ஓநாய் குலச்சின்னம்-ஜியாங்ரோங் (மொழிபெயர்ப்பு- சி.மோகன்)

https://youtu.be/FdVMmixWfKw

 ஓநாய் குலச்சின்னம்-ஜியாங்ரோங் (மொழிபெயர்ப்பு - சி‌.மோகன்)


     ஓநாய் குலச்சின்னம் எனும் இந்த நாவல் குறித்த விமர்சனங்கள் சீன தேசத்தில் ஏற்பட்ட கலாச்சார புரட்சியைப் பற்றியே பேசுவதாக உள்ளது. இந்த நாவலில் "நான்கு பழைமை" எனும் பழைய சிந்தனை பழைய கலாச்சாரம் பழைய சடங்குகள், பழைய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை எதிர்த்த சீன அரசின் செயல்பாடுகளையும், இயற்கை மீதான அதீத நம்பிக்கையையும், உணவுச் சங்கிலி பாதிப்பினாலான இயற்கையின் எதிர் வினைகளையும், மங்கோலியர்கள் பெரிதும் மதித்து தங்கள் சின்னமாக போற்றும் ஓநாய்களின் பிறப்பு முதல் அதன் முதுமை வரையிலான செயல்பாடுகளையும் அதனுள் ஒழிந்துள்ள நுட்பங்களையும், மங்கோலிய குதிரைகள், மான்கள், முயல், அன்னம், காட்டு அணில்கள், மாடுகள், மர்மோட்டுகள், எலிகள், மங்கோலிய நாய்கள் என மங்கோலிய மிருகங்களின் சிறப்புத் தன்மையும், மங்கோலியர்கள் சீனர்களை பார்க்கக்கூடிய போக்கும், மங்கோலிய சிறுவர்கள் மற்றும் பெண்களின் வீரமும், மங்கோலிய உணவு முறையும், அவர்களின் அங்க அசைவுகளும், மூட நம்பிக்கையோடான அறிவியல் பார்வையும், மேய்ச்சல் நிலம் மீது அவர்கள் கொண்ட அக்கறையும், டெஞ்ஞர் என்ற பெயரில் இயற்கையை தங்கள் உயிரினும் மேலாக வழிபட்டு தங்கள் ஆன்மா மீது நம்பிக்கை கொண்டு செயல்படும் மங்கோலியர்களது நடவடிக்கையும், ,செங்கிஸ்கானை பற்றிய நினைவு கூர்தலும், மங்கோலிய பிரிவினருள் உள்ள பண்பாட்டு முரண்பாடும், புத்தக வாசிப்பின் மேன்மையும், வாசிப்போடு சேர்த்து வாசித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதும், வாசித்ததை வாழ்க்கையின் தகுந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்வதும், மங்கோலியர்கள் ஒவ்வொரு மிருகத்தின் மீதும் காட்டக்கூடிய தனிப்பட்ட உணர்வு நிலைகளையும், ஓநாய் மற்றும் மங்கோலியர்களின் வேட்டை முறைகளும் போர் முறைமைகளும், நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் நட்புறவும், பீஜிங் பகுதியில் வரும் காலநிலை மாற்றங்களூடான வாழ்வியல் மாற்றமும், காலநிலைக்கு ஏற்ற மனிதர்கள் மற்றும் மிருகங்களின் உணவு மற்றும் உடலியல் மாறுபாடும் இந்த நாவலில் பேசப்பட்டு இருக்கிறது.


     இந்த நாவலில் ஆடுகளை ஓநாய் கவர வருதல், மான்களை ஓநாய்கள் வேட்டையாடுவதில் காட்டும் தீவிரம் மற்றும் அதற்கான திட்டம், மேய்ச்சல் நிலத்தின் பெரும் பகுதியை தன் பசிக்கு இரையாக்கும் குதிரைகளை ஓநாய் கொல்வதும், ஓநாய்களோடு குதிரைகளும், நாய்களும், மனிதர்களும் சேர்ந்து போரிடுவதும், மர்மோட்டுகளையும், முயல் முதலானவற்றை ஓநாய்கள் வேட்டையாட பயன்படுத்தும் நுட்பங்களும், ஓநாயின் பேரிழப்பும் வரிசையாக விறுவிறுப்பு குறையாமல் சொல்லப்பட்டுள்ளது.‌ குறிப்பாக ஓநாய் பற்றிய செய்திகள் வியப்பை ஏற்படுத்துவதாகவும் இப்படியும் மிருகங்கள் அறிவாற்றலோடு செயல்படுமா என்கிற சிந்தனையையும் ஏற்படுத்துகிறது. மங்கோலிய மக்கள் ஓநாயை வேட்டையாடினாலும் கூட அதன் தோலை விரிப்பாகவும், செருப்பாகவும் பயன்படுத்துவது கிடையாது. ஓநாய்கள் டெஞ்ஞர் எனும் சொர்க்கம் தரும் கடவுளோடு நேரடி தொடர்பு கொண்டது. மங்கோலியனின் இறந்த உடலை ஓநாய்க்கு உணவாக கொடுத்து ஆத்மாவை டெஞ்ஞருக்கு அனுப்பலாம். பட்சிகளின் முட்டைகளை மங்கோலியர்கள் சாப்பிடக் கூடாது. ஓநாய்களை அதிகம் வேட்டையாடக்கூடாது. ஓநாய்கள் மேய்ச்சல் நிலத்தைக் காக்கும் காவலர்கள் என பலவித பழைமைத்துவ நம்பிக்கைகள் பேசப்பட்டு இருந்தாலும் அதில் சிலவற்றை நாம் அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய தேவை உள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் மங்கோலியர்கள் கூறுவது போல மேய்ச்சல் நிலத்தின் காவலர்களாகவே ஓநாய்கள் விளங்கியுள்ளது. காட்டு விலங்குகளை சிறைப்படுத்தி மனிதர்கள் வளர்ப்புது தவறானது என்பதை ஜென் ஓநாயை வளர்க்க முடியாதது உறுதிப்படுத்துகிறது. பில்ஜியின் வேட்டை நுணுக்கங்கள், பாவோ சுங்காயின் செயல்பாடுகள், எல்ராங், எல்லோ, யிர் போன்ற நாய்களின் தன்மை, குதிரைகளின் வீரியம், போர்க்களத்தில் அவற்றின் செயல்பாடுகள், ஓநாய் முதலிய மிருகங்களை தோல் உறிக்கும் உத்திகள் பேசப்பட்ட இந்த நாவலில் ஜியாங் ரோங் தனது வாழ்வில் நடந்த பல அனுபவங்களை புனைந்து இறுதியில் புயல் குறித்தும் பேசியுள்ளார். ஜென் மற்றும் யாங் இருபது வருடத்திற்கு பின் கஸ்மாயை சந்தித்து பேசுவதையும் நாவலில் சொல்லப்பட்ட முதல் பகுதிகளை எல்லாம் நினைவு கூர்வதையும் வாசிக்கும் போது ஏதோ நான் அந்த மேய்ச்சல் நில அனுபவங்களை நினைவு கூர்வது போல கனத்த மனத்துடன் உணர்ந்தேன்.. இந்த நாவலை மிகச் சிறப்பான முறையில் தமிழ் சூழலின் தன்மைக்கு ஏதுவாக சி.மோகன் தந்துள்ளார்..


(மேலேயுள்ள பத்திகள் வாயிலாக ஓநாய் குலச்சின்னம் நாவல் குறித்த எளிய அறிமுகம் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இந்த நாவல் குறித்த மேலதிக தகவல்களை அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியின் இளநிலைத் தமிழ்த்துறை நடத்திய நூல் வாசிப்பு முற்றம் 32ஆம் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளேன். அந்த காணொளியை வாய்ப்புள்ளவர்கள் காணவும்.)


- அழகுராஜ்








கருத்துகள்

  1. ஓநாய் குலச்சின்னம் என்றும் நாவல் பற்றிய நினது கருத்துக்கள் செம்மையான மொழிநடையில் உள்ளது சிறப்பானதாகும்.இயற்கையை அதிகம் விரும்புபவர்களுக்கு இந்த நாவல் சிறந்த அனுபவத்தைத் தரும் என்பது திண்ணம்.உலகளாவிய சிறந்த நாவல்களை தமிழ் வழியில் அறிமுகம் செய்ததற்கு மனமுவந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாரி நாவலில் தமிழக மேய்ப்பர்களின் வாழ்வியல் வெளிப்படுவது போல, ஓநாய் குலச்சின்னத்தில் மங்கோலிய மேய்ப்பர்களின் வாழ்வியல் வெளிப்படுகிறது.. மிக்க நன்றி க்கா

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

துவக்குகளின் மினுப்பான "இன்னும் வராத சேதி” -அழகுராஜ் ராமமூர்த்தி