குடுமி பற்றிய சிந்தனைகள் - இராபர்ட் கால்டுவெல் (மொழிபெயர்ப்பு - வானதி)
குடுமி பற்றிய சிந்தனைகள் - இராபர்ட் கால்டுவெல் (மொழிபெயர்ப்பு - வானதி)
கால்டுவெல் மதத்தை பரப்பும் நோக்கிலேயே தமிழகப் பகுதிகளுக்கு வந்தாலும் கூட அவர் நம்மிடைய தமிழகம் சார்ந்த பண்பாட்டு மொழியியல் சார்ந்த ஆய்வுகளில் பெருத்த கவனம் செலுத்தினார் என்பதை மறுக்க முடியாது. நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமை உடைய தமிழர்கள் அந்த வரலாற்றை சரியான முறையில் பதிவு செய்யவில்லை. அந்த வரலாற்றை எல்லாம் பதிவு செய்வது அவசியம் என சொல்லி பல ஆய்வுகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தில் உள்ள குறைகளையும் மூடப் பழக்கத்தால் மழிக்கப்பட்ட அறிவியல் சார்ந்த அறிவுகளையும் பற்றி தன்னுடைய கருத்தை துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார். திராவிடம் என்ற மொழி வழியிலான கருத்துருவாக்கத்தில் கால்டுவெலுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. அவரது கருத்துக்களுக்கு எதிராக முரண் இருந்தாலும் கூட அவரது ஒட்டுமொத்த சிந்தனையையும் நம்மால் புறந்தள்ளி விட முடியாது. இந்த நூலில் குடுமி குறித்த தகவல்கள் நிரம்பியுள்ளன. குடுமியை மோலோட்டமாகவே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இந்த நூலில் உள்ள ஒவ்வொரு பத்தியும் ஆழமான ஓட்டத்திற்குள் இழுத்துச் செல்கிறது.
கிறிஸ்தவம் இரண்டாம் பிறப்பு என்று ஞானஸ்நான முறையை நம்புகிறது. இந்த நம்பிக்கை வாயிலாக அவர்கள் இந்த புதிய பிறப்பில் பாவம் ஏதும் செய்யக்கூடாது என்கிற கருத்தே இருக்கிறது. அப்படி திருநெல்வேலி பகுதியில் உள்ள கிறித்தவர்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமானால் குடுமியை எடுக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக கிறுத்தவ மத போதகர்கள் மூலம் வைக்கப்பட்டதன் விளைவாக கால்டுவெல் தனது கருத்தை இனவரைவியல் கோட்பாட்டு பொருத்தத்தோடு குடுமி பற்றிய செய்திகளை கூறிய கருத்துக்கள் தான் இந்த நூல். இந்து மத புராணங்களையே மேற்கோள் கொண்டு தனது கருத்தை வெளிப்படுத்துபவர் ஏன் சன்னியாசிகள் குடுமி வளர்க்கவில்லை. சாதாரண மக்கள் மட்டும் வளர்க்க நிர்பந்திக்க பட்டார்கள். அவ்வாறு குடுமி வளர்த்தாலும் கூட சிலர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லையே என்கிற கேள்வியையும் முன் வைத்துள்ளார். கிறிஸ்தவம் குடுமியை இந்து மதத்திற்கு உரியதாக பார்ப்பதில் தெளிவில்லை என்றும் குடுமி ஒரு பண்பாடாகவே வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை வெறும் சிகை அலங்காரமாகவே பார்க்க வேண்டும் என்பதையும் நாம் இன்று வைத்துள்ள சிகை அலங்காரமானது பிரெஞ்சு புரட்சியாளர்களால் புகுத்தப்பட்டது தானே அதற்கு முன் நமது முன்னோர்கள் வைத்திருந்த டெயில் கூட குடுமி போன்றது தான் எனச் சொல்வதோடு தாலி போன்றவற்றில் கவனம் செலுத்தாதவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் என்ன என கேட்டுள்ளார். திருமண முறையில் மேலை நாடுகளில் மோதிரம் மாற்றுவது போல இங்கு தாலி கட்டுகின்றனர். அது இங்குள்ள பண்பாடு அதைப் போல தான் இந்த குடுமியும் ஒரு பண்பாட்டுக்கு உரிய சிகை அலங்காரம். ஆனால் குடுமி வாயிலாக மூட நம்பிக்கைகளும் சாதி பிரிவினைகளும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கக்கூடிய கிறுத்தவ சபைகளுக்குள் வந்துவிடக்கூடாது. இந்த குடுமி சாதியை வெளிப்படுத்தும் அடையாளமாக இருந்தால் இதைக் கட்டாயம் புறந்தள்ளவே வேண்டும் எனக் கூறியதோடு குடுமியை வைத்த சாதியினர் பற்றிய பழைய வரலாற்றுக் குறிப்புகளையும் பேசியுள்ளதாக இந்த நூல் இருக்கிறது. இதன் மூலமாக அவர் சொல்ல வருவது என்னவென்றால் தனிமனிதன் ஒவ்வொருவரும் அவரவர் எண்ண ஓட்டத்தில் செயல்பட உரிமை அளிக்க வேண்டும் ஆனால் அவர்களது செயல்கள் கிறுத்துவத்தில் பிளவையும் பிரிவினையையும் ஏற்படுத்தக் கூடியதாகவோ கோட்பாடுகளை நிராகரிக்கக் கூடியதாகவோ இருக்கக்கூடாது என்பது தான். இதன் மூலம் மற்ற பாதிரியார்களிடம் இருந்து சற்று வேறுபட்டவராகவே கால்டுவெல் தோற்றமளிப்பதைப் பார்க்க முடிகிறது.
-அழகுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக