உயிர்வலி (பகுதி 4) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

 உயிர்வலி (பகுதி 4) -ரித்விக் கட்டக்  

 (தமிழில் -தீனன்)


போலா: எல்லாரும் என்ன, எதுவுமே இல்லாத, எல்லாம்  வத்திப்போன ஒருத்தனா பாக்குறாங்க. ஆனா, என் மார்போட ஆழத்துல இன்னும் இரத்தம் பாய்ஞ்சுகிட்டு தான் இருக்கு. 

பைத்தியக்காரன்: உன்ன மாதிரி ஆளுங்க எப்படினு எனக்குத் தெரியும். 


     (போலா, பைத்தியக்காரனையும், பெண்ணையும் பார்க்கிறான்)


முதியவர்: இப்போ உதாரணமா இந்தப் பாட்ட எடுத்துக்கோங்க, "என் நம்பகம் ஓர்நாள் தவறென போகுமானால்"... 

 

பைத்தியக்காரன்: இந்த பாட்டை நான் பாடிகிட்டு இருந்த ஒரு காலம் இருந்துச்சு. ஆனா இப்போ எல்லாம் நான், 'என் காதல் ஒரு மெல்லிய பூச்சரம்" பாட்டத்தான் பாடுறேன். 


முதியவர்: ரெண்டும் ஒன்னு தான். இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்னு எப்போவாவது யோசிச்சுப் பாத்திருக்கியா?


பைத்தியக்காரன்: இல்ல, நான் நிறைய முயற்சி பண்ணேன், ஆனா இந்த மாதிரி பாட்டுகளோட ஆழமான அர்த்தம் எனக்கு புரியிறதே இல்ல. 


முதியவர்: அதே போல தான்,  "உங்கள் கவசங்களைப் பூட்டுங்கள், தயாராகுங்கள் தோழர்களே" பாட்டோட உள்ளர்த்தமும் போலாவுக்கும் புரியாது. 


     (பைத்தியக்காரனைச் சுட்டிக்காட்டி)

 

போலா: யாரு இது? 


முதியவர்: புது ஆள், இங்க தான் தங்க போறான். 


பைத்தியக்காரன்: இல்ல, நான் இங்க தங்கப் போறது இல்ல. அப்புறம் ஏன் நான் இங்க வந்தேன்னு? நீங்க கேக்கலாம். உண்மைய சொல்லனும்னா, நான் இங்க சும்மா பொழுதுபோக்குக்காகத் தான் வந்தேன். நான் இப்போ போக்குவரத்த சரி செய்ய மறுபடியும் கல்கத்தாவுக்கு போயாகணும். என்னோட உடம்பு இன்னும் அங்க ஹெடோ நடைபாதைல தான் இருக்கு. 


போலா: ரொம்ப சந்தோஷம். அது இருக்கட்டும், பியூன், என் நெஞ்சு, தொண்டை எல்லாம் எரியுற மாதிரியும், என் வாயில இருந்து ரத்தம் கொட்டுற மாதிரியும் இருக்குனு உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்ல, அங்க உக்காந்திருக்கும் போது தான் எனக்கு இந்த மாதிரி எல்லாம் தோணுச்சு. நீ என்ன பெரிய ஆபத்துல தள்ளிட்ட. என்ன யோசிக்கச் சொன்ன பாத்தியா, அது தான் என்ன கவலைப்பட வச்சிருச்சு. (பின்கதை) ஒரு வருஷமா, நான் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடம்னு அலஞ்சுகிட்டே இருந்தேன். எனக்குச் சாப்பிட சாப்பாடுனு எதுவும் பெருசா கிடைக்கல. நான் பட்டினியாக் கிடந்தேன். அது என்னோட நோய (காசநோய) இன்னும் மோசமாக்கிடிச்சு. இந்த அளவு கஷ்டங்கள அனுபவிக்க அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன். சரி, ஏன் என்ன பத்தி மட்டும் பேசுவானேன். இன்னும் அங்க இருக்கிற என்னோட மனைவி, அப்பா, கவுதம், எல்லாரும் என்ன மாதிரியே தான் விதி வந்து சாகணுமா? அவங்களும் என்ன மாதிரியே தற்கொலைப் பண்ணிக்கிற நிலைமை வருமா? காத்துல ஒண்ணுமில்லாத வெளியில அவங்க குதிக்கணுமா, அப்புறம் அவங்க முகத்துலயும் ஈ மொய்க்குமா? 


பியூம்: இத எல்லாம் என்கிட்ட சொல்றதால என்ன பிரயோஜனம், நானும் யார் உதவியும் இல்லாம தனியாத் தான் இருந்தேன்.   


போலா: வேற என்ன நான் செஞ்சிருக்க முடியும்? நான் ஒரு திருடனா மாறி இருக்கலாம். ஊர் முழுக்க கொள்ளை அடிச்சிருக்கலாம். எனக்கு எது மேலயும் அக்கறை இல்ல, யார் மேலயும் கருணையோ  மரியாதையோ எனக்குக் கிடையாது. என்னால பெரிய குழப்பத்தையே உண்டாகி இருக்க முடியும். ஆனா இது மாதிரி எல்லாம் இதுக்கு முன்னாடி என்னால யோசிக்க முடியல, நிச்சயமா இல்ல, உனக்கு புரியுதா?


முதியவர்: முட்டாள்தனமா பேசாத போலா. இத எல்லாம் நீ செஞ்சு இருந்தேனாலும்  உனக்கு வேண்டியதெல்லாம் கிடைச்சிருக்காது. நீ உயிரோட இருக்குறத விட செத்ததே உருப்படியான விஷயம்னு இப்போ நிரூபிச்சிட்ட. 

 

பியூன்: அது மட்டும் இல்லாம, இதையெல்லாம் உன்னால தனி ஆளா செய்யவும் முடியாது. 


போலா: (பியூனிடம்) அதே நேரம், ஒரு கத்தி, ஒரு கத்தி! ஒரு நல்ல கத்தி வாங்குறதுக்கு நிறைய செலவாகும். ஆனா அப்படி வாங்கியிருந்தாலும் மனசோட ஆழத்த கிழிச்சு பாக்க முடியாது. நீ விரக்தில செத்துப்போன, நான் சோகத்துல, ரொம்ப ஆழமான சோகத்துல செத்தேன். 


பெண்: நான் ஒன்னு கேட்கட்டுமா? நீங்க எல்லாம் நிறைய படிச்சி இருக்கீங்க. நிறைய பாத்திருக்கிறீங்க. 


பியூன்: என்ன சொல்ல  நினைக்கிற, சகோதரி?


பெண்: நம்ம குழந்தைங்களுக்கு என்ன ஆகும்?


போலா: யாருக்கு தெரியும்....


பெண்: அவங்களும் நம்ம போல எரிஞ்சு சாம்பலாகி காணாம போயிடுவாங்களா?


போலா: பியூன் இப்போ மறுபடியும் புரட்சியைப் பத்தி பேச ஆரம்பிச்சிடுவான். என்ன தாத்தா, இது எல்லாம் அர்த்தமில்லாத விஷயம் இல்லையா?


முதியவர்: உன் சொந்த சுயத்துக்கும் எந்த அர்த்தமும் இல்ல. உன் மனசை முதல்ல புரிஞ்சிக்க பாரு. நீ பாடுன அந்த பாட்டும் நம்மளோட உண்மையான லட்சியத்தைக் கண்டடையத்தான் தூண்டுது.  அது உனக்கு ஒரு செய்தியை சொல்லுது - 'எல்லோரும் கவசத்தைப் பூட்டுங்கள், தயாராகுங்கள் தோழர்களே, எதுவாக இருந்தாலும் சரி. பசியால் சாகும் நமக்காக..' உனக்கு புரியுதா?, அங்க, அந்த உலகத்துல நீ செஞ்ச காரியத்துக்குப் பிறகும், இந்த பாட்டைப் பாட உனக்கு தகுதி இருக்குனு நினைக்குறயா?


   ஸ் (போலா தனது கன்னத்தின் மீது கைகளை வைத்து சிந்திப்பதுபோல் சொறிகிறான்)


போலா: அப்போ,  நாம அனுபவிச்சிக்கிட்டு இருக்குற வலியைப் பத்தி நாம பேசப் போறதே இல்ல, அப்படித்தானா தாத்தா?


பியூன்: எல்லாருக்கும் எல்லாமும் இருக்குற, எல்லாரும் அறிவ சமமா பகிர்ந்துக்கிற அந்த உலகம், ரோலண்ட்  சொன்ன அந்த உலகம் எங்க இருக்குனு யாராலாவது சொல்ல முடியுமா என்ன?


முதியவர்: அந்த உலகம் இருக்குது, ஆனா அதுக்கு போறதுக்கான பாதை இல்ல. எனக்கு எந்த வழியும் தெரியல. நம்மளால அங்க போக முடியாது. 


போலா: 'எல்லோரும் கவசத்தைப் பூட்டுங்கள், தயாராகுங்கள் தோழர்களே....' என்னவாவும் இருந்துட்டுப் போகட்டும், ஹம்ம்..


பியூன்: கயோட்டேனு ஒருத்தர் இருந்தாரு. பைத்தியம் புடிச்சி இருந்தாரு.  'ஆதியிலே செயல் இருந்தது' னு அவர் சொல்லியிருக்காரு. 


     (பைத்தியக்காரன் திடீரென ஒப்பாரி வைப்பதுபோல் பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினான்)  


பைத்தியக்காரன்: "இந்த உலகில் தனியனாய் நான் பயணிக்கிறேன், அதிசயத்தின் ஒளியை எனக்கு யார் காட்டுவார்?" 


      (போலா திடீரெனக் குரல் உயர்த்துகிறான்)


போலா: ஹே, எல்லாரும் கவனிங்க. கிட்ட வாங்க எல்லாரும்.

 

     (எல்லோரும் மேடையின் நடுவே வருகின்றனர். பைத்தியக்காரன் பாடுவதை நிறுத்துகிறான்)


முதியவர்: ஏன் நீ வினோதமா நடந்துகிற?


பியூன்: போலா, உனக்கு என்னாச்சு?


பெண்: உங்க கண்ணுல தெரியுற அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் அண்ணா?


போலா: பொறுங்க, பொறுங்க, எல்லாரும் புரிஞ்சுக்குவீங்க. ஏ பைத்தியக்காரா, (பைத்தியக்காரனைத் தனதருகில் இழுக்கிறான்) நீ இப்போ என்ன பாடுனியோ, அதைத் திருப்பிப் பாடு.


பைத்தியக்காரன்: ஓ அதுவா?? நீ என்ன ரொம்ப பயமுறுத்திட்ட! உனக்கு தெரியுமா? யாரும் நான் பாடுறத விரும்ப மாட்டாங்க. அந்த வகைல உன்ன எனக்குப் பிடிச்சுருக்கு.


    (போலா உணர்ச்சியற்று கடுமையானப் பாவனையுடன் )


போலா: ம்ம்.. பாடு 


பைத்தியக்காரன்: 'இந்த உலகில் தனியனாய் நான் பயணிக்கிறேன்..'


போலா: அற்புதம்! என்ன அருமையான பாட்டு இது! 


முதியவர்: தம்பி, நீ என்ன சொல்ல வர, பாராட்டெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம், சொல்ல வந்தத சொல்லு முதல்ல.


போலா: தாத்தா, செத்து போகணும்னு சரியா எப்போ உங்களுக்கு தோணுச்சு?


முதியவர்: என் தோள் மேல இருக்குற பொறுப்புகள என்னால இனியும் சுமக்க முடியாதுனு தோணுனபோது. 


போலா: சரி, பியூன், உனக்கு?


பியூன்: இதுக்கு மேலையும் அநீதியை பொறுத்துக்க முடியாதுன்னு தோணுனப்போ, மனதளவுள காயம்பட்டு, ஆழமான விரக்தியில நான்...


போலா: ....யாருமே இல்லாதப்போ  உன் கழுத்துல கயிற இருக்குன.. நீங்க எப்போ சாகணும்னு நினைச்சீங்க சகோதரி?


பெண்: நான் சமையலறையில தனியா இருந்தப்போ என் மேலேயே தீ வைச்சுகிட்டேன். 


      (போலா சிறுவனை நோக்கி) 


போலா: நீ கோக்கா? 


சிறுவன்: உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே, நான் ரயில் முன்னாடிக் குதிச்சிட்டேன். 


போலா: அப்புறம் நான், நான் தனிமைச் சுழல்ல சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தேன். என் கழுத்துல கல்லைக் கட்டி கால்வாய்ல குதிச்சேன். அந்தப் பாட்ட மறுபடியும் பாடுறியா, கொஞ்சம். 


பைத்தியக்காரன்: கண்டிப்பா, ஒரு பைத்தியக்காரன் என்ன சொல்லிட போறான்னு நீங்க நினைக்கலாம். ஆனா நான் ஒன்னு மட்டும் சொல்றேன், என்ன யாரும் இத்தனை முறை பாடச் சொல்லிக் கேட்டதே இல்ல. 


போலா: சரி சரி, இப்போ பாடு. 


பைத்தியக்காரன்: என் மேல எரிச்சல் படாதீங்க. 'இந்த பரந்த உலகில் தனியனாய் நான் பயணிக்கிறேன்'


போலா: அங்கேயே நிறுத்து! இதுல ஆரம்பத்துலயே தப்பா இருக்கு. அந்த பாட்டுல இருக்குறதபடி பாத்தா, தனியனாய் அந்த உலகில் பயணிக்கிறேன், இந்த உலகத்துல இல்ல. 


பியூன்: சரியா சொன்ன! ஏ போலா, நீ ஒரு கூலி தொழிலாளியா இருந்தாலும் உன்னால தப்ப கண்டுபிடிக்க முடியுது, நாங்க எவ்ளவோ படிச்சிருந்தும் எங்களால முடியல. 

 

போலா: எப்படினு தெரியல, ஆனா என் தலைக்குள்ள ஏதோ பொறி தட்டுச்சு 


முதியவர்: இப்போ எனக்கு எல்லாம் தெளிவா புரியுது. நாம எல்லாரும் ஒரே தப்ப தான் செஞ்சிருக்கோம். நாம எல்லாரும் இப்போ ஒன்னு சேரணூம். ஆனா, இப்போ அதை செய்யறதால என்ன பிரயோஜனம்?


பெண்: ஏன் நீங்க நம்பிக்கை இல்லாமையே பேசுறீங்க. நம்ம குழந்தைங்க இன்னும் அந்த உலகத்துல தான் இருக்காங்க. அவங்க எல்லாரும் ஒன்னு சேந்தாங்கன்னா வாழறதுக்கான வழி பிறக்கும். 


போலா: நிச்சயமா!


பெண்: நிஜமாவா? வலியில இருந்து விடுபடுற வழிய அவங்க கண்டுபிடிப்பாங்களா?


போலா: அதுல எந்தச் சந்தேகமும் இல்ல. 


பெண்: இதெல்லாம் இங்க வந்த பிறகு ஏன் நமக்கு புரியுது. அந்த உலகத்துக்கு இருக்குறவங்க கிட்ட நாம நினைக்குறத இப்போ எப்படிச் சொல்ல முடியும்?


சிறுவன்: கவலையே வேண்டாம். அதுக்கு நம்ம கிட்ட ஒரு தூதுவன் இருக்காரு. பைத்தியக்காரா நீ மறுபடியும் பூமிக்குப் போற தானே?


பைத்தியக்காரன்: கண்டிப்பா, அதுல என்ன சந்தேகம்!


சிறுவன்: அப்போ எங்களுக்காக இந்தச் செய்தியை கொண்டு போறியா?


பைத்தியக்காரன்: நிச்சயமா, நிச்சயமா முடியும். ஆனா, அத எப்படி யோசிக்கணும்னு மட்டும் தான் எனக்குத் தெரியாது. 


போலா: கவலைப்படாத, யோசிக்கிற வேலையை நாங்க பாக்குறோம், எல்லாருக்காகவும். 


பியூன்: எல்லாத்தையும். 


முதியவர்: நீ செய்ய வேண்டியதெல்லாம், அத கொண்டு சேர்க்க எங்களுக்கு உன்னோட உடம்ப கொடுக்குறது மட்டும் தான்


பெண்: நீ சொல்லப் போற விஷயம் எல்லா வலிகளயும் எரிக்கப் போகுது. உன்னோட உடம்ப தா, உலகத்தோட எல்லா வலியையும் போக்கு. 


சிறுவன்: பைத்தியக்காரன்!


முதியவர்: முட்டாள்!


பைத்தியக்காரன்: சரி, இப்போ நீங்க எல்லாரும் கேக்குறதால, நான் என்னோட உடம்ப உங்களுக்குக் கொடுக்கேன். என்னோட வலியும் உங்கள விட கொறஞ்சது இல்ல. நானும் அதே அளவு காயப்பட்டிருக்கேன். எல்லாமே ஒரே இடத்துல சேர்ந்து வெளியேற முடியாத புகையா திணற வைக்குறது.  


போலா:  கவனமா கேளு, உனக்குக்கு அந்த சிவப்பு வானத்துக்கு ஒரு நீல திறப்பு தெரியுதா? அந்த திறப்பு வழியா நீ பூமிக்குத் திரும்பலாம். அங்க போ, அங்க ஒவ்வொரு நாளும் வேதனையில வாழ்த்துகிட்டு இருக்குற எங்க அப்பா அம்மா, சகோதர, சகோதரிகள், மனைவிகள் எல்லார்கிட்டையும் போ. 



பைத்தியக்காரன்: ஊஊஊஷ்ஷ்ஷ்... ஹெடோல போயி தரையிறங்க போறேன். அவங்க கிட்ட நான் என்ன சொல்ல?


பெண்: அவங்க கிட்ட சொல்லு, யாரும் மறுபடியும் தீயிலே வெந்துச் சாக வேண்டாம். இனியும் யாரும் தற்கொலை பண்ணிக்க வேண்டாம்.


சிறுவன்: அவங்க கிட்ட சொல்லு, என்ன நடந்தாலும் சரி, எல்லாரும் ஒன்னு சேர்ந்து, எல்லா பிரச்சனைகளையும் ஒன்னா எதிர்த்து போராடனும். 


முதியவர்: அதிசயங்களுக்காக இனியும் காத்திருக்க வேண்டாம்னு அவங்க கிட்ட நீ சொல்லணும். மாடிகள்ல இருந்து குதிக்க வேண்டாம்னும், உயிரோட இருக்குறதும், எதிர்த்து நிக்க எத்தனை பேர் இருக்குறோம்குறதும்தான் முக்கியம்னு சொல்லு.


போலா: உள்ள குமைஞ்சுகிட்டு இருக்குற அவங்களோட விரக்திய இன்னும் அடக்கி வைக்க வேண்டாம்னு அவங்ககிட்ட சொல்லு. இன்னும் எத்தனைக் காலம் தான் நீங்க தனிமையில கண்ணீர் சிந்த போறீங்க? இன்னும் எத்தனைக் காலம் சக மனுஷன விட்டு சக மனுஷன் விலகித் தனித்தனியா பிரிஞ்சி கிடக்க போறீங்க?.  தப்பு செய்யறவங்க அழியத்தான் போறாங்க. அந்த நாள் ரொம்ப தூரத்துல இலை. நீங்க செய்ய வேண்டியது எல்லாம் உரிமைகளுக்காக ஒன்னு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டியது தான்.


பியூன்: அவங்க எல்லார்கிட்டயும் சொல்லு, இந்த செய்தியை எல்லார்கிட்டயும் கொண்டு போய் சேரு: மனசாட்சியுள்ளவர்களே, தயவு செய்து கவனியுங்கள். உலகில் எத்தனையோ துன்ப துயரங்கள் இருக்கிறது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் மௌனத்திலேயே வேதனையை அனுபவித்துக் கொண்டு, வலியில் எரிந்துகொண்டு இருக்கின்றனர். அந்த எல்லா வலியையும்,  வேதனையையும்  ஒன்றுசேர்த்து ஒரு குப்பையைப் போல தூக்கி வீசுங்கள். 


முதியவர்: இது நம்ம புராணங்கள்லேயே இருக்கு. முனிவர் ததீசியோட விலா எலும்புகள போல.


பெண்: நான் அழுதேன், அழுதேன் அழுதுகிட்டே இருந்தேன். என்னோட அழுகை யாருக்கும் கேக்கல, என்னோட கண்ணீர் யாருக்கும் தெரியல.


    (போலா, பைத்தியக்காரனிடம்)


போலா: இப்போ போ, இந்தச் செய்தியை எடுத்துக்கிட்டுப் போ 


பைத்தியக்காரன்: நான்?.. சரி. யாரும் பைத்தியக்காரத்தனத்துல  அழிஞ்சி போகாதீங்கன்னு அவங்க கிட்ட நான் போயி சொல்றேன். தோழர்களே, சக நாட்டவர்களே, அறிவை மீட்டெடுங்கனு நான் அவங்க கிட்ட சொல்றேன். நான்  நேரா அங்க போறேன், அந்த  நான்கு வழி சந்திப்புல நின்னு, போக்குவரத்தைச் சரி செய்யப்போறேன். எல்லாரும் நில்லுங்கனு, உங்களுக்காக ஒரு செய்தியை வச்சிருக்கேன்னு சத்தமா கத்தப் போறேன். போங்க போங்க, இடது பக்கமா, இடதுபக்கமா போங்க!


முதியவர்: போ, இந்த கசப்பான உண்மையை உலகத்துக்கு எடுத்துட்டு போ 


பைத்தியக்காரன்: இதோ நான் போறேன். சிவப்பு வானத்துல தெரியல அந்த நீல துண்டு வழியா போயி கொல்கத்தாவுக்கு மத்தியில தரையிறங்குவேன். பீப்ப்ப்ப், பீப்ப்ப், சூ, சூ, சூ, இடது பக்கமா போங்க, இடது பக்கமா. 


    (பைத்தியக்காரன் முழு வட்டமாக இரண்டு முறை சுற்றிவிட்டு, விரைந்து மேடையின் பின்னோக்கிச் செல்கிறான். ஒரு மின்னல் குறுக்காக வெட்டிச் செல்கிறது. எல்லோரும் மேடையின் பின்புறமாகத் திரும்பி பைத்தியக்காரனை நோக்கி வழியனுப்புவதுபோல் கையசைக்கின்றனர்.)


சிறுவன்: அம்மா, மனுஷங்க மறுபடியும் மனுஷங்களா ஆகப் போறாங்க. 


பெண்: கோக்கா, இப்போ, என் எல்லா நரம்புகள்லயும் மின்னல் பாயுற மாதிரி இருக்கு. 


பியூன்: ஆஹா! பேரமைதி! அது இங்க இருந்து ரொம்ப தூரத்துல இருக்கு. ஆனா அது எங்கேயோ நிச்சயம் இருக்கு. அது இருந்தே ஆகணும்."


   (போலா, அபஸ்வரத்தில் பாடத் தொடங்குகிறான்)


போலா:  "எல்லோரும் கவசங்களைப் பூட்டுங்கள், தயாராகுங்கள் தோழர்களே"


     (பின்னணியில் ஆயிரம் குரல்கள் சேர்ந்து பாடுவதுபோல் இருக்க, போலாவின் குரலும் அதில் கலந்து, ஒலி மெதுவாக உச்சத்தை எட்டுகிறது)


எல்லோரும் கவசங்களை பூட்டுங்கள் 

தயாராகுங்கள் தோழர்களே 

பசியால் மடிந்துக் கொண்டிருக்கும் நமக்கு,

மரணத்தைக் கண்டு பயமில்லை 

விடுதலையின் எக்காளம் ஒலிக்கட்டும்

வலிமையின் கொடியை உயர்த்துங்கள்

போர்க்களம் நம்மை அழைக்கிறது 

கேட்கிறதா அதன் அறைகூவல் 

வாருங்கள், செல்வோம், போரிடுவோம்

விவசாயிகளே விழித்துக் கொள்ளுங்கள் 

தொழிலாளர்களே, தயாராகுங்கள்!

எச்சரிக்கையாய் இருங்கள் என் சகோதரர்களே 

நம் லட்சியப் படகை நிலை தடுமாறாமல் காப்போம்!" 


--------------திரை மெல்ல கீழிறங்குகிறது-------------------

முற்றும்..


கருத்துகள்