தமிழ்நாட்டில் பிற மொழியினர்
தமிழகத்தில் பிற மொழியினர் - ம.பொ.சிவஞானம்
தமிழகத்தில் பிற மொழியினர் ஆதிக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை சில புள்ளிவிவரங்கள் மற்றும் இதழில் வெளியான அரசியல் நிலைப்பாடுடைய செய்திகள் எல்லாம் சான்றாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த நூலின் ஆரம்பத்திலேயே அ.மார்க்ஸ் அவர்களின் காத்திரமான விமர்சனப் போக்கில் உள்ள முன்னுரையுடன் இந்த நூல் தொடங்குகிறது. அந்த விமர்சனத்தை வாசித்து இந்த நூலை வாசிப்பது ஒரு வகை புரிதலையும் அந்த முன்னுரையைத் தவிர்த்து வாசித்தால் வேறு வித தாக்கமும் ஏற்படும் என்பது எனது கருத்து.
தமிழ் தேசிய கட்டமைப்பு முறை மற்றும் சில கொள்கைகள், சைவமும் தமிழும் பின்னிப் பிணைந்தது என்பதை நியாயப்படுத்தி அந்த வழியிலான ம.பொசியின் பயணம், இனவுணர்வு பிரச்சினையால் இந்திய தேசியத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல், பிறநாடுகளில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினை தமிழகத்தில் சந்திக்கும் பிரச்சினை, அரசு வேலைகளில் அக்கறை காட்டி பிராமணருக்கு காங்கிரசும் பிராமணரல்லாதோருக்கு மலையாளி மற்றும் தெலுங்கரால் உருவான நீதிக்கட்சி செயல்பட்ட முறைகள் அவர்களுக்குள்ளான அரசியல் இணக்கம், மொழி வாரி எல்லைப் பிரிப்பில் மொழியினருக்கு இடையே ஏற்பட்ட பூசல், நீதிக்கட்சியின் மீதான அடுக்கடுக்கான விமர்சனத்தை வைக்கும் ம.பொ.சி., சுதேசமித்திரன் மற்றும் பாலபாரதி இதழ்களில் பாரதியாரும் வ.வே.சு ஐயரும் வெளியிட்ட பிராமணரல்லாதோருக்கு சம உரிமை அமைச்சரவையில் இல்லை என்றும், அதேசமயம் தமிழருக்கும் போதிய உரிமை இல்லை என முன்வைத்துள்ள இரண்டு சான்றுகள் முக்கியமானது என நான் கருதுகிறேன். இரு மொழியாளர்களை ஆரம்பத்தில் அதிகம் விமர்சித்த ம.பொ.சி மொழி வழி சிறுபான்மையினர் மற்றும் இரு மொழியாளர்கள் கட்டுரையில் மொத்தமாக திரும்பி தான் அதிகம் விமர்சித்த தெலுங்கர்களில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பெரியாருக்கும் வரதராஜுலு நாயுடுவுக்கும் புகழாரம் சூட்டுகிறார். தமிழகத்தில் உள்ள திராவிட கொள்கைகள் தமிழ் உணர்ச்சியை மட்டுப்படுத்தியது என்பதைச் சொன்ன ம.போ.சி தான் பிற்காலத்தில் திராவிட அரசுகளோடு துணை நின்றார் என்பதை மறுக்க முடியாது. பிராமண தமிழர், பிராமணரல்லாத தமிழர் எனச் சொல்லி ஆரிய திராவிட பிரிவினையை எதிர்த்து தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி பேசும் மக்களிடம் உள்ள இனவுணர்வு தமிழரிடம் இல்லை எனக் கூறுகிறார். இந்த நூலிற்குள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதி வேறுபட்டு இருப்பது ம.பொ.சியின் கொள்கை மீதான பின்வாங்கலும் அரசியல் ரீதியாக பெரியார் செல்லாமல் இருந்தால் ராஜாராம் மோகன் ராய், விவேகானந்தர் போல பார்க்கப்பட்டு இருப்பார் என சொன்னவர் தானே அரசியல் ரீதியாக சில இடங்களில் சமரசம் செய்து கொண்டாரோ என தான் தோன்றுகிறது...
-அழகுராஜ்
05.07.2021
கருத்துகள்
கருத்துரையிடுக