ஸ்காண்டிநேவிய இலக்கியமும் க.நா.சுப்ரமண்யமும் - அழகுராஜ்

 


       தமிழில் பெருமளவு வரவேற்புக்குரிய பிறமொழி இலக்கியங்களாக ரஷ்ய இலக்கியங்களே இருக்கின்றன. ரஷ்ய இலக்கியங்களை தவிர்த்து மொழிபெயர்ப்பு நூல்களில் சி. மோகன் மொழிபெயர்த்த சீன நாவலாகிய ஓநாய் குலச்சின்னம் நாவலை சிறப்பானதென சொல்லலாம். பிற சீன படைப்புகள் ஏதும் தமிழில் பேசப்படக்கூடியவையாக இதுவரை இல்லை. ஆனால் ஸ்காண்டிநேவிய இலக்கியங்கள் தமிழில் தொடர்ந்து வாசிக்கபடக்கூடிய இலக்கியங்களாக இருக்கின்றன. இந்த ஸ்காண்டிநேவிய இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் க.நா.சு.


      பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்களை படிக்கும்போது அந்த கதை நிகழக்கூடிய களம் நம்மை தொடக்கூடியதாக இருக்க வேண்டும் குறிப்பாக அந்த நிலப்பரப்பினுடைய தொடர்பை நாம் மனதளவில் உணர்ந்தால் மட்டுமே அந்த இலக்கியத்தை நம்மால் ஓரளவு துடிப்புடன் வாசிப்பில் நகர்த்திச் செல்ல முடியும். இதில் ரஷ்ய நாவல்கள் தமிழில் வாசகர்களை தொடக்கூடியதாகவும் நேர்த்தியுடனும் மொழிபெயர்க்கப்பட்டு இன்றுவரை தமிழில் வாசிக்கக்கூடிய பிற மொழி நூல்களில் (ஆங்கிலத்தை கடந்த ஒரு நிலை) மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த ரஷ்ய படைப்புகளின் வரிசையில் அதற்கு நிகராக அமரக்கூடிய தகுதியினை பெற்றதாக ஸ்காண்டிநேவிய இலக்கியங்கள் இருக்கின்றன. ஸ்காண்டிநேவிய இலக்கியங்கள் நிகழக்கூடிய களம் ஒரு மாய தோற்றத்துடன் நிகழ்வதால் அது தமிழில் மிகவும் விரும்பி வாசிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. ஸ்காண்டிநேவிய இலக்கியங்கள் என்றால் ஸ்காண்டிநேவிய தேசங்களாகிய ஸ்வீடன், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொழிகளின் மூலம் பெறப்படக்கூடிய இலக்கியங்கள் ஆகும். இந்த ஸ்காண்டிநேவிய இலக்கியங்களில் உச்சத்தை தொட்டு விளங்கக் கூடியவை ஸ்வீடிஷ் மொழி இலக்கியமே ஆகும். ஸ்வீடிஷ் மொழி படைப்புகளுக்கு அடுத்ததாக நார்வே இலக்கியங்களை நாம் ஸ்காண்டிநேவிய இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க படைப்புகளாக கூறலாம்.

       ஸ்காண்டிநேவிய இலக்கியத்தின் முக்கிய படைப்பாளர்களாக நோபல் பரிசு பெற்ற ஸெல்மா லாகர்லெவ் மற்றும் பேர் லாகர் குவிஸ்ட் ஆகியோரைச் சொல்லலாம். ரஷ்ய இலக்கியத்தில் லியோ டால்ஸ்டாய், பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி போன்றவர்களைப் போல இவர்கள் இருவரும் ஸ்வீடிஷ் மொழி இலக்கியத்தினுடைய முக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். மதகுரு நாவலுக்காக ஸெல்மா லாகர்லெவ்வும் பாரபாஸ் நாவலுக்காக பேர் லாகர் குவிஸ்ட்டும் நோபல் பரிசு பெற்றிருக்கின்றனர். இந்த இரண்டு நாவல்களினுடைய பெயரே ஸ்காண்டிநேவிய இலக்கியத்தின் சாராம்சத்தை பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கிறது. 


இந்த கட்டுரை பேசக்கூடிய இரண்டு படைப்பாளர்களும் இறைமை தன்மையை இரண்டு வேறு கோணங்களில் அணுகி தங்கள் படைப்புகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் இருவருடைய படைப்பிலும் கடவுளும் கடவுள் நம்பிக்கையும் முக்கியமான இடத்தை பெறுவது மட்டும் ஒரு ஒற்றுமை புள்ளியாக அமைந்திருக்கிறது. இந்த அமைப்பியல் களம் தான் ஸ்காண்டிநேவிய இலக்கியத்தினுடைய தன்மையாக இருக்கிறது. ஸெல்மா லாகர்லெவ் படைப்புகளில் கடவுளின் இருப்பு உறுதித் தன்மையுடன் வெளிப்படுவதைக் காண முடியும். ஆனால் பேர் லாகர் குவிஸ்ட் படைப்புகள் கடவுளை நம்புவதற்கு எத்தனிக்க கூடியதாகவும் சில நேரம் கடவுளை மறுக்க கூடியதாகவும் அமைந்திருக்கிறது. இந்த கட்டுரையில் பார்க்கக்கூடிய ஸெல்மா லாகர்லெவ் எழுதிய இரண்டு குறுநாவல்களான தேவமலர், அடிமைப்பெண் கவியும் கற்பனையும் மற்றும் பேர் லாகர் குவிஸ்ட் எழுதிய பாரபாஸ் [அன்பு வழி (தமிழில்)] நாவலும் தமிழில் க.நா.சு மூலம் மொழிபெயர்க்கப்பட்டவை ஆகும்.




 1848 இல் பிறந்த ஷெல்மா லாகர் லெவ் எழுதிய தேவமலர் எனப்படக்கூடிய இந்த கதை ஒரு திருடனையும் அந்த திருடன் வாழ்வதற்காக அனுப்பப்பட்டிருக்க கூடிய கீயிங்கே காட்டையும் அந்த காட்டில் கிறிஸ்துமஸ்க்கு முதல்நாள் இரவில் நிகழக்கூடிய அதிசயத்தையும் பேசக் கூடியதாக இருக்கிறது. இந்த நாவலின் மைய நாதமாக ஊவிட் மடத்தின் தலைமை அப்பட் பதவியிலுள்ள ஹான்ஸ் குரு விளங்குகிறார். மங்கோலிய மக்கள் நேசிக்கக்கூடிய அதுமட்டுமன்றி தங்கள் குலச்சின்னமாக மதிக்கக்கூடிய ஓநாயினை மேலை நாட்டு மக்கள் வெறுக்கக்கூடிய விலங்காக மற்றும் அருவருக்கக்கூடிய விலங்காக நினைத்ததை இந்த நாவலில் வரக்கூடிய “அவளையும் அவள் குழந்தைகளையும் மனிதர்களாகவே ஜனங்கள் மதிப்பதில்லை. ஓநாய்கள் என்றே மதித்தார்கள்; ஓநாய்களையும் விட மோசமானவர்கள் என்றே மதித்தார்கள்"  என்கிற வரியின் மூலம் அறியமுடிகிறது. 

      ஹான்ஸ் குரு என்பவர் தோட்டங்களை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக தன்னுடைய மடத்தில் தோட்டத்தை ஏற்படுத்தி அதன் அழகின் மூலம் அனைவரையும் கவரக் கூடியவராக இருக்கிறார். ஆர்ச் பிஷப் மூலம் இங்கே காட்டிற்கு அனுப்பப்பட்ட திருடனும் அவனுடைய மனைவியும் வழிப்பறி செய்து வாழ முடியாமல் வரக்கூடிய காலத்தில் திருடனின் மனைவி மடம் இருக்கக்கூடிய இடத்திற்கு வரும்போது ஹான்ஸ் குருவினுடைய தோட்டத்தை பார்க்கிறாள். அப்போது அவள் கீழே காட்டில் இதைவிட அற்புதமான தோட்டம் ஒன்று உண்டு என்றும் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் மட்டும் அது காட்சி பெறும் என்றும் சொல்லி தான் இருக்கும் இடத்திற்கு எவருக்கும் தெரியாமல் தனியாக வருமாறு ஹான்ஸ் குருவே அழைக்கிறார் அவரும் அந்த இடத்திற்கு செல்ல முற்படும்போது ஆர்ச்பிஷப்பிடம் திருடனை மீண்டும் நகரத்திற்குள் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் அப்போது பிஷப் உண்மையிலேயே அங்கு ஒரு அழகிய தோட்டம் உருவாகிறதென்றால் அங்குள்ள ஒரு மலரை என்னிடம் நீங்கள் காட்டினால் அந்த திருடனை விடுவிப்பேன் என சொன்னவுடன் மிகுந்த ஆர்வத்துடன் ஹான்ஸ் அந்த காட்டிற்கு செல்கிறார். திருடனின் மனைவி சொல்லியபடி கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் இரவு கீயிங்கே காட்டில் ஒளிமயமான பூக்கள் ஒளிரும் ஒரு தோட்டம் உருவாகிறது அந்த தோட்டத்தினுடைய கிழங்கு ஒன்றை பிடித்தவாறு ஹான்ஸ் தன்னுடைய உயிரை விடுகிறார். அந்த கிழங்கினை ஹான்ஸ் குருவினுடைய தோட்டத்தில் அவருடைய சீடன் விதைக்கிறான். அடுத்த வருட கிறிஸ்துமஸ் நடைபெறும்போது கீயிங்கே காட்டில் அந்த தோட்டம் உருவாவதற்கு பதிலாக அந்த கிழங்கினை நட்டுவித்த ஹான்ஸ் குருவினுடைய மடத்து தோட்டத்தில் வண்ண பூக்கள் பூத்து குலுங்குகிறது அந்த பூவைப் பார்த்த பிஷப் திருடனை மன்னிக்கிறார். 


      கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு மட்டும் முளைக்கும் அந்த தேவமலரை சுற்றிய கதையாக இந்தக் கதை அமைந்திருக்கிறது. இந்த கதையில் வரக்கூடிய திருடன் திருடனின் மனைவி அப்பட் ஹான்ஸ் குரு அவருடைய சீடன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்குரிய உணர்ச்சியினை சரியான நிலைகளில் வெளிப்படுத்துவதன் மூலம் இந்த கதை வாசிப்பதற்கான உற்சாகத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. 



இரண்டாவது குறுநாவல் ஸெல்மா லாகர் லெவ் எழுதியிருக்கக்கூடிய அடிமைப்பெண் கவியும் கற்பனையும் என்கிற கதையாகும். இந்த கதையில் ஒரு தூய்மையான குணம் படைத்தவனாக ஹரால்டின் மகனாகிய நார்வே நாட்டு அரசன் ஓலாவ் இருக்கிறான். அவனுடைய தோற்றத்தை ஐஸ்லாந்து நாட்டு வயதான கவிஞர் ஹியால்டே ஸ்வீடன் நாட்டு அரசியான இஞ்செகார்ட் மற்றும் அவளது தோழி ஆஸ்டிரிடாவிடம் வர்ணிக்கிறார். அவருடைய கவித்துவ வர்ணனை மூலம் அவர்கள் இருவரும் ஓலாவ் மீது காதல் கொள்கின்றனர். வீரத்தை மட்டுமே பாடிய அந்த கிழட்டு கவிஞன் ஸ்வீடன் அரசினுடைய ராஜகுமாரியை பார்த்தபின்பு காதலை வாழ ஆரம்பித்து காதலை பாடுகிறான். அப்போது ராஜகுமாரி அந்த கவிஞனிடம் “நானும் கனவுகள் காண்கிறேன். என் கனவுகளுக்கும் உன் கனவுகளும் வித்தியாசமுண்டு உன் கனவுகள் கவிதைகளாக உருவெடுக்கின்றன என் கனவுகள் கேவலம் கனவுகளாகவே இருக்கின்றன” என்று சொல்கிறாள்.


      ராஜகுமாரியினுடைய வார்த்தைகளுக்கேற்றவாறு ஹியால்டே தன் கனவின் மூலமாக இஞ்செகார்ட் மற்றும் ஓலாவை கணவன் மனைவியாக நினைக்கிறான். இந்த கடைசி இருக்கு குறுக்கீடாக ஸ்வீடன் நாட்டு அரசன் எழும்பும்போது ஆஸ்டிரிடா யோசனை மூலம் அவள் ஓலாவிற்கு மனைவியாக கொடுக்கப்படுகிறாள். அப்போது ஒலாவ் செய்யக்கூடிய நேர்மையான உன்னதமான செயல்களை பார்த்து ஆச்சரியப்படுகிறாள். பொய் சொல்லி வஞ்சகத்தின் மூலமாக நாம் நார்வே நாட்டு அரசனை அடைந்துவிட்டோம் என்று வெட்கி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறாள். அரசன் அவள் சொன்ன பொய்யை அறிந்தவுடன் அவளை கொல்வதற்கு முற்படும்போது “மன்னிப்பு அவர்களே புண்யசாலிகள், அடிமைகளை ஆண்டவர்கள், அன்பே தெய்வம்." என்ற அவன் வாளில் பொறிக்கப்பட்ட இயேசுவின் வாசகம் கண்ணில் பட்டவுடன் அவளை மன்னித்து தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் இப்படியாக இந்த கதை முடிகிறது.


      இந்த கதையில் இஞ்சகாண்ட் இல்லையா நீ என்ற பொருளுடன் ஆஸ்டிரிடாவிடம் அரசன் ஓலாவ் கேட்கும் ஒரு பகுதி வருகிறது. அந்த இடத்தில் இஞ்செகார்டு அல்லவா நீ என்று மொழிபெயர்த்திருப்பது பொருளை மாற்றி அமைக்கிறது. அதேபோல கிறிஸ்தவத்தின் உடைய உடல் பொருள் ஆவி என படக்கூடிய திரித்துவத்தை பேசக்கூடிய இந்தக்கதையில் “உன் உடலும் பொருளும் என்னுடையவையாக இருக்கலாம் ஆனால் உன் உயிரும் ஆவியும் ஈசுவரனுடையவை என்று பதிலளித்தான் அரசன்" என்பதாக க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். இந்த இடத்தில் தமிழ் வழக்குக்கேற்ற ஈசுவரன் என்ற சொல்லை க.நா.சு தவிர்த்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். இந்த கதையில் கடவுளின் சித்தம், ஒலாவ் ஒரு நீதிமான் என்று கடவுளை மையப்படுத்தி கடவுளை போற்றக்கூடிய கதையாக இந்த கதை விளங்குகிறது.


       ஸெல்மா லாகர்லெவ் என்ற இந்த பெண் எழுத்தாளருடைய இரண்டு குறு நாவல்களிலும் கிறிஸ்தவம் சார்ந்த நம்பிக்கைகள் வெளிப்படுவதை பார்க்க முடிகிறது.



      பேர் லாகர் குவிஸ்ட் எழுதிய பாரபாஸ் நாவல் 1951ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற நாவல் ஆகும். இந்த நாவலின் மூலம் எழுத்தாளர் எதையும் உறுதியாக சொல்லாமல் கிறித்தவ சமய நம்பிக்கைக்கும் கடவுள் மறுப்புக்கும் நடுவில் நின்று கொண்டு பாரபாஸ் மூலம் இரண்டு பக்கமும் காய் நகர்த்துகிறார். இதற்கான காரணம் பேர் லாகர் குவிஸ்ட் கிறிஸ்தவ கல்வி நிலையத்தில் கல்வி கற்ற ஒரு கம்யூனிஸ்ட் என்பதேயாகும். இந்த நாவலானது விவிலிய தரவுகளோடு விவிலியத்தில் அதிகம் பேசப்படாத பாரபாஸின் பக்கம் நின்று அவனது கதையைப் பேசுகிறது. இந்த நாவலில் வரக்கூடிய பாரபாஸ் அடைய வேண்டிய தண்டனையைத் தான் இயேசு சிலுவையின் மூலம் பெற்றார். அந்த தண்டனையை அவர் பெறுவதைப் பார்க்கும் பாரபாஸ் தனது முழுக் கவனத்தையும் இயேசுவின் பக்கம் திருப்புகிறான். அவரை நம்புவதற்கு தொடர்ந்து முயற்சி செய்கிறான். 


        இயேசு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் எனக் கத்தும்போது இருள் சூழ்வது, இயேசுவின் தாயாகிய மரியாளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாதிருத்தல், செத்த பிறகும் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுந்த மனிதனை நேரில் பார்த்தல்,  இயேசுவின் சீடர்களுடைய பேச்சு, ஸஹாக் எனும் பெயருடைய தன் சக கைதி இயேசு மீது வைத்துள்ள நம்பிக்கை முதலானவை இயேசு மீது பாரபாஸை நம்பிக்கை வைக்க நேரடியாகவும் உள்ளோட்டமாகவும் தூண்டுகிறது. ஆனால் அவனுக்குள் இருக்கும் முரட்டு சுபாவம் அவனை தொடர்ந்து தடுத்துக் கொண்டே இருக்கிறது.


        இந்த நாவலில் பாரபாஸ் இயேசுவின் மீது வைக்க விரும்பும் நம்பிக்கையில் இரட்டை மனதுடன் இருப்பது போல தான், அங்குள்ள ஜனங்களும் பாரபாஸுடன் இரட்டை வேடம் போடுகின்றனர். பாரபாஸ் சிலுவையில் மரித்திருந்தால் அவனுக்காக அவர்கள் ஒரு துளி கண்ணீரைக் கூட தரையில் சிந்தவிட்டிருக்க மாட்டார்கள் என அவனுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் அவனுடைய கொள்ளையடிக்கும் திறமையை பயன்படுத்துவதற்கென அவன் சிலுவை மரணத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதை கொண்டாடுகிறார்கள். கொள்ளைக் கூட்டத்தில் இருந்து அவன் மெதுவாக விலக்கி வைக்கப்படுகிறான். சில நாட்களுக்குள்ளாகவே இத்தகைய மாற்றங்கள் நடந்தேறுகிறது. 


      இந்த கதையில் இயேசுவின் சீடராகிய பேதுருவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட அவருடைய கதாபாத்திரம் வருகிறது. மேலும் தனக்கு பிறந்த குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்ற ஒரு பெண் மன விடுதலை அடைந்து இயேசு உயிர்த்தெழுந்த சாட்சியை ஊர் முழுக்க சொல்கிறாள். அதைக்கேட்ட குருடன் ஒருவன் அவள் பொய் சொல்கிறாள் உடனே அவள் கொல்லப்பட வேண்டும் என்று அவள் மீது முதல் கல்லை எறிகிறான். அந்தக் கிழவனை பாரபாஸ் கொல்கிறான். அடுத்ததாக அவனுடைய தகப்பனும் அவன் முகத்தில் உள்ள தழும்புக்கு காரணமாக இருந்தவனுமாகிய அவனுடைய எலியாஹூவை கொல்கிறான். எலியாஹூ ஒரு கொள்ளைக்காரன் அவன் இருந்த கொள்ளைக்கூட்டத்திடம் சிக்கிய மோவாபைட் ஸ்திரீ தான் பாரபாஸின் தாய். இப்படியாக இரண்டு கொலைகளைச் செய்யும் பாரபாஸ் தனக்காக ஒருவன் தன்னோடு தொடர்புடைய  ஒருவனென இரண்டு பேர் சிலுவையில் சாவதை நேருக்கு நேர் காண்கிறான். இயேசு பாரபாஸ்க்காக அல்லது பாரபாஸ்க்கு பதிலாக சிலுவையில் மரணிக்கிறார். பாரபாஸோடு உடனிருந்த  நண்பனாகிய ஸஹாக் எனும் கைதி  இயேசுவின் பெயரை தனது டாலரில் பதித்ததற்காகவும் அவர்மீது நம்பிக்கை வைத்ததற்காகவும் சாகிறான். தன்னுடலாக பல காலம் பிணைக்கப்பட்டிருந்த நண்பனின் சாவை நேருக்கு நேர் பார்த்த பாரபாஸ் இயேசுவை நம்புவதற்கு தீவிர முயற்சி எடுக்கும் சமயத்தில் இந்த இரண்டு சிலுவை மரணங்களுக்கு பிராயச்சித்தமாக இருக்க வேண்டுமென அவசரப்பட்டு கடவுள் வருகிறார் அவர்தான் எனக்கு பதிலாக சிலுவையில் மரணித்தார். அவரை நம்பும்படி தான் ஸஹாக் என்னிடம் கேட்டுக்கொண்டான் என்கிற எண்ணத்தை தன் மனதில் ஓடவிட்டு கடவுளுக்கு உதவுவதாக குடிசைகளில் தீ வைத்து அதிகாரிகள் செய்த சதிக்கு பலியாகி இரண்டு முறை தப்பிப் போன சிலுவை மரணத்தைப் பெறுவதாக கதை முடிகிறது. அவன் சிலுவையில் ஏற்றப்படும் போது கூட அவனைச் சுற்றி இருந்தவர்களின் மரணத்தை பார்த்துவிட்டு “என் ஆத்துமாவை உனக்கு அளித்துவிடுகிறேன்" எனச் சொல்லி உயிரை விடுகிறான். இந்த இறுதி வார்த்தை மூலம் வாசகர்களுக்கு நாவலைக் குறித்த எண்ணவோட்டத்தை பேர் லாகர் குவிஸ்ட் விஸ்தரிக்கிறார்.


      ஸெல்மா லாகர்லெவ் என்ற ஸ்வீடிஷ் மொழியின் மூத்த பெண் எழுத்தாளர் மற்றும் அவருக்கு பின் வந்த பேர் லாகர் குவிஸ்ட் ஆகியோர் எழுதிய நாவல்கள் குறித்த இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் இந்த சமயத்தில் ஸ்வீடிஷ் இலக்கியத்தில் உள்ள எழுத்தாளர்கள் மாறுபட்ட சிந்தனையை குறுகிய கால இடைவெளிக்குள் அடைந்ததோடு அதை இலக்கியத்தில் பதிவு செய்ததையும் இவர்கள் இருவருடைய மாறுபட்ட எழுத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. மேலும் ஐரோப்பிய இலக்கியங்களில் இந்த ஸ்கான்டிநேவிய படைப்புகள் பிற மொழிகளாகிய இத்தாலி, பிரெஞ்சு முதலானவற்றிடம் இருந்து கதை சொல்வதில் மாறுபட்ட முறையைக் கையாள்வதை ஆல்பெர்க் காம்யு தொகுத்த விருந்தாளி தொகுப்பின் மூலம் அறியலாம். க.நா.சு இப்படியான இலக்கியங்கள் தமிழ் வாசகர்களுக்கு தெரிய வேண்டுமென எடுத்த முயற்சியை வெற்றுப் பாராட்டுதலோடு கடந்து விட முடியாது. புரட்சியையும் காதலையும் நுணுக்கமாக இலக்கியத்தில் பேசிய ரஷ்ய படைப்பாளிகள் தமிழில் வாசிக்கப்படுவதைப் போன்று ஐரோப்பிய இலக்கியங்களும் வாசிக்கப்பட வேண்டும் என்கிற அவருடைய மன உந்துதலாக நான் இத்தகைய மொழிபெயர்ப்புகளைப் பார்க்கிறேன். கீழை நாடுகளினுடைய நிலவியல் அமைப்பு, மேலை நாடுகளின் வாழ்வியல் அணுகுமுறை முதலானவற்றை இத்தகைய மொழிபெயர்ப்புகள் மூலமாக மட்டுமே நம்மால் பெற முடியும். க.நா.சுவின் மொழிபெயர்ப்பு அர்ப்பணிப்பை மொழிபெயர்ப்பு தேர்ச்சியை இந்த மூன்று கதைகளினை ஒப்பிட்டு நம்மால் அறிய முடியும். மூன்றுமே ஸ்வீடிஷ் படைப்புகளாக இருந்தாலும் ஒவ்வொன்றும் தனது தனித்தன்மையை இழக்காதவாறு மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. முதல் இரண்டு குறுநாவல்களிலும் உள்ள இலக்கியக் கோர்வையும் கதை சொல்லும் முறையும் மூன்றாவது சொன்ன பாரபாஸ் நாவலில் இருந்து வேறுபடுகிறது. இதன்மூலம் க.நா.சு தான் மொழிபெயர்த்த எழுத்தாளருடைய படைப்பு மொழியை அணுகக்கூடிய விதம் வெளிப்படுகிறது. இதுதான் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதியென நான் கருதுகிறேன்.


                                                 -அழகுராஜ்






கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்