வெயில் பறந்தது - மதார்
வெயில் பறந்தது - மதார்
குழந்தைகளையும் குழந்தைத்தனத்தின் சித்திரத்தையும் எளிமையான சொற்களால் கவிதையாக கொண்டு வரும் வேலையை மதார் செய்திருக்கிறார்.
இவரது கவிதைகளில் குழந்தைகள் விரும்பி விளையாடும் பந்து பலவிதமான நிலைகளில் பரிணமித்திருப்பதைக் காண முடிகிறது. பந்தை படிமமாக கையாண்டு கவிதையை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு தூக்கி வைத்துள்ளார்.
பந்து
எங்கிருந்தோ
ஒரு பந்து வந்து
கைகளில் விழுந்தது
விரிந்த மைதானத்தின்
நட்டநடு வெளியில்
நிற்கும் எனக்கு
இப்பந்தின் உரிமையாளர்
குறித்து அறிவது
அரிதான காரியம்
யாருடைய பெயரும்
எந்தவொரு விதமான
மை கிறுக்கல்களும் கூட
இப்பந்தின் உடம்பில் இல்லை
தான் இன்னாருக்குச் சொந்தம்
என்று அறிவித்துக்கொள்ளாத
பந்து
பூமியைப் போலவே
இருந்தது
உள்ளங்கையில்
பொதிந்திருந்த பந்து
ஒருமுறை
ஒரேயொரு முறை
சிரித்தது
இந்த கவிதையில் பூமியைப் பந்தாக படிமமாக்கியதோடு,
“விரிந்த மைதானத்தின்
நட்டநடு வெளியில்
நிற்கும் எனக்கு
இப்பந்தின் உரிமையாளர்
குறித்து அறிவது
அரிதான காரியம்" எனச் சொல்லி பூமியின் உரிமையாளர் இவர் தான் என ஒற்றைப்படையில் சுட்டிக்காட்ட முடியாத தனது நிலையை வெளிப்படுத்தியதோடு இறுதியில்,
“உள்ளங்கையில்
பொதிந்திருந்த பந்து
ஒருமுறை
ஒரேயொரு முறை
சிரித்தது" என முடிக்கிறார்.
குருடர்களின் கண்களில் ஒரு விசித்திரம் இருக்கும் அதனை நான் நேருக்கு நேர் நின்று அனுபவித்த பல தருணங்கள் எனது சிறு வயது முதலே உண்டு. அந்த கண்ணீர் கொள்ளும் ஏதோ ஒன்று மங்கலாக ஊடுருவிக் கொண்டே இருப்பதையும் கூட நான் பார்த்துள்ளேன் ஆனால் நான் நேரில் பார்த்திராத ஒன்றை கவிதையில் மதார் சாத்தியப்படுத்தியுள்ளார். பாடல் பாடும் மேடைகளில் பாடக்கூடிய பார்வை இழந்தவர்களின் முக அசைவைக் காணும்போது அவர்களது கண்களில் கருவிழி நடனமாடி ராகத்தை கொணர்வதை பார்க்கலாம். அந்த கருவிழியை பந்தாக உருவகித்து அதேபோன்ற காட்சியை கீழே உள்ள கவிதையில் காட்டியுள்ளார்.
“கரு நிற இமைப்பந்துதான் விழிகளில்
வலதுக்கும் இடதுக்கும்
குருடனுக்கு சாத்தியப்படுகிறது
தனது இரு இமைப்பந்துகளின்
சந்திப்பை நிகழ்த்த"
இந்த கவிதைத் தொகுப்பில் எனக்கு பிடித்தமான கவிதைகளில் ஒன்று தான் கீழேயுள்ள கவிதை
“அப்போதுதான்
பேசத் தொடங்கியிருக்கும் குழந்தை மரத்தடியின் கீழ் நிற்கிறது
நான் அதன் அருகில் அமர்வேன் சம்மணமிட்டு
அப்போது வரை பேசிக்கொண்டிருந்த
என் சொற்களையெல்லாம் துறந்துவிட்டு
எதிரெதிரே
பந்து பிடித்து
விளையாட்டு
அது கொடுக்கும்
சொல்லை
அதனிடம் அதனிடம்
தூக்கிப் போட்டு" பொதுவாகவே ஒரு குழந்தையுடன் பந்தை தூக்கிப்போட்டு விளையாடும்போது கண்முன் விரிய கூடிய காட்சிகளையும் தனக்குத் தெரிந்த மொழியினையும் துறந்துவிட்டு, குழந்தையின் வாய் அசைவில் வெளிப்படும் ஒலியினையும் அதில் இருக்கும் சுகத்தையும் இனிமையையும் பேசக்கூடியதாக இந்த கவிதை உள்ளது. அழகியலை பிரித்துவிட்டு தன்னிச்சையான மொழியில் இயல்பாக இந்த கவிதை வெளிப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாக விளங்குகிறது.
நான் முதலில் சொல்லிய கவிதையில் பூமிக்கு பந்து படிமம் ஆகின்றது. இரண்டாவது கவிதையில் விழி பந்தாக உருவகிக்கப்படுகிறது.
“பூனையின் விழிப்பந்துகளை பார்த்திருக்கிறாயா
அதன் நிறம்
அது ஒரு கிரகம் என்று தெரிந்தபோது
எனக்குத் தூக்கம் வரவில்லை
மேலும்
வட்ட வடிவ பாத்திரத்திலா பூனைக்குப் பால் வைக்கிறாய் அப்படியெனில்
சென்டிமீட்டர் அளவுகோல் போதும் பூமிக்கும் நிலவுக்கும்
இடைப்பட்ட தொலைவை அளக்க”
இந்தக் கவிதைகள் ஒரு பூனையின் உடைய விழிப்பந்து ஒரு கிரகமாக பார்க்கப்படுகிறது.
“பூமிக்கும் நிலவுக்கும்
இடைப்பட்ட தொலைவை அளக்க”
என்ற வரியில் அந்தப் பூனையின் கண்ணாக பார்க்கப்படும் ஒரு கிரகம் பூமியாகவும் அது குடிக்கும் வட்ட வடிவ பாத்திரத்தில் உள்ள பால் நிலவாகவும் மாறுகிறது. இரண்டு வரிகளுக்குள் இந்தக் கவிதை இத்தனை மாற்றங்களை கொண்ட கனத்த பொருளை எளிமையான சொற்கள் கொண்டு புதைத்து வைத்துள்ளது.
பந்து மட்டுமல்லாது பலூனும் கூட இந்த கவிதைத் தொகுப்பின் அடையாளமாக மாறுகிறது. பலூன் பற்றிய கவிதைகள் உண்மையும் ஆச்சரியமும் கலந்து வெளிப்பட்டு நம்மை சிரிக்க வைக்கிறது. பொதுவாக பேச்சு என்பது சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்பார்கள் அந்தக் கூற்று கவிதைக்கும் பொருந்துமென பலூன் கவிதை மூலம் அறியத் தருகிறார் மதார்.
“மந்திர சிலேட்
விசில் பந்து
தண்ணீர்த் துப்பாக்கி
பத்தடி காட்டும் பைனாக்குலர்
இவைகளோடு சேர்த்து
பலூன் விற்கிற போதிலும்
பலூன் தாத்தா
என்றே அறியப்படுகிறார்
அந்த பலூன் தாத்தா
நானும்
பலூன் குழந்தையாகவே
இருக்கிறேன்
மரணித்தல் குறித்த
கவலையின்றி
விட்டதும் விடுதலையாகப் பறப்பதால்
பலூனும் குழந்தையாகவே இருக்கிறது
பலூன் தாத்தா
குழந்தையான பலூன்
நான் எனும் பலூன் குழந்தை மூவரும் சந்திக்கும்
நிறைய ஞாயிறுகள்"
முதல் பத்தியில் பலூன் தாத்தா என்ற அறியப்படுகிறார் என்கிற உண்மை ஆச்சரியம் கலந்து தொனிக்கிறது. அடுத்ததாக பலூனின் ரசனையும் குழந்தையின் செயலும் ஒப்புமை ஆகிறது. அக விடுதலை கவிதையில் வரும் பலூனை நாம் இந்த கவிதையில் வரும் பலூனாக கொள்ளலாம்.
“ பலூன் இளைக்கும்போது கேட்கிறது
அகக்காற்றை அழைத்துப் போகும்
புறக்காற்றின் அவசரம்” பலூனுக்குள் அடைபட்டுள்ள காற்றை புறக் காற்று இழுத்துச் செல்கிறது. பலூனானது தான் காற்றில் கடந்து ஓடும் திசையில் முள் இருக்கிறது அந்த முள்ளின் மூலம் மரணம் ஏற்படும் என்பதையெல்லாம் குறித்த கவலையற்று பறந்து போகினது அதைப்போல் தான் குழந்தையும் பிடி விடுபடும் போது ஓடித் திரிகின்றன என சொல்லிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் சுற்றித்திரியும் போது பலூன் தாத்தாவையும் குழந்தையாக ஒப்புமை படுத்தப்பட்ட பலனையும் பலூன் ஆக மாற விரும்பும் அல்லது பலூன் போல இருக்கும் தன்னையும் சந்திக்க வைத்து கவிதையை முடிக்கிறார்.
குழந்தைத்தனம் மிகுந்த சுட்டிக் குழந்தையாக நாம் இருக்கும் வரை மட்டுமே இந்த வாழ்வின் இன்பங்களை மனப்பூர்வமாக அனுபவிக்க முடியும். அதை இழக்கும் போது ஏதோ ஒன்று நம்மை விட்டு அகன்று போய் நம்மை பல நேரங்களில் நிலைகுலைய வைக்கிறது. ஒரு குழந்தை அடம் பிடித்து அழுது கன்னங்களில் வழிந்த கண்ணீரோடு உறங்குவதற்கும் குழந்தைமையை கடந்த பின்பு நாம் அழுவதற்கும் இடையிலான தூரத்தில் உருவாகக்கூடிய வலியை நம்மை நோக்கி நெருங்காமல் பாதுகாத்திடும் ஒரு கவசம் தான் இந்த குழந்தைத்தனம் அந்த குழந்தைத்தனம் எங்கே போனது என்ற தேடலுடன் சில கவிதைகள் வருகிறது.
“நீ தின்ற
டெய்ரி மில்க் சாக்லேட்டுக்குள்
ஒரு விதை இருந்ததாக
பயந்தபடி சொன்னாய்
நான் நம்பவில்லை
துப்பிக் காட்டினாய்
அன்று முதல்
நாம் டெய்ரி விதைகளை
விதைக்க ஆரம்பித்தோம்
அது மரமென வளர்ந்தபோது
அதில் காய்த்திருந்த
டெய்ரி சாக்லேட்டுகளை
எடுத்துத் தின்றுகொண்டோம்
இவ்வாறாக
டெய்ரி மரங்களின்
எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்தது
ஒரு அதிசய
காலை விழிப்பின்போது
நாம்
காட்டுக்குள் தொலைந்திருந்தோம்
ஒருவரை ஒருவர் தேடிக்கொள்ளவில்லை" இந்த டெய்ரி மரம் கவிதையில் ஒருவரை ஒருவர் தொலைந்து இருந்தோம் தேடி கொள்ளாது இருந்தனர் என்பது இயல்பான குழந்தைத்தனம் இது குழந்தை அழுவதற்கு ஒப்பானது.
“நட்சத்திரங்களை
எண்ணுபவனின் விரல்கள்
பெருகுகின்றன
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விரல் வீதம் நட்சத்திரங்களை
எண்ணுபவனின் விரல்கள்
பெருகுகின்றன
ஒரு விரலின் மீதே
அடுத்தடுத்த விரல்கள் பெருகுகின்றன
பல்கிப் பெருகி நட்சத்திரங்களை நோக்கி ஒரு பாதையை அமைக்கின்றன
அந்தப் பாதையில் சிறுவர் சிறுமியர் நடக்கிறார்கள்
குதிக்கிறார்கள்
குச்சியை வைத்துக்கொண்டு
நான் அதட்டுகிறேன்
வழிநடத்துகிறேன்
நட்சத்திரங்களை
எண்ணுபவனின் விரல்கள்
பெருகுகின்றன
மனிதர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள்
இறைவனிடம் வேண்டுகிறேன்
நட்சத்திரங்களை
எண்ணுபவர்கள்
பெருகட்டுமென" இந்த கவிதையும் இதற்கு முந்தைய போல தென்பட்டாலும் கடைசி ஆறு வரிகள் குழந்தைகள் மனிதர்களாக மாறும் போது மாறும் மனநிலையைப் பற்றி பேசுவதாக இருக்கிறது.
“சிலேட்டுக் குச்சிகளை தரையில்
விட்டுவிட்டு
கண்ணாடி முன்னாடி வருகிறாள்
யாரும் வருகின்றார்களா
என
விட்டுவிட்டுப் பார்க்கிறாள்
உயரத்துக்கு பொருந்தாத
இடுப்புச் சேலை
எங்கிருந்தோ ஒரு பாவனை பிடித்து
யுவதியைப் போல் ஆடுகிறாள்
ஒற்றைப்படையிலிருந்து பெருகி
இரட்டைபடைக்கு வருகிறது வயது
இரு கைகளையும் ஆட்டி
வேண்டாம் வேண்டாம் என்று
ஒரு பாவனை
இந்த பாவனைக்கு மட்டும் கண்ணாடிக்கு உள் உள்ளவள்
கண்ணாடியைப் பார்த்து ஆடுகிறாள்" இது கொஞ்சம் சிக்கலான கவிதை. கவிதையானது ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் வெவ்வேறுபட்ட பொருளை கொடுத்து இதுதான் இந்த கவிதை என்ற ஒரு பார்வையைத் தரும். ஆனால் இந்தக் கவிதை அழகாக செல்லும்போதே கடைசி பகுதியில் இரு வேறுபட்ட பொருளை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பொருள் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தையாக இருக்கும்போது பெரியவர்களாக ஆக வேண்டும் என்ற விருப்பமும் வயது அதிகமாகும் போது குழந்தையாகவே இருந்து விடக்கூடாதா என்கின்ற ஒரு ஏக்கமும் எல்லோர் மனதிலும் ஏற்படும் அந்த முறைமையை நாசுக்காக இந்த கவிதை முதலில் சொல்கிறது. இறுதியில்
“இரு கைகளையும் ஆட்டி
வேண்டாம் வேண்டாம் என்று
ஒரு பாவனை
இந்த பாவனைக்கு மட்டும் கண்ணாடிக்கு உள் உள்ளவள்
கண்ணாடியைப் பார்த்து ஆடுகிறாள்" என்ற வரிகளில் இரு வேறுபட்ட பொருளை தருகிறது. முதலாவதாக நான் வயது பெருத்து பெரியவளாக விரும்பவில்லை வேண்டாம் வேண்டாம் குழந்தையாகவே இருக்கிறேன் என சொல்வது போல் தெரிகிறது. இரண்டாவதாக கற்பழிப்பு வன்முறை நிகழும் போது பெண்ணானவள் இரு கைகளையும் ஆடி வேண்டாம் வேண்டாம் எனச் சொல்லும் பாவனை வெளிப்படுவதாக உணர முடிகிறது. இந்த இரண்டு பொருள்களை மனதில் நிறுத்தி கவிதையை முழுக்க வாசித்தாலும் அது ஒன்றுக்கொன்று பிசிறு இல்லாமல் முழுமையாக ஒரு பத்தியில் இருந்து அடுத்த பத்திக்கு நீட்சி அடைகிறது. இரண்டில் எப்படி பொருள் கொண்டாலும் குழந்தைமையில் இருந்து உயரும் போது ஏற்படும் பீதியை தான் வெளிப்படுத்துகிறது.
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகளில் குழந்தைகள் அதிகமாக ஆங்காங்கே சுற்றித் திரிவது போல் வெயில் பறந்தது கவிதைத் தொகுப்பிலும் குழந்தைகள் பலவாறாக திரிகின்றனர். “கர்ப்பிணிப் பெண்ணுக்கான பிறந்தநாள் பரிசு" கவிதையில் குழந்தை தாய்க்கு கடவுள் கொடுக்கும் பரிசு என பார்க்க முடிகிறது.
“கடவுள்
தன் பரிசை
உன் வயிற்றில் வைத்திருக்கிறார்
உருண்டையாகக் கட்டி
பிறந்தநாளின் பரிசைப் பிரிக்க
பரிசின் பிறந்தநாள் வரை
நீ காத்திருக்க வேண்டும்"
அதேபோல, மற்றொரு கவிதையில் துக்கம் ஒரு பரிசுப்பொருள் அது குழந்தையைப் போல் அங்கேயே கிடைக்கிறது அது அமைதியாக நோய்களை நம்மிடமிருந்து அகற்றுகிறது என்று சொல்வதையும் பார்க்க முடிகிறது.
“துக்கம் ஒரு பரிசுப்பொருள் நெடுநாள் என் மேசை மீது கிடக்கிறது
ஒவ்வொரு நாளும் அதைப் பிரிக்கிறேன்
சரிகை முடிச்சிடுகிறேன்
தூங்கச் செல்கிறேன்
அது அங்கேயே கிடப்பதில் சந்தோஷம்தான் எனக்கு
பிறந்த குழந்தை போல அது அங்கேயே கிடக்கிறது
அது தவழ்வதில்லை.
நடக்கவும் செய்யாது
அது ஒரு எளிய அற்புதப் பொருள் அதன் தொனி மௌனம்
அதன் பணி பிணியறுப்பு" இவ்விரு கவிதைகளிலும் வருவது பரிசுப்பொருளாகிய குழந்தைகள் தான். முதலில் சொல்லிய கவிதையில் குழந்தை தாய்க்கு கடவுள் கொடுக்கும் பரிசு என பார்த்தோம்.
“பிரார்த்திக்கும் அம்மாவின்
முந்தானையைப் பிடித்திழுக்குது குழந்தை
கண்ணாமூச்சி விளையாட்டின் மூன்றாம் நபர் போல்
கடவுள் உதட்டில் கை வைத்துப் புன்னகைக்கிறார்
குழந்தை புன்னகைத்தபடியே கடவுளைப் பார்க்கிறது
அம்மா கண் திறக்கவும்
கடவுள் விளையாட்டிலிருந்து காணாமல் போகிறார்" குழந்தையை பரிசாக கொடுத்த கடவுள் குழந்தையோடு கண்ணாமூச்சி விளையாடுவதைப் பற்றி சொல்கிறது இந்த கவிதை. இவ்வாறு பல கவிதைகளில் குழந்தைகள் பற்றிய விவரணை உள்ளது.
வெயிலும் வெயிலின் சகாக்களான பனி, மலை, ஒளி,கிணறு, இசை, காற்று, நீர், பறவைகள், ஆடுகள் முதலானவை எல்லாம் கவிதைகளோடு நம்முடன் பயணிக்கிறது. இந்த கட்டுரையில் வெயில் மற்றும் மழையை மட்டும் பார்ப்போம். வெயிலின் வெம்மையை இளம் சூடாகவும் கடும் வெப்பாகவும் காட்டியதோடு அந்தச் சூட்டை கழுவி குளிக்கவைத்து சூட்டை தணிப்பதற்கு முயன்றுள்ளதையும் வெயில் பற்றிய கவிதைகளில் பார்க்க முடிகிறது. வெயில் பறந்தது என்ற தலைப்பு பிரான்சிஸ் கிருபாவை நினைவுபடுத்தியது. அது எப்படி என்பதை நான்காம் கவிதை பற்றிய கருத்துக்களை சொல்லும் போது இணைத்து கூறுகிறேன். இப்போது முதலில் வெயில் பறந்தது என்ற தலைப்புக்கான கவிதையை பார்க்கலாம்.
“மழை
குடையில்லை
மரம்
ஒதுங்கினேன்
குளிர்
குளிர்
இரு குயில் மரக்கிளையில் இட்டுக்கொண்ட முத்தம்
இதமான சூடு
வெயில்
வெயில்
வெயில் பறந்தது
குக்கூ என்றபடி வானில்," மழை மற்றும் குளிர் காலங்களில் கதகதப்பும் இன்பமும் தரக்கூடியவை தேநீரும் கூடலும் தான். இந்தக் கவிதையில் அப்படியான ஒரு மழை பொழுதில் குயில் தன் இணைக்கு இட்ட முத்தம் இளம் சூடாக வெயிலாக மாறி குக்கூ என்றபடி வானில் பறந்தது என்கிறார் மதார். இந்தக் கவிதையில் ஒரு இளம் வெயில் பூக்கத் தொடங்குகிறது அடுத்ததாக வரும் ‘வெயில் கழுவுதல்” கவிதையில் கடும் வெயிலாக இது மாறுகிறது.
“கடும் வெயில் காலம்
முகம் கழுவுதல் என்பது
முகம் கழுவுதலாய் இருப்பதில்லை முகத்திற்குத் தண்ணீர் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்
மீண்டும் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்
முகம் கழுவ இவ்வளவு நேரமா
என்ற வெளிக்குரல்
அது அறியாது
நான் வெயில் கழுவி
முகம் தேடும் திகிலை" மழை பனி காலங்களில் தேனீர் குடிப்பது இன்பமும் புத்துணர்ச்சியும் தருவது போல கடும் வெயில் காலத்தில் முகம் கழுவுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை தரக்கூடியதாக அமையும். அப்படி முகம் கழுவும் சமயத்தில் நாம் நமது முகத்தை கழுவவில்லை முகத்தில் படிந்துள்ள வெயிலை கழுவி முகத்தை தேடுகிறோம் என்கிறார் மதார்.
“காஃபி ஆற்றும்போது
நறுமணக்கிறது
காற்று
வெயில் காலத்தை
ஆற்ற
ஒரு மாஸ்டர் தேவை” வெயில் காலத்தை ஆற்றுவதற்கு காப்பியாற்றும் மாஸ்டர் போல ஒரு மாஸ்டர் தேவை என விளம்பரப்படுத்துவது போல இந்த கவிதை இருக்கிறது. வெயிலும் ஒரு பொருளாக மாறி அதனை பயன்படுத்துவதற்கு ஒரு மனிதனின் தேவையை நாடுவது இக்கவிதையில் தெரிகிறது. அந்த தேவைக்கு ஏற்ற மாஸ்டரை தேடுவதை அடுத்த கவிதையில் பார்க்கலாம்
“நதி நீரில் ஒரு இலை
குளிக்கத் துவங்கும்போது
நதி நீர் குளியல் நீர்
ஆகிறது
துவட்டும் வெயிலுக்கு
இந்த இரகசியம்
தெரியாது.
வெயில் பறந்து பறந்து
குளியல் நீர்த் தொட்டிகளை எங்கெங்கும் தேடுகிறது
ஆழ சமுத்திரமுங்கூட
வெயில்
நீராட
அனுமதிப்பதில்லை
ஒரு வாளி நிறைய
நீர் எடுத்துக்கொண்டு
உதடு நிறைய
புன்னகை எடுத்துக்கொண்டு வெயில் மீது வீசினேன்
கிடைமட்டமாய்ப் பறந்து
தரையில் போய் விழுந்தன துளிகள்
மண்ணை எடுத்து
கையில் வைத்துப் பார்த்தேன் வெயில் தும்மிய ஈரம் மண்ணை விட்டுப் போகவே இல்லை” இந்தக் கவிதையில் வரும் நதிநீர், சமுத்திரம், நீர்த்தொட்டி எல்லாம் வெயிலை ஆற்றுவதற்கு மாஸ்டராக முன்வரவில்லை. அப்போது தானாக சென்று ஒரு வாளி நீரை வெயிலின் மீது ஊற்றி அதை குளிர்விக்கச் செல்கிறார். வெயிலும் குளித்துவிட்டு துவட்டும் போது தும்மிய ஈரம் மண்ணை கையில் எடுத்துப் பார்த்தபோது அந்த மண்ணில் படிந்திருந்ததாக கவிதை முடிகிறது. இந்த கதையிலும் வெயிலை ஆற்றுவதற்கு ஒரு மாஸ்டர் கிடைக்கவில்லை. அந்த வேகத்தில் தானே மாஸ்டராக மாறி வெயிலை ஆற்றும் வேலையினைச் செய்ததாக குழந்தைத்தனத்தோடு சொல்கிறது இந்த கவிதை.
காதலைப் பற்றி எழுத்தாளர் கவிஞர் இல்லை என எங்கோ யாரோ சொன்னதாக கேட்ட ஞாபகம் என்னை பொறுத்தவரை காதலைவிட நவீன கவிதையில் கவிஞர்கள் மழையைத் தான் பலவாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.அதேபோல மதார் அண்ணனும் தன்னுடைய கவிதையில் மழையை வித்தியாசமாக காட்டியிருக்கிறார்.
“வாசல் தெளிப்பவள் மழையாக்குகிறாள்
நீரை
வாளி வகுப்பறைக்குழ்
இறுக்கமாக அமர்ந்திருந்தவை
இப்போது தனித்தனியாக விளையாடச் செல்கின்றன" மழையானது மேகத்திலிருந்து உதிர்வதற்கு பதிலாக வாசல் தெளிக்கும் போது வாளியில் இருந்து பறந்து வந்து மழைபோல விழுகிறது. இவை குழந்தைகளோடு உருவகிக்கப்பட்டு வாளி போன்ற வகுப்பறையில் உள்ள குழந்தைகள் மழையாக குதித்து தனித்தனியே விளையாடச் செல்வதாக சித்தரிக்கிறார்.
“நான் ஒரு சொட்டு
மழை இல்லை
திருவிழாக் கூட்டத்தில்
வளையல் கையைப்
பிடித்திழுத்து
தனியே அழைத்து
முத்தமிட்டுப் போக வந்த
மழைக்கு
முந்திய
ஒரு சொட்டு." திருவிழா காலத்தில் காதலன் காதலியிடம் செய்யும் செயல் எல்லாம் மறையாது மழை என்பது தனித்தனியாக நிறைய சொட்டுகள் சேர்ந்து விடுவது தான் நான் மழைக்கு முந்திய தனியே விழும் ஒரு சொட்டு என இந்த கவிதை வருகிறது. இதற்கு முந்தைய கவிதையில் ஒரு கூட்ட சிறுவர்கள் கூட்டமாக மோதிக்கொள்ளாமல் விளையாடச் சென்றதை மழை என்றவர் இந்த கவிதையில் அதைப்போன்ற ஒரு விளையாட்டு நிகழும் போது அதைச் சொட்டு என்கிறார். கீழேயுள்ள கவிதையில் குட்டைக்குள் இறங்கி விளையாடும் குழந்தைகளை தூறலின் துளியாக காட்டுகிறார்.
“சன்னலில் அமர்ந்து
தூறல் விழும் சத்தத்தை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
தூறல் குட்டையை நிறைக்கும். குட்டை என் வீட்டுக்குக் கிட்டக்க
குட்டையில் மீன் பிடிக்க
குட்டைகள் வருவார்கள்
குட்டையைக் கடக்கும்போதெல்லாம் நான் பார்ப்பதுண்டு
மழை பொங்கும் நிலத்தில்
மகிழ்ச்சி பொங்கும் முகங்களை
சன்னலில் அமர்ந்து
தூறல் விழும் சத்தத்தை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு துளி விழும்போதும் ஒவ்வொரு அடி
சிறுவர்கள் குட்டைக்கு நடக்கிறார்கள்"
மழையைப் பற்றி நான் குறிப்பிட்ட முதல் கவிதையானது வாளியிலிருந்து மழை விழுவதைப் போல அமைந்திருந்தது. இந்தக் கவிதையில் மரத்தில் இலைகள் மேகத்தைப் போல இல்லாமல், “மேகத் திரட்சியொன்று
இலைகளைப் போல"
பொருந்தியிருக்கிறது. “மழைக்கு ஒதுங்கும் ஒரு சிறுவன் மரத்தடி நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான்." என்கிற வரி இந்தக் கவிதையை பூரணப்படுத்துகிறது பொதுவாகவே, நாம் மழை விழும் சமயத்தில் மரத்திற்கு அடியில் நிற்பதற்கும் மழை நின்ற பின்பு மரத்தடியில் நின்று காற்று வாங்குவதற்கும் இடையில் அதிக வித்தியாசங்கள் உண்டு. மழை பெய்து முடித்தபின்பு மரத்தடியில் நிற்கும்போது இலைகளில் நிற்கக்கூடிய மழைத்துளி நம்மீது விழும் அப்படி விழும் சமயத்தில் நம் தோள் சில்லிடும். ஒரு துளிக்கே அத்தனை வல்லமை இருக்கும் போது இங்க மேகத்திரளே படித்திருக்கிறது என்றால் மழை கனமாக தான் விழும் அந்த பையன் பாவம் தொப்பு தொப்பாக நனையப்போகிறான். அந்த பையன் மழையில் இருந்து தப்பிச் செல்வதற்கு வழியாக கூட ஒரி வரியை மதார் எழுதியிருக்கலாம்.
“பட்டுப்போன ஒரு மரத்தை
தூரக் காட்சியில் பார்த்தேன்
மேகத் திரட்சியொன்று
இலைகளைப் போல
பொருந்தியிருந்தது
பட்டுப்போன அந்த மரத்தில்
இப்போது
மழை காய்த்திருக்கிறது
மழைக்கு ஒதுங்கும் ஒரு சிறுவன் மரத்தடி நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான்."
இரண்டு கவிதைகளில் தூரிகை இரயில் செல்வதற்கு காட்டப்படும் பச்சைக்கொடுக்கும், இருளுக்கும் படிமங்களாக வந்திருக்கிறது.
“யாரோ தன்னை
வரைவதாக
அசைவற்று
நிலைகுத்தி நிற்கும்
இரயில் நகரத் தொடங்குகிறது ஒவ்வொரு நிலையத்திற்கும் ஓவியன் வருகிறான்
தூரிகையைத் தூக்கிக்கொண்டு”
இரயில் நிலையத்தில் இரயில் யாரோ தன்னை வரைகிறார்கள் நாம் அசையாமல் நின்றால் தான் சித்திரம் தெளிவாக இருக்கும் என நிற்கிறது. ஓவியானான இரயில் நிலைய அதிகாரி தூரிகையான பச்சைக்கொடியை தூக்கிக் கொண்டு வரும் போது இரயில் நகரத் தொடங்குகிறது. கடைசி வரை ஓவியனால் அந்தத் தூரிகையைக் கொண்டு இரயிலை வரைய முடியவில்லை.
"சுவரில் நிழல் வரையும் ஒளி இருளை
தூரிகையாக்குமென
யார் கண்டார்
சருகின் நிழல்
தரையில் விழும்
காற்றின் நிழலென
யார் கண்டார்
யானையின் நிழலை
பார்ப்பவனின் நிழல்
யானை அளவாகுமென
யார் கண்டார்
நிழல் முகம்
உணர்ச்சியை நிகழ்த்த
ஒளி படும் பாடு
இருள் அறியுமே?" சுவரில் நிழலை இருள் எனும் தூரிகை கொண்டு ஒளியெனும் வர்ணத்தின் துணையால் வரையப்படும் போது நிழலை வரைவதில் எத்தகைய சிரமங்கள் உண்டு என்பதைப் பல வகைகளில் சொல்பவர் கடைசியில் உணர்ச்சியை வரைதலில் நிகழ்த்தி வெளிக்கொண்டு வரச்செய்யும் பாடு பற்றி சொல்லி கவிதையை முடிக்கிறார்.
ஒரு தீக்குச்சியின் செயலையும் செயலற்ற தன்மையையும் இரு வேறு கவிதைகளின் மூலம் மதார் காட்சிப்படுத்துகிறார். இதில் ஒரு தீக்குச்சி நிகழ்த்தும் ஆச்சரியமும் அழிவும் எத்தகையதென தெரிவிக்கப்படுகிறது.
“நமத்துப் போன தீக்குச்சி
ஒன்றுக்கும் உதவாது
எனச் சபித்து எறிகிறாய்
அது அமைதியாக விழுகிறது எரியாத காட்டின்
பறவைக்கூட்டிற்குக் கீழ்" ஒரு காட்டையே அழிக்கும் வல்லமை உடைய தீக்குச்சி தன் பயனை வெளிப்படுத்தாத போது தூக்கி எறியப்படுகிறது. வேறு ஏதாவது ஒரு பொருள் தன் பயன்பாட்டை நிறுத்தும் போது அதைப் பழுது நீக்கி பயன்படுத்த எண்ணுகிறோம். அந்தப் பொருள் தரக்கூடிய பயனானது ஒரு காட்டையே எரிக்கும் அளவு வல்லமை உடையதாக கூட இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்தப் பழுது நீக்க முற்படுககறோம். தீக்குச்சியையோ கீழே போட்டு விட்டு செல்கிறோம்.
“எந்தக் காரணமும் இல்லாமல்
ஒரு தீக்குச்சியைக் கொளுத்து அதன் பெயர்தான் 'ஒளி" பயனை வெளிப்படுத்தும் தீக்குச்சியானது ஒளி எனும் ஆச்சரியத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.
இந்த கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிக்க எளிமையாக இருக்கிறது. இந்த கவிதைகளில் படிமமாக வைத்திருக்கக்கூடிய பொருட்கள் என்பது நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய பயன்படுத்தக்கூடிய பேசக்கூடிய பொருட்களாக இருப்பதாலோ என்னவோ அவை எளிமையாக காட்சி அளிக்கின்றன. கவிதைகளைப் பொருத்தவரை அதில் அமைந்திருக்கும் ஓரிரண்டு வரிகள் தான் கவித்தன்மையை காட்டக்கூடியதாக இருக்கும். ஆனால் மதாரின் கவிதைகளில் அந்த ஓரிரண்டு வரிகள் கவிதையையே வேறெங்கோ கொண்டுபோய் நிறுத்தி விடுகிறது. ஊர் வாசலில் இருக்கும் பூக்காரி பூக்கடையைத் திறக்கும் போது ஊரையே திறப்பதாக சொல்லும் கவிதை, கதாசிரியர் கவிதை இதெல்லாம் மிக அருமையாக வெளிவந்துள்ளது.
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக