எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம் - ராஜ் கௌதமன்
இந்த நூலில் ராஜ் கௌதமன் அவர்களின் பரந்துபட்ட இலக்கியப் பார்வை எளிமையான கோணங்களுடன் பொருத்தப்பட்டு ஆரம்ப கட்டுரைகளில் வெளிப்படுகிறது. பிந்தைய கட்டுரைகள் எல்லாம் பலதரப்பட்ட அறிஞர்களின் கொள்கைகளையும் திறனாய்வு கொள்கைகளையும் இலக்கியங்களோடு ஒப்புமை படுத்தப்படுகிறது.
தனித்தமிழ் குறித்த விமர்சனப் பார்வையோடு சமயங்களின் இருப்பு தமிழில் உறுதிப்பட்டு நிற்பதை எடுத்துக்காட்டும் விதமாக முதல் கட்டுரை அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் மூன்று கட்டுரைகள் பத்திரிகை மற்றும் சிறுபத்திரிக்கை முதலியவற்றை அறிய ஆவலாக இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் பல தகவல்களை அடுக்கித் தரப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறுகதைகளை அகம் புறமாக பிரித்துத் தரும் முயற்சியாகவே 'தமிழ்ச் சிறுகதைகளில் அகமும் புறமும்' என்ற கட்டுரை இருக்கிறது. எழுத்தாளர்களையும் அவர்களது கதைக்குள் வசிக்கின்ற அகம் புறம் ஆகியன அமையப்பெற்றுள்ளதையும் பற்றி சொல்கிறது. அடுத்ததாக தமிழ் திரையில் ஒலிக்கும் பாடல்கள் பெண்களை எவ்வாறெல்லாம் அவமதிக்கிறது. எப்படிப்பட்ட வார்த்தைக் கோர்வையைக் கையாண்டுள்ளது என்பதை விமர்சிக்கும் கட்டுரையாக 'இசைப்பாடல்களும் பெண்களும்' என்ற கட்டுரை இருக்கிறது.
இந்த கட்டுரை தொகுப்பில் உள்ள பெரும்பாலான கட்டுரைகளில் மார்க்சிய சிந்தனையூடான ஒப்பீடு இருந்தாலும் அந்த ஒப்பீட்டுத் தன்மை நூலில் பாதிக் கட்டுரைகளைத் தாண்டியப் பின்பே வலுப்பெறுகிறது. இந்தியப்பகுதிக்கும் அதன் இலக்கியச் சூழலுக்கும் ஏற்ற வகையில் கோட்பாடுகளை மார்க்சிய முறையில் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் வேலையை கடைசி ஐந்து கட்டுரைகளில் கையாண்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. பாரதீயம், கானல் எனும் இரண்டு நூல்கள் குறித்த மதிப்பீடு பல இலக்கிய கொள்கைகளோடு இணைத்து இரண்டு கட்டுரைகளாக பேசப்படுகிறது. பூமணி மற்றும் பாவண்ணன் ஆகியோர் படைப்புகளும் இரு வேறு கட்டுரைகளாக திறனாய்வு கொள்கைகளின் அடிப்படையில் பார்க்கப்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் எளிமையான கருதுகோள்களைப் பேசிய கட்டுரைகள் போகப் போக வலிமையான கோட்பாடுகளைப் பேசுவதாக படிப்படியாக மாறுகிறது. எண்பதுகளில் இருந்த சூழலை மட்டும் பேசுவதாக இல்லாமல் அதைத் தாண்டிய சில தகவல்களைப் பெற்றதாகவே இக்கட்டுரைகள் அமைந்துள்ளது.
-அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக