மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுவதில்லை

      மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுவதில்லை

                ‌‌ - ரா.‌அழகுராஜ்




      அந்த அகலமான பள்ளத்தின் வறண்ட மண் நீரினை துளித்துளியாய் வாங்கிக் கொண்டிருந்த வேலையில் தொப்பை விழுந்த ஆலங்கட்டிகள் சேகரமான துளிகளை சிதறி தெறிக்க விட்டது. விடாமல் சோவென பெய்த மழை அரை மணி நேரம் அந்த கீழத் தெருவை சுற்றி வளைத்தது. ஒம்பது மணிக்கு சுல்லென சூரியக்கதிர்கள் மேனியில் பட பல்லைக் காட்டி இளித்த வானம் பன்னெண்டு மணிக்கு தன்னுடைய கூக்குரலை தொடங்கி கண்ணீரை சாரைசாரையாக கொட்டி தீர்த்தது. கப்சிப் என அமைதியாய் இருந்த கூட்டம் மேற்கூரையில் இருந்து கீழே விழும் நீர்த்துளிகள் போல் கூடிவந்து பலவேசத்தை மொய்த்துக் தள்ளியது. அந்த சலசலப்பை வேளயிலும் கரிசல் காடு என்றுமே காணாத இதமான குளிர் காற்றால் நிறைந்திருக்க தட்டான்கள் எல்லாம் சிறகு விரித்து ஆட்டு மந்தை போல் அந்த வீட்டை சிறை பிடித்தது.


     கரிசல் நிலத்தில் முளைக்கும் பயிர்களை வெயில் வேகவைக்கும் பகல் பொழுதில் சம்சாரிகளுக்கு உறக்கம் என்பதே கெடயாது. ஆனால் களை பறிக்கும் முத்தம்மா அலங்காரத்துடன் படுத்துக்கிடந்தாள். ஆதியின் கண்கள் நீரை வார்த்துக்கொண்டிருந்தது. மீண்டும் பலவேசத்தை சுற்றி ஒரு கூட்டம் சூழ்ந்தது. ஒதுங்கி நின்ற இளவட்ட பய ஒருத்தன் காத இருக்கி பொத்துங்கனு பதட்டத்தோட சொன்னான். பலவேசத்தின் கையும் காலும் வெட்டி வெட்டி இழுத்துக்கிட்டு இருந்தது. கையில இருந்த துறவலு இறுகி உடைஞ்சு போற அளவு உடும்பு புடி புடிச்சதுல அந்த துறவலு நெளிஞ்சே போச்சு வலது நெத்தியும் வாயும் ரத்தத்தை நொரையா கொப்பளிச்சது. அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு நின்ன பலவேசத்தோட கண்ணு முன்னாடி அந்த அகலமான பள்ளம் தெரிஞ்சது‌. அதுல இருந்த தண்ணியில அவன் ரத்தமும் ஆதியோட கண்ணீரும் நதி மாதிரி ஓடி கலந்துகிட்டு இருந்ததை பார்த்து அவன் கண்ணும் உப்புநீரை வெளில தள்ளுனது. அந்த நேரத்துலயும் முத்தம்மா எந்திரிக்காம படுத்துக் கிடந்தாள்.


     சலூன் சங்கையாவோட பதம் பாத்த கத்தி சோர்ந்து போய் தொங்கின பலவேசத்தோட தலையையும் அரண்டு போயி அழுதுட்டு இருந்த ஆதியோட தலையையும் மொட்டையாக்குனது. ஒருவழியா எல்லாரும் அந்த சுடுகாட்டுக்கு வந்து சேரவும் பானையத் தூக்கிக்கிட்டு பலவேசம் போனான். அப்ப அவனோட கண்ணு ரெண்டும் பல பக்கம் சொருகுனது. ஐயோ மறுபடியும் வெட்டி இழுக்குமோனு சனங்க பாத்துக்கிட்டு இருந்தப்ப திடீர்னு எல்லார் கண்ணுலயும் ஒரு அதிர்ச்சி. என்னனு பாத்தா பலவேசத்தோட கட்டவிரலு வெட்டியானோட அருவாளுல வெட்டுப்பட்டு மண்ணுல படுத்து உருண்டது. வெட்டுப்பட்ட வெரலுக்கு வெட்டியான் எப்டி பொறுப்பாவான். திரும்பக் கூடாத நேரத்துல திரும்புனா வெரலு வெட்டுப்பட தான் செய்யும்னு ஒரு பக்கம் பேச்சு கெளம்புனது..


      சாத்துரத்துக்கு பயந்த ஊர்மக்க சாவு சடங்க நிறுத்தல. அந்த வலியும் அவனுக்கு இல்ல. சடங்க நிறுத்துனா சாபம் வந்து சேரும்னு எலும்பில்லாத நாக்கு அமைதியா இருந்தது‌. கண்ணுல கொஞ்சம் தண்ணீயோட எல்லாரும் பாத்துட்டு இருக்குறப்ப ஆதி வச்ச கொல்லித்தீ திகுதிகுனு எரிஞ்சது. கபகபனு பொக மண்டவும் ஆதியோட இதயம் சுல்லுன்னு தீ பிடிச்சது உள்ளுக்குள்ள சுட்டது. ஆனால் அழுக எல்லாம் நின்னு போனது. வச்ச கண்ணு வாங்காம அந்த அக்குனிய‌ பாத்துட்டே நின்னான். அவன் மூளை அவனுக்கே தெரியாம எதையோ யோசிச்சுட்டு இருந்தது. இப்டித்தான் மனுச மூள சில நேரம் என்ன ஏதுனு தெரியாமலே யோசிச்சுட்டு இருக்குது. எரிஞ்ச எலும்பு சாம்பலாகிக்கிட்டு இருந்தப்ப மறுபடியும் சலனத்தோட ஒரு மழ பெய்ய ஆரம்பிச்சது. கூலாங்கல்லு இடுக்குல பலவேசத்தோட கட்டவிரலு மழையில நனையாம பரிதாபமா ஒதுங்குனது.


     பதினாறாம் நாளு கழிச்சு தான் வெளிய போனும்னு சொல்ற கிராமத்து காரங்க டவுனுக்கு போயி எப்டி விரலுக்கு வைத்தியம் பாக்க விடுவாங்க. அந்த வெரலப் பத்துன நினப்பே பலவேசத்துக்கு மறந்து போச்சு. அந்த நேரத்துல தான் பலவேசத்தோட கட்டவிரலு இல்லாத கையி ஆதி‌ கண்ணுக்கு தட்டுப்பட்டது. என்னப்பா ஆச்சு வெரல காணும்னு முழு கதையையும் காது குடுத்து கேட்ட ஆதி இந்தா இருக்குதுலப்பா என்னோட ஆறாவது வெரலு அது இனிமே ஒன்னோட வெரலுனு அவன் கையில கட்ட விரல ஒட்டி முளச்சிருந்த சின்ன கட்ட விரல வெகுளிதனத்தோட காட்டவும் பலவேசம் அன்போட ஆதிய அரவணச்சான்.. அன்னையில இருந்து அந்த ஆறாவது விரல பாத்து கேக்குறவங்ககிட்ட இந்த கதையத் தான் சொல்வான். கொஞ்சம் தயக்கத்தோட இன்னைக்கும் அதே மாதிரி தான் கதைய அந்த தோழிக்கிட்ட சொல்லி முடிச்சான்..


     அடேங்கப்பா ஆதி, இவ்வளவு கதையா இந்த சின்ன கட்ட வெரலுக்குள்ள ஒழிச்சு வச்சிருந்த.. இன்னேரம் பாத்து இந்த கதைய ஞாபகப்படுத்தி உன்ன கஷ்டப்படுத்திட்டேன் மன்னிச்சுக்கோடா..


     இருக்கட்டும் யா என்று ஒரு சின்ன புன்னகையை பூக்க விட்டான் ஆதி..


     நீ தப்பா நினைக்கலனா நான் ஒன்னு கேக்கலாமா ஆதி.


     ம்ம் சொல்லு..


     ஒன்னோட அம்மா எப்டி இறந்தாங்க.. அப்பா என்ன செய்றாருனு நான் தெரிஞ்சுக்கலாமா??


     ம்ம் சொல்றேன், செம்மண்ணும் கரிசல் மண்ணும் கலந்து கட்டுன நாலு மண் சுவத்துக்கு மேல பனஞ்சட்டம் போட்டு அத கொல்ல ஓட்டால மூடியிருந்தோம்.. கடற்கரை ஓரத்தில இருக்கிற ஈர மணலு உலர்ந்த மணல ஒட்டி இருக்குறது மாதிரி அந்த ஓட்ட ஒட்டி கூரைபோட்ட ஒரு சின்ன பகுதியும் இருந்தது.. அந்த கூரயில தான் அந்த பூச்சி இருந்தது..


     என்னது பூச்சியா? 


     பாம்ப தான் பூச்சினு சொல்வோம்..


     எதுக்கு அப்டி சொல்வேங்க


     பாம்புனு சொன்னா அதுக்கு காது கேட்டுரும். காது கேட்டதுனா கொத்திப்புடும்.. இல்லனா எங்குட்டாவது ஓடிப் போய் ஒளிஞ்சுக்கிடும்..


     ஓ அதனால தான் அப்டி சொல்வேங்கலா..


     ஆமா ஆமா..நிலா அரையும் கொறையுமா தெரிஞ்சிட்டுருந்த நேரம் அன்னைக்கு என் அம்மா கடுமையான காச்சலுல படுத்து இருந்தாங்க.. அன்னேரத்துல அந்த பூச்சி அவங்க படுத்திருந்த கோரப்பாய்க்கு அடில போனத பாத்துட்டு எங்கப்பா அத அடிக்கப்போய்ட்டாரு.. எங்க அம்மா திடுக்குனு எந்திரிச்சு உக்காந்தாலும் நிக்க முடியல அந்த வேலையில நொட்டாங்கைல கொத்திப்புடுச்சு… அதுக்கப்புறம் அந்த பாம்ப தேடிப்புடிச்சு அப்பா அடிச்சுப்புட்டாரு.. அதுவும் செத்துப் போச்சு..


      பெறகு உள்ளூரு வைத்தியரு ஒருத்தரு வந்து பாத்தாரு.. கொஞ்சம் பரவால்லாம தான் இருந்துச்சு.. காலயில டவுன்ல இருக்குற தருமாஸ்பத்திரிக்கு போய் காட்டவும் ஓரளவு சீரா தான் இருந்தது.. நாலு நாள் கழிச்சு முடிஞ்ச வேலைய போயி பாத்துட்டு வருவோம்னு கெளம்பி வேலைக்கு போகவும் எங்கம்மா ஆரம்பிச்சுடுச்சு.. அன்னைக்கு முடிஞ்ச வேலைய பாத்துப்புட்டு வந்து எங்ககூட பேசிட்டு படுத்தது தான் அடுத்து எந்திரிக்கவேயில்லை..


      என் அப்பா அம்மா இறந்த கொஞ்ச நாளு கழிச்சே பக்கவாதம் வந்து பாடுபட்டாரு.. நான் பத்தாப்பு பரீச்ச எழுதும்போது அவரும் போய்ட்டாரு.. கொஞ்ச நாளு ஊருல இருந்துப் பாத்தேன் புடிக்கல பெறகு இருந்த கொஞ்ச நெலத்தையும் வீட்டையும் வித்துப்புட்டு இங்க வந்துட்டேன்..


      சரி‌ ஆதி கவலப்படாத நீ பட்ட கஷ்டத்துக்கு ஒரு நாள் நல்லா வருவடா..


      இப்ப என்ன நல்லாதான இருக்கேன்.. இப்ப எதுக்கு அந்த செத்த கதைய எல்லாம் பேசிக்கிட்டு வா போவோம்..


       என்னதான் அதெல்லாம் செத்த கதனு சொல்லி மனசு மரம் மாதிரி மரத்து போய் இருந்தாலும், யாராவது ஒருவர் காற்றுப் போல வந்து இலைகளைப் போன்ற நினைவுகளை உதிரவிட்டு கவலையென்னும் பழத்தைப் பறித்து பகிர்ந்து தான் செல்கிறார்கள்.. மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுவதில்லை.. காற்று சும்மாயிருந்தால் காலமும் முழுமைப் பெறுவதில்லை...

     




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்