வெண்ணிற இரவுகள்
வெண்ணிற இரவுகள் - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பு- ரா.கிருஷ்ணய்யா
தனிமை விரும்பிகளின் ஆதர்ச காவியமாக இன்றளவும் அழியா புகழோடு காதலையும் காதலினால் விளையும் தனிமையையும் தனிமையையும் தனிமையின் போக்கில் இரவு நேரம் நடக்கும் போது கிடைக்கும் காதலையும் அந்த காதலின் கடைசி நிலவரத்தையும் மனம் பிசகாமல் பேசியுள்ள அழகான படைப்பு இந்த நாவல்.
நான்கு இரவுகள் வந்தாலும் ஓர் இரவிலேயே முழுமையாக வாசித்து சிலிர்க்க வைத்து கனவுக்குள் நம்மை இழுத்துச் சென்றும் கனவின் பிடியில் உள்ள ஒரு தனிமை காதலனின் உற்று நோக்கும் திறனையும் ஆயிரம் பொருட்கள் இருக்கும் பீட்டர்ஸ்பர்க் நகரில் தனக்கென கனவைத் தவிர ஒன்றும் இல்லாத நாயகனுக்கு நாஸ்தென்கா எனும் காதலனுக்காக காத்திருந்து நமது தமிழ் அக இலக்கிய தலைவியர் போல வாடி இரவில் தனிமையை கழிக்க விரும்பும் பெண் அறிமுகமாகிறாள். அவளது குருட்டுப் பாட்டியைப் பற்றி அவளது காதலனைப் பற்றி என அவளுக்கு அவனிடம் சொல்வதற்கு கதைகள் இருந்தன. ஆனால் திருப்பி அவளிடம் சொல்ல கதைகளற்று நிற்கிறான் இந்த கதையின் கதாநாயகன்.
தனிமையிலேயே சுழன்று எவரது விசாரிப்புமின்றி இருந்தவனுக்கு நாஸ்தென்காவின் பரிவான பாச உணர்வால் தன்னை அவளிடம் பறி கொடுக்கிறான். இருவரும் இணைவதற்கு நான்காம் இரவில் முடிவெடுக்க அடுத்த நாள் காலை வெளிச்சத்தில் நாஸ்தென்கா அவளது பழைய காதலனோடு இணைகிறாள். மீண்டும் தனிமையை நோக்கி கதாநாயகன் திரும்புகிறான். இந்த இடம் நம்மை மயிரைச் சிலிர்க்க வைக்கிறது. முதல் நாள் இரவில் இருந்து ஒவ்வொரு இரவும் மாறுபட்டே செல்கிறது. கதை இப்படித்தான் போகும் என்கிற ஒரு அனுமானம் பல இடங்களில் உடைந்தும் விடுகிறது.
இந்த கதையில் வரும் ஒவ்வொரு பக்கத்திலும் அத்தனை கூரிய கவனிப்பும் அதை வெளிப்படுத்தும் வார்த்தைகளும் தஸ்தாயெவ்ஸ்கி அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் இது ஒரு நாவலாக உருப்பெற்று நம்மிடையே இன்றும் வியந்து வாசிக்கும் வகையிலான ஒன்றாக இருக்கிறது. கிருஷ்ணய்யா அவர்களின் மொழிபெயர்ப்பு நமக்கு இந்த நாவலை நல்ல முறையில் தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
-அழகுராஜ்
நான் வாசித்த நல்ல கதை
பதிலளிநீக்குஆம்.. நன்றி..
நீக்கு