கடிக்கும் சீதமண்டலம்

கடிக்கும் சீதமண்டலம் - அழகுராஜ் 




     கண்டராதித்தனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு சீதமண்டலம். இந்த கவிதைத் தொகுப்பிற்கு சுருக்கமும் ஆழமுமான முன்னுரையை கவிஞர் ஸ்ரீ நேசன் எழுதியுள்ளார். இதில் அவர் சொல்லக்கூடிய முக்கியமான தகவல் கவிஞர் கண்டராதித்தனுடைய கவிதை வெளியும் அவருடைய நேர் உலக வாழ்வும் பெருத்த இடைவெளி கொண்டது என்பதாகும். அதையே கண்டராதித்தனும் ஆமோதிக்கிறார். இன்றைய நவீன விமர்சன முறைக்குள் பலர் எழுத்து திட்டமிட்டு அமையக்கூடியது. உள்தரிசனம், உள்ளொளி என்றெல்லாம் கிடையாது என்ற கருத்தை முன்வைக்கின்றனர். கவிதையும் கூட அத்தகைய திட்டமிட்ட செயல்பாடு என வரையறுக்க நினைத்திடினும் கவிதைக்கும் ஏனைய இலக்கிய வடிவங்களுக்கும் இடையில் வேறுபாட்டு நிலை இருப்பதை கவிஞர் கண்டராதித்தனை கொண்டு நாம் அறிய முடிகிறது. உள்மனப் போராட்டம், பிரக்ஞையில் வெளிவரும் சொற்கள் போன்றவை மீது ஆழ்ந்த விமர்சனப் பார்வை வரும் இலக்கியச் சூழலில் கண்டராதித்தனின் இத்தகைய உணர்வு நிலை மதிக்கப்படுமா என்பது கேள்வியே. ஆனால் அதுவே உண்மை என்பது அவரது நிலைப்பாடு. இப்படியான தீவிரப் பிரக்ஞை நிலையில் இருந்து சொற்கள் வெளிப்படுமா? அவை கவிதைகளாக கருத்தரிக்குமா? என்பதற்கு விடையாக கண்டராதித்தனின் கவிதைகளை காணலாம்.


      கவித்தொழிலில் பின்னணி சூழலோடு இருப்பிட சூழலும் வாழும் நிலமும் அதனுடைய மொழியும் சுற்றி இருப்பவர்களுடனான உறவும் வெறுப்பும் இணைந்தே சொற்களாக உருவகிக்கின்றன. கவிதைகள் எல்லாமே கவிஞர்களின் உள்ளத்தை வெளிப்படையாக அறிவிக்கும் தன்மைகொண்டு காணப்படினும் அதில் பிறரொருவரின் வலியையும் துயரத்தையும் ஐயத்தையும் சந்தோஷத்தையும் காதலையும் தனிமையையும் மரபின் தொடர்ச்சியில் இருந்து பேசும் சாத்தியங்களாக கண்டராதித்தன் கவிதைகள் இருக்கின்றது. இவருடைய நீள் கவிதைகள் ஆழ்ந்த இன்பத்தையும் புதிய உலகின் திறப்பையும் ஏற்படுத்துவதோடு கவிதையை தொடர்புபடுத்தி வாசிக்கும் பயிற்சியையும் அளிக்கிறது. சீதமண்டலம் கவிதையின் அனுபவம் அதிகப்படியாக மனதைக் குழப்பி தெளிவித்து அலைக்களிக்கிறது. 


     “ஒழுக்க கேடுகளில் விளையும் துன்பத்தை விட தீர்மானமான ஒழுக்க விதிகள் விளைவிக்கும் துன்பங்கள் கடுமையானவை" என்ற கண்டராதித்தனின் வாசகம் அவரது கண்டராதித்தன் கவிதைகள் தொகுப்பின் தொடர்ச்சியே சீதமண்டலம் என கருதும் வெளியை ஏற்படுத்துகிறது. “அயோக்கியத்தனம், யோக்கியத்தனம்" இங்கு யோக்கியனாக வாழ்வதற்கு யோக்கியத்தனங்களை தனது குணநலன்களாக மாற்றிக் கொண்டு இச்சமூகத்திடம் தன்னை நிறுவிக்கொள்ள மனிதன் படக்கூடிய பாடுகள் அநேகமானது. ஜி.நாகராஜன் “மனிதன் மகத்தான சல்லி பயல்" என்பார். ஜி.என். சொன்ன இந்த மூன்று சொற்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அனுபவ மாறுதல்களை ஏற்படுத்த வலியது. 


     கண்டராதித்தன் மனிதர்களுடைய உள் மனத்தைத் திறந்து அது படும் பிரயாசங்கள், துன்பங்கள், துரோகங்கள், இன்பம், இன்பத்தை பெறும்போது அதனுடன் கூடி வந்து நிற்கும் பயம், பயத்துடன் வாழும் போது ஒழுக்க மீறுதல் தரும் சுகம் முதலிய உணர்வாக்கங்கள் சீதமண்டலம் தொகுப்பில் குறிப்பிடத்தக்க இடம் கொண்டுள்ளது. தழுவி முத்தமிட்டு கடிக்கும் போது பார்க்கும் அழகு கூடிய நெருக்கமான பார்வைகளை ஒழுக்க விதிகளை கடந்து தான் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதை கவனம் கொள்ளுதல் வேண்டும்.


      கல்யாணம் என்கிற கட்டமைப்பின் காரண காரியங்கள் மீது கற்பனவாதத்தை தொடுக்கும் செயலை அணிகலன்களையும் அவயவங்களையும் ஆதார ஊற்றாக கொண்டு ஒரு மாயக் கானலாக காண்பிக்கிறார். மூடுவதும் திறப்பதுமான தங்கச்சிமிழ் ஒன்றை திறவுகோலாக வைத்து சிறைபிடிக்கும் செருக்கு கூடியதாக ‘திருக்கல்யாண பாக்கியம்' கவிதை உள்ளது. காதலுக்கும் காமத்திற்கும் நடுவிலான திறவுகோலை கல்யாண குறியாக நிறுவியுள்ளார். நெடிய அகப்பொருள் மரபை கொண்ட தமிழ் வாழ் மனிதர்களுக்கு உள்வட்ட சுற்றினுள் கலப்பை கொள்ளும் கவிதையாகவும் ‘திருக்கல்யாண பாக்கியம்' கவிதை காணப்படுகிறது. 


      சமூக கற்பிதங்களுடன் கூடிய பால் மாற்றங்கள் ஒரு இணையற்ற பிரபஞ்சத்தில் ஊறி கிடக்கும் மூல மரண இன்பத்தை நிகழ்த்திக் காட்டும் போதையை இனியும் வெளி கொள்வோம் என துளித்துளியாக பெருக்கெடுக்கும் எண்ணங்களை ‘சுக்கிலச் சுருக்கு' கவிதை கூறுகிறது. இந்த கவிதையில் திருச்சாழல் தொகுப்பில் இளங்கோ, பூங்கோதை வலம் வரும் கவிதையில் இருக்கும் செவ்வியல் வேறொரு தளத்தில் நிற்கிறது. 


      காலங்களும் பொழுதுகளும் வேறு வேறு என்றாலும் அவற்றின் கணங்கள் வித்தியாசப்பட்ட அனுபவத்தை தருபவை. ஒரு இடத்தில் ஒரு நேரத்தில் நாம் செய்த அல்லது செய்யும் செயல்கள் அதே இடத்தில் நம் கண்களுக்கு மறைவாக செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன. அதன் வெளிப்பாடு இடத்துடன் கூடிய பின்னோக்கிய கலைப் பயணத்தால் கண்களின் ஒளிக்குள்ளாகாத மறைவான திரை கொண்டு தெரிகிறது. ‘மூன்று நாள்' கவிதையை நான் குழந்தைமையோடு வாசித்தேன். சிறு வயதில் கேட்ட ஒரு கதை தான் அப்போது கண்முன் நவீன வடிவில் தெரிந்தது. பாட்டி வடை சுடும்போது அந்த வடையை காகம் ஒன்று கொத்திச் செல்கிறது. கொத்திச் சென்ற வடையோடு மரத்தில் நிற்கும்போது, நரி ஒன்று வந்து பேச்சு கொடுக்கிறது. அதற்கு பதில் சொல்ல எண்ணிய காகம் வாயை திறந்ததும் அதன் அலகிலிருந்து வடை கீழே விழுகிறது. அதனை நரி கவ்விச் செல்கிறது இதுதான் அந்த கதையின் சுருக்கம். இந்தக் கவிதை சொல்லும் மாயத்தினை கதையுடன் இணைந்து பார்க்கும் போது ஏதோ ஒரு உணர்வு உள்ளத்தை பற்றிக் கொள்கிறது.


மூன்று நாள்


துக்கமாகவும்

கண்ணீருடனும்

கடந்துவிட்ட நேற்றை 

ஒரு நரி கவ்விப் போனதை பார்த்ததும் பார்க்காதது போலிருந்துவிட்டேன்


கொண்டைத் தலையுடன்

கண்களை

உருட்டியுருட்டி 

நமக்கெல்லாம் 

உயரேயொரு 

கிளையிலமர்ந்து

பசியாற்றும் பட்சியின்

அலகிலிருந்து உதிர்ந்தது

இந்த தாள்


நேற்றையும்

இன்றையும்

கடப்பதுபோல

நாளையைக் கடந்தும்

பறந்துகொண்டிருந்தது 

ஒரு பறவை


      ஓடும் நீரெல்லாம் வேறு வேறானவை. நாம் தினமும் ஆற்றைப் பார்க்கிறோம். ஆனால், நாம் பார்க்கக்கூடிய ஆறு ஒரே ஆறு அல்ல என்று தீராநதி நாவலில் வண்ணதாசன் குறிப்பிட்டிருப்பார். அதேபோல நாம் தினமும் மாலைப் பொழுதை அனுபவித்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்களையும் விதவிதமான மனிதர்களையும் கொண்டு ஆட்கொள்கிறது. அந்திச் சிறுபொழுது (ப.36) கவிதையில் ஒருநாளின் அந்தியை யுவதியிடம் பறி கொடுத்து விட்டு மறுநாள் அழகிய அந்தி வரும் என காத்திருக்கிறான். அந்தக் காத்திருப்பின் நடுவே உறக்கமும் சோர்வும் இருட்டிய வானிலிருந்து மழையும் பறவைகளும் வரிசை கிராமமாக நிழலிட்டு நிற்கின்றனர் அந்தியின் மீதான பிரியமான காத்திருப்பு தொடர்கிறது யுவதியும் காத்திருக்கும் அந்தியின் மேல் கொண்ட பிரியமும் அந்திப் பொழுதிற்கு மட்டுமே தெரியும் என்று கூறி இருவருக்கு மட்டுமான உறவை குறிப்பிட்ட காலத்துடன் பொருத்தியுள்ளார்.


     சில கவிதைகள் கனவு விளையாட்டை நிகழ்த்தி பதிலைத் தீர்மானம் செய்து தொடர் கேள்விக்குறிகளை அடுக்கி நினைவுகளை கிளர்கிறது. இதற்கு இந்த வாளை பரிசாகக் கொள்(ப.18) கவிதை தக்க சான்று. பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கையில் வாளைக் கொடுத்து தஞ்சைக்கு அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன். அந்த வாள் ஒரு அடையாளமாக அவனது உடலில் அமைகிறது. அப்படியான ஒரு அடையாளத்தை உடைய வாள் இக்கவிதையில் இருக்கிறது. சிரசை அறுப்பதாக முடிவினை தீர்மானம் செய்துவிட்டு சிரசை பரிசாக பெறுவதற்கு பரிசு, வீரம், அழகு, வாளைச் சுழற்றுதல் என்ற பலவித பண்புகளையும் செயல்களையும் சொல்லி வாள் என்றாலே அந்த வாளுடைய நினைவு வரும்படி செய்து ஆசையைத் தூண்டுகின்றனர். இறுதியாக நீ வாளை ஏற்று தான் ஆக வேண்டும் என்றும் நீ வாளை ஏற்காமல் போகலாம் ஆனால் வாள் என்ற சொல்லைக் கேட்கும்போது அல்லது வாளைப் பார்க்கும்போதோ இப்போது குறிப்பிட்ட வாளின் நினைவு வரக்கூடாது ஒருவேளை வந்தால் உன் சிரசை தந்து விட வேண்டும் என்பதாக கவிதை முடிகிறது. இது ஒரு மரபார்ந்த கற்பனை வழிபட்ட கவிதையாக தெரிகிறது. இந்த கவிதையின் சாயலில் இதே தொகுப்பில் தலைப்பிடப்படாத ஒரு கவிதை இருக்கிறது. அந்த கவிதையில் திருகி சுழற்றும் பூமியின் ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு திசையிலிருந்து நான் சந்திக்க வருவேன். வரும் சமயத்தில் வண்டுகள் சூழ்ந்த தோட்டத்து மலர்களை உனக்கு அளிப்பேன் மற்றும் மறு சுழற்சியில் வேறொரு திசையில் இருந்து வரும்போது அந்த மலர்கள் அங்கே இருக்கக் கூடாதென சொல்லப்படுகிறது. இந்த இரண்டு கவிதைகளும் எழுதப்பட்ட உத்தியின் மட்டத்தில் ஓரளவு பொருந்தி போகும் அம்சம் கொண்டதாகவும் கனவு விளையாட்டின் நிபந்தனை முடிவாகவும் காணப்படுகிறது.


      வாழ்க்கையை பலவாறாக வந்து போகச் செய்துள்ளது சீதமண்டலம் தொகுப்பு. அன்னத்தை அழைத்து வாருங்கள் (ப.28) கவிதையில் துல்லியமாக அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிப்பதாக சொல்லப்படுவது போல வாழ்க்கையில் இருந்து துயரத்தையும் துயரத்தில் இருந்து வாழ்க்கையையும் பிரிக்க ஒரு அன்னத்தின் உதவி தேவைப்படுகிறது. வணக்கத்திற்குரிய நாகத்திடம் நஞ்சில்லை கவிதையும் வாழ்க்கையில் நாம் செய்ய தயங்கும் செயலை செய்யத் தூண்டி அதன் மூலம் ஓர் விசித்திர அனுபவம் பெற உந்துகிறது. அனைவரது வாழ்விலும் காதல் இயற்கையாக ஏற்படுவது உண்டு. அப்படி தனது மனைவிக்கு ஏற்பட்ட காதலை முன்னிறுத்தி அவளது முன்னாள் காதலர்களை பார்க்க அலங்கரித்து அனுப்பச் சொல்வதும் அப்படி அனுப்புவது நாகத்தின் அருகில் நிற்பதற்கு சமம் என்பதாகவும் உவமிக்கப்படுகிறது. ‌


“ஆனால், கொஞ்சம் ஆபத்தானது

 அவ்வளவு தான் " என்ற வரியில் ஒரு துணிவு கொண்ட களமிறங்குதலும்,


“இப்போதுதான் நாம்

 கவனமாக இருக்க வேண்டும்" 

என்ற வரியில் பயம் கலந்த கவனமும் பாம்பு நாக்கை நீட்டுவதைப் போல் எட்டிப்பார்க்கிறது.


      தனிமையைப் பற்றிய கவிதைகள் சமீபகாலமாக அதிகமாக எழுதப்படுகிறது. தனிமை: உன்னுடனான பயணம் குறித்து (ப.86) கவிதையும் தனிமையை பற்றியதாகும். பயணத்தில் மரங்களைக் கடந்து செல்வதை 

“மறுதலிக்கப்பட்ட காதலைப் போல்

மரங்கள் பின்னோக்கி நகர்கின்றன" என்றும் வறட்சி பாழ்ந்த பகுதிகளை அவநம்பிக்கையுடன் காண்பதையும் தனிமையின் குறியீடுகளாக்கி அவற்றை தனிமையிடமே பேசும் தலைப்பிட்டு உரைக்கான தொனியின்றி விவரிக்கிறதாக இக்கவிதை அமைகிறது.


     நவீன காலகட்டமானது அதீத வேகத்தை நம்மிடம் கோருகிறது. ஒரு நாளில் எவ்வித யோசனையும் இன்றி நடந்து செல்லும் போது சாலையில் வந்து போகும் வாகனங்களையும் அதனை ஒட்டி செல்வோரையும் உற்று நோக்கினால் இவர்களெல்லாம் எதை நோக்கி போகிறார்கள் என்ற யோசனை ஊற்றெடுக்கும். அந்த அளவிற்கு நெகிழ்வற்ற வேகமும் இறுக்கமும் கூடியதாக இருக்கும் வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு முதலான மனித இன உற்பத்தி மற்றும் கழித்தல் நிகழ்வுகளும் பொம்மைத்தனமாக இருப்பதே பேசக் கூடியதாக பொம்மைகள் இடும் காடு(ப.72) கவிதை இருக்கிறது. அன்பு, அழுகை, ஆர்வமுடன் கூடிய ஒழுங்குகள் எல்லாம் அமைதியின் வசம் ஒப்படைக்கப்படும் நேர்த்தி கூடியதாக இக்கவிதை அமைந்துள்ளது.


      செயல்பாடும் செயல்பாட்டின்மையும் ஒரே மொழியில் வந்து நம் மீது உணர்வை சுற்றி கடத்தும் வகையில் புகைப்படத்தில் புறாவின் முட்டையைத் திருடுபவன் (ப.20) கவிதை இருக்கிறது. செய்யாத செயலின் மீதான சூழ்ச்சியும் பிரதிநிதிப் பக்கம் தன் தரப்பு நியாய விளக்கங்களை உறுதிபடக் கூறும் பாங்கும் செயல்பாட்டின்மை வசம் கூடிய துணிச்சலும் இக்கவிதையில் ஒரு சேர வெளிப்படுகிறது. வானரம் இழந்த அருவி (ப.70) கவிதையில் தந்தைக்கு அவரது நிர்வாக காரண செயல்பாடுகளை முன்னிறுத்தி ஒரு அழகிய வளம் கொழிக்கும் பிரவாகம் கொண்ட அருவி கொடுக்கப்படுகிறது. பின் அவரது இறப்பும் அடுத்தபடியாக சேர்கிறது. உடனே கை மாறுதலாக அவரது மகன் பக்கம் அருவி கொடுக்கப்படும் நாளாக ஆன்மாவிற்கு அர்ப்பணங்களை கடைபிடிக்கும் தை அமாவாசை நாள் அமைகிறது. மகனின் பராமரிப்பில்லாததால் செழிப்பின்றி அருவி மாறுகிறது. தட்டான்களும் கோரை புற்களும் தண்ணீர் பாசம் பிடித்த வழுக்குப் பாறைகளும் இல்லாத வறட்சி நிலமொன்று மகனுக்கு அளிக்கப்படுகிறது. சிற்றோடையையும் இரு மலைகளையும் கொடுத்து அருவியை வாங்கும் இடத்தை படிமம் ஆக்கும் போது மொத்த கவிதையினுடைய உட்பொருளும் மாற்றம் கொள்கிறது. 


     ஆனால் ஃ  நம்முடன் இருக்கும் (ப.42) கவிதை புதிர்த்தன்மை கொண்ட படிமத்தால் ஆனது. ஃ என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கிறது. ஃ நிறையும் பொழுதினை தவிர்க்கவோ விரும்பவோ சகிக்கவோ முடிவதில்லை. ஃ நம்முடன் இருக்கிறது அதனுடன் வாழப் பழகிக் கொள்வதற்கு ஒலிகளின் துணை அவசியமாக இருப்பதை மலைக் கோயிலின் மணியோசைடனும் சிறார்களின் மயங்கியதொரு பாடலும் ஒலிக்க மற்றொரு பக்கம் மௌனமும் கோஷமிடுகிறது. ஃ என்ற ஒலிப்போடு ஏனைய பல சப்தங்கள் இணைந்த கவி வடிவமாக இக்கவிதை மெருகேறியுள்ளது.


      தலைப்பிடப்படாத ஒரு கவிதையில் (ப.39) சூழலியல் அம்சத்தின் கருவும் அழகு கூடிய அன்பும் பரிணமிக்கிறது. ஒரு குடில் உருவாவதற்கு புழு, பூச்சி செடி, கொடி, மரங்களை துரத்தி அடித்து அழிக்க தலைவிரி கோலத்தில் மூதேவி வருகிறாள். மூதேவியை செழிப்பின் கடவுளாக மாரூயை வருவிப்பவளாக இதற்கு முன்பு வழிபட்டிருக்கின்றனர். நிலமும் உருவும் புலனாகாமல் வரும் மூதேவி சொல்லும் வார்த்தையாக அழகும் அன்பும் கூடி கவிதை உருவாகியிருக்கிறது. குடில் எழுப்புதல், மூதேவி வழிபாடு, கவிதையின் கடைசி மூன்று வரிகள் ஆகியவற்றின் மூலம் இக்கவிதையை புரிந்து கொள்ள முடியும்.


     ஹெர்பேரியச் செம்பருத்தி (ப.30) கவிதை முழுக்க முழுக்க கனவில் நிகழும் ஓர் அறிவியல் பயணத்தின் அல்லது விஞ்ஞான கற்பித்த மூளையின் படிம உருவம். ஆகாயத்தில் நட்சத்திரங்களுக்கு பதில் அது இருக்கும் அதே எண்ணிக்கையில் செம்பருத்திகள் நிறைந்து இருக்கிறது. வால் நட்சத்திரம் விழுவது போல உதிர்ந்து வரும் செம்பருத்திக்கு ஹெர்பேரியம் பற்றிய அறிவு இருப்பது தான் இக்கவிதையின் முக்கிய போக்கு. 


     கவி மனத்தில் சூல்கொள்ளும் கற்பனைத் தோற்றத்தை உயிராக்கி அந்த உயிரை பகிர்ந்தளித்து பிரிய வைக்கும் தன்மை மயூரா (ப.55) கவிதையில் இருக்கிறது. மயூராவின் செயல்பாடுகளை எல்லாம் சொல்லிவிட்டு அவரது தோற்றம் பற்றிய செய்திகளை இலை மறைவில் கொடுக்கும் அல்லது பகிர்ந்தளிக்கும் அவயவங்கள் மற்றும் நடைகளை வைத்து அறிய முடிகிறது. மயூரா பறவையின் குரலும் பெண்களின் கூந்தலும் சர்ப்பத்தின் வளைந்து நெளியும் நடையும் கொண்டவளாக கவிமொழியில் பேசும் கவிஞனுக்கு முத்தம் கொடுத்துப் பிரிகிறாள். 


     கோதை (ப.54) கவிதையில் மயூராவை பற்றி சொல்லும் போது சரயுவையும் நித்யாவையும் பேசாமல் இருக்க முடியாது. படகோட்டியின் படகு கனமாக மாறிவரும் நிலையில் அங்கு இருக்கும் கோதைக்கு வயது என்ன? அவளின் செயல் ஏன் இப்படி இருக்கிறது? என்பது முதலானவை கோதை பற்றிய கதைகளது வார்ப்பின் துளியாகவே கவிதைக்குள் மிஞ்சுகிறது.


      சிறுமி சரயு (ப.73) கவிதையில் உறக்கத்தில் சிரிக்கும் சிறுமியாக வரும் சரையு, சரயு (ப.56) கவிதையில் முதிர்வடைகிறாள். இரண்டு சரயுவையும் ஒரே ஆளாக பார்க்கும்போது, இரண்டு கவிதைகளுக்கும் உள்ளாக ஒரு நாவலுக்கான துடிப்பொளி கிடைக்கும். இருவரும் வேறு வேறானவர்கள் என்ற பட்சத்தில் ஓடும் சரயு நதியின் மண் அரிதலும் கல் மோதலும் ஓட்டமடைகிறது.


      நித்யா “கண்டராதித்தன் கவிதைகள்"இல் இருந்து “திருச்சாழல்" வரை வரக்கூடிய ஒரு பெண். நித்யா மட்டுமே காயசண்டிகை, மாதங்கி, மயூரா, சரயு போன்றவர்களிடமிருந்து விலகி தனித்து தெரியும் பெருங்காதலுக்கு சொந்தக்காரியாக கண்டராதித்தனின் கவிதைகளில் தெரிகிறாள். இதற்கு காரணம் இந்த கவிதையில் இலக்கியம் குறிப்பாக நவீன இலக்கியம் நேரடியான பேசுபொருளுக்கு உள்ளாகி உரையாடலாக விரிந்து உவப்பான பேச்சாக மாறுகிறது. நித்யா வழங்கிய தருணங்கள் (ப.81) ஏன் சாத்தியமில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது (ப.82) என்ற இரண்டு கவிதைகளையும் சேர்த்து வாசிப்பது மட்டுமே ஏதோ ஒரு முடிவை நோக்கி நம்மை இட்டுச் செல்லும். பார்க்கும் பெண்கள் பற்றிய நினைவு தன்னை அறியாமல் தோன்றும் பொழுதில் வரும் அப்பெண் குறித்த காட்சி எது என்பது தொல்லை தரும் இன்பமான நினைவாக இருக்கும். அப்படியான நினைவுக்கு சொந்தக்காரியான நித்யா கண்டராதித்தன் கவிதைகள் தொகுப்பிலிருந்தே கண்டராதித்தனின் கவிதைகளுக்குள் புகுந்து பின்தொடர்வது தெரிகிறது. லியோ டால்ஸ்டாய் எழுதியுள்ள “புத்துயிர்ப்பு" நாவலின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் கத்யூஷா மற்றும் நெஹ்லூதவ். இவ்விரு கதாபாத்திரங்கள் குறித்து அறிமுகத்தையும் அந்த நாவலின் வழியாக அடைந்து அவர்கள் பற்றிய முன்னறிவோடு தன் நிலைப்பாடு கொண்டிருந்து “நித்யா வழங்கிய தருணங்கள்" கவிதையை வாசிப்பது நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும். இந்த கவிதையின் தொடர்ச்சியாக “ஏன் சாத்தியமில்லை என்னால் புரிந்து கொள் முடிகிறது" என்ற கவிதை இருக்கிறது. இந்த கவிதை பௌதிக வழியிலான கனத்தையும் அதன் தேவைகள் மற்றும் அவசியமற்ற நிலையையும் ஓடிக்கொண்டிருக்கும் உலகின் இத்தகைய பௌதிக இருப்பு அல்லது பகட்டு காட்டும் பெரும் இட அடைப்பையும் ஒன்று சேர்த்து புரிய வைக்கும் பணித்தலை மென்மையாக நகர்த்துகிறது. புத்துயிர்ப்பு நாவலின் கத்யூஷாவையும் நெஹ்லூதவையும் தெரிந்தவர்களுக்கு இளங்கோவும் நித்யாவும் யாரென ஓரளவு புரிய முடியும். இந்த கவிதையை இதற்கு முன்னும் பின்னும் எழுதப்பட்ட கவிதைகளிலிருந்து தனித்து தெரியும் வகையிலான ஒரு நீள் கவிதையாக வடித்திருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும் வகையில் இரண்டு கவிதைகளும் ஒன்றாக சேர்ந்திருக்கிறது. பௌதீகரீதியிலும் பொருளியல் வழியிலுமான தொடர்பு குழப்பமும் தேவையும் இன்னும் சற்று பருத்திருந்தால் நீள் வடிவமாக இக்கவிதை மாறியிருக்கலாம். காயசண்டிகை, மாதங்கி ஆகிய பெயர்களுக்கு பின்னே காப்பியத்தின் கதாபாத்திரத்தன்மையும் புராண தகவல்களும் கிடைக்கிறது. இதனோடு சேர்ந்து நித்தியாவும் சரயுவும் கவிதை முழுக்க அங்கங்கே உலாவி தன் இருப்பை கவிதைகளுக்குள் நிறுத்துகின்றனர். இப்படியான பெயர்கள் மூலம் கவிதைகளுக்குள் கண்டராதித்தனின் கலை மனம் தொடர்ந்து வருகிறது. 


      ஞானப்பூங்கோதையையும் நம்மால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. செவ்வியல் கவிதைகளையும் கண்டராதித்தன் எழுதியுள்ளார் என்பதற்கு ஞானப்பூங்கோதை சான்று.


     “பாடிகூடாரம்" தொகுப்பின் “வள்ளலார் வந்திருக்கிறார்" கவிதையில் நாய்கள் அலைகின்றது. தமிழ் இலக்கியத்திற்குள் நகுளுடன் ஓவிய இராமனுடனும் அலையும் நாய்களை கண்டராதித்தன் வள்ளலாருடன் பயணிக்க விடுகிறார். எத்தனையோ நாய்கள் வந்து போனாலும் அவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. அதேபோல துயர நட்சத்திரம் (ப.74) கவிதை இருக்கிறது. ஆகாய படிமத்தில் செம்பருத்தியை செருகியது போல அலைகளுக்குள் நட்சத்திரம் இருக்கிறது. அதனை தூண்டில் போட்டு பிடித்து புசிக்கலாம். இக்கவிதை நட்சத்திரம் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கும் காலத்திற்கும் யுவதி தாளாத முதுமையடையும் நாட்களுக்குமான இடைவெளிக்குள் இருக்கிறது.


       மரபை படிமமாகவும் மொழியாகவுமாக்கி கனவின் வழியே கவிதை நிகழும் போது அதனை மரபின் துணை கொண்டு நவீனத்துவப் பார்வையில் பார்க்கும் நிலை கொண்டது கண்டராதித்தனின் கவிதைகள். யாளிகள் ஓடும் புனைவுகளான புராணத்தில் நடந்து முடிந்த பக்தி இலக்கியம் அரசியல் ஓட்டங்கள், நவீன இலக்கிய கதாபாத்திர தன்மைகள் ஆகியன சூடப்பெற்ற இக்கவிதைகளில் வினோத ஜந்துகளும் முனிவர்களும் தளத்தின் தொன்மை இறுகிய கதைகளும் நிழலாட்டம் ஆடுகின்றன. கவிதை வாசிப்பு அவரவர் மனநிலையையும் சூழ்நிலையையும் அவர் பெற்றுள்ள அறிவையும் அடைந்துள்ள அனுபவங்களையும் உள்ளடக்கியது என்பதை இக்கவிதைகளின் வாயிலாக நாம் தெளிவாக உணர முடியும்.


      மரமான பெயர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கதைகளும் சில சமயம் கவிதை வாசிப்புக்குத் துணை போகின்றன. காயசண்டிகையும் மாதங்கியும் அப்படியானவர்களே. காயசண்டிகை என்ற கதாபாத்திரம் மணிமேகலை காப்பியத்தின் ஒரு கிளைக்கதை.  விஞ்சையர் குலத்தைச் சார்ந்த காஞ்சனின் மனைவியின் பெயர் காயசண்டிகை. விஞ்சையர் குலத்தவர்கள் வித்தைகளும் மந்திர மொழியும் தெரிந்தவர்கள். எப்படி வேண்டுமானாலும் உருமாறும் ஆற்றல் வாய்ந்தவர்களாக அவர்களது கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயத்தில் பக்தியிலும் துறவிலும் முதிர்ந்த விருச்சிக முனிவன் தனது பசியை 12 வருடங்கள் வரையிலும் கட்டுப்படுத்தும் சக்தி பெருகிய பழம் ஒன்றை காட்டுக்குள் வைத்துவிட்டு நீராடி வரச் செல்கிறார். அந்தப் பழத்தை விஞ்சையர் குல பெண்மணியான காயசண்டிகை மிதிக்கிறாள். இதனைக் கண்டு கடுங்கோபமடைந்த விருச்சிக முனிவன் விஞ்சைய மந்திரம் அவளுக்கு மறந்து போகுமாறும் 12 ஆண்டுகள் கடுமையான பசி அவளை சூழ்ந்திடவும் சாபம் விடுகிறார். இந்த சாபத்தோடு குறிஞ்சி மலரின் பிறப்பு காலத்தோடு ஒட்டிய அந்த அரிய பழத்தை அவர் புசிக்கும் போதே சாபம் விமோசனம் அடையும் என்ற கட்டளையும் சேர்ந்திருக்கிறது. மணிமேகலை ஆதிரையிடம் பிச்சை வாங்கிய பின் அமுதசுரபியில் சுரந்திட்ட உணவை காயசண்டிகை சாப்பிட்டு முனிவரின் சாபத்திலிருந்து விடுதலை அடைகிறாள். விடுதலை அடைந்தபின் மந்திர மொழியின் துணைகொண்டு தன் உலகம் நோக்கிச் செல்லும்போது துர்காவின் விந்தை மலையையும் துர்காவையும் கண்டுகொள்ளாமல் அவள் செல்கிறாள். அப்போது துர்கிவின் கோபத்தின்குள்ளாகி சாவிற்கான சாபம் குத்தி காயசண்டிகை சாகிறாள். அந்த நேரத்தில் பூமியில் மணிமேகலையின் பின்னே இளவரசன் உதயகுமாரன் துரத்துவதால் மணிமேகலை காயசண்டிகை உருவமடைந்து அவனிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். அச்சமயம் தன் மனைவியைத் தேடி பூமிக்கு காஞ்சனன் வருகிறான். உதயகுமாரனின் செயலைப் பார்த்த காஞ்சனன் என் மனைவியை நீ எப்படி துரத்தலாம் என்று இளவரசனைக் கொல்கிறான். அந்த கொலைக்குரிய தண்டனையாக காஞ்சனனுக்கு சாவு அளிக்கப்படுகிறது. இதுதான் அந்த கிளைக்கதையின் சுருக்கம். இந்த கதையில் வரும் காயசண்டிகையின் அலைபாயுதலோடு காயசண்டிகை கவிதையில் வரும் உதிரம் சொட்டும் நொய்யல் ஆற்றின் கிடப்பையும் திருவெண்காட்டு அகோரமூர்த்தியையும் சித்திரகுளத்தின் மர்மமிகு கலைவயப்பட்ட முடிச்சுகளையும் கொண்ட கவிதையாக காயசண்டிகை இருக்கிறது.


       மாதங்கி மயக்கம் (ப.66) கவிதையில் வரும் மாதங்கி என்ற சொல்லுக்குப் பின் ஒரு கதை இருக்கிறது. திருநாங்கூரில் மதங்க முனிவரின் மகளாக பிறக்கும் பார்வதிக்கு பெயர் தான் மாதங்கி. இந்த மதங்க முனிவர் பிரம்மனின் மகன் ஆவார்‌. அவரது மகளாகிய மாதங்கிக்கும் சிவனுக்கும் திருவெண்காட்டில் திருமணம் நடக்கிறது இதுதான் மாதங்கி என்ற பெயருக்குரிய பின்னணி தகவல். “விளையன் காட்டு மந்திரக் கனியை" எனத் தொடங்கும் முதல் வரியில் விளையன் யார் விளையனின் காடு எது என்பதை அறிந்த பின்பே கவிதை வாசிப்பு தொடங்குகிறது. கவிதையின் கடைசி வரி “பாவம் மாதங்கி" என முடிகிறது. இந்த இடத்தில் கவிதையில் உட்பொருளுக்குள் ஓடி மிதந்த மாதங்கி ஒளிகிறாள். பிற கவிதைகளை மீது காப்பிய மற்றும் புராணக் கதைகளை பொருத்த முடியும் ஆனால் இந்த கவிதையில் மாதங்கி பற்றிய கதையினை பொருத்தி பார்ப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது. காயசண்டிகை கவிதைக்குள் பொருந்தி போவது போல மாதங்கியினுடைய கதை பொருந்தவில்லை. பொருத்தப்பாடுள்ள பொருத்தப்பாடற்ற கவிதைகள் என இரண்டு வகைமாதிரி இத்தொகுப்பில் உள்ளது என்பதற்கு இந்த கவிதை ஒரு உதாரணம்.


       “அன்னத்தை அழைத்து வாருங்கள்" கவிதையினை அறிவியல் கண்ணோட்டம் ஏதுமின்றி அணுகுதல் வேண்டும். அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது பலகாலம் வழக்கில் இருக்கிறது. இந்த கவிதையில் வாழ்க்கையிலிருந்து துயரத்தையும் துயரத்திலிருந்து வாழ்க்கையையும் பிரிப்பதற்காக அன்னத்தின் உதவி தேவைப்படுகிறது. தேவாரப் பாடல் ஒன்றில் திருநாவுக்கரசர் பேரின்ப வீட்டையும் பொன்னுலக வாழ்வையும் சேர்த்து பேசி இருப்பார். உணவாகிய அன்னமும் பறவை அன்னமும் பாதி பாதி பொருள் கொண்டு புரியும் கதவாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.

“அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் ஏலுமிப் பூமிசை

அன்னம் பாலிக்கு மாறுகண்டின்

இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே"


       “துஞ்ச போகும் முதியவர்" கவிதைக்குள் வீரட்டானம், ஈசான்யம் என்ற இரண்டு சொற்கள் வாயிலாக நுழைய முடியும். இவ்விரு சொற்களும் திருக்கூந்தலூரையும் அங்கு நிகழ்ந்த ஒரு புராண சம்பவத்தையும் ஒட்டியதாக உள்ளது வீரட்டானம் திருக்கூந்தலூரில் கோயிலின் ஈசான்ய மூலையிலிருக்கும் தெப்பத்தில் சீதை நீராடியதால் ஊருக்கு திருக்கூந்தலூர் என பெயர் வந்திருக்கிறது. இந்த கவிதையில் இரண்டு யுவதிகள் குளத்தில் இறங்குகின்றனர். ஒரு பெரியவர் வடக்கிருக்கிறார். அந்தப் பெரியவரை குறிஞ்சி பாடிய கபிலரென கொள்வதற்கு சங்கப் பாடல் ஆதாரம் ஆகிறது. 

 “அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்

எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!" புறநானூற்றின் 112 ஆம் பாடலில் குறிப்பிடப்படக்கூடிய பாரி மகளிர்கள் தான் இக்கவிதைகள் வரும் இரண்டு பெண்களாக இருக்கின்றனர். 


      “அவர் யாராக நம்முடன் இருக்கிறார்" என்ற கவிதை பெருமாள் திருமொழியின் சாயலுடையது. 

”“தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்

தண்ணுமை ஏக்கம் மத்தளி தாழ்பீலி

குழல்களும் சீதமும் ஆகி எங்கும்

கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு"

      என்ற திருமொழி பாடலின் இசை குறித்த நான்கு ஒப்புமைகளோடு கற்பனாவாதத்தின் நிகழ் இயல்பும் தொட்டு மனமார்ந்த தத்துவச் சாயலோடு நம்மில் யாரோ ஒருவர் கடவுளாக இருக்கிறார் என்ற உள்ளுணர்வு வயப்பட்ட தெறிக்கும் சொற்கட்டுகளோடு முடிகிறது. வீதிகள் நிறைந்து வரும் இக்கவிதையும் கோவிந்தன் வரும் திருமொழியும் நேர்க்கோட்டில் நின்று அதனதன் தன்மையோடு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.


      கண்டராதித்தன் எழுதிய நீள் கவிதைகளில் முக்கியமான கவிதையாக சீதமண்டலம் கவிதையைக் காணமுடியும். நீள் கவிதைகளை வாசிப்பதில் சவாலும் இன்பமும் ஒருவகையான திருப்பங்கள் கூடிய அல்லது திருப்பங்களால் ஆன மனநிலை உருவாக்கமும் கூடி வருவது எப்போதுமே நிகழ்வதுண்டு. நீள் கவிதைகளில் புராணத்தின் சாயலும் கதைத்துவ திருப்பங்களும் நொடிக்கு நொடி நிகழும் போது அதனுடன் பின்னேறிச் செல்வதில் எங்கே கவிழ்ந்து விடுவோமோ என்கிற அச்சவுணர்வோடு ஒருவித புத்துருவாக்க கனவாக்கம் கனவு நிலையிலேயே தோன்றும் நிலைகளும் கைகூடி நிற்கிறது. இத்தகைய கனவாக்கச் செயல்பாட்டின் தூண்டுதலாக நீள் கவிதைகளை நாம் பொதுவாகக் கூறலாம். அதில் கண்டராதித்தனின் கல்குதிரை இதழில் வெளியான கவிதைகளும் சீதமண்டலம் கவிதையும் கவித்தொழிலின் கடத்து நிலை தோற்றுவாயை இடிப்பதில் முக்கியமானதாக இருக்கிறது.


        சீதமண்டலம் என்ற சொல்லைக் கேட்டவுடன் நான் நினைவில் நிறுத்தியது அல்லது எனது யோசனைக்குள் கொண்டு வந்தது புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம் தான். ராமாயணம் கதைக் கோர்வையை அவரவர் பக்கம் நின்று பேசும் சாத்தியங்கள் இந்திய இலக்கியங்கள் அனைத்திலும் பெருகியவாறே இருக்கிறது. தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம் அப்படியான ஒன்று. பகடி தொனிக்கும் மொழியில் நாரதனின் சொல் விளையாட்டுகளால் ஆன நாரத ராமாயணம் சிரிப்பூட்டும் இயல்பில் கதைக்குள் வரும் ஒவ்வொருவரையும் கலாய்க்கக்கூடியது. சீதமண்டலம் என்ற சொல்லுக்குள் ஏதோ ஒரு மாயை ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பூதாகரத்தின் துளியும் நாரத ராமாயணத்தின் நினைவோடு இணைந்து தெரிந்தது.


     சீதமண்டலம் கவிதையை வாசித்த பின்பு அதற்குள் எதிர்பார்த்ததைப் போல கனவு கோட்டைகளும் கற்பனை பாத்திரங்களும் வாதப்பிரதிவாதங்களும் தகவல் பரிமாற்றமும் பரிமாற்றத்தின் நினைவும் மகிஷபுரி -கருடபுரம் என்ற இரண்டு அரசுகளுக்கும் அந்த அரசினுடைய தலை மக்களுக்கும் இடையே மலரும் ஒப்பந்தங்களும் வேதாளம், மாயத்தன்மை பொருந்திய விருட்சம், விருட்சத்துடன் ஆதிகால முதல் ஆதாம் ஏவாள் தொடங்கி தொடர்பில் இருக்கும் சர்ப்பமும் மகிஷபுரியின் பாதாளியும் அவளது கட்டளைகளுடன் கூடிய சாப சொற்களும் கவிதை நகர்வில் படிப்படியாக வந்து திடீரென பெருவீச்சையும் சில நேரங்களில் எதிர்பார்த்த நிகழ்வுகளுடன் கூடிய திருப்பங்களையும் சிறிய வீச்சுடன் நிகழ்த்துகிறது.


       சீதமண்டலம் கவிதையின் பிரதானம் ஒரு மாற்று உடல் வாகுடன் கூடிய கனவில் தோன்றும் கூனன். வேதாள உலகின் அழிவை ஒட்டி கனவில் காட்சியான ஒற்றை கையை நெளிந்து ஊரும் பாம்பாகக் கொண்ட கூனன் பிறக்கிறான். ஒரு கையை பாம்பாக பெற்ற கூனனுக்கு யோனி உதிர்ந்த கருடபுர இளவரசியின் உடனான காதலும் பாம்பு கை நீங்குவதும் இக்கவிதையில் வரும் ஒரு திருவிழா நாள் கடைசி பகுதியாக இருக்கிறது சில நேரம் கலிங்கத்து பரணியின் போர்க்களத்தில் நிற்கும் காளியை நினைவூட்டும் விதத்தில் விழிகளையும் சுட்டு விரலை சூடோடு தின்னும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. குடலில் காரம் சேர்ப்பதும் குருதியை குளிப்பதன அறைக்குள் கொண்டு செல்வதும் அறுத்த தொடையின் சத்தான பாகத்தை தின்னுவதும் இந்தப் பகுதியில் மரபான கற்பனைக்குள் நின்ற சிற்றிலக்கிய சங்க இலக்கிய போர்க்களக் காட்சிகளின் கொடூரத்தை பேசுகிறது. கலிங்கத்துப்பரணியை இத்தொகுப்பில் உள்ள “நற்பிறப்பு" என்ற கவிதையுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதன் வாயிலாக கண்டராதித்தனின் கவிதைகளுக்கும் நீள் கவிதைகளுக்கும் இடையிலான வித்தியாசங்கள் தெளிவாக புலப்படுகிறது.


      சீதமண்டலம் கவிதையில் சாபத்திற்கு பின்னே புயலுக்குப் பின் அமைதி என்றவாறு ஓர் அரசுருவாக்கம் ஆரம்பமாகிறது. அங்கு போர்க்களத்தில் நின்ற சகலரும் சீத நீராக திரிந்து ஓடுவதாக கவிதை முடிகிறது.


      “பாவம் கொடூரன்” கவிதை கிபி 949 இல் நடந்த முதலாம் பராந்தகச் சோழனுக்கும் ராட்டிரகூட மன்னன் கன்னட தேவனின் படைகளுக்கும் இடையில் நடந்த தக்கோலப் போர் பற்றிய படிமத்தை கொண்டிருக்கிறது இப்போரில் சேரர்கள் ராட்டிரகூட அரசனுக்கு உதவியாக இருந்தனர். ராஜாதித்த சோழன் இறந்தார் இந்த கூடுதல்‌ தகவல் மூலம் கவிதையின் சில பகுதிகளுக்குள் நுழைய முடியவில்லை என்றாலும் இக்கவிதைக்கென ஒரு பின்னணி வரலாறு இருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. சீதமண்டலம் கவிதையைப் போலவே போர் காட்சிகளில் மற்றொரு பக்கம் இக்கவிதைக்குள் உள்ளீடாகி இருக்கிறது.


      கண்டராதித்தனின் கவிதைகளில் பக்தி இலக்கிய புராணங்கள் மட்டுமின்றி செவ்வியல் படைப்புகளையும் அவர் வெளிப்படுத்தி இருப்பது இந்த கவிதை தொகுப்பில் சிறப்பம்சமாகப்படுகிறது. பக்தி இலக்கிய புராண துன்பங்களோடு நவீன இலக்கிய உட்பகுத்துகளும் அதீத கற்பனை வாத உலோகத்திற்குள் திரிவதும் இக்கவிதை தொகுப்பில் கவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. “துயர நட்சத்திரம்" கவிதை போன்ற பல்வேறுபட்ட பகுதிகளோடு தனது தனித்துவத்தை வெளிப்படுத்தும் கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கிறது. பாடி கூடாரம் தொகுப்பில் உள்ள நாய்கள் கவிதை சீதமண்டலம் தொகுப்பில் உள்ள “துயர நட்சத்திரம்" மற்றும் “தனிமை: உன்னுடன் ஆன பயணம் குறித்து" முதலான கவிதைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. மொத்த தொகுப்பாக பார்க்கும்போது சீதமண்டலம் புனைவு, கனவு, மரபுடனான நவீனத்துவம், அழகியல் ஏற்றம், நாடகத்தன்மை மெருகேற்றம், அறிவியல் மற்றும் சூழலியல் படிமங்கள், கதாபாத்திர உருவாக்கம் முதலிய அனைத்தையும் உள்ளடக்கி சீதமண்டல பூச்சியாக இத்தொகுப்பு கடிக்கிறது.


(சுதந்திரச் சிந்தனை 49வது நிகழ்வில் (07.05.2023) பேசிய உரை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூதிர் மின்னிதழ்

முன்னோடியின் துணிவு -அழகுராஜ்

சிறிய பக்கங்களின் மாபெரும் சூதாட்டம்