கழிமுகம் - பெருமாள் முருகன்



நிகழ்கால புத்தாக்கத்தை பற்றிய அதீத கற்பனை கலந்த பயந்தால் ஒருவருக்குள் உருவாகும் பிரச்சனைகள் அவரிடம் அவரது குடும்பத்தினரிடமும் எவ்விதமான பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பது பற்றிய விரிவான கதைக்கருவை கொண்டு முன் நகர்கிறது பெருமாள் முருகனின் கழிமுகம். 


முன்னுரையில் புனைவு புனைவாகவே இருக்க வேண்டும் என்பதால் அசுர உலகத்தை கதை களமாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார், ஆனால் உள்ளே வருகின்ற செய்திகளை பார்த்தால், நிகழ்வுகளை பார்த்தால் மனித குலத்தையே அரக்க குலமாக பகடி செய்வதாக தோன்றுகிறது.


சொல்ல வருவது எல்லாமே இங்கே நடப்பது தான். ஆனால், என்னுடைய வீட்டில் இல்லை பக்கத்து வீட்டில் என்பது போல அசுர குலத்தை முன் வைக்கிறார். இது யாருக்கும் பங்கம் இல்லாத ஒன்று தானே. 


தற்போது சமூகத்தில், சாதாரண குடும்பத்தில் நடக்கின்ற சாதாரணமானவைகளே கதையாகிறது. அதையே அரக்க பாணியில் சொல்லும் போது தொப் தொப் என்று அரக்கர்கள் நடக்கும் சத்தமும் கேட்கிறது. 


புதிது புதிதாக மாறி வரும் தலைமுறையில் தனது மகன் எப்படி வாழப் போகிறான் என்று பயந்து நடுங்கும் கதாபாத்திரமாக குமாராசுரர் கதாபாத்திரம் இருக்கிறது. குமாராசுரர் என்றாலே பயந்து நடுங்கும் ஒருவராகவே தென்படுகிறார்.  இல்லாத ஒன்றை இருப்பதாகவே கற்பனை செய்து வாழ்ந்து பார்க்கும் விநோத பிறவி. தற்காலத்தில் நமது மனித குலத்தில் இது போன்ற பல விசித்திர பிறவிகளை பார்க்க முடிகிறது. கற்பனையாலே ஓன்றுமில்லாமல் போவோரும் உண்டு. தன்னுடன் மட்டும் பேசும் தனிமை விரும்பிகளும் உண்டு. அவர்களில் ஒருவராகவே குமராசுரர் காணப்படுகிறார்.


பாவம் ஆரோக்கிய பித்தினாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஆரோக்கிய பித்து நல்ல சொல்லாடல். இதை உருவாக்க பல நீகுழாய் (யூடியூப்) நண்பர்கள் பல பாடு படுகிறார்கள் (தற்காலித்தில்). 


அவருடைய அந்த கவிதை பித்து, அவரை சிங்கமே தங்கமே என்பது போன்ற பல எதுகை மோனை கவிதைகளையும் அதன் மூலம் அவர் வீட்டுக்கு பொருள்களை மூடி வைக்கும் பொண்ணாடைகள் கிடைத்தது பற்றியும் சொல்வதன் மூலம் ஒரு காலத்தில் அவர் ஒரு இரசனை உள்ளவர் என்பதை எடுத்து காட்டுகிறது. அதன் எச்சம் தான் தங்கமே சிங்கமே எல்லாம். 


மிகவும் நெருங்கிய ஒருவருடன் பல காலம் பேசாமல் இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் போகும் என்பதற்கு உதாரணமாக குமாராசுரர்க்கும் அவர் மகன் மோகாஷ்க்கும் இடையேயான பேச்சு மற்றும் உறவு திகழ்கிறது.

குமராசுரர் தனது மகனுடன் பேசுவதற்காக தயார் செய்து வைத்திருக்கும் அந்த ஏழு கேள்விகள், அதற்கு அவனது பதில்கள் அதனுடைய மாத்திரை அளவுகள் எல்லாம் நிகழ்கால தகப்பன் மகன் உறவுகளைப் பற்றிய பல தகவல்களை பதிவு செய்கிறது.


மோகாஷ் பிறந்த நேரத்தில் அவனுக்கு பெயர் வைக்கும் நேரம் நவீன பெயர் வைக்கும் இலக்கணத்தை எளிதாக சொல்லி நகர்கிறது. நீட்டி இருக்கும் பழைமை வாய்ந்த பெயரின் வாலை வெட்டி சுருக்கினால் நவீன பெயர். 


தற்போதைய தமிழ் ஆசிரியர்களின் தகுதி பெயர் வைப்பதும், கவிதை எழுத தெரிவதும் என்று சொல்லி நகர்வது தற்போதைய தமிழ் ஆசிரியர்களின்  நிலையை அவர்களைப் பற்றிய சமூகத்தின் குறுகிய மனப்பான்மையோடு வெளிகாட்டுகிறது. 


தற்போதைய பெற்றோர்களின் தங்கள் மகன் பற்றியதான வருங்கால கனவுகள் குமராசுரர் மங்காசுரிக்கு இருப்பதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை. என்னது? நீட்.. மருத்துவர் கனவு. 


மோகாஷ் பிறந்து 2 வயதில் பள்ளியில் சேர்ப்பது. அவன் பள்ளி படிப்பின் நேரத்தில் காட்டப்படும் கொடிய காட்சிகள்  மதிப்பெண்கள் சார்ந்து மாணவனை வகைப்படுத்தி வதைக்கும் பள்ளிகள். கண்களை கட்டி செக்கில் மாட்டப்பட்ட மாடு போல மாணவர்களை வதைக்கும் பள்ளிகளின் கேடு கெட்ட வழிமுறைகள். பள்ளிகளில் மாணவர்கள் இறக்கும் வரை செய்யப்படும் கொடுமை அதை மறைக்க பள்ளிகளின் உள்ளேயே அமைக்கப்பட்ட மயான பூமி. அனைத்தும் மனதை பதை பதைக்க வைக்கிறது. 


பள்ளி முடித்து வந்த மோகாஷ் பள்ளியின் சீருடையை எரித்து மகிழும் நேரம் ஆடிய வெறி ஆட்டம், வீட்டுக்கு வந்து பல நாட்கள் தன்னையே மறந்து தூங்கியவை ஆகியவை மாணவர்களுக்கு நடந்த கொடுமைகளின் வெளிப்பாடாக வெளிப்படுகிறது. 


இது போன்ற அரிய வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தி தருபவர்கள் அவர்கள் பெற்றோர்களே. என்பது இங்கும் எங்கும் நிலைக்கும் உண்மை. 


கல்லூரிகளில் சேரும் நேரம் கொடுக்கப்பட்ட  இலவச கடிவாளம் என்னது  மாணவர்களுக்கு கடிவாளமா ஆம் அவர்கள் கண்களுக்கு கடிவாளம். எதிர் பாலினத்தினரின் இடையே பின்பற்றப்படும் பிரிவு, மாணவர்களை வதைப்பதற்காக உருவாக்கப்பட்ட எந்திர அசுரர்கள் போன்றவை. இப்படி எல்லா நேரங்களிலும் மாணவர்களுக்கு கல்விமுறையால் ஏற்படுத்தப்படும் ஒடுக்கு முறைகள் இங்கே தெளிவாக பதிவு செய்யப்படுகிறது.


தற்கால கல்வி முறையை இதை விட எதார்த்தமாக ஆழம் திருத்தமாக சொல்லி விட முடியாது. 


 இவைகள் இங்கு நகைச்சுவையுடன் சொல்லப்பட்டாலும் நமது சமூகத்துடன் பொருத்திப் பார்க்கும் போது மிகவும் ஆபத்தான சிந்திக்கும் திறனற்ற செயல்களை மட்டும் பதிவேற்றம் செய்த எந்திரங்களை உருவாக்குவதாகவே தெரிகிறது. ஆசிரியர்களும் எந்திரங்கள். உருவாக்கப்படும் மாணவர்களும் எந்திரங்கள். 


ஒரு சமூகத்திற்கு சிந்திக்கும் திறன் இல்லாமல் போனால் அந்த சமூகத்திற்கும் மற்ற விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லை. மனித சமூகத்தையும் ஏனைய உயிர்களையும் வேறுபடுத்துவதே இந்த சிந்திக்கும் ஆற்றல் தான். அது இல்லாமல் போனால் மனிதர்கள் அரக்கர்கள் தான். இது போல பல இடங்களில் இரகசியமாக எச்சரிக்கிறது. 


தலைமுடி வேற எல்லா இடங்களிலும் பிரச்சனை ஆகிவிடுகிறது. இங்கும் ஆகி விட்டது. தலைமுடியின் வடிவத்தை மாற்றி வீட்டுக்கு வரும் தனது மகனை யாரையா நீ என்பது போல கேட்கும் மங்காசுரியின் குரல் பல நபர்களின் குரல்களாக ஒளிக்கிறது. 


குமராசுரரின் ஆருயிர் நண்பர் ரம்பத்தொண்டை கனகாசுரர் மற்றும் அவருடைய மனைவியின் வாயிலாக ஆண் குழந்தைகளை மட்டும் எதிர்பார்க்கும் குடும்பங்கள். அதனால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆண்பிள்ளைகளை எதிர்பார்த்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த கனகாசுரர் தனது மனதை தேற்றிக்கொள்ளும் வண்ணமாக அனைத்து ஆண் பிள்ளைகளையும் குறைத்து பேசுவதாகவும், குறைத்து மதிப்பிடுகிறவராகும் மாறிப் போகிறார் இருப்பினும் அவரது கண்களில் அந்த வருத்தம் தெரிகிறது. 


பெரிதாக ஒன்றும் இல்லை அவருடைய மகன் குமராசுரரிடன் புதிதாக அதிக விலைக்கு எல்லா வசதிகள் கொண்ட செல்பேசி கேட்டான் அவ்வளவு தான். அதைவைத்து அவர் செய்யும் கற்பனைகள் தான் நாவலின் முக்கால் வாசியை நிறைவு செய்கிறது.  செல்பேசி பற்றிய அவர் கேள்விபடும் ஒவ்வொரு விசயமும் அவருடைய கற்பனையில் அவருடைய மகனை பல முறை கொலை செய்ய பார்க்கிறது, தவறான பாதைக்கு கொண்டு செல்கிறது. 

எல்லாம் கற்பனையில். உண்மையில் அப்படி இல்லை அவனோ எதார்த்தமானவனாகவும் சாதாரணமானவனாகவும் திகழ்கிறான். 


குமராசுரர் பற்றி மங்காசுரி நினைக்கும் நினைவை இங்கே குறிப்பிடுவது நல்லது. எதையும் எளிதாக செய்யலாம் ஆனால் இவரோ எல்லாவற்றையும் கடினமாக்கி இருக்கிற எல்லாரையும் கடினப்படுத்தி விடுகிறாரே என்பது போல. 


குமராசுரர் உண்மையான அவரை அதிகாசுரர் மூலமாக கண்டு பிடக்கும் வரை ஆரோக்ய பித்து முதல் பல பித்துகள் கொண்டவராகவே திகழ்கிறார். ஆனால் அந்த கழிமுகம் அவரின் போலியை உறிந்த பின் உண்மையான குமராசுரர் வெளிப்படுகிறார். அட இது நம்ம குமாரா என்று சொல்லும் அளவிற்கான மாற்றமாக அது இருக்கிறது. 


அந்த அதிகாசுரர் அப்படி என்ன செய்தார்? 


அவருக்கு சற்று ஓய்வை கொடுத்தார் தனக்குள் தன்னைத் தேடும் நேரத்தை கொடுத்தார் அவ்வளவு தான். தன்னை இறுக்கி வைத்திருந்த குமராசுரர் அவருக்கு பிடித்தவைகளை செய்ய ஆரம்பிக்கிறார். புதிதாகவும் சிலவற்றை செய்ய ஆரம்பிக்கிறர். 


அதிகாசுரர் அவரை கழிமுகம் நோக்கி ஒரு பயணத்துக்கு கூட்டி சென்றார். அந்த கழிமுகமே மற்றதை செய்து முடித்தது. 


கழிமுகத்தில் நின்ற குமராசுரர் கடல் நோக்கி நின்று தண்ணீரை சுவைத்தார், பின் ஆறு நோக்கி நின்று தண்ணீரை சுவைத்தார். தன்னை மறந்தார் ஒரு கணம். 


தன்னுடைய வாழ்க்கையிலும் இதுபோன்ற கழிமுகம் இருப்பதை உணர்ந்த அவர் உவர்ப்பான அந்த பழைய வாழ்க்கையை விட்டு இனிப்பான பக்கம் நோக்கி ஓடினார். 


இனிப்பாகவே வாழ்வது எப்படி என்பதை அந்த கழிமுகம் அவருக்கு சொல்லிக்கொடுத்தது. 


இப்பொழுது குமாராசுரர் சகலத்தையும் புரிந்து கொள்ளும் எளிதாக எடுத்துகொள்ளும் ஒருவராக மாறிப்போகிறார். 


 One line story சொல்லவா.. மோகாஷ் பிறப்பு, வளர்ப்பு, பள்ளி பருவம், கல்லூரி பருவம், பள்ளி கல்லூரிகளில் அவன் சேரும் போது நடை பெறும் சம்பவங்கள், அவன் செல்பேசி கேட்டது, இது தவிர குமராசுரரின் அரசு பணி, அவ்வளவுதான் இது தவிர ஒன்றும் இல்லை. ஆக ஒரு சாதாரண அசுர குடும்பத்தின் சாதாரண வாழ்க்கை முறை அவ்வளவுதான்.  இதில் நடைபெறும் ஒவ்வொன்றும் அந்த சமூகத்தை அசுர சமூகம் என்பதை நிருபணம் செய்கிறது. மனித சமூகம்! 

இந்த நாவல் முழுவதையும் எளிதாக சொல்லிவிடலாம் ஆரோக்கிய பித்து, பயம், கேடு கெட்ட கல்விமுறை!!!


இனிப்பான தண்ணீர்க்கும் உவர்ப்பான தண்ணீருக்கும் இடையே சிறிய தூரம் தான் கழிமுகத்தில். 

அதுபோல, நாம் நம்முடைய வாழ்க்கையில், சமூகத்தில் காண்கின்ற ஒவ்வொரு உவர்ப்பான வற்றிற்க்கும் எதிரான இனிப்பு சுவை சிறிய தூரத்திலே இருக்கிறது. 

உவர்ப்பை நோக்கியே நகரவிரும்பினால் என்றும் உவர்ப்பு தான். 

இனிப்பை நோக்கி நகர விரும்பினால் என்றும் இனிப்பு தான். நல்ல தண்ணீர்தான்!! 

மகிழ்ச்சியை தேடி சரியான பாதையில் பயணித்தால் என்றும் மகிழ்ச்சி தான்!! 

இல்லை தேவையில்லை. அதே உவர்த்த பழைய முறைகள், அதே கல்வி முறைகள், புதியதை ஏற்க மறுத்து தான் பிடித்த முயலுக்கு ஆறு காலு என்றால் ஒன்னும் செய்ய முடியாது. 

                                          -த.செயபிரகாசு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்