செங்கிஸ்கான் - முகில்


 

செங்கிஸ்கான்-முகில்


     கலாச்சார புரட்சியை முதன்மை படுத்திய ஓநாய் குலச்சின்னம் நாவலின் பல இடங்களில் செங்கிஸ்கான் குறித்த மேன்மையான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. ஆகவே, முகில் எழுதிய செங்கிஸ்கான் நூலை வாசிக்க முற்பட்டேன். நூலின் முகப்பில் ஆசியா மற்றும் ஐரோப்பியாவின் சில பகுதிகளில் வாழும் மக்களில் 200ல் ஒருவர் செங்கிஸ்கான் பரம்பரை என்கிற செய்தி எந்தளவு சரியானது என்பது தெரியவில்லை. செங்கிஸ்கான் என்பவன் பல வெற்றிகளை குவித்து அள்ளுவதற்கு முன் எப்படியெல்லாம் போருக்கான வியூகம் அமைத்தான் என்பதை வாசிக்கும்போது அவனது பொறுமையான சிந்திக்கும் திறன் நம்மை யோசிக்க வைக்கிறது. தனது அண்ணனான பெக்டரை கொலை செய்த ஒரு இடத்தை தவிர்த்து ஏனைய இடங்களில் எல்லாம் பொறுமையின் உருவமாகவும் பொறுமையை போற்றி விரும்பியபடியும் செங்கிஸ்கான் காட்சி அளிக்கிறார். மங்கோலிய மக்களின் வெள்ளை மற்றும் கரும்பு எலும்பு வகையிலான இனக்குழு பிரிவு, அவர்களது நாடோடி வாழ்க்கை, போர்த்திறம் போன்றவை இந்த நூலின் வாயிலாக வெளிப்படுகிறது. 


     இன்று வட இந்தியாவில் இருந்து வந்தவர்களும் குறவர்களும் எப்படி நிலையான இடத்தில் தங்காமல் பல இடங்களில் கூடாரமிட்டு நகர்ந்து போகிறார்களோ அதே வாழ்வைத் தான் மங்கோலியர்களும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் வாழும் நகரும் வீடுகளாகிய கூடாரங்களை கெர் என்ற பெயரில் அழைத்துள்ளனர். கான் என்ற பெயர் இந்தியாவில் பிரபலமான பெயராக பல இடங்களில் விரும்பி வைக்கப்படுகிறது. அந்த கான் என்ற பெயருக்கு அரசன் என்ற பொருளையும் மங்கோலிய சீன பகுதிகளில் இருந்து 'கான்'கள் குறித்தும் விளக்கி டெமுஜின் செங்கிஸ்கானாக மாறிய கதையைச் சொல்கிறது. சீனப் பெருஞ்சுவர் கட்டமைக்கப்பட்ட நோக்கமே மங்கோலியர்களிடம் இருந்து தஙகளை காப்பதற்கு எனச் சொல்லி பல வம்சத்தினர் படிப்படியாக சுவரை கட்டியெழுப்பிய வரலாறு பேசப்படுகிறது. மங்கோலியன் பெண்ணை தேர்வு செய்யும் முறை,மங்கோலிய திருமண பண்பாடு, இரத்த சகோதர உறவு, பெண்களை கடத்தும் மங்கோலிய வழக்கம் முதலியவற்றை நூல் விளக்குகிறது. செங்கிஸ்கானுக்கு ஒரு கூட்டு மங்கோலிய பேரரசை நிறுவும் கனவைத் தந்த ஜமுக்கா பற்றிய விவரங்கள், செங்கிஸ்கானின் மனதளவில் தாக்கி உடலியல் போரில் இறங்கும் உத்தி, பலதரப்பட்ட எதிராளி இனக்குழுவை உறவுகளாக்கி படைப்பலத்தை அதிகரித்தல், குறைந்த படைவீரர்களை வைத்தே பெரும் படையை வீழ்த்தும் போர்வியூகம், ஆழ்ந்த பொறுமை, புதிய சட்டம் வாயிலாக தானும் தனது குடும்பமும் சந்தித்த அநீதியை தன் நாட்டு மக்கள் சந்திக்கக்கூடாது என பெண்களை கடத்த தடை, குழந்தைகளை அடிமைப்படுத்த தடை, மத சுதந்திரம் ஆகிய சட்டங்களை விதித்து சமத்துவம் நிலவும் வகையில் அனைத்துச் சட்டமும் மக்கள் முதல் மக்களை ஆளும் கான் வரை ஒன்று தான் என்று சொல்லியதால் பேரரசு அவருக்கு பின்பும் பல காலம் நிலைத்தது எனச் சொல்லலாம். மங்கோலிய இனக்குழு ஒற்றுமையை மட்டுமே இலக்காக வைத்த செங்கிஸ்கான் பிற்காலத்தில் கரி என்ற பெயரில் மங்கோலியர் ஆட்சி செய்யாத பிற பகுதிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தனது வாரிசுகளுக்கு தகுந்த உபதேசம் கொடுத்து வாழும் காலத்திலேயே தனக்கு அடுத்த கானை உருவாக்கிய சிறப்பு செங்கிஸ்கானையே சாரும். ஒரே மூச்சில் உட்கார்ந்து வாசிக்கக் கூடிய எழுத்து நடையில் உள்ள இந்த நூலை சீரான வேகத்தில் சிக்கலின்றி வாசிக்கலாம். அமேசான் கிண்டில் தளத்தில் நூல் கிடைக்கிறது..

    

                                      - அழகுராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்