ரூஹ் நாவல் விமர்சனம் - ரா.அழகுராஜ்


 ரூஹ் - லஷ்மி சரவணகுமார்

     ரூஹ் நாவல் குறித்த பலரது பதிவுகளை பார்த்துள்ளேன். அந்த பதிவுகளைப் பார்க்கும்போதே இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற மன உந்தல் ஏற்பட்டது. லஷ்மி சரவணகுமார் அவர்களின் கானகனுக்கு பின்பு நான் வாசிக்கும் நாவல் இந்த ரூஹ் தான். இசுலாமிய மக்களை மையம் கொண்ட கதை என்பது முன்னுரையிலேயே தெரிந்து விட்டது. சீறாப்புராணத்தில் மணக்கோலத்தில் இருக்கும் பாத்திமாவின் கொடையும், இயேசு காவியத்தில் வரும் கானா ஊர் கல்யாண வருணனைகளும் தான் நாவலின் தொடக்கத்தில் எனக்குள் ஓடியது. ஒருவேளை அந்த இரண்டு காப்பியங்களையும் ஒரே நேரத்தில் நான் கல்லூரியில் படித்தது அவ்வாறு தோன்றுவதற்கான காரணமாக கூட இருந்திருக்கலாம். கல்யாணம் தான் இங்கும் நடக்கப்போவதாக நினைத்தேன்.ஆனால், சந்தனக்கூடு கொடியேற்றம் சாதி சமய சார்பின்றி இணக்கத்துடன் நடந்தது சிறப்பு. உண்மையிலேயே விழா என்றால் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவது தானே. நான் கடவுள் ஆர்யாவை அவனோட அம்மா பாக்குற மாதிரி தான் அந்தப் பக்கீரும் பார்க்கப்படுகிறான். துறவியாக மாறிப் போனவர்களை பார்க்கும் போது ஏன் இப்படி ஒரு நிலை உருவாகிறதோ! ஆனால், அது அவர்களையே அறியாமல் தான் ஏற்படுகிறது.. விவிலியத்தில் நோவா மிருகங்களை பேழையில ஏற்றும் மாதிரியே கப்பல்லே உணவு ஆடு மாடு கோழி எல்லாம் ஏற்றப்படுது. அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுக்குற மாதிரியான முடிவை அஹ்மத் கப்பலில் கொள்ளைக்காரர்கள் சூழ்ந்த போது எடுத்தது அவனது பொறுமையாக யோசிக்கும் ஓர்மையை வெளிப்படுத்துகிறது.


      பேரையூர் னா முத்துக்குமாரசாமி தும்பிச்ச நாயக்கனூர் என்கிற செய்தி எனக்கு புதிது. கால் வெறுமனே பரசிக்கிட்டு மட்டும் நடக்காது கவ்விப்பிடிச்சும் ஏறும்னு வேள்பாரி நாவல்ல நீலன் கதாபாத்திரம் பேசும்.அதேமாதிரி தான் ஜோதியும் அவன் நண்பர்களும் பேசும்போது செருப்புப் போட்டு மலையேறுறத பத்தி பேசுனது இருந்தது.


    இசுலாமிய வழிபாட்டு முறைகள் அவர்கள் நம்பிக்கைகள் நாவலில் அழகாக சொல்லப்பட்டுள்ளது. சிமோகா நகர் பற்றிய செய்தி அன்வருக்கு மட்டுமல்ல வாசிக்கும்போது எனக்கும் கூட பெரிதாகத் தான் தெரிந்தது. மரம் மற்றும் இரும்புத் தொழிலை ஆசாரி மட்டுமே செய்து வந்தனர். பின் இசுலாமியர்கள் செய்தனர். இசுலாமியர்களுக்குப் பின்பு தான் அந்த தொழில் அனைவரும் செய்யக்கூடிய ஒன்றாக பரவலாக்கப்பட்டது. நானும் ஒரு ஆசாரித் தொழில் செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவன் தான். இசுலாமியர்களை நாங்களும் எங்கள் சொந்தங்களும் சித்தப்பா சித்தி என்று தான் வயது வித்தியாசம் இன்றி அழைப்போம். அவர்களும் எங்களை அப்படித்தான் அழைப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு பிணைப்பு ஆசாரியர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையில் உள்ளது. அஹ்மத் முதல் நாள் உளி பிடித்த செய்தி என்னைத்தான் எனக்கே நினைவுபடுத்துகிறது. கட்டிட வேலையில் மம்பட்டி பிடிப்பதைப் போன்று இரண்டு மடங்கு வலி இருக்கக்கூடிய வேலை உளியைப் பிடித்து முதல் நாளில் முழுவதுமாக கொட்டாப்புளி வைத்து அடிப்பது. ஆனால் இதில் உளி சுத்தி என்று போடப்பட்டிருப்பது கூடுதல் வலி. ஆனால், வலி தெரியாத ஒரு கலையும் அதனுள் ஒழிந்துள்ளது. 


     ஆசையையும் இலட்சியத்தையும் சொன்ன விதம் சிறப்பு. தோற்பாவைக்கூத்திற்கு ஆண்டுத் தோலில் பொம்மை செய்வதை சொன்னது கருவாச்சி காவியத்தில் கோடாங்கி உடுக்கை செய்ததை நினைவுபடுத்தியது. அன்வர் உமர்‌ உறவில் வெளிப்படும்‌ அண்ணன் தம்பி பாசம் அலாதியானதாக காட்சி கொடுக்கிறது. பலதரப்பட்ட தொழில்களைக் குறித்த செய்தியும் ஆங்காங்கே கரிசல் வட்டார வாடையும் இந்த புதினத்திற்கு கூடுதல் அழகைச் சேர்த்துள்ளது. 

கானகன்ல வந்த பளியன்ல இருந்து வேறுபட்ட ஒரு பளியனின் குணம் ரூஹ் கதையில் இழையோடுகிறது. அன்வர் அவரது அண்ணன்கள், அன்பர் மனைவி ராபியா, ஜோதி என இந்த நாவல் முகமதியர்களது வாழ்க்கை, மராத்தியர்கள், கரிசல் வட்டாரத்தவர், சதுரகிரி மலை, கட்டையன் எனும் பளியன், கடல்கொள்ளைக்காரர்கள், சித்தர் என பல கதைகளை சொல்கிறது.‌ ஆனால், அனைத்துமே ஒன்றில் வந்தே முடிகிறது. கதைகள் பிரிந்த வெளியும் அவை இணைந்த முனையும் தேடியும் கண்டுபிடிக்க முடியாத வகையில் இந்த நாவல் அமைந்திருக்கிறது.. 

                                         - அழகுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்