தாய் - மாக்சீம் கார்க்கி மொழிபெயர்ப்பு தொ.மு.சி.ரகுநாதன்


 தாய் - மாக்சீம் கார்க்கி மொழிபெயர்ப்பு தொ.மு‌.சி‌.ரகுநாதன்


     உலகப் புகழ் பெற்ற காவியம் என்பதைத் தாண்டி செவ்வியல் தன்மையோடு இருக்கக்கூடிய கதையாகத் தான் நான் தாய் நாவலைப் பார்க்கிறேன். போராட்டக் களத்தில் (சில போராட்டங்களை தவிர்த்து) நிற்கும் போது களத்தில் நிற்போரை ஒடுக்க அதிகாரத்தை பயன்படுத்தும் வரம்பு வேண்டுமானால் ஓரளவு குறைத்திருக்கலாம். ஆனால் களத்தில் நிற்கும் நிலவரம் என்றுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். செங்கொடிப் போராளிகளின் வாழ்வியலையும் அவர்கள் பொதுவுடைமை பக்கம் திரும்பி தங்கள் கொள்கைகளில் உறுதிபட நின்றதையும் இந்த கதை நமக்கு புலப்படுத்துகிறது. 


     அமெரிக்காவில் இருந்து வெளிவந்த இந்த நாவலை லெனின் வெகுவாக பாராட்டியுள்ளார். லெனின் - கார்க்கி நட்பு மூலம் கார்க்கி எழுதிய நாவல்களில் எல்லாம் பொதுவுடைமை பெருமளவில் பேசப்பட்டு இருக்கிறது என்பதை நாவலின் முன்னுரையில் அறிய முடிகிறது. உலகப் புகழ் பெற்ற காவியம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த நாவலை தொ.மு.சி சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நாவலில் பொதுவுடைமையோடு சேர்த்து பொதுவுடைமை போராளிகளின் வாழ்வில் நடக்கும் சிறிய சிறிய சம்பவங்களையும் அடையாளப்படுத்தும் பணியை நேர்த்தியாக கார்க்கி செய்துள்ளார்.


     சாரயக்கடையும் ஆபாசப்பாட்டும் சுரண்டலும் நிறைந்த மண்ணில் ஒரு இளைஞர் கூட்டம் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை மீறி உண்மையை சொல்லி அதை நிலைநிறுத்த படும் பாடுகளை பேசும் இந்த நாவலின் பல பகுதிகளில் பெண்ணின் மகத்துவமும் வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாதஷா, சாஷா, சோபியா எனும் மூன்று பெண்கள் இரவு நேரத்தில் கடும் குளிரில் தன்னந்தனியாக பத்திரிக்கைகளையும் செய்திகளையும் பரிமாறச் செல்லக்கூடிய செய்தி என்பது எவ்வளவு பெரிய வேலைகளை பெண்களிடம் கொடுத்தாலும் தனித்து நின்று பொதுவுடைமை தத்துவத்தை ஏந்திச் செல்வார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த நாவலில் வரும் தாய் தனது கணவனுக்கு அடிமையாக அவன் கொடுக்கும் அடிகளை எல்லாம் வாங்கிய பழைமைவாதத்தை கடந்து பொதுவுடைமையில் நாட்டம் கொண்டு உண்மையை விதைக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட இடத்தில் பெண்ணியம் மறைந்து வெளிப்படுகிறது. இந்த நாவலுக்கு பின்பு தான் பெண்ணியம் என்கிற கருத்துருவாக்கம் தோன்றி பரவலாக்கப்பட்டாலும் கூட பெண்ணிய கூறுகள் கதைக்குள் இருக்கத் தான் செய்கிறது. 


     பொதுவுடைமை என்பது முதலாளி லாபம் எடுப்பதையும் தொழிலாளி வஞ்சிக்கப்படுவதையும் வெறுமனே பேசும் தர்க்கம் கிடையாது என்பதையும் பணத்தை பொதுவுடைமையாளர்கள் ஒரு நச்சுப் பிடித்த பொருளாகவே பார்ப்பதையும் தெளிவாக சொல்கிறது. தொழிலாளர்களின் சுயமரியாதை உள்ளிட்ட பல உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் செல்லும் இளைஞர் கூட்டம் சிறைச்சாலை, வேலையை பறி கொடுத்தல், தேசாந்திர சிட்சை என எப்படிப்பட்ட தண்டனைகளை பரிசாக பெறுகிறார்கள் என்பதையும், வாசிப்பின் மகத்துவம் மற்றும் பத்திரிக்கையை பரப்புதல் என மக்களின் அறியாமை இருளால் ஆன அவர்களது குரூரமான வாழ்வியல் மாறுபாடு ஆகியவற்றையும் தொழிலாளர் நாள் கொண்டாட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் நாவல் கதையின் அமைப்போடு இயைந்து சொல்கிறது. 


     அதிகாரிகளையும் நீதிபதிகளையும் எப்படி கையாள வேண்டும் என்கிற சூட்சுமத்தையும் சொல்லும் இந்த நூலைப் படிக்கும் போது நாம் தேனீர் குடிக்கச் செல்கிறோமோ இல்லையோ இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பதினைந்து முறைக்கும் மேலாகவே தேனீர் குடித்து விடுகின்றனர். பாவெல் மற்றும் அவனது வீடு அனைத்துத் தோழர்களுக்கும் கூடி விவாதிக்கும் தலமாகவும், எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வந்துச் செல்லும் தோழர்களின் இருப்பிடமாகவும் விளங்கியதோடு, பாவெலின் தாய் அவனது நண்பனுக்கும் தாயாக விளங்கி அன்பைப் பரிமாறியதையும் தனது மகன் ஏற்ற பொதுவுடைமை கொள்கைக்காக தனது எஞ்சிய வாழ்வையும் சமர்ப்பணம் செய்தது கதையின் கருவாக இருக்கிறது. 

                                     -அழகுராஜ்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்