எம்.கே.டி. பாகவதர் கதை - விந்தன்
ஒரே திரையரங்குகளில் மூன்று தீபாவளி கடந்து இந்திய அளவில் வரலாறு படைத்த ஹரிதாஸ் படம் 1944ல் வெளிவந்ததும் அதில் தியாகராஜ பாகவதரின் பாடலும் வசனமும் பாராட்டப்பட்டதும் ஆரம்பத்திலேயே அழகாக எடுத்து இயம்பப்பட்டு இருக்கிறது. முதலில் பாகதவர் செய்த சாதனையும் அவரது இறுதிகாலத்தையும் சொல்லிட்டு விந்தன் அவரது சிறுவயது அனுபவங்களையும் அவரது குடும்பத்தையும் பற்றிச் சொல்கிறார்.
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராசன் எம்.கே.டி பாகவதராக மாறிய இந்த கதையில் அவர் தந்தை கிருஷ்ணமூர்த்தி தாய் மாணிக்கத்தம்மாள், அவரது தம்பிகள் கோவிந்தராஜன், சண்முகம் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடேசய்யர், பாகவதர் சித்தப்பா கோவிந்த ஆசாரி, தட்சிணாமூர்த்தி பிள்ளை, நடராஜ வாத்தியார், டி.பி.ராமகிருஷ்ணன், சூசையாப்பிள்ளை, தியாகய்யர், ராஜமாணிக்கம், இலட்சுமண செட்டியார், டி.கே.சண்முகம்,எஸ்.டி.சுப்புலட்சுமி, விளாத்திகுளம் சுவாமிகள், வரதராஜூலு நாயுடு, ராமநாதன், இயக்குனர் கே.சுப்பிரமணியன், ராஜா சாண்டோ, எல்லீஸ் ஆர் டங்கன், சத்தியமூர்த்தி, தேசிகவிநாயகம்பிள்ளை, ராஜரத்தினம், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், சுப்பையா, பி.யு.சின்னப்பா, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எனப் பலர் இந்த கதையில் அறிமுகமாகி பாகதவரின் வாழ்வில் உள்ள தங்கள் இருப்பை உறுதிப்படுத்துகிறார்கள்.
முதலில் பாகவதரின் சில குறும்புத்தனத்தை சொல்லி விட்டு அடுத்து அவர் கலை வாழ்வைச் சொல்கிறேன். பள்ளிக்கூடம் போகச் சொன்னால் கட் அடித்து விட்டு உய்யகொண்டான் ஆற்றில் நீரில் மூழ்கி பாடல் பாடி தன் நாட்களை கடத்தியுள்ளார். அவரது ஆசிரியர் அப்பாத்துரை ஏழைகளுக்கு கல்வி கற்றுத் தரும் தொண்டை செய்து வந்தாலும் கூட பாகவதர் அவர் வகுப்பை தொடர்ந்து புறக்கணித்தார். பின்பு அவர் அப்பா நீ பள்ளிக்கூடமே போக வேண்டாம். ஆற்றுக்கு போரேனு சொல்லி அந்த பக்கம் போகாத பேசாம வீட்லயே இருனு சொல்லிருக்கார். இது மட்டுமா மண்ணெண்ணெய் வாங்கச் சொல்லி அவர் அம்மா அனுப்புனதுக்கு எதிர்ல வந்த பையன் முறுக்கு திங்கிறதப் பார்த்து முறுக்கு ஆசை வந்து பாட்டில்ல தண்ணிய ஊத்திட்டு முறுக்கு வாங்கித் திண்ணுட்டு வந்துருக்காரு. ஒருதடவை சர்க்கஸ் பார்க்கப் போய் அங்க இருந்த குரங்கு கிட்ட வம்பிழுத்து ஓடி விழுந்து நெத்தியில் காயம் பட்டு அது அப்படியே தழும்பா மாறி அவரோட சேட்டைக்கு அடையாளமா இருந்திருக்கு. விட்டல் படத்துக்கு அவர் அப்பா தூங்குனதுக்கு அப்றம் அவரோட தம்பியைக் கூட்டிட்டு போயிட்டு வந்து வீட்ல படுத்திருக்காங்க, அவர் தம்பி கோவிந்தராஜன் படத்துல உள்ள சண்டைக்காட்சிய பற்றி அடி, உதை என கத்திக்கொண்டும் படத்தில் வந்த பாடலை பாடிக் கொண்டும் இருக்க அப்பா கண்டுபிடித்து ரெண்டு பேரையும் விசிறியை வைத்து விளாசியிருக்காரு. பாகவதர் கிட்ட அவரை விட வயதில் மூத்தவர் ஒருத்தர் வந்து எனக்கு பாட்டு சொல்லித் தாங்கனு சொன்னபோது இவர் எனக்கு சீடர்னு சொல்லி அவரை அறைக்குள் கூட்டிச் சென்று கிண்டல் செய்து பாட்டு சொல்லித் தந்து அவரைத் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி அம்மா கிட்ட திட்டு வாங்கியிருக்கிறார் இப்படி சின்ன வயசுல நிறைய குறும்புத்தனம் செய்பவாரகத் தான் பாகவதர் இருந்திருக்காரு. இப்படி விளையாட்டுத் தனமா ஓடுனது தான் கடப்பை எனும் ஊருக்கு அவரைக் கொண்டு போய் நிறுத்தி பெரிய பாடகராகவும் மாற்றியது.
ஒருமுறை அவங்க அப்பா தனது தொழிலை செய்யக் கற்றுக்கொள்ள சொல்ல பொற்கொல்லன் செய்யும் நுணுக்கமான வேலைகளுல் ஒன்று நகாசு சேர்ப்பது மிகவும் கவனம் செலுத்த வேண்டிய அந்த தொழிலை செய்து வந்த அப்பாவுக்கு பாகவதரால் உறுதுணையாக இருக்க முடியவில்லை. மாறாக தாளம் தட்டி பாட்டு பாட ஆரம்பிக்க ஒரு கூட்டமே இவர் வேலை செய்யும் இடத்தில் கூடி இவர் பாடலை மெய்மறந்து கேட்கும் வசியத்தை அவர் செய்தார். எதுக்குடா கூட்டம் கூட்டுறனு அவர் அப்பா கேட்டால் நான் பாட்டுக்கு வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்வார். அதற்கு அவரோட அப்பா நீ பாடாமல் வேலை பார்த்தால் கூட்டம் வருமானு கேட்பார் இவ்வாறு நல்ல மகிழ்வு நிரம்பிய உறவாகத் தான் இவர்கள் இருவரின் தந்தை மகன் உறவு இருந்துள்ளது. இப்படி இருந்ததாலோ என்னவோ அவருடைய அப்பா இறப்பின் போது மனமுடைந்து இலங்கையில் இருந்து சாத்திர சம்பிரதாயங்களை எதிர்த்து திருச்சியில் உள்ள அவரது ஊருக்குள் அவரது சடலத்தை எடுத்து வந்தார் என எண்ணத்தோன்றுகிறது. இவருடைய அப்பாவுக்கும் இவருக்கும் இடையில் சண்டை வந்திருந்தாலும் கூட அவரை பாகதவரும் பாகதவரை அவரும் அளவு கடந்து நேசித்துள்ளனர். சொல்லப் போனால் கிருஷ்ணமூர்த்தி சில நேரங்களில் மேடையில் தோன்றி நடித்து வந்ததை பாகவதர் முழு நேர தொழிலாக செய்து வந்தார் என சொல்வது எத்தனை பொருத்தமாக உள்ளது.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாகவதரைக் குறித்து "மக்கள் பாகவதரைத் தேடிக்கொண்டு போகிறார்கள்; நானோ அவர்களைத் தேடி போகிறேன்" எனச் சொல்லுமளவுக்கு புகழின் உச்சியில் இருந்த இசைவாணர் தியாகராஜ பாகவதர் முதலில் பாடல் மட்டுமே பாடினார், நாடகம் எழுதினார், நடித்தார் பின்பு தமிழ் திரைத்துறையின் முதல் உச்ச நடிகராக மிளிர்ந்தார் என்றால் அதற்குப்பின்பு அவரது கண்ணியமான உழைப்பும் கலையின் மீது அவருக்கு இருக்கிற பக்தியுமே காரணம் ஆகும். கண்ணாடி முன்பு நின்று பாடல் பாடி பார்த்து ராகத்திற்கு மட்டுமல்லாது பாடும் போது தனது முகமும் செய்கைகளும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினார். நடேசய்யர் மூலமாகத் தான் முதலில் முதலில் மேடை நாடகத்திற்கு பாகவதர் கொண்டு வரப்பட்டார். அவரை நடிக்க அனுப்புமாறு நடேசய்யர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட முறையை எத்தனை முறை வாசித்தாலும் சலிக்காது. அதற்கு கிருஷ்ணமூர்த்தி நாடகக்கலை குறித்தும் தான் நடித்தது போல தனது மகனும் நாடகத்திற்கு நடிக்கப் போவதைக் குறித்துப் பேசுவதும் மிகப் பொருத்தமாக எழுதப்பட்டு இருக்கிறது. பிழைப்புக்காக நடேச அய்யர் நாடகம் நடத்தல கலைக்காக நடத்துறார்னு பாகதவர் அவரோட அம்மாகிட்ட சொல்லும் இடத்தில் அவரது கலை மீதான பக்தி வெளிப்படுகிறது. அரிச்சந்திரா நாடகத்தில் பாகவதர் மயங்கி விழும் காட்சி அவரது அம்மாவைக் கத்தி அழுது ஓடி வரும் அளவு தத்ரூபமாக பாகவதரால் நடிக்கப்பட அந்த நடிப்பு பொன்னுவய்யங்கார் இனி இவன் உங்க வீட்டுப் பிள்ளை இல்லை, எங்க வீட்டுப் பிள்ளைனு சொல்லுவளவு இருந்துள்ளது. பின்னாளில் சொந்தமாக நாடகம் எழுதவும் நடராஜ வாத்தியாரிடம் பழகி அவர் மூலம் பாகவதர் எனப் பட்டம் பெற்று தனது உற்ற நண்பனாக மாற்றி தனது நாடகத்திற்கு பணம் வாங்கும் செலவு செய்யும் பெரும் பொறுப்பை அவரிடம் கொடுத்ததும் அவரது அப்பாவையே நடராஜ வாத்தியாருக்காக எதிர்த்துப் பேசும் அளவு இவர்கள் உறவு நிலை இருந்துள்ளது.
சூசையாப்பிள்ளையிடம் வேலை பார்த்து அவரிடம் சம்பளம் வாங்கி அதை அவருக்கே செலவு செய்தல், லட்சுமண செட்டியார் பதினைந்து நாட்கள் நிகழ்ச்சியின் முடிவில் பாகவதருக்கு கார் பரிசளித்தல், பல கலைஞர்கள் நிரம்பிய தஞ்சாவூர் உற்சவத்திற்கு போகும் கூட்டத்தை திருவையாறு நிகழ்ச்சிக்கு வரவைக்கும் அளவு மக்களுக்கு அவரிடம் இருந்த ஈர்ப்பு, ஓயாது நடிக்கும் அசாத்திய திறன், எஸ்.டி.எஸ் போன்றோருக்கு மேடையில் விட்டுக் கொடுத்து நடிக்கும் பாங்கு, புன்னகவாரளி பாடி பாம்பை வரவழைக்கும் அளவு இசையில் அவருக்கு இருந்த நேர்த்தியான ஒருமைப்பாடு, தன்னால் ஒரு பாம்பு கூட சாகக்கூடாது என்கிற நேயம், ஆன்மீக பக்தி, பேச்சில் தனித்தன்மை இருப்பது போல் இசையில் தனித்தன்மை படைத்து தனது பாணியை பிறர் பின்பற்றுவதை எண்ணி இன்றைய கலைஞர்களைப்(யாரையும் குறிப்பிட விரும்பவில்லை) போல கண்டிக்காமல் அவர்களை அரவணைத்து எனது பாணியில் பிறர் பாடுவது எனக்குத் தான் பெருமை எனச் சொல்லுமளவுக்கு உயர்ந்த உள்ளம், சேலத்தில் காந்திக்கு கூடிய கூட்டத்தைவிட தனக்கென பெரிய கூட்டத்தை வரவைத்த வரலாறு, தனது நிகழ்ச்சியில் நடந்த விபத்தை எண்ணி உருகியது, உயிரழந்தவரின் குடும்பத்திற்கு யாருக்கும் தெரியாதவாறு ஆயிரம் ரூபாய் கொடுத்த செய்தியானது( விந்தன் இந்த நூலுக்காக கதை கேட்கச் சென்ற போது திரட்டியுள்ளார்) வியப்பைத் தரக்கூடியது, அவர் வாழ்ந்த காலத்தில் இரண்டாயிரம் ரூபாயை இரண்டு குடும்பத்துக்கு எவரும் அறியாதவாறு தம்பட்டம் அடிக்காமல் மறைமுகமாக செய்த சிறப்புத்தன்மை, நடக்க சிரமமான பாதையில் முணங்கிய தனது நண்பர் ராமநாதனுக்கு களைப்புத் தெரியாதவாறு இருக்க நூறு ரூபாய் பந்தயம் வைத்து உடல் பருத்த அவருடன் ஓட்டப் போட்டியிட்டு தோற்றதை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் தன்மை, பவளக்கொடி படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ஐ.எல்.ஆர்.எம்க்கு உதவி செய்த நடிகர் என்ற பெருமை, தொழில் வேறு கொள்கை வேறு என இருந்தவர் பிற நடிகர்களை தனது ரசிகர்கள் வெறுப்பதை அவ்வப்போது அன்புடன் கண்டித்தமை, ஊர்க்கவுண்டர் ஒருவர் உதவியை நன்றி மறவாது தகுந்த நேரத்தில் வெளிப்படுத்திய தன்மை, கே.எஸ், ராஜா சாண்டோ, எல்லீஸ் ஆர் டங்கன் போன்ற இயக்குநர்களிடம் பவளக்கொடி, திருநீலகண்ட, அம்பிகாபதி போன்ற பகுத்தறிவு ஊட்டும் படங்களில் நடித்து தனது ஆன்மீக உணர்வை உள்ளேப் போட்டு குழப்பவில்லை. திருநீலகண்டர் படத்தில் கலைவாணருக்கு சுதந்திரம் அளித்து மூடத்தன எதிர்ப்பு காட்சிகள் இடம்பெற ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுக்கும் அளவுக்கு கலைமீதும் சககலைஞர்கள் மீதும் அதிக மதிப்பு கொண்டு விளங்கியது, ஆங்கிலேயருக்கு ஆதரவாக நடித்து வந்த பணத்தை அவர்களுக்கு தெரிந்தவாறே இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு கொடுத்த துணிச்சல், ஆங்கிலேயர் கொடுத்த திவான் பகதூர் பட்டத்தை வாங்க மறுக்கும் சுயமரியாதை, காந்தியை மதித்தாலும் அவரது சில கொள்கைகளில் வெளிப்படையாக முரண்படும் தனித்த சிந்தனை, ஒரு படத்தில் நடிக்கும் போதே மற்றொரு படத்தில் நடித்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தமாட்டடேன் என்ற கொள்கை. தனிப்பட்ட முறையில் மோதலின்றி தனது திருநீலகண்டர் பட வெள்ளி விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியை அழைத்தது அவரும் வந்து வாழ்த்தியது போன்ற பெருந்தன்மை, அண்ணாவுக்கும் அவருக்கும் இருக்கும் நட்பு, கொள்கைப் பிடிப்பு, தனது அசோக்குமார் என்ற பட விளம்பரத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்த எம்.ஜி.ஆர் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட போது அதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் கடந்து சென்றுள்ளார் இப்படி சாந்த சொரூபமாகவும் அதே சமயம் தனது கருத்தை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துபவராகவும் தனது வாழ்வில் பாகவதர் திகழ்ந்ததை இந்த கதையின் மூலம் அறிய முடிகிறது.
சும்மா இருக்கும் நேரங்களில் சிகரெட் பிடிக்காமல் சீட்டாடாமல் பிறரைக் குறை சொல்லாமல் புதிர் போட்டு விளையாடியும் சிலேடை பேசி சிரித்துமே பொழுது போக்கியுள்ளார். சினிமாவின் மூலம் அவரது சிகையலங்காரத்தை பிறர் பின்பற்றும் அளவு மக்களை வசீகரித்தார். திருவையாறு, யாழ்ப்பாணம் என்ற இரண்டு இடங்களில் மட்டுமே மக்களிடம் அவர் பேசியிருக்கிறார் அவர் மக்களிடம் பேசுவதைத் தவிர்த்து பாடுவதையும் நடிப்பதையும் மட்டுமே தனது கடமையெனக் கொண்டிருக்கிறார். பாகவதர் இயல் இசை நாடகமென முத்தமிழில் சிறந்து விளங்கினது மட்டுமல்லாது இசை மற்றும் நாடகத்துறையில் பல்வேறு பரிணாமம் அடைந்து தனது பெயரை முத்திரையாகப் பதித்ததோடு உச்சநிலையில் வளரும் போதெல்லாம் பலருக்கு போட்டியாகவே இருந்திருக்கிறார். லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிறை சென்றது, விடுதலையானது, அதற்கு பின் நடித்தாலும் மக்களிடை வரவேற்பின்றி படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் தயாரிப்பாளர்களுக்கு தனது பணத்தைக் கொடுத்து ஈடு கட்டி நோயுற்று மறைந்துள்ளார். பாகவதர் ஆன்மீகவாதியாக இருந்து வருணாசிரமத்தை கடைபிடித்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின் வந்தவர்களும் கூட சாதிய அடையாளமாக மாறி அவ்வப்போது பேசப்படுகின்றனர். அப்படி பாகவதர் ஒரு சாதியின் அடையாளமாக இருந்தால் இன்றளவும் அதிகம் பேசப்பட்டு இருப்பாரோ என்னவோ தெரியவில்லை. இவரது பட்டங்களுல் ஒன்றான ஏழிசை மன்னரா அல்லது எழிலிசை மன்னரா என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த கதையைப் பொருத்தவரை ஆங்காங்கே பாகவதர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளெல்லாம் இடம் பெற்றாலும் முழுமையடைந்த பாகவதர் வாழ்வாக இதைக் கொள்ள முடியாது என்றே கருதுகிறேன். ஆனால், பாகவதர் குறிந்து அறிவதற்கு நிச்சயம் இந்தப் புத்தகம் கை கொடுக்கும். இது கிண்டிலில் கிடைக்கிறது.
-ரா.அழகுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக