அறிவார்ந்த பேச்சும் சலிப்பும் - அழகுராஜ் ராமமூர்த்தி


அறிவார்ந்த பேச்சும் சலிப்பும் - அழகுராஜ் ராமமூர்த்தி 



      “வாசிப்பு இல்லாத ஒருவரிடம் அதிக நேரம் பேசுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. நண்பர்கள், சுற்றத்தார் ஆகியோரிடம் பேசும்போது நகைச்சுவைக்கு அப்பால் அங்கு அறிவார்ந்த உரையாடலே நிகழ்வதில்லை.” என்ற ஜெயமோகனின் கூற்றையொட்டி பலர் எதிர்வினை ஆற்றியிருந்தனர். "அறிவார்ந்த" என்ற சொல்லே எதிர்வினைப் பதிவுகளின் மையமாக இருந்தது. அறிவார்ந்த உரையாடல் உலகம் முழுவதும் நாள்தோறும் வாசிப்பவர், வாசிக்காதவர் என்ற எந்தப் பாகுபாடுமின்றி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அறிவு என்ற சொல்லுக்கு அறிதல் என்பதே கல்விப்புலம் சார்ந்து தொடர்ச்சியாக சொல்லப்படும் பொருள். அறிதல் நாள்தோறும் புலன் இயக்கம் மூலம் சுற்றத்தார் மூலம் செயல்பாட்டிலேயே இருக்கிறது. 

    காலையில் தேநீர் கடைக்கு ஒருவர் செல்கிறாரென வைத்துக்கொள்வோம். அங்கு தேநீர் கடைக்காரர் ஊரிலுள்ள ஏதோவொரு புதிய செய்தியைச் சொல்கிறார். அது ஊரில் புதிதாக செயல்படுத்தப்பட இருக்கும் அரசு அல்லது அரசு சாரா நலத்திட்டங்களாக இருக்கலாம். அல்லது மாற்றப்பட்ட புதிய பேருந்து வருகை அட்டவணையாக இருக்கலாம். உள்ளூர் அரசியல் செயல்பாடாக இருக்கலாம். இவை அனைத்துமே அறிதல் வகைப்பட்டதே. தேநீர் கடையிலிருந்து முடி திருத்தும் கடைக்குச் சென்றால் அங்கு அதுவரை அங்கே பேசப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள், புதிதாக பரவிவரும் நோய்களால் இறந்தவர் பற்றிய தகவல்கள், மருத்துவமனை, சிகிச்சை பற்றிய தகவல்கள், திரைப்படத் துறை சார்ந்த பேச்சு என பலவற்றை தெரிந்துகொள்ள முடியும். இவையெல்லாம் வெறும் தகவல்கள் தானே என்று கடந்துவிட முடியாது. ஊரின் பெயரைச் சொல்லி ஒருவர் வழி கேட்கும்போது இணையவழியில் வரைபடத்தைப் பார்க்காமல் அந்த ஊருக்குச் செல்லும் போக்குவரத்து வசதி உட்பட்ட விபரங்களைக் கூறுவதும் அறிவின் செயல்பாடு தான். தன்னுடைய வட்டாரத்தில் குறிப்பட்டுச் சொல்லும் ஒரு நோய்க்குரிய சிறந்த மருத்துவரை பரிந்துரைப்பதும் அறிவு தான். 

    காலையில் மேய்ச்சலுக்கு தன்னுடைய மாடுகளை ஓட்டிச் செல்பவர் மாடுகளை இடைவெளி விட்டு ஆப்பு அறைந்து கயிறு கட்டி வருவதும் அறிவு தான். எந்தப் புத்தகத்தில் ஆப்படித்து கயிறு கட்டி எந்த இடத்தில் மாட்டை மேயவிட வேண்டும் என்ற தகவலை அவர் படித்து அறிந்தார் எனக் கேட்பதில் நியாயமில்லை. கட்டிடப் பணியில் ஈடுபடும் கொத்தனார், தச்சர் உள்ளிட்ட ஏகப்பட்ட பணியாளர்கள் ஒவ்வொரு கட்டிட அமைப்புக்கும் ஏற்ப ஒருவருக்கொருவர் பல மணிநேரம் பேசிக்கொள்வதில் அறிவு வெளிப்படத்தான் செய்கிறது. வாகனம் பழுது பார்க்கும் கடையில் வாகனம் பழுதானதையொட்டி வளரும் பேச்சு நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள், வாகனத்திற்குரிய பொருட்களின் தயாரிப்பு, கொள்முதல் என உலகளவில் விரிவதற்குள் அறிவு இருக்கிறது. இப்படி நாம் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் செய்யப்படும் செயல்களையொட்டிய அவரவர் அனுபவங்கள் வாயிலாக கிடைத்த பட்டறிவு பேசுபொருளாகி புதிய புதிய வேலைகளையும் தகவல்களையும் நாம் அறிந்துகொண்டு தான் இருக்கிறோம். உலகளாவிய அளவில் வாசிப்பில்லாத நபர்களும் பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களைக் குறித்தெல்லாம் பேசுகின்றனர். Danger என்ற சொல்லையும் அபாயம் என்ற சொல்லையும் வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு இரண்டும் ஒரே பொருளை உணர்த்தும் இரண்டு மொழி சொற்கள் என்பது தெரியவில்லை என்றாலும் கூட வாசித்து பொருள் தெரிந்தவர்களைக் காட்டிலும் அபாயத்திற்குரிய காரணங்களை அறிந்ததன் விளைவாக முன்னெச்சரிக்கையுடன் பொருளுணர்ந்து செயல்படுகின்றனர். இதனை நாம் அறிவின் வெளிப்பாடு என்று தானே கூற வேண்டும். அறிவார்ந்த உரையாடல் மற்றும் அறிவார்ந்த செயல்பாடு புத்தகம் வாசிக்காத சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

     அடுத்ததாக இந்தக் கூற்றில் இடம்பெறுவது சலிப்பு. இரண்டு நபர்களுக்கு இடையிலான பேச்சில் சலிப்பு ஏற்படக் காரணம் ஈடுபாடின்மை தான். பேச்சில் ஈடுபடும் இரண்டு நபர்களும் ஒத்த மனவோட்டம் உடையவர்களாக இருப்பின் நேரம் போவது கூட தெரியாமல் எவ்வித சலிப்புமின்றி பல மணிநேரம் பேசிக்கொண்டிருக்கலாம். ஒத்த மனவோட்டம் இல்லாதவர்களாக இருந்தால் பரஸ்பர அன்பு சலிப்பற்ற உரையாடலை நோக்கி பேச்சை இழுத்துச் செல்லும். சொல்வதை சுவைபட சொல்லும் போக்கும் பேச்சில் ஈடுபடும் நபரின் வசீகரமும் வெகுவாக சலிப்பைக் குறைக்கும் காரணிகள் ஆகின்றன. வாசிப்பு இல்லாத இரண்டு நபர்கள் அந்த நாளில் தான் சந்தித்த நபர்கள் செய்த வேலைகள் குறித்த மிக நுணுக்கமான உற்றுநோக்கலின் வெளிப்பாடாக தன்னுடைய பேச்சை அமைத்துக்கொள்ளும் பட்சத்தில் அது சலிப்பு ஏற்படுத்தாததாகவும் அறிவார்ந்ததாகவும் கட்டாயம் அமையும். 

     வாசிப்பவர்களிடையிலான உரையாடலில் கட்டாயம் அறிவுப் பகிர்தல் இருக்கும் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. அதேசமயம், வாசிப்ப்பவர்களைப் பார்த்து வெட்டியாக நேரத்தை வீணாக்காமல் உறுப்படியான வேலைகளைச் செய் என சொல்லும் நபர்களும் என் அன்றாட வாழ்க்கையைச் சுற்றி இருக்கவே செய்கின்றனர். இரண்டு பட்டயப் படிப்பும் இரண்டு இளநிலைப் படிப்பும் ஒரு முதுநிலைப் படிப்பும் நிறைவு செய்திருந்தும் தகுதியுள்ள ஒரு இடத்தில் வேலைக்கு அமர முடியாது இத்தகைய பட்டங்களைப் பெறாத வாசிப்புப் பழக்கமில்லாத ஒருவரைவிட பொருளாதாரத்தில் நான் ஏழ்மையாகவே இருக்கிறேன். கல்வியின் வழியாக பொருளாதாரம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தை மையமிட்டு படிக்கவில்லை என்றாலும்கூட பொதுப்பார்வை நம்மை பொருளாதார அளவீட்டில் வைத்தே அளவிட்டுப் பார்க்கிறது.  இந்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வாசிப்பை சமூகப் பரவலாக்க வேண்டும். ஆனால், அதற்குரிய புறச்சூழ்நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

     படிக்காதவர்கள் என்ற நோக்கில் வாசிப்புப் பழக்கம் இல்லாதவரிடையே அறிவார்ந்த உரையாடலை நிகழ்த்த முடியாது என்றும் கணக்கிடுவது சரியானதாக இருக்காது. அறிவு என்பது பலவகைப்பட்ட கிளைப் பரவல்களை உள்ளடக்கியிருக்கிறது. எது எங்கே எவரிடம் கிடைக்கும் என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டால் அனைவரிடமும் அறிவுப் பகிர்தலை நிகழ்த்த முடியும் என நம்புகிறேன். புத்தகங்களைப் பற்றிய உரையாடலை மட்டுமே அறிவார்ந்த உரையாடலாக கருத முடியாதல்லவா. புத்தகங்கள் அறிவை விரிவடையச் செய்கின்றன. பரந்துபட்ட சிந்தனைக்குரிய வெளியை திறந்துவிடுகின்றன என்றாலும் கூட வாசிப்பில் மட்டுமே அறிவார்ந்த சிந்தனை வெளிப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அடுத்தடுத்து பேசுவதற்குரிய கருத்துகள் வாசிப்பின் வழி வெளிப்படுவதால் வாசிப்பவர்களிடையே சலிப்பின்றி பேசலாம் என்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். வாசிக்கக் கூடியவர்களை ஒதுக்கும் போக்கு இன்றளவில் நடைமுறையில் இருப்பதை கண்கூடாக பார்த்ததும் உண்டு. நான் வாசிப்பின் வழி கண்டடைந்த படிப்பினைகளுக்கு எதிர்மாறான நபர்களிடையே பழகியதுமுண்டு. பிற்போக்குச் சிந்தனைகளின் ஊற்று வற்றாது சுரப்பவர்களிடையிலான பேச்சின் வழி நேரம் வீண் என்றாலும் கூட அந்தப் பேச்சின் வழியாக ஏதோவொன்று நமக்கு அறிய கிடைக்கத்தான் செய்கிறது. இதில் எவரையும் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. சூழ்நிலையின் கைதிகளாக அடிமைகளாக மக்கள் மாறியதன் விளைவு இது.

     மற்றொரு புறம் வாசிப்பு, படிப்பு என்பது போட்டித்தேர்வுகளுக்கான ஆயத்தமாக மட்டுமே மாறிவிட்ட சூழலும் உண்டு. அவர்களும் வாசிப்பவர்களாக படிப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களிடையே சலிப்பின்றி எத்தனை தூரம் பேச முடியும் என்பதும் கேள்வியே. அதேபோல வாசிக்கக்கூடிய அனைவரிடமும் உரையாடலை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? அப்படி ஏற்படுத்துவதன் வழி அவரவர் எதிர்பார்ப்புக்குரிய அறிவார்ந்த தன்மையை ஒருவருக்கொருவர் கடத்திக் கொள்ள முடியுமா? என்பதும் கேள்விகளே. வெறுமனே வாசிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு இச்சமூகத்தையும் சமுகத்தில் செயல்படும் நிறுவனங்களையும் அணுகிவிட முடியாது என்கிற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். அறிவார்ந்த உரையாடல் வாசிப்பவர்களிடையே நிகழ்வதன் வழி எத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படுகின்றன எனக் கேட்டால் அதற்கு மௌனமும் ஒரு பதிலாகவே அமையும். மன அமைதியை நாடுவதே வாழ்வின் குறிக்கோளாக இருக்க அதற்கென ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியைக் கடைபிடிக்கின்றனர். ஒலி வடிவில் அறிஞர்களின் உரைகளைக் கேட்பதோடு தற்போது கதை, நாடகம் முதலியனவற்றையும் ஒலி வடிவில் கேட்கின்றனர். பயணம் மேற்கொள்ளுதல், பாடல்களைக் கேட்டல், ஓவியம் வரைதல், விளையாடுதல் என்ற பலவகைச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாசிப்பும் வாசிப்பின் தொடர்ச்சியான அது குறித்த உரையாடலும் தேவைப்படுவோர் அதனைச் செய்கின்றனர்.

    வாசிக்கக்கூடிய ஒருவருடனான உரையாடல் சலிப்பைத் தருவதும் வாசிக்காத ஒருவருடனான பேச்சு மகிழ்ச்சியைத் தருவதும் இன்றளவும் நடந்துகொண்டே இருக்கிறது. ஜெயமோகன் தன்னுடைய கருத்தைக் கூறியிருக்கிறார். எதில் அவருக்கு சௌகரியமான உணர்வு தோன்றுகிறதோ அதைச் சொல்லியுள்ளார் என்பதாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. அவருடைய புறவய சூழலும் இந்தக் கருத்து தோன்றுவதற்கு ஒரு காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு அவரவர் தன் சூழலையொட்டி சிந்தித்து சகமனிதர்கள் ஒவ்வொருவருடனும் இயன்ற அளவு அன்பையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள முயற்சிப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கி.ராஜநாராயணன் பற்றி -ரா.அழகுராஜ்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்