ஒளிரும் பச்சைக் கண்கள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்

 பச்சை சப்த இளம் ஒளி - அழகுராஜ்



ஒளிரும் பச்சைக் கண்கள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்


       கார்த்திக் பாலசுப்பிரமணியனுடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘டொரினோ' 2017 இல் வெளிவந்தது. அதன் பின்பு சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற ‘நட்சத்திரவாசிகள்' நாவல் 2019 முதல் வெளியானது. அதற்குப் பிந்தைய சிறுகதை தொகுப்பு தான் ஒளிரும் பச்சை கண்கள். இத்தொகுப்பு 2021 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது.


      உறவுகளுக்குள் அத்தை மகன் மாமன் மகன் என முறை பையன்களாகவும் முறை பெண்களாகவும் இருப்பவர்கள் சிறு வயது முதலே பழகும் போது யதேச்சையாக பெயர் சொல்லியே பேசி பழகுவது வாடிக்கையானது. சில குடும்பங்களில் சிறு வயது முதல் கல்யாண ஆசையை காட்டி வளர்ப்பதும் உண்டு. இப்படியாக உறவுகளை அணுகும் முறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாறுபட்டதாக காணப்படுகிறது. சில சமயங்களில் இருவரில் ஒருவர் மட்டும் ஆரம்பம் முதலே திருமண ஆசையோடு இருப்பதும் நிறைவேறாது போவதும் உண்டு. இருவரும் நன்கு பேசி உறவாடி பின் பிரிவதும் நடந்துள்ளது. இப்படி பல்வேறு விதமான சாத்தியங்களை சூழலுக்கும் பகிர்வு தொடர்புக்கும் ஏற்றவாறு குடும்பங்கள் கொண்டிருக்கின்றன. ‘முன் நகரும் காலம்' கதையில் பேசி விளையாடிய பொழுதுகள் எல்லாம் முன்னே நகர்ந்து போகும் சமயத்தில் ஏற்படும் ஒரு திருப்பமாக பிந்தைய மொழிவுகள் அமைந்து காலம் முன் நகர்ந்ததை கதாநாயகன் உணர்த்துகிறான்.


      சிறு பிராயத்தில் நம்மை திட்டியவர்களும் சண்டை பிடித்தவர்களும் வளர்ந்த பின் அன்னியோன்யமாக ஒரு சிரிப்பை பரிமாற்றிச் செல்வதற்குள் அந்த சண்டைக் காட்சிகளும் விவரம் அறியா வயதில் செய்த சேட்டைகளும் அன்றைய நாளின் புரிதலின்மையும் வெள்ளந்தியாக ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படியான ஒரு நினைவாகவே சின்னதாயி கிழவி கதைக்குள் இருக்கிறாள். இதே உணர்வு பரிமாற்றம் எதிர் நிலையில் மாறவும் செய்கிறது. ஒன்றாக சுற்றிய விளையாடிய மதி மச்சான் என்று சொல்வதில் ஏற்படும் செயற்கை தன்மையுடனான விலகல், வெளியூர் வாசம், சொந்த ஊருக்கு வரத்துடிக்கும் எண்ணங்களை எண்ணி எண்ணி சோர்ந்து போகுதல், குமைந்தொழுகும் எண்ணத்தின் நடுவில் மதியின் வீட்டில் இருக்க முடியாமல் ஏற்பட்ட தொந்தரவு, பழைய நினைவுகள் நினைவுகளாக மட்டுமே மிஞ்சட்டும் என்ற முடிவு ஆகியவற்றின் கோர்வையாக்கி முன் நகரும் காலத்தின் விதியை சொல்ல முனைவதாக அல்லது முன் நகரும் காலத்தின் விதி இதுதான் என தன் பார்வையை கார்த்திக் பாலசுப்பிரமணியன் முன் வைப்பதாக இக்கதை உள்ளது. குழந்தையின் இறப்பு என்னும் சந்திப்புக்கான மையச் சரடை பிடிப்பதில் இருவருக்கும் இடையில் பெருத்த இடைவெளியும் மாறுபட்ட ஓட்டங்களும் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இக்கதையில் மரணம் ஒரு சந்திப்பு புள்ளியாக இருப்பினும் இப்படியான ஏதேனும் ஒரு புள்ளியில் நாம் ஒவ்வொருவரும் நமக்கு நெருக்கமான ஒருவரை பிற்காலத்தில் சந்திக்கும் வெளி திறந்தே கிடைக்கிறது. அந்தச் சமயத்தில் எதை செய்கிறோமோ இல்லையோ உதிர்ந்து கிடக்கும் செம்பருத்திப் பூக்கள் ஆன வாசலை மட்டும் மறவாமல் கண்ணுக்குள் கட்டாயம் ஒளித்து வைப்பது நிச்சயம். கார்த்திக் பாலசுப்பிரமணியன் பிறந்த இராஜபாளையம் நகரில் உள்ள எழுத்தாளர் இரா.கதைப்பித்தன் ‘பாதையோரத்து மலர்' என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியுள்ளார். அந்த கதையில் நிகழும் சந்திப்பும் இந்த கதையில் நிகழும் சந்திப்பும் வேறுவேறானவையாக இருப்பினும் அவை ஏற்படுத்தும் உணர்வுகள் கிட்டத்தட்ட தனிமனித வேறுபாட்டுக்குட்பட்டு ஒரே சாயலானவை.


      நான்கு நாட்கள் மழிக்காமல் விடப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட தாடி என்பது பெண்கள் பலர் தங்களுக்கு பிடித்த நபரிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒரு தோற்ற வகை. ‘சுழல்' கதையில் வரும் கயலுக்கு அது பிடித்து போனதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இங்கு சேவிங் ரேஷரின் கூர்மைக்கு வழவழப்பு சவரம் செய்யும்போது இரத்தம் பார்க்காத ஆட்களே இருக்க முடியாது. அதிலும் பெருத்த ஆச்சரியம் இல்லை. இந்த கதையில் ஆச்சரியங்கள் நிகழப்படும் இடங்களாக சொல்லப்படுவது நாம் ஒவ்வொருவரும் பல்வேறு செயலிகளை நம்முடைய தொடுதிரை சாதனத்தில் நிறுவும் போது கொடுக்கும் ஒப்புதல்களும் அதனால் விளையும் விளைவுகளுமே. செயலிகளை நிறுவும் சமயத்தில் நாம் கொடுக்கும் ஒப்புதல்களை ஏற்று நமது செயல்பாடுகளை கண்காணிப்பது பலருக்கு தொழில் நிமித்தமான பணி. இப்படியான கண்காணிப்புகள் தனக்கு வரப்போகும் மனைவி உடனிருக்கும் போது நிகழ்ந்தால் அதை அவள் எப்படி எதிர்கொள்வாள் என்பதை கற்பனையோடு சுழல விட்டு கதை இறுதியில் பெருந்திருப்பம் கொள்கிறது. தமிழ் கதைகளின் முடிவை அல்லது நீட்சியை வாசகரிடமே ஒப்படைத்து விடலாம் என எழுதப்படும் கதைகளின் வகைமைக்குள் ‘சுழல்' கதையை நாம் அடக்கலாம்‌.


     சுழல் கதையில் கையாளப்பட்ட உட்பொருளின் தாக்கம் ‘காகித முகங்கள்' கதை வரை நீண்டுள்ளது. தொலைபேசி கொடுத்தும் அச்சுறுத்தல்கள் அல்லது பாதுகாப்பின்மையை உணர்ந்து தொலைபேசியில் சில விஷயங்களை பகிர்வது உச்சிதமாகாது என்கிறார் ‘காகித முகங்கள்' கதையின் பிரதான பாத்திரம் தரித்தவள். சுழல் கதையில் வரும் தொலைபேசியானது ஒரு உயிராக மாறி பேர் உருவம் கொண்டு மனித சாயலில் நம்மிடையே பேசினால் எப்படி இருக்கும் என்பதை எழுத்தாளர் சாரதியின் ‘துர்ஷினியின் பிரவேசம்' கதை வழியே உணரலாம். முழுவதுமாக நம் கண்காணிக்கப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பது மட்டுமல்லாது அந்த கண்காணிப்பு பணியை ரகசியமாக மேற்கொண்டு விபரங்களை பகிர்ந்தால் அதிலும் பல மடங்கு லாபம் பெறும் அளவிற்கு இந்த துறை அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தனிமனிதனின் அந்தரங்கத்திற்கு விலை வைக்கும் போக்கு நிகழும் சூழல்களைப் பற்றிய சிந்தனைகளை கிளப்பும் இலக்கியப் பகுதிகளாக இப்படிப்பட்ட கதைகளை நாம் பார்க்கலாம். தொடர்பீட்டு வசதிகளுக்குள் மூழ்கியுள்ள நாம் பாதி கடலை தாண்டி விட்டு எந்த கரைக்கு திரும்புவது என யோசிப்பது போன்ற நம் நிலையை இப்படியான கதைகள் எடுத்துக் காட்டுகிறது.


      யுவன் சந்திரசேகர் பாணியிலான கதையாக ‘காகித முகங்கள்' உருவெடுத்துள்ளது. இதனை நான் லீனியர் வகை கதை என்றும் சொல்லலாம். எதிர்பாராத திருப்பத்தை இறுதியில் கொடுத்து கதையின் முதல் பாதியை நோக்கி மீண்டும் கொண்டு செல்லும் வகையிலான வாசிப்பே இக்கதைக்கு உகந்தது. அவரவருக்கு இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாது அடுத்தவர் மீது பழி செலுத்துவதும் ஏன் என் மேல் இப்படிப்பட்ட ஒரு குற்றம் சுமத்தப்பட்ட ஆண்  மறுகிப்போய் பலி செலுத்திய பெண் மீது மனரீதியாக தன்னுடைய ஆணாதிக்க தாக்கத்தை செலுத்தி முகம் சுழிக்க வைப்பதை சொல்லும் கதையாக இது இருக்கிறது. இதில் எவர் மீது தவறு என்பது ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் மாறி மாறி தெரியக்கூடியதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கதை கார்த்திக் பாலசுப்பிரமணியனுடைய சிறுகதையாற்றலுக்கு தக்க உதாரணம். கூலி தொழிலாளி ஒருவர் முன் எப்போதும் இல்லாத அவமானத்தை உணர்வதும் வேலைக்குச் செல்லும் இல்லத்தரசி ஒருவர் தன் குடும்பத்திடம் நல்ல பெயர் வாங்க முகம் தெரியாத ஒருவரின் முகத்தைப் பார்த்து சுழிப்பதும் இதற்கெல்லாம் காரணமாக போக்குவரத்து நெரிசல் இவர்களை அலைக்கழிப்பதுமாக ஒவ்வொருவரும் தங்களுக்குரிய காகித முகத்தை அணிவித்து பறந்து கொண்டிருப்பதை இக்கதை சொல்கிறது.




         இருக்கும்போது இருக்கத்தான் செய்கிறது என இருக்கும் நாம் இல்லாத போது இல்லாமல் போயிற்றே என வருந்துவது உறவுகள் பிரியும் போது நடக்கும். என்னுடைய தாத்தா இறந்த நாள் இன்று காலை நேர அவசரத்தில் அவருக்கு துணி மாற்றிவிட்டு கல்லூரிக்கு போய் விட்டேன். அந்த நாளில் பதினோரு மணி முதல் எனக்கு தொடர் அழைப்புகள் வந்திருந்ததை நான் கவனிக்கவே இல்லை. அப்போதைய நாட்களில் நான் அதிகம் தொலைபேசியை எடுத்துப் பார்க்கும் வழக்கமும் என்னிடம் கிடையாது மதிய உணவை முடித்துவிட்டு எடுத்துப் பார்க்கும்போது தான் வரிசையான அழைப்புகள் வந்திருப்பது தெரிந்தது உடனே ஏதோ நடந்து விட்டது என்பதை உணர்ந்தேன். நான் நினைத்தது சரியாகவே இருந்தது தாத்தா மரித்துவிட்டார். அவரது கடைசி நாட்களில் நான் விவாதம் செய்யக்கூடிய ஒருவனாகவே இருந்தேன் அதை போதுமான அளவிற்கு தவிர்த்திருந்திருக்கலாம். அதை நான் உணர தொடங்கியிருந்த போது அவருக்கு நினைவு தப்பியிருந்தது. இப்படியானதொரு இழப்பைத் தான் ‘புள்ளிக்கு பதிலாக வட்டம்' என்ற கதை மையப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ‘பொம்மை' படம் பார்த்தபோது மனநல மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகள் மூலம் கதாநாயகனுக்கு அவன் காதலிக்கும் பொம்மை உயிர் கொண்டு பேசுவது போன்ற காட்சிகள் கண்முன் தோன்றாமல் போகும். அந்த மாத்திரைகள் தூக்கத்தை வரவழைத்து சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய சக்தி கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இது ஒரு சராசரியான நடவடிக்கை தான். கதையின் ஓட்டத்தில் மிகச் சரியாக மாத்திரை, மனமாற்றம் முதலியவை தொடப்பட்டுள்ளது. தனக்கு பிடித்த இழந்த நபரின் பழக்கத்தை அது சார் குறியீடுகள் வைத்து ஆழமான நினைவை மீட்பதாகவே இக்கதையும் புள்ளிக்கு பதிலாக வட்டம் என்ற தலைப்பும் பொருந்தி அமைந்துள்ளது.


      ஜன்னல் கதையை குறித்து கார்த்திக் பாலசுப்பிரமணியன் கொரோனா காலகட்டத்தில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வரும் பெண்ணிலிருந்து தொடங்கிய கதை என்கிறார். உண்மைதான். ஆனால் அங்கு தொடங்கிய கதை ஊரடங்கு என்ற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மனநிலையைத் தாண்டி தனிமையை விரும்பும் தனிமை ஒன்றை மட்டும் தனக்கான ஆசுவாசமாக ஏற்க துடிக்கும் ஓர் இளைஞனின் மனவயப்பட்ட உள்ளொளியாக கச்சிதமாக பொருந்தி உள்ளது. ஆனந்த காலகட்டத்தில் மிகவும் ஆசையாக அடிக்கடி உச்சரித்த பெயர் அனிச்சையாக பழக்கத்தின்பாற்பட்டு பாடக்கூடிய பாட்டின் முடிவில் வெளிப்படும் போது கிளரும் ஆற்றாமை தான் சைத்தான் என்ற சொல்லாக இக்கதைக்குள் வருகிறது. தனிமையின் யோசனையில் நாம் சந்தித்த இன்பங்களை விட அதுவரை சந்தித்த துன்பங்கள், துரோகங்கள், தோல்விகள், அவமானங்கள், புறக்கணிப்புகள், கவனிப்பாரற்று கலங்கி கிடக்கும் கண்கள் முதலானவற்றின் சித்தரிப்புகள் அபாயம் தரும் ஓவியங்களாகி பாடாய்ப்படுத்தும் வலியைத் தான் அந்த இளைஞனின் மனம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதனிடையே தான் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் பெண் வருகிறாள். அவளது சிரிப்பை குறித்த சுட்டிக்காட்டுதலில் பயன்படுத்தப்படும் வலிகளுக்கு ஒப்பான கற்பனை கலந்த உவமையை அன்றைய காலகட்டத்தில் நான் பார்த்த ஒரு சம்பவத்தினை மையமிட்டு ஒரு கவிதையாக எழுதியிருந்தேன். 


“மாஸ்க் அணிந்தே உட்கார்ந்திருந்தேன்

வாய் தெரியாவிட்டாலும் 

பேசாமல் இருக்க முடியவில்லை

நான் பேசும் போது

என்றோ ஒருநாள் மட்டும் தான்

முகப்பு கேமராவில்

பேசும் என் வாயைப் பார்த்தேன்

அதற்குப்பின் வாயைப் பார்க்க வாய்க்கவேயில்லை

ஏனோ அன்று வாய் தெரியாமல்

வாயில் பேச நாக்கு கூசியது


பேசாமல் இருக்க முடியாததால்

கண்களால் பேசினேன்

எனக்கு இடப்புறம் இருந்த

சீட்டில் சாய்ந்து கிடந்த

அந்த சின்னப் பையனுக்கும்

அது தெரிந்திருந்தது

பேசிக்கொண்டிருக்கும் போதே

காற்று நாசியில் விழ

கண்கள் வியர்த்தது

வாய் சிரித்தது


வியர்த்த கண்களும்

சிரித்த இதழ்களும்

அவனுக்கு புரிந்தது

சின்ன பையனானாலும்

டூ கே பையன்தானே அவன்

அவனும் கண்களால் 

எங்களிருவரைப் பார்த்தும்

பகடி ஆடினான்


எங்களைப் பார்த்த அவளுக்கோ

எனது வியர்த்த கண்கள் 

மட்டுமே தெரிந்தது


அவளைப் போல அங்கே

அதிகம் பேர் இருந்தாலும்

அவர்களது இலவச பயண

குதூகலத்தில் எங்களைப் பார்க்கவேயில்லை." 


      பேசுவதற்கும் பழகுவதற்கும் பிடிக்காமல் பார்க்கும் அனைத்தும் நாடகம் போல் தெரியும் அளவிற்கான தனிமையில் உழலும் சமயத்தில் சம்பிரதாயமாக ஒருவரிடம் விசாரிப்பதும், பேச்சு கொடுப்பதும் எரிச்சலைத் தரும். எவ்வித பேச்சு பழக்க பங்களிப்பும் இன்றி இன்று சமூகத்தை எவருக்கும் தெரியாமல் உறைந்து நின்று பார்க்கும் வசதியை சமூக வலைதளங்கள் நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. அதனை வாட்ஸ்அப் நிலை தகவல்களை பார்க்கும் போது அவைகளும் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவிலான அபத்தக் களஞ்சியமாகத்தான் தோற்றம் தருகின்றன.


      இழப்புகள் ஏற்படுத்தும் நஷ்டங்களைப் பொறுத்தே அவை பேரிழப்பு என பெருத்த உருவம் கொள்கிறது. சிறு சிறு இழப்புகளும் பேரிழப்புகளின் மத்தியில் மகிழ்ச்சியாக தெரியும் சூழ்நிலை என்பது நடப்பது நடக்கட்டும் என்ன நடக்கிறது என பார்ப்போம் என்று விலகி நிற்கும் பார்வையாளனுடைய கவனத்திற்கு ஒப்பானது. தனிமையின் சமயத்தில் வேறொருவரது குறுக்கீடு நிகழ்வது சுதந்திரத்தை பறிப்பதற்கு ஒப்பானது. அந்த நிலையினை பெண்ணின் வடிவில் சந்திக்கும் இளைஞன் அவளுக்காக சமையல் வேலை பார்க்கும் வட இந்திய இளைஞன் சோட்டுவிடம் பரிந்து பேச தொடங்குகிறான். அச்சமயத்தில் தனிமையில் இருந்து சமூகத் தொடர்புக்கு அவன் திரும்புவதை ஊரடங்கு கால அனுமதியற்ற பயணத்தோடு தொட்டுக் காட்டுகிறார் கார்த்திக் பாலசுப்பிரமணியன். சராசரியாக கேலி கிண்டலுடன் குடும்ப ஆண் ஒருவரிடம் அவர் மனைவி தன் பக்கத்தில் உட்காருவதை குறித்து உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என அவரது காதில் கேட்டு சிரிப்பது, மேனேஜர் அக்கறையின்றி அக்கறை காட்டும் பாவனையில் விசாரிப்பதை எதிர்த்து பேசுவது போன்ற சாகசங்களை செய்ய நினைக்காமல் அவற்றை அபத்த எல்லைக்குள் செருகியதில் இருந்து  அந்தப் பெண் ஏற்கனவே இருந்த தனிமையை கலைத்துவிட்டு மற்றொரு புது தனிமையை பரிசளித்து சென்றது வரை உணர்வுமய கடத்தலாக கதையின் உள்ளுணர்வு அமைந்து ஜன்னல் மூடப்படுகிறது.


      ‘இணை' கதை பேருந்து பயணத்தில் தொடங்குகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிந்தைய சில கதைகளில் துரத்தி வருபவை மீராவும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரமுமே ஆகும். அதில் சிட்னி நகரத்தின் தொடக்கம் இணை கதையிலிருந்து தொடங்குகிறது. பொதுவாக பயணத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் ஒருமித்த குதூகலத்தில் இருந்தால் தான் பயணம் மறக்க முடியாத இன்பத்தை அளிப்பதற்கு பங்காற்றும். இங்கு அதற்கான எந்த ஒரு அசைவும் தெரியாமலேயே பயணம் தொடங்குகிறது. இதற்கு காரணம் நண்பனது காதலி எமிலியும் அவளது நடவடிக்கைகளுமே. பரஸ்பர நல்லிணக்கம் கொண்ட இரு நண்பர்களாக கதாபாத்திரங்கள்  இருப்பதை அவர்கள் கூறும் வார்த்தைகளும் அவர்களது உறவுக்குள் இருக்கும் போதிய இடைவெளி சாட்சியங்களும் கூறுகின்றன. போதை ஏறிய பின் குடிக்காமல் இருப்பது குறித்த பாராட்டு. தனியாக குடிப்பது மீதுள்ள பிடிப்பு முதலானவை இத்தகைய இடைவெளிகளோடு அந்த நண்பர்களுக்குள் இருந்த மரியாதையான அன்பையும் அறிய தெரிகிறது. 


     ஒரு வீடு எடுத்து திருமணம் ஆகாதவர்கள் தங்குவதில் பலவித சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது எப்போதுமே திருமணமாகாதவர் தனியே  தங்கும் அறை குறித்த நினைவு வரும் போதெல்லாம் முதலாவதாக தோன்றுவது சி.மோகனின் கவிதை தொகுப்பாகிய ‘எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை: என்ற கவிதை தொகுப்பின் தலைப்பு தான். வெளியூரில் சுருக்கமான செலவில் தரமான பொருட்களை வாங்குவதும் அதனை பராமரிப்பதும் பெரும்பாடு. இதில் குறைந்த விலையில் ஒரு தொலைக்காட்சி வாங்க செல்லும்போது அவர்கள் உதிர்க்கும் வார்த்தை “ஒருவருக்கு ராசி இல்லாத பொருள் இன்னொருவருக்கு அதிர்ஷ்டத்தின் சின்னமாக மாறலாம் என்பது எங்கள் நம்பிக்கை" என்பது தான். டிவி அதிர்ஷ்டம் இல்லை என்று விற்பதற்கு விற்கக் கூடியவர் சொல்லும் காரணம் அவரது மகனின் உளவியலில் டிவியில் வரும் கார்ட்டூன்கள் ஏற்படுத்திய பாதிப்பே. இந்த காரணத்தை கதை நிகழக்கூடிய இடமாகிய ஆஸ்திரேலியாவுடன் இணைத்து கவனித்து பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த ஒற்றை காரணத்தின் மூலம் ஆஸ்திரேலியா பகுதி சிறுவர்களைப் பற்றிய ஒரு சித்திரத்தையும் வரைந்து பார்க்கலாம். ஒருவருக்கு ராசி இல்லாதது மற்றொருவருக்கும் ராசியில்லாமலே போகும் என எதிர்திசையில் நின்று மாற்று கதையின் முதன்மைபாத்திரங்களுக்கு மாற்றுக்கருத்தை முன்வைத்து அதை உறுதிப்படுத்துவதாக இரண்டு நண்பர்களுடைய நம்பிக்கையில் கல்லை தூக்கி போடுவதாக ரிகார்டோ உடைத்த டிவியும் அதில் காணப்பட்ட விரிசலும் எமிலியுடன் ஆன பிரிவும் ஒரு சேர வந்து கதை முடிகிறது. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து செல்லும் இந்த இருவரை பற்றிய கதைக்குள் கதையை சொல்பவன் முதன்மை பாத்திரமா அல்லது ரிகார்டோ என்னும் கதை சொல்பவனின் நண்பன் முதன்மை பாத்திரமா என்று யோசிக்க வைக்கும் அளவில் போதிய அளவில் நேர்த்தி கூடிய கதாபாத்திரங்களை செதுக்கி டிவி உடைக்கப்படுவதையும் எமிலி பிரிவதையும் கதை சொல்பவனின் விருப்பம் மற்றும் தொலைக்காட்சியை விற்பவர் நினைக்கும் தொல்லை ஓய்ந்தது என்ற நிம்மதியோடு பொருத்தி குறிப்பிடும் பட்சத்தில் கதையாக்கப்பட்டதன் பின் உள்ள படைப்பு நேர்த்தி தெரிகிறது.


      கணவன் மனைவி சண்டைகளும் காதலன் காதலி சண்டைகளும் பெரிய பெரிய விஷயத்தில் நல்ல புரிதல்களோடும் சின்ன காரியங்களில் பெரிய மோதலுடனும் தோன்றி விடுகிறது. இயல்பான வாழ்க்கையில் இருந்து தடம் மாறும் அளவுக்கு மோதல்கள் குடும்ப கட்டமைப்புக்குள் அல்லது குடும்ப உறவுக்குள் ஒரு விரிசலை நெடுங்காலத்திற்கு ஏற்படுத்திவிடுகிறது. பிரச்சினைக்குரிய காரணமாக பெண்கள் அதிகம் விரும்பும் விலங்கான பூனைகள் முன்னிறுத்தப்பட்டு, அதனை வைத்து நிகழும் சண்டைகளோடு ஊரடங்கு கால வாழ்வு தரும் தேவையற்ற பிரச்சனைகளும் கதையினுடைய உள்ளடக்கமாக இருக்கிறது. பொதுவாக மனைவிகணவன் படம் பார்ப்பதையும் புத்தகம் வாசிப்பதையும் விரும்புவதில்லை என்கிற ஒரு கருத்தை இக்கதை முன்வைத்து சம்பாத்தியத்தோடு உறவை புதுப்பிப்பது அதிக முக்கியம் என தவறுகளின் வாயிலாக நுண்மையான முறையில் கற்பிதம் ஆக்கும் துணிவை இக்கதை கையாண்டிருக்கிறது. நமக்கு பிடிக்காதவராக இருப்பவரின்அல்லது பிடிக்காத ஒன்றின் உடைதலும் கண்ணீரும் நம்மை நொறுக்கும் புள்ளி ஒன்றோடு இணையக்கூடிய சம்பவத்தை எதிரில் நின்று இணையர் பார்த்து அச்சம்பவத்தை தவறாக புரிந்து கொள்ளும் பார்வையும் ஒன்று சேர்கிறது. இதில் இணையர் மூலம் விவரத்தை கேட்கும் வாய்ப்புகள் தரப்படவில்லை என்கிற நியதியை வலியாமல் போகிற போக்கில் கதை புதைந்து வைத்துள்ளது. 


     ‘இணை' கதையில் வரும் அதே களம் ‘மண்' கதையிலும் களமாக்கப்பட்டுள்ளது. அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் அடிக்கடி சுற்றுலா உலாவி தன்னை புதுப்பிப்பது நல்லதொரு மன பராமரிப்பு பணி. அப்படியான பராமரிப்புக்கான ஆயத்தத்தோடு அவர்கள் ஆதி மண்ணின் சொந்தக் கதையையும் சேர்த்து சொல்வதால் இக்கதை வலுப்பெற்று நல்ல உருவம் கொண்டுள்ளது. கொல்லை ஓட்டுக்காரி என்ற பெயரை என் சிறுவயதில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். எங்கள் ஊரில்  கொல்லம் ஓடு வைத்து கட்டிய முதல் வீடு என தனித்துக் காட்ட அந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதி மண்ணின் உயிர்ப்பு கதைக்குள் இருப்பதை உறுதிப்படுத்த மச்சு வீடு என்ற சொல்லாடலை இக்கதைக்குள் கார்த்திக் பாலசுப்பிரமணியன் பயன்படுத்தியுள்ளார். இந்த மாதிரியான சொற்கள் எல்லாம் முதலில் பலர் எப்படியான இருப்பிடத்தை வடிவமைக்கிறார்களோ அதுவே அவர்கள் பெயராகிப் போகும் சூட்சுமத்திற்கு உட்பட்டது. சுற்றுலா போகும் இடத்தில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவு கொடுக்கக் கூடாது என்கிற விதியை சீகல் மூலம் சொல்வதோடு இசையின் காட்சியை கொண்டு வந்து கதையின் மேல் ஒரு பெரும் பொதி ஏற்றப்படுகிறது‌. கட்டூம்பா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இசைக் கருவி ஒன்றை பழங்குடி ஒருவர் இசைப்பதும் அந்த இசைக்கருவி ஆண்கள் மட்டும் வாசிக்கும் மூங்கில் கருவி என்ற குறிப்பும் பழங்குடிகளது நம்பிக்கையோடு சேர்த்து சொல்லப்படுகிறது. அந்த மூங்கில் கருவியுடன் இணைந்து கோடாங்கி போன்ற கருவியும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வரையப்பட்ட தீற்றுகளான ஓவியங்களுக்கு அருகில் விரிக்கப்பட்ட துண்டும் சேர்ந்த ஒரு காட்சிக்குள் பின்னணியாக மன்றாட்டின் இசையை ஒழிக்க விட்டு மிகப்பெரும் பழங்குடியின் துயரை கடத்தும் முயற்சியை இக்கதை செய்துள்ளது. ஆனால் அது முழுமையான வெற்றி கொள்ளாத முயற்சியாக தங்கப்பட்டிருப்பது போன்ற உணர்வே எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும் அந்த முதியவரின் ஒளி கீற்றுகளின் ஒளி கதாபாத்திரங்களின் காதுகளுக்குள் ஒளித்ததில் மட்டும் உண்மையுணர்வு சுழல்வதை இருளில் ஒளிந்த முதியவர் கண் கொண்டு நாமும் பார்க்க முடிகிறது. 


      ‘ஒளிரும் பச்சை கண்கள்' கதையில் ஊரடங்கில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பிரச்சனையே பிரதானம். ‘சக்கரம்' கதையின் ஆரம்பம் “வீட்டிலிருந்து வேலை பார்ப்பதில் எவ்வளவுக்கெவ்வளவு சவுகரியங்கள் உண்டோ அதற்கு இணையாக அசவுகரியங்களும் உண்டு" என்பதாக தொடங்குகிறது. இந்த சக்கரம் கதையில் நிகழும் சக்கரத்தின் சுழற்சியானது எனக்கு நெருக்கமான ஒன்று. இந்த கதையில் கூறப்பட்டுள்ள மருத்துவத்திற்காக நெய்யப்படும் பேன்டேஜ்களுக்கு பெரு மதிப்புடைய ஊர்களான இராஜபாளையம், சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பிறந்து அவ்வப்போது அத்தொழிலின் நடைமுறைகளை பார்ப்பவன் என்பதால் இக்கதை நெருக்கமாக தெரிகிறது.


      தொழில் நிமித்தம் நட்பிற்குள் ஏற்படும் நம்பிக்கை, உதவி எல்லாம் இக்கதைக்குள் குலைக்கப்படுகிறது. மருத்துவத்திற்கு துணி அனுப்பும் தொழிலில் ஆர்டர் பிடிப்பதும் பான்டேஜ்களை பார்சல் செய்து தூய்மையாக அனுப்புவதும் தொழிலின் வெற்றிக்குரிய ஒத்த அளவுகோலுடைய இரு வேறு உப தொழில்கள். அதில் அனுபவம் வாய்ந்த இரு வேறு நண்பர்களின் கதையாக சராசரியான கதைக்கு இருக்கக்கூடிய எல்லா அம்சங்களுடனும் இக்கதை எழுதப்பட்டுள்ளது. தறித்தொழிலால் காதுகள் பாதிப்புக்குள்ளாகும் செய்தியோடு ‘காதுகள்' நாவலில் ஏற்படும் பிரச்சனைகள், பாடுகள் அதே தொனியில் மெல்லியதாக குறிப்பிடப்படுகிறது. கர்ம வினை நிகழ்தலை கவனிப்பதற்குள் கதை உள்ளாக்கப்படுவதால் மற்ற கதைகளில் இருந்து இது சாதாரணமாக தெரிகிறது.


     நட்பையும் தொழிலையும் குடும்ப நம்பிக்கையையும் அக்கு அக்காகப் பிரித்துப் போடும் கதை கேண்மை.  வள்ளுவர் சொல்லும் நட்பினை இக்கதைக்கு துணையாக்கிடினும் அது தனிநபர் நட்பு என்ற நிலைக்கு மட்டுமே ஏற்றதாகிறது. இக்கதையின் மைய கதாபாத்திரம் “என் எழுத்து கண்டுகொள்ளப்படாத குறித்தோ உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது பற்றியோ இன்று வரை எனக்கு எந்த புகாருமில்லை. எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது அதற்காகவே எழுதுகிறேன்" என்று எழுத்தின் மீது பிரியம் கொண்டு தான் எழுதுவது தனக்காகவே என்பதை சொல்லக்கூடிய இடமாக இருக்கிறது. சிபாரிசு மூலம் வேலைக்கு செல்வது அதிலும் குறிப்பாக முதலாளியின் மூலம் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவது என்பது தொழிலாளர்கள் இவன் முதலாளியினுடைய ஆள் எனச் சொல்லி விலகி போக வைக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆனால் முதலாளியும் தன் நண்பனின் மகனாக இருப்பினும் அவனது குடும்ப சூழலை மறைமுகமாக மனதில் இறுத்தி நெருக்கம் காட்டாமலிருப்பதும் தொழிலாளிகளும் நெருக்கம் காட்டாமல் ஒருவன் தனியனாக விடப்பட்டு நிறுவனச் சூழலை சமாளிக்க முயலும் கதை தான் இது. ஒரு கட்டத்தில் தன் பார்க்கும் வேலையை விட்டு அவன் நிற்கும் போது கூட அத்தனை காலம் பார்த்த வேலைக்கேற்ற மதிப்பு விடுப்பூதியம் கொடுக்கப்படாமல் கடத்துவதற்கேற்ற சூழ்ச்சியை செய்து பின்பு சில நாட்கள் கழித்து மீண்டும் வேலைக்கு அழைப்பு விடுப்பதுமான நடைமுறைகளை இக்கதை எடுத்துச் சொல்கிறது. இத்தனைக்கும் நடுவில் அவனது அப்பா கேண்மையுடையவராக முதலாளி வரதராஜனின் சினேகிதராகவே இறுதிவரை இருக்கிறார். 


கண்களின் ஒளியும் பேச்சும் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் வழியே கடத்தப்படுகிறது. ஒளிரும் பச்சை கண்களில் வலியும் பூனையின் கண்ணீரையும் மண் கதையில் இருளுக்குள் ஒளிரும் பழங்குடி முதியவரின் கண்களும் முக்கியமான கடத்தும் ஊடகங்களாக எதைச் செய்வது என்ன சொல்வது எதைச் செய்தாலும் தவறாகித்தான் போய் முடியும் என்கிற ஏக்கத்தில் அப்படியே தேங்கி நிற்பதோடு சில சமயம் வலிந்தும் துள்ளுகிறது. எவ்வளவு வெறுப்பும் கோபமும் சண்டையும் இருப்பினும் கண்கள் ஒரு மாயக்குறியை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த சிறுகதை தொகுப்புக்கேற்ற வலுவை திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ஓவியங்கள் கதைகளின் முகப்பில் அமைந்து தன் கலை வெளிப்பாட்டைச் சொல்ல தவறவில்லை.


      ஒட்டுமொத்தமாக இந்த சிறுகதை தொகுப்பானது இளைஞர்களின் தாடி, உணவு நேரம் தள்ளிப் போவது, அபத்தம் செய்வதற்கு மனம் ஒத்துப் போகாமல் மற்றவர்களுக்கு சராசரியாக தெரியும் காரியங்கள் அபத்தமாகபடுவது முதலானவை இச்சிறுகதைகளின் பிரதான தன்மை. ஒரு இளைஞன் இந்த சிறுகதைகளை வாசிக்கும்போது கதைகளின் களத்தோடு ஆத்மார்த்தமாக ஒன்றி இருப்பது மட்டும் உறுதியாக சொல்ல முடிந்த முடிபு. ஏனென்றால் இளம் வயதில் சந்திக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் மற்றும் இழப்புகளுடன் விரக்தியை பேசுவதாக இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

 

    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்