குரல் கொடுப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
•பெண்ணடிமை:
“ஆணினுள் பெண்ணும் பெண்ணினுள் ஆணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி” என்கிறார் வள்ளலார். இந்த வரியிலிருந்து ஆண்-பெண் சமத்துவத்தை வள்ளலார் பாடுவதை காணமுடிகிறது. பெரியார் பெண் விடுதலைக்காக ஓங்கிய குரலை கொடுத்தவர். பெண்களின் விடுதலை நாட்டின் விடுதலை என்ற பெரியார் பெண் கல்வியை, பெண்கள் சொத்துரிமையை பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றியவர்.
பாரதியும் பெண்கள் விடுதலையை ஆதரித்து “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்” , “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;” என பெண் விடுதலையை மையப்படுத்திய பல பாடல்களை இயற்றியுள்ளார். பெண்களை சக்தியாக எண்ணி பாரதியார் வீர பாடல்களும் பல பாடியுள்ளார். தேவதாசி விடுதலை, விதவை மறுமணம் போன்றவற்றிற்கு ஆதரவான போர்க்குரல் பெரியாருடையதாகும்.
இவ்வாறு மூன்று சிந்தனையாளர்களும் பெண்கள் விடுதலை குறித்தும், பெண்களின் ஆக்கப்பூர்வமான உணர்வுகளை குறித்தும் சிந்தித்து உள்ளனர். இதில், மூவரும் ஒரே புள்ளியில் இணைகின்றனர் என்று கூறலாம்.
*முற்போக்கு எண்ணம்:
வள்ளலார் ஒரு முற்போக்குவாதி என சிலம்புச் செல்வர் ம.பொ.சி, கூறுகிறார்.தன்னுடைய முற்போக்கு எண்ணத்தால் சொந்த இனத்தின் எதிர்ப்பைப் பெற்றவர் வள்ளலார்.அதேசமயம் ஒரு சிறந்த சித்த மருத்துவராகவும் வள்ளலார் விளங்கியுள்ளார். பொதுவாக சித்த மருத்துவத்தை பழமைவாதமாக பலர் கருதுகின்றனர். ஆனால் சித்த மருத்துவத்தை முற்போக்கு மருத்துவ முறையாக வள்ளலார் எண்ணியுள்ளார்,. பெரியாரும் சித்த மருத்துவத்தை ஆதரித்துள்ளார். பாரதியாரை சித்தர் என்ற நிலையில் இன்றும் பல பாரதிய சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
மானமும் பகுத்தறிவும் உள்ளவர்களாக அனைவரும் மாற வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம்.சமயங்களில் உள்ள மூட நம்பிக்கையை எதிர்ப்பதிலையே தன் வாழ்நாளை முழுவதுமாக கழித்தவர் பெரியார். சமயச் சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும் அறிவியல் ஆதாரத்துடன் எதிர்த்த தகைமைக்கு உரியவர் பெரியார் ஆவார். என்னுடைய கருத்தை நீங்கள் நம்ப வேண்டாம் அதிலிருந்து மாறுபடுவதற்கு உரிய முழு உரிமை உங்களுக்கு உண்டு என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கியவர் பெரியார்.
“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலி காண்” என மூடநம்பிக்கையை எதிர்த்த குரலை பாரதி பதிவு செய்துள்ளார். தெய்வம் என்பது ஆயிரமாயிரம் இல்ல நம்முள் உள்ளது என்பதை வள்ளலாரும் கூறியுள்ளார். அதே வார்த்தையை பாரதியும் தனது பாணியில் பாடியுள்ளார்.
மூடநம்பிக்கையால் இச்சமூகம் அறிவியல் முறைப்படி பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. ஒரு பண்பட்ட சமூகம் எத்தனை அறிவியலாளர்களை கொண்டிருக்க வேண்டும். கிரேக்கத்தில் தோன்றிய அறிவியல் அறிஞர்களை விட தமிழ் அறிவியல் அறிஞர்கள் குறைவு. ஆனால் தமிழர்களுக்கு அறிவியல் சிந்தனை முற்றிலும் இல்லை என்பது தவறான கூற்று, அணுவைப் பற்றிய சிந்தனையே அவ்வையார் அன்றே பாடியுள்ளார். மூடநம்பிக்கைகள் நம்மில் ஊடுருவாமல் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ்ச் சமூகம் ஒரு அறிவார்ந்த அறிவியலில் முற்போக்கு தன்மை வாய்ந்த சமூகமாக திகழ்ந்திருக்கும்.
*இலக்கியத் தொண்டு:
வள்ளலார் ஒரு சிறந்த இலக்கியவாதியாகவே திகழ்ந்துள்ளார். வள்ளலார் பாடிய அருட்பா மிகப்பெரிய வாதத்திற்கு உள்ளானது. உரைநடை நூல்கள், தமிழ் நூல்களுக்கான உரைகள், பதிப்பித்த நூல்கள் எனப் பல நூல்கள் வள்ளலாரின் இலக்கியப் பணியை கூறுகிறது. பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என அழைத்தார் என்ற ஒற்றை கூற்று பலரது நெஞ்சில் வைக்கப்பட்டுள்ளது. பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு, மலேசிய அரசு, சிங்கப்பூர் அரசு ஏற்று செயல்படுத்தியுள்ளன.
பெரியார் மொழியை தெய்வமாக வணங்குவதில் துளியும் விருப்பமற்றவர்.மொழியை ஆயுதமாக பயன்படுத்தி ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு அந்த ஆயுதத்தை புதுப்பித்து அதன்மூலம் நாம் வெற்றி காண வேண்டும் என்ற உயரிய சிந்தனைக்கு சொந்தக்காரர் பெரியார். திராவிட மொழிகளாக கருதப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றிலுள்ள வடமொழிக் கலப்பை நீக்கிவிட்டால் அவைகளில் எஞ்சி நிற்பது தமிழ் மட்டுமே தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்று பறைசாற்றியவர்.மேடைத் தமிழை செழிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் பெரியார். மொழியை தட்டச்சு முதலிய நவீனங்களில் புகுத்த வேண்டும் என்று எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்து, எனக்கு இந்தப் பணியை செய்வதற்கு தகுதி இல்லை என பலர் கருதலாம். ஆனால், இதைச் செய்ய எவரும் முன் வராததால் நான் செய்ய நேர்ந்தது என்று கூறியுள்ளார் பெரியார். நான்கு திராவிட மொழிகளிலும் நல்ல புலமை பெற்று விளங்கினாலும் தமிழை தனது மேடைப் பேச்சிலும் தனது இதழ்களிலும் முதன்மைப்படுத்தியவர் பெரியார்.தமிழறிஞர்களை வைத்து திருக்குறள் மாநாடு ஒன்றை உலகறிய வெகுசிறப்பாக நடத்தி தமிழ் மீதான கவனத்தை உலக அரங்கில் முன்வைத்தவர் பெரியார்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடிய பாரதியார் பல மொழி வித்தகர். தமிழையும் தமிழரையும் தமிழர்தான் நாட்டையும் தனது கவியில் ஏற்றிச் சென்றவர் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாடலில் தமிழ்நாட்டையும், “வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்” என்ற வரிகளில் தமிழையும் தமிழரையும் வாழ்த்தியுள்ளார் மகாகவி பாரதி. தமிழ் கூறும் நல்லுலகு பாரதியையும் பாரதி உருவாக்கித் தந்த புதுக்கவிதையையும் என்றும் மறக்காது. மரபுக் கவிதையில் புலமை பெற்ற பாரதி தான், அனைவரும் புரியும்படி அனைவரும் எழுதும்படி புதுக்கவிதையை தோற்றுவித்தார். பாரதி புதுக் கவிதையை எழுதியபோது அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. அதன் மத்தியிலும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் நின்றவர் பாரதி.
*வெறுப்புணர்வு
புதிதாக ஒரு சிந்தனை எழும்போது அதற்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பது இயற்கையான நியதியாகும். வள்ளலாரை சாடிய சைவ அடியார்கள் பலர். அதன் மத்தியிலும் தன்னுடைய கருத்தில் ஆழமாக நின்று மாறாமல் ஆன்மீக வழியிலும் அறவழியிலும் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டவர் வள்ளலார். வள்ளலாருக்கு எதிராக ஆறுமுகநாவலர் புகார் அளித்த போதும் வள்ளலாரின் சிந்தனையை மதிக்க தவறியதில்லை.மனிதநேயத்தை மட்டுமே அறிந்திருந்த சமூகம் உயிர் நேயத்தில் வலுவடைய காரணமானவர் வள்ளலார்.
பெரியாரின் மீது வெறுப்புணர்வு தலைதூக்கி காணப்பட்டது. பல இடங்களில் அவர்மீது செருப்பை கொண்டு எறிந்தனர். அந்தச் சமயத்திலும் தன்னை வெறுத்த சமூகத்திற்காக குரல் கொடுத்தவர் பெரியார். தொடர்ந்து முதலாளிகளாக ஆதிக்க வர்க்கமாக நின்று உழைப்பை சுரண்டிய ஒரு வர்க்கத்தை துணிச்சலாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டு விளங்கியவர் பெரியார். சுதந்திரமாக சிந்தனை செய் தன்னுடைய சிந்தனையை துணிச்சலாக அனைவர் மத்தியிலும் கூறு. உனக்கு சரி என தோன்றியதைச் செய் என்று தொடர்ந்து அறிவுறுத்தியதால் பெரியாருக்கு எதிராக களவரம் உருவாக்க ஒரு கூட்டம் அவரது வாழ்வின் இறுதி வரை செயல்பட்டுள்ளது.
தமிழ் அறிஞர்கள் மத்தியிலும், ஆங்கில ஆட்சியாளர்கள் இடையிலும், தன் சொந்த சாதியினரிடமும் எதிர்ப்பை பரிசாகப் பெற்றவர் பாரதியார். பாரதியாரை வெறுத்து தள்ளியது அவரது சமூகம். பாரதியின் இலக்கியத்தை மாற்றும் போக்கை எதிர்த்தனர் தமிழறிஞர்கள். விடுதலைக்காக கவிதை வாயிலாக மொழியை ஆயுதமாக பயன்படுத்திய பாரதியை ஆங்கில ஆட்சியாளர்களும் ஒடுக்கினர். அதன் மத்தியிலும் துணிச்சலாக நின்றதால் இன்று பாரதி கொண்டாடப்படுகிறார் என்றால் மிகையல்ல.இன்று அவர் கொண்டாடப்படும் அளவிற்கு வாழ்ந்த காலத்தில் வெறுப்புணர்வு மிகுதியால் ஆட்கொள்ளப்பட்டார் என்பதுதான் வரலாறு கூறும் உண்மை.
புரட்சி:
வள்ளலார் ஏற்படுத்திய புரட்சி இன்று சத்திய தருமச்சாலைகளாகவும், வள்ளலார் இல்லங்களாகவும், தமிழ்நாடெங்கும் நிறுவப்பட்டு பசிப்பிணி போக்கி கொண்டிருக்கிறது. ஆன்மீகத்திலும் அதேசமயம், சமூக அக்கறையும் கொண்டு விளங்கிய வள்ளலார் ஏற்படுத்திய புரட்சி வித்து பசியை வேரோடு அறுக்க இன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. வள்ளலாரின் இதே கருத்தைத்தான் பாரதியார் தனது பாடலில் கோபமாக “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என பாடுகிறார். வள்ளலார் வருந்துகிறார், பாரதியார் கோபப்படுகிறார்.
பெரியார் ஏற்படுத்திய புரட்சி அவரோடு நின்றுவிடாமல் ஒரு இயக்கமாக வளர்ந்து நின்றுள்ளது. அவர் முன்மொழிந்த சாதிய ஒழிப்பை இன்று பலர் கையில் எடுத்துள்ளது அவரது புரட்சியின் வெளிப்பாடாகும். பாரதி பாடல்களால் கவரப்பட்டு தமிழின் மீது தாகம் கொண்டு பாரதிதாசனைப் போல பல புரட்சிகர கவிஞர்கள் தொடர்ந்து தமிழில் எழுந்து கொண்டிருப்பது பாரதியின் புரட்சி அலையாக நீண்டு ஒலிக்கிறது என்பதற்கு சான்று. புரட்சி என்பது மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். வள்ளலார், பெரியார், பாரதியார் ஆகிய மூவரும் இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு ஒட்டுமொத்த உலகிற்கு தந்துள்ள சிந்தனைகள் புரட்சிகரமானவை. இன்றைய தமிழ்ச் சமூகம் சிந்திக்கிறது என்றால் அதில் இவர்கள் மூவருடைய பங்கும் நிச்சயம் கலந்திருக்கிறது.
18ஆம் நூற்றாண்டில் பிறந்த சிந்தனையாளர்களால் ஏற்பட்ட புரட்சி இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் நீடித்து நிற்கிறது என்றால், அது அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே ஆகும். சாதிய ஒழிப்பு, சமத்துவம், பெண் விடுதலை, பிரிவினை அகற்றுதல் என்று பலதரப்பட்ட சிந்தனைகளுக்கு சொந்தக்காரர்களாக ஆர் விகுதி பெற்ற இம்மூவரும் விளங்குகின்றனர். இவர்களை ஆன்மீகவாதியாகவோ, பகுத்தறிவாளராகவோ, கவிஞராகவோ, அரசியல்வாதியாகவோ, விடுதலைப் போராட்ட வீரராகவோ, சமூகச் சீர்திருத்த வாதியாகவோ, புரட்சியாளர்களாகவோ என்றும் தமிழ்ச் சமூகம் மதிக்க வேண்டும் அவர்களது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் முன்னிறுத்திய சமத்துவம் நிலவுவதற்கு தனது பங்கை எடுத்து வைக்க வேண்டும். அதுவே, அவர்கள் புரட்சிக்கு செய்யும் மரியாதையும்,அவர்கள் உழைப்புக்கு செய்த நன்றியும் ஆகும்..
முடிவுரை:
ராமலிங்கர் என்பதையோ ஈ,வே ராமசாமி என்பதையோ சுப்பிரமணி என்பதையோ பிறக்கும்போது தன்னுடைய பெயராக கொண்டிருந்திருக்கலாம். ஆனால், இந்த உலகைவிட்டு கடந்து செல்லும்போது பல இன்னல்கள் மத்தியிலும் சமூகத்திற்காக தனது சிந்தனைகளை கொடுத்து சென்றதனால், ஆர் விகுதி பெற்று வள்ளலாராகவும், பெரியாராகவும், பாரதியாராகவும் மாறிச் சென்றுள்ளனர். ராமலிங்க சுவாமிகள் என்று அழைத்த தனது சீடர்களை அவ்வாறு அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தியவர் வள்ளலார்.
பெண்கள் மாநாட்டில் பெரியார் என முன் மொழியப்பட்டடு ராமசாமி பெரியாராக மாறி தனது சாதிப் பெயரை பெயருக்கு பின்னால் இடுவதை துறந்தவர் பெரியார். தனது சுயமரியாதைக்கு இழைக்கப்பட்ட இழுக்கை போக்கி பாரதி என்னும் பட்டம் பெற்று, இயற்பெயர் மறைந்து பாரதியார் என்றே காலப் போக்கில் அழைக்கப்படலானார் பாரதி.
ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ் இயக்கிய படங்கள் இரண்டு. ஒன்று பாரதியார் படம், மற்றொன்று பெரியார் படம். இதுபோன்ற புரட்சியாளர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்றும் நிலை பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து ஆட்சியாளர்களிடையே மேலோங்க வேண்டும்.
இயற்பெயர் மறைந்து பட்டம் பொருத்தமான பெயராகி போனது சிலருக்கு தான். அதிலும் ஆர் என்ற விகுதியைப் பெற்று ஒரே நூற்றாண்டில் ஒரே மொழி பேசும் உயரிய சிந்தனைக்குரியவர்களாக விளங்கியது சிறப்புக்குரிய ஒன்றாகும். அந்த சிறப்பை நம் தமிழ் குடி பெற்றுள்ளது. மூவரும் வலியுறுத்திய கருத்துக்களை நாம் கடைபிடிப்பதன் மூலம் சமத்துவம், மகிழ்ச்சி ஆகியன பரவி காணப்படும் என்பது மிகையல்ல.
துணைநின்ற நூல்கள்:
1. வள்ளலார் தெய்வ நிலைய வரலாறு- வள்ளலார் தெய்வ நிலையம் வடலூர்.
2. தந்தை பெரியாரின் வாழ்வும் வாக்கும் – ச. குமார்
3. தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் – கி.வீரமணி
4. பாரதி 100 – சொ.மு.முத்து
5. மகாகவி பாரதி பார்வைகள் (கட்டுரைத்தொகுப்பு)
6. அருட்பா, பாரதியார் பாடல்கள்
7. வள்ளலாரும் பெரியாரும் – மருத்துவர், ஜெய, ராஜமூர்த்தி
8. தமிழகத்தில் பிற மொழியினர்- ம.பொ.சி
கருத்துகள்
கருத்துரையிடுக