விரிவும் ஆழமும் தேடி 01.01.2022 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெளிப்பட்ட கருத்துக்களின் துளிகள்

 விரிவும் ஆழமும் தேடி

வாசிப்பை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வளப்படுத்தும் முயற்சியின் விளைவு விரிவும் ஆழமும் தேடி ஆகும். புத்தாண்டை இலக்கியத்தோடு தொடங்க வேண்டுமென நினைத்ததன் பலனாக புத்தாண்டு அன்று நடைபெற்ற இலக்கிய கலந்துரையாடல் அமைந்தது. அந்த நாளில் கலந்துரையாடப்பட்ட தகவல்கள் சிறு துளிகளாக இந்த பகுதியில் அளிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீனிவாச கோபாலன் ஆற்றிய உரையின் துளிகள்:

     இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பலரும் ஆரம்ப நிலை வாசகர்கள் என்பதால் அவர்களுக்கு அ. முத்துலிங்கம் அவர்களின் 'அங்கே இப்ப என்ன நேரம்?' நூலைப் பரிந்துரை செய்யலாம் என நினைக்கிறேன். சரளமான தேய்வழக்கு இல்லாத உரைநடை, புதிய விஷயத்தை சுவாரசியமாகச் சொல்லுதல், நகைச்சுவை, புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துதல் முதலானவை அந்த புத்தகத்தின் சிறப்பம்சங்கள். இந்நூலிலிருந்தான் என் மின்னூல் பதிப்பு முயற்சியும் ஆரம்பமானது. இப்போது இந்நூலை அச்சிலும் வெளியிட்டிருக்கிறேன். நவீன இலக்கிய வாசிப்பிற்குள் நுழையும் வாசகருக்கு இது மிகச்சிறந்த நூலாக இருக்கும்.


பதிப்பு பற்றி:

     நூல்களை அச்சுப் புத்தகமாகப் படிக்கலாம். இல்லையென்றால் கிண்டில் மாதிரியான ரீடரில் படிக்கலாம். ஒலிப்புத்தகமாகக் கேட்கும் வசதிகூட வந்துவிட்டது. ஆனால், பிடிஎப் மூலம் வாசிப்பது முறையானதல்ல. அந்த வடிவம் வாசிப்புக்கு ஏற்றதும் அல்ல. ஓலைச்சுவடிகள், பழைய புத்தகங்கள், இதழ்கள், ஆவணங்கள் போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டுமானால் பிடிஎப் கோப்பாக ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளலாம்.

    நாட்டுடைமையான பல புத்தகங்கள் இன்று வாசிப்பதற்குக் கிடைப்பதில்லை. தமிழ் இணையக் கல்விக்கழகம், மதுரை திட்டம், விக்கிமூலம், கணியம் அறக்கட்டளை போன்ற அமைப்புகள் வெவ்வேறு தளங்களில் மின்னூல்களை வெளியிடும் பணியை வணிக நோக்கம் இல்லாமல் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் மின்னூல் பதிப்பு சார்ந்த சில வசதிக்குறைவு உண்டு.


     மின்னூல் பதிப்பில் பழைய புத்தகங்களில் உள்ள குறியீடுகளை பயன்படுத்துவதில் சிக்கல் காணப்படுகிறது. அவற்றைக் களைந்து தற்கால வாசிப்புக்கு ஏற்ப அமைக்க வேண்டும். பதிப்பு சார்ந்து ஒரு நெறிமுறையைக் கடைபிடிப்பதும் அவசியம். சில பதிப்பகங்களின் அச்சு நூல்களில் காணும் இந்தப் பதிப்பு முறை மின்னூல் பதிப்பிலும் இருக்கவேண்டும்.


     பல ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பாக வரும் புத்தகங்களில் முதல் பதிப்பில் உள்ள முன்னுரை முதலான அம்சங்களை எல்லாம் விட்டுவிடுகிறார்கள். தங்களுடையதே முதல் பதிப்பு என்று போட்டுக்கொள்கிறார்கள். இத்தகைய தவறான வழக்கங்களைத் தவிக்கலாம்.


மின்னூல்களின் சாதக அம்சங்கள்:

     பதிப்பகங்கள் தாங்கள் வெளியிட்ட சில புத்தகங்களுக்கு எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாமல் மறுபதிப்பு கொண்டுவராமல் இருக்கலாம். கிண்டில் மாதிரியான தளத்தில் அவற்றை மின்னூல்களாக வெளியிடலாம். ஆயிரத்திற்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகங்களை அச்சு நூலாக வாசிப்பதில் சிரமம் உண்டு. அப்படியான புத்தகங்களை மின்னூலாக வாங்க விரும்பும் வாசகர்கள் இருக்கிறார்கள். இவையெல்லாம் பதிப்பகங்களுக்கான சாதகமான அம்சங்கள்.

     மின்னூல்களை வாசிக்கும் வாசகர்களுக்கு அச்சு நூலில் இல்லாத சில பயனுள்ள வசதிகள் கிடைக்கின்றன. மின்னூலில் அச்சுப் புத்தகத்தில் இருப்பது போன்ற பொருளடக்கம் உண்டு. அதன் வழியே வாசிக்க விரும்பும் அத்தியாயத்தைச் சுலபமாக வாசிக்கலாம். குறிப்பிட்ட சொல் புத்தகத்தின் எந்தெந்த பக்கங்களில் உள்ளது என்பதைத் தேடுபொறி மூலம் அறியலாம். அவ்வப்போது இலவசமாகவே மின்னூல்கள் கிடைக்கும். மாதந்திர, வாராந்திரச் சலுகைகளின்போது அச்சு நூலின் விலையில் பத்து ஒரு பங்கு விலைக்குக்கூட அதே நூலின் மின்பதிப்பை வாங்கிக்கொள்ளலாம்.

பல எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களிலு ஒன்றையாவது கிண்டிலில் வெளியிட்டுள்ளனர். அதிலும் சில எழுத்தாளர்களின் நூல்கள் முழுவதுமே மின்னூல்களாகக் கிடைக்கின்றன. எழுத்தாளர் என். சொக்கன் தன்னுடைய எல்லாப் புத்தகங்களும் முதலில் மின்னூலாகத்தான் வரும் என அறிவித்துள்ளார். அந்த அளவுக்கு மின்னூல் வாசிக்கும் வாசகர்களின் உலகம் விரிந்திருக்கிறது.



கவிஞர் மதார் ஆற்றிய உரையின் துளிகள்:

கவிதை பற்றி:

     கவிதை எழுதுவது நம் கையிலிருந்து விடுபட்டு போய் வேறொரு இடத்தில் நிற்பதற்கான சாத்தியம் அதிகம். ஒரு கவிதை எழுதப்பட்ட பின் அது நம்மால் தான் எழுதப்பட்டதென உரிமை கொண்டாட முடியாது. காரணம் என்னவென்றால் அந்த கவிதை எங்கிருந்து வருகிறதென நமக்கே தெரியாது.

புதிதாக கவிதை எழுத தொடங்குபவர்களுக்கு:

    ஒரு  கவிஞர் கவிதைக்காக இரண்டு விஷயங்கள் பண்ணலாம். 

1) தனது கவிதை மொழியை தொடர்ந்து மெருகேற்ற வேண்டும். 

2) கவிதை எழுதுவதற்கான புறச்சூழலை சீர்படுத்த வேண்டும்.

அதேசமயம், இப்படியெல்லாம் செய்தால் கவிதை வரும் என்பது நம்முடைய கையில் இல்லை. கவிதை எழுதுவது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு விஷயம். 

வாசிப்பு கவிதையில் ஏற்படுத்திய தாக்கம்:

      மொழிபெயர்ப்பு நூல்கள் எனக்கு மிகவும் கைகொடுத்தது. வேறு மாதிரியான வாக்கிய அமைப்பு, கதையின் புறச்சூழல் என வேறு மாதிரியான ஒரு உலகத்தைக் காட்டக்கூடியதாக மொழிபெயர்ப்பு நூல்கள் இருந்தன. அதையெல்லாம் விரும்பி வாசித்தேன்

      ஓநாய் குலச்சின்னம், கடல் மாதிரியான நாவல்களில் அதிகமாக கவித்துவ வரிகள் இருந்தது. அவற்றையெல்லாம் கோடு போட்டு வச்சிருக்கேன். ஜான் பான்வில் எழுதிய நாவலை கடல் என்ற தலைப்பில் ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் ஒரு புல் அசைவதை “புல் ஸ்தம்பித்த கணத்திற்கு திரும்பியது” என எழுதியிருப்பார் அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

     வாசிப்பு கவிதையை மொத்தமாக புரட்டிப் போட்டது. வாசிப்போடு இருக்கும் போது கவித்துவமாக நிறைய பார்த்தேன். அதற்கு பின்பு எழுதிய கவிதைகளை எல்லாம் ஸ்ரீனிவாசனிடம் வாசிக்க கொடுத்தேன் அவர் யமுனைச்செல்வன் அண்ணனிடம் கொடுத்தார். அவர் இசபெல்லாவின் இரவுகள் கவிதை ரொம்ப அருமையாக இருப்பதாகச் சொன்னார். உடனே நான் அந்த கவிதையை எழுதியச் சூழலை நினைவிற்கு கொண்டு வர முயற்சித்தேன். முடியவில்லை. எழுதுகிறோம் என்கிற பிரக்ஞை இல்லாமல் நான் அந்த கவிதையை எழுதியிருக்கிறேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்