அணங்கு (பகுதி -3) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
அணங்கு (பகுதி -3) -ரித்விக் கட்டக்
(தமிழில் -தீனன்)
சாந்தி: (பார்வையாளர்களைப் பார்த்து) இவங்க தீவிரமா ஆலோசனை செஞ்சுகிட்டு இருக்குறப்போ எனக்கு என்ன நடக்குதுனு நான் உங்களுக்குச் சொல்றேன். நான் திரைப்படங்கள் பாக்குறது இல்ல. ஆனா ஏதோ திரைப்படம் மாதிரி, காட்சிகள் ஒன்றன்பின் ஒன்னா என் முன்னாடி வந்து போகுது. வெள்ளுடையோட இருக்குற அந்த பொம்பளையும் மத்த சிலரும் என்ன இரும்பு கம்பிகள் இருக்குற ஒரு சின்ன அறைக்குள்ள தள்ளுனாங்க. அவங்க அறைக் கதவ தாழ்ப்பாள் போடும்போது ரொம்ப பயமுறுத்தற மாதிரியான சத்தம் வந்துச்சு. என் தலை வழியா ஏதோ மின்னல் பாயுற மாதிரி இருந்துச்சு. நான் ஒரு சிறைக் கைதி மாதிரி உணர்ந்தேன். நான் கதவுகிட்ட ஓடிப் போய் அத பிடிச்சு உலுக்கத் தொடங்குனேன். ஆனா யாரும் திரும்பிப் பாக்கல. திடீர்னு அந்தப் பூட்டு வழியா என்னோட கோகோன் வெளியே வந்துக்கிட்டு இருக்குறத பாத்தேன். முதல்ல அவன் முழுசா தெரியல, ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவன என்னால தெளிவா பாக்க முடிஞ்சது. அவன் கதவு வழியா உள்ளே நுழைஞ்சு சிரிச்ச முகத்தோட என் பக்கத்துல நின்னுக்கிட்டான். கைகுழந்தையா இருந்தும் அவன் நடந்ததையும், அந்தக் கதவு வழியா வந்ததையும் பாத்து நான் ஆச்சர்யப்பட்டேன். அவனால எப்படி இதை செய்ய முடிஞ்சது? அப்புறம் தான் அவன் என் கிட்ட ரேடியோல 'பேசுனது' ஞாபகம் வந்துச்சு. அவன் இதுக்கு முன்னாடி பேசி, நான் கேட்டதே இல்ல. அது எனக்கு ஏன் வினோதமா தோணாம போச்சு? எதுவா இருந்தாலும் சரி, கோகோனால அற்புதங்களைச் செய்ய முடியும். அவன் என் பக்கத்துல நின்னு சிரிச்சுக்கிட்டு இருந்தான். திடீர்னு அவன் உடம்ப பாம்புகள் சுத்துறத நான் பாத்தேன். அதுங்க அவன் உடம்பு மேல ஊர்ந்துக்கிட்டும் ஹிஸ்ஸ்-னு ஒலி எழுப்பிகிட்டும் இருந்துச்சுங்க. கதவுல இருந்த இரும்பு கம்பிகளும் பாம்புங்களா உருமாருச்சு. அந்தத் தாழ்ப்பாள் குலுங்கி குலுங்கி கடவுள் காளி தேவியா உருமாறுச்சு. காளி தன்னோட சிவப்பு நாக்க நீட்டித் துருத்துரதையும் கையில இருக்குற கோடாரியை மேலே தூக்குறதையும் நான் பாக்க முடிஞ்சது. என் கண் முழுக்க கண்ணீர் குளமாகிடிச்சு. காளி தேவி ஏன் என்னோட கோகோனை கொலை செய்ய நினைக்கிறான்னு நான் ஆச்சர்யப்பட்டேன். நான் கோகோன் முன்னாடி ஒரு கேடயம் மாதிரி நின்னுகிட்டு அவளைப் பார்த்து கத்துனேன். அவ கிட்ட நான் சொன்னேன்: தாயே காளி, நீ ஒரு தாயா இருந்தீன்னா நானும் நீ பொறந்த அதே காலகட்டத்துல தான் பொறந்தேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். நானும் ஒரு தாய் தான். ஜாக்கிரதை!, அவ வாய்விட்டு சிரிக்க ஆரம்பிச்சா. இரும்பு கம்பிகள்ல இருந்த பாம்புங்க தங்களோட வெட்டு நாக்குகள துருத்த ஆரம்பிச்சது. சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் கருப்பு நிறங்கள் அறையோட சுவர்கள சுத்தி வட்டமிட்டு வெளியே போச்சு. நான் அந்தப் பாம்புகளை நோக்கி ஓடிப் போய் அதுங்கள என் கையில பிடிச்சேன். காளி தேவி சொன்னா: 'தாயின் பாசுரத்தைப் பாடு' 'ஆனா என்னால எப்படி முடியும்' எனக்கு அந்தப் பாசுரம் தெரியாதுன்னு நான் சொன்னேன். நான் ஒரு படிப்பறிவில்லாத பொண்ணு. எனக்கு யாரும் எதையும் சொல்லிக் கொடுத்தது இல்ல. அவ என்னைப் பக்கத்துல வர சொல்லி உத்தரவு போட்டா. அவ பக்கத்துல நான் போய் நின்னதும் என் கிட்ட அவ சொன்னா: 'நான் உன் நன்மைக்காக அந்தப் பாசுரத்தை உன் காதுல கிசுகிசுகிறேன்'. முழு குரல்ல அவ என் காதுல கிசுகிசுத்தா:
'ஓம் ஸ்வாஹா, ஓம் க்ரீம், ஓம் கிளிங், ஓம் கிரிங்; இந்த மந்திரத்தை நூத்தியெட்டு முறை உச்சரி'.
இந்த மந்திரத்தைப் பாடுனா கோகோனை அவ விட்டுடுவானு நான் நினைச்சேன். அதனால என் தலையை சுவத்துல மோதி மோதி இந்த மந்திரத்தை ஜெபிச்சபடி இருந்தேன்.
(சாந்தி
பீடத்தில் இருந்து இறங்கி அறைக்குள் ஓடிச் சென்று தனது தலையை சுவரின் மேல் மோதத்
தொடங்கினாள்.
*குறிப்பு: அவள் தலையைச் சுவற்றில் மோதும்போது பின்னணியில் இசை ஒலிக்க வேண்டும்*
மருத்துவரும், செவிலியும் மேடைக்குள் நுழைகின்றனர். சாந்தி இன்னும் சுவரில் தலையை முட்டியவாறு இருக்கிறாள். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் சாந்தியின் பார்வை மாறுகிறது. அவளிடமிருந்து பேய்த்தனமான சிரிப்பு வெளிப்படுகிறது)
சாந்தி: என்னைச் சிறை வச்சதால நீங்க ஜெயிச்சிட்டீங்கனு நினைக்குறீங்களா? நான் உங்ககிட்ட உண்மையான ரகசியத்தை இன்னும் சொல்லவே இல்ல... நான் தான் அவனைக் கொலை செஞ்சேன்.
மருத்துவர்: யாரை நீ கொலை செஞ்ச? கோகோனையா?
சாந்தி: உங்களால எப்படி இப்படியெல்லாம் கூட கற்பனை செய்ய முடியுது? என்ன முட்டாள்தனம்! நான் அந்த ஆளைக் கொலை செஞ்சேன். என்கிட்ட இருந்து கோகோனைப் பறிச்சுட்டுப் போன அந்த ஆளை, கோகோனை என்கிட்ட இருந்து ஒளிச்சு வச்சிருக்குற அந்த ஆளை நான் கொலை செஞ்சுட்டேன். நான் இனிமே வண்ணச் சேலை உடுத்தக்கூடாது. எனக்கு இவங்க உடுத்தியிருக்குற மாதிரி வெள்ளை சேலை கொடுங்க. நான் ஒரு காலத்துல அந்த ஆள் கூட கல்யாணம்ங்குற விளையாட்ட விளையாடுனேன். (சாந்தி தான் உடுத்தியிருக்கும் சேலையைப் பார்த்து அச்சம் கொள்கிறாள்.) ஓ கடவுளே! என்னோட சேலையோட பார்டர் பாம்பா உருமாறிடுச்சு. அது என்னோட உடம்பு மேல ஏறிக்கிட்டு இருக்கு. (அவள் கதவைத் தனது கைகளால் பலமாகத் தட்டுகிறாள்). கதவைத் திறங்க, டாக்டர். தயவுசெஞ்சு கதவைத் திறங்க. இந்த அறை என்னை நெறிச்சு சாகடிக்குது. இந்த அறைக்கு வெளியே வானம், வெள்ளைப் பூக்கள் எல்லாம் இருக்கு. கோகோனும் அங்க தான் இருக்கான், வெளிய என்னோட ரம்யமான குட்டி வீடு, என்னோட சின்னக் குடும்பம் எல்லாம் எனக்காக காத்துக்கிட்டிருக்கு. ஓ, மறுபடியுமா! என்ன இது? பாம்பு என்னோட உடம்ப முழுசா சுத்தி வளைச்சிடுச்சு. நான் அந்த ஆளைக் கொலை செஞ்சதுனால தான் இதெல்லாம் எனக்கு நடக்குதா? என்னோட இந்த சொந்தக் கைகளால அவன் கழுத்தை நெறிச்சு கொன்னதுனால தான் இது எனக்கு நடக்குதா?
(சாந்தி அவளது கைகளைக் கொண்டு தன் கழுத்தையே நெறிக்க முயற்சிக்கிறாள்.)
(மருத்துவர் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறார். அவரைத் தொடர்ந்து செவிலியும், பெண் உதவியாளரும் நுழைகின்றனர்.)
சாந்தி: (துடுக்காக வாய்விட்டு சிரிக்கிறாள்.) அந்த ஆள் ஓடிப் போயிட்டான். ஏய் முட்டாளே! உன் விருப்பப்படி செய். நான் செஞ்சத பத்தி எனக்குத் துளியும் அக்கறை இல்ல. ஒரு வேளை, தேவைப்பட்டா அதை நான் மறுபடியும் செய்வேன். ஆனா சிஸ்டர், என் புடவையின் பார்டர் பாம்பா மாறிடுச்சு. அது தன்னோட நிறத்தை மாத்தியபடி என்னை சுத்திக்கிட்டு இருக்கு. அதுக்கு வெளிர் மஞ்சள் தேகமும் வெள்ளை விழிகளும் இருக்கு. நான் என்னோட சேலையைக் கிழிக்க போறேன், எனக்கு உங்களோட வெள்ளைச் சேலையை கொடுங்க.
(சாந்தி தனது சேலையைக் கிழிக்க முயற்சிக்கிறாள். செவிலியும், தாதியும் அவளை வலுக்கட்டாயமாக படுக்கையில் குப்புறப் படுக்கச் செய்கின்றனர். படுக்கையில் அவளின் முகம் பார்வையாளர்களை நோக்கி உள்ளது. மருத்துவர் சாந்திக்குச் செலுத்த, ஊசியை எடுக்கிறார். தாதி, ஊசி செலுத்தப்படும் சாந்தியின் உடல் பாகம் அருகே அரணாக நிற்கிறாள். அகல விரித்த கண்களுடன் சாந்தி அந்த ஹைபோடெர்மிக் (தோலுக்குள் செலுத்தும் நீண்ட) ஊசியைப் பார்க்கிறாள்.)
சாந்தி: இவ்வளவு பெரிய ஊசியை என் உடம்புக்குள்ள செலுத்த போறீங்களா? இதுக்கு முன்னாடி அவங்க எனக்கு டிபி-யோ வேற ஏதோ ஊசி போடும் போது அது ரொம்ப வலிச்சது. எனக்கு வலியைக் கொடுக்க இது உங்களோட முறை, அப்படித்தான? இது என்ன தண்டனையா? உண்மையைச் சொன்னதுக்காக என்னை நீங்க தண்டிக்கிறீங்களா? அவனைக் கொலை செஞ்சதுக்காக நான் தண்டிக்கப்படுறேனா? ஆஹ்!
(மருத்துவர் ஊசியைச் செலுத்துகிறார். சாந்தி வலியால் அலறுகிறாள். சாந்தி ஆக்ரோஷமான நிலையிலிருந்து அமைதி நிலைக்குத் திரும்புகிறாள். ஊசியையும், பிற உபகரணங்களையும் செவிலியிடம் கொடுத்துவிட்டு மருத்துவர் மீண்டும் பீடத்தின் மேல் ஏறி நிற்கிறார். செவிலியும், பெண் உதவியாளரும் வெளியேற, மருத்துவர் பேசத் தொடங்குகிறார்.)
மருத்துவர்: (பார்வையாளர்களைப் பார்த்து) இதே மாதிரி தான் சாந்தி மூன்று பகல்களையும், மூன்று இரவுகளையும் சித்தப் பிரம்மையோட கழிச்சா. சாந்தி இந்தச் சித்தபிரம்மையோட இருந்த சமயங்கள்ல அவளோட மகன் பலமுறை அவளுக்குத் தென்பட்டான். அதேபோல அவ எத்தனை முறை தன்னோட கணவனைக் கொலை செஞ்சா, வெளிர் நீல வண்ணம் கொண்ட வீட்டை பத்தி அவ கண்ட கனவை பத்தி எத்தனை முறை பேசுனாங்கிறதுக்கெல்லாம் கணக்கே இல்ல. அவ பல நேரம் தூங்காம இருந்தா. ஆனா ஒரு தடவை தூங்குன பிறகு 24 மணி நேரம் கழிச்சு தான் எழுந்திருச்சா. அவ எழுந்ததும் நான் செவிலியைக் கூப்பிட்டேன்.
(மருத்துவர் பீடத்தை விட்டு இறங்கி தனது அறைக்குச் செல்கிறார். சாந்தி எழுந்து தனது படுக்கையில் சோர்வுடன் அமர்ந்திருக்கிறாள். செவிலி மருத்துவரிடம் வருகிறாள்.)
மருத்துவர்: கேபின் (அறை) ஐந்துல இருக்குற நோயாளி இப்போ எப்படி இருக்கா.
செல்வி: அவ தன்னோட உணவையும் மருந்துகளையும் ஒழுங்கா எடுத்துகிறா. அவ இப்போலாம் ஆவேசமடையுறது இல்ல, எதையும் கற்பனை பண்ணிக்கிறதும் இல்ல. ஆனா ரொம்ப சோகமா தெரியுறா. அதுமட்டுமில்லாம எடை குறைஞ்சு பலவீனமாவும் இருக்கா.
மருத்துவர்: அவளைக் கூப்பிடுங்க.
செவிலி: அவளைக் கூட்டிட்டு வர தாதிகிட்ட சொல்லியிருக்கேன்.
(தாதி சாந்தியை அவளது அறையில் இருந்து மெதுவாக வெளியே அழைத்து வந்து மருத்துவரின் மேஜையை நோக்கி அழைத்துச் செல்கிறாள்)
மருத்துவர்: சிஸ்டர், இப்போ உங்க முறை. அவளை வெளியே தோட்டத்துக்கு கூட்டிட்டு போய் பேச வைக்க முயற்சி பண்ணுங்க. அவ வாழ்க்கையை பத்தி இன்னும் ஏதாவது தெரிஞ்சுக்க முடியுதான்னு பாப்போம். ஹலோ சாந்தி, இப்போ எப்படி இருக்க?
சாந்தி: என் தலை கணமா இருக்கு. கை, கால்களும் ரொம்ப சோர்வா இருக்கு.
மருத்துவர்: கவலைப்படாத. வெளிய போய் நடந்தேனா எல்லாம் சரி ஆகிடும். இன்னும் உனக்கு ரேடியோவோட சத்தம் கேக்குதா? இல்ல ஏதாவது படங்கள பாக்குறியா?
சாந்தி: இல்லை. எனக்கு ஒரே தூக்க கலக்கமாவும் எல்லாம் மந்தமாவும் தான் இருக்கு. எனக்கு நீங்க என்ன மருந்து கொடுத்தீங்க?
மருத்துவர்: நான் கொடுத்த மருந்து உன்னைத் தூங்க வைக்கத்தான். தூக்கம் தான் இப்போதைக்கு உனக்கு சிறந்த மருந்து. நீ நல்லா சாப்பிடுறனு நம்புறேன் நான்.
சாந்தி: ஆமா, நான் சாப்பிடுறேன்.
மருத்துவர்: ஏதாவது சிறப்பானதா சாப்பிட விரும்புறியா?
சாந்தி: என் தலையைக் குளிர்விக்கிற மாதிரி ஏதாவது வேணா சாப்பிடறேன்.
மருத்துவர்: பிரச்சனை இல்ல. சிஸ்டர், இவங்க சாப்பிடுற டயட்ல தயிர்ல செஞ்ச பாணத்தை சேத்துக்கோங்க.
செவிலி: சரிங்க, சார்.
மருத்துவர்: சாந்தி, சிஸ்டர் உன்னை இப்போ தோட்டத்துக்குக் கூட்டிட்டு போவாங்க. அவங்க கூட போ. நான் கொஞ்சம் வேலையா வெளிய போகனும். நீ இன்னும் சிஸ்டர உன்னோட எதிரியா பாக்கலனு நம்புறேன்.
சாந்தி: (சங்கடத்துடன்) இல்ல.
மருத்துவர்: அப்போ சரி. நான் புறப்படுறேன்.
(மருத்துவர் தனது பையை எடுத்துக்கொண்டு நடந்து செல்கிறார். செவிலி தாதியை வெளியேறும்படி சைகை காட்டுகிறாள். தாதி சென்றவுடன் சாந்தியைக் கைகளைப் பிடித்துக்கொண்டு செவிலி பின்னே இருக்கும் பூந்தொட்டிகள் அருகே அழைத்துச் செல்கிறாள்.
*குறிப்பு: சாந்தியும் செவிலியும் மேடையைச் சுற்றி நடக்கின்றனர். ஆனால் அவர்கள் இருவருக்குள் முக்கியமான சம்பாஷணைகள் அனைத்தும் அவர்கள் பூந்தொட்டிகள் அருகில் செல்லும்போது மட்டுமே நடக்க வேண்டும்*)
சாந்தி: உங்க பேரு என்ன?
செவிலி: சுசித்ரா
சாந்தி: (சாந்தி பூந்தொட்டியில் இருந்து வெண் மலரொன்றைப் பறிக்கிறாள். செவிலி அதைக் கவனிக்கிறாள். சாந்தி முகத்தை நிமிர்த்திச் சொல்கிறாள்) ஒரு வெள்ளை மலர்.
செவிலி: வெள்ளை ரொம்ப இதமாவும் நல்லாவும் இருக்குல?
சாந்தி: வெள்ளையும் வான் நீலமும்.
செவிலி: உங்க வீட்டுல வெள்ளை மற்றும் வான் நீல நிறத்துல வண்ணம் அடிச்சிருக்கு தான.
சாந்தி: இல்ல, இன்னும் இல்ல, ஆன இனிமே தான் அடிக்கணும்.
செவிலி: எந்த இடத்துல வீடு கட்ட போறீங்க?
சாந்தி: போல்பூர்ல இருக்குற புபன்தங்காவுல என்னோட தாய்வழி மாமா இடத்துக்குப் பக்கத்துல கட்டணும். நான் குழந்தையா இருந்தப்போ ஒரு முறை அவரு இடத்துக்குப் போயிருக்கேன். அவர் இடத்துக்கு ரொம்ப பக்கத்துலயே அஞ்சனா நதி ஓடுது. எனக்கு அந்த இடம் ரொம்ப புடிச்சுப்போச்சு. குறுகலான நதி பக்கத்துல சிவப்பு சரிவுகளும் வரிசை வரிசையா பனை மரங்களும் இருக்கும்.
செவிலி: எப்போ வீடு கட்ட போறீங்க.
சாந்தி: கோகோன் திரும்பி வந்ததும்.
(செவிலி நடப்பதை ஒரு கணம் நிறுத்தி, பின்னர் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.)
செவிலி: நீ ஏன் இங்க இருக்கேனு உனக்குத் தெரியுமா?
சாந்தி: தெரியும்.
செவிலி: உனக்கு என்ன நடந்துச்சுனு நினைக்குற?
சாந்தி: நான் மன சமநிலையோட இல்ல.
செவிலி: உன்னால அதை உணர முடியுதா?
சாந்தி: ஆமா, அப்ப அப்ப நான் அதை உணர்வேன்.
செவிலி: நீ இங்க வந்து கொஞ்ச நாள் ஆச்சு. இப்போலாம் நீ அமைதியா இருக்குற-ங்குறது உண்மைதான். ஆனா முழுசா குணமடையனும்னு நீ விரும்புறியா?
சாந்தி: கண்டிப்பா. நான் விரும்புறேன். ஆனா அவங்க இன்னும் நான் ஒரு பைத்தியம்னு சொல்றத நிறுத்தல. நான் என்னவோ அவங்கள முழுங்க போற மாதிரி என்ன ஒரு விதமா பாப்பாங்க.
செவிலி: அவங்க உன்னை பத்தி என்ன நினைக்காங்கனு நீ ஏன் கண்டுக்கிற.
சாந்தி: ஏன் கூடாது. எனக்கு எதிரா புரளி பேசிகிட்டு இருப்பாங்க. நா பக்கத்துல போனதும் பேசுறத அப்படியே நிறுத்திருவாங்க. அக்கம்பக்கத்துல இருக்குற குழந்தைங்க என் மேல கல் எறிவாங்க. என்னை வம்புக்கு இழுப்பாங்க. என்னைப் பைத்தியக்காரினு கூப்பிடுவாங்க. எனக்கு எதிராக அவங்க எல்லாரும் ஏன் கூட்டு சேர்ந்துகிட்டு இப்படி செய்யுறாங்கனு எனக்குத் தெரியல. நானும் ஒரு சாதாரண மனுஷிதானு அவங்களுக்கு புரிய மாட்டேங்குது. நானும் ஒரு சாதாரண வாழ்க்கையைத் தான் வாழ நினைக்குறேன்.
செவிலி: சரி, அது இருக்கட்டும். உன் கணவனை நீ கொலை செய்யல, அவரு இன்னும் உயிரோட தான் இருக்காருன்னு உன்னால இப்போ புரிஞ்சுக்க முடியுதா?
சாந்தி: ஆமா, எனக்கு தெரியும்.
செவிலி: அப்புறம்?
சாந்தி: சில நேரங்கள்ல நான் அவரைக் கொலை செஞ்சா நல்லா இருக்கும்னு யோசிச்சுருக்கேன். அவர் தான்...
செவிலி: ஆனா அவரு கோகோனை எதுவும் செய்யல. கோகோன் நோய்வாய்ப்பட்டு அப்புறம்... அப்புறம்... அவன் இறந்துட்டான்.
(அவள் அதைப் பற்றி மேலும் பேசாமல் இருக்க சாந்தி செவிலியின் வாயைத் தனது கைகளால் அடைக்க முயற்சிக்கிறாள்.)
சாந்தி: (அலறுகிறாள்.) ஏய் சூனியக்காரியே! உன்ன நான் இன்னைக்கு கண்டிப்பா கொல்லாம விடமாட்டேன். என்னை சீண்ட நீ மறுபடியும் அதே பழைய பொய்யை சொல்லுற. நீயும் சதித்திட்டத்துக்கு உடந்தை. என்னோட கணவன் மேல நீ ஆசைப்படுற.. அப்போ சரி, அவரை நான் உனக்குப் பரிசா தாரேன் வச்சுக்கோ. ஆனா கோகோனை பத்தி இன்னும் ஒரு வார்த்தை பேசுன நீ மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உன்னை நான் எச்சரிக்குறேன். நான் சொல்றது புரியுதா? இன்னும் ஒரு வார்த்தை அவனை பத்தி பேசுனேனா உன்னை நான் கொன்னு போட்டுடுவேன். உன்னை கொன்னுடுவேன்! உன்னை கொன்னுடுவேன்! உன்னை கொன்னுடுவேன்!
(கண்மூடித்தனமான
ஆக்ரோஷத்துடன் சாந்தி செவிலியைத் தாக்குவதற்குப் பாய்கிறாள். செவிலி உதவிக்காக
அலறுவதை கேட்டு தாதி அங்கு ஓடி வருகிறாள். ஒத்துழைக்க மறுத்து திமிறிக்கொண்டிருந்த
சாந்தியை இருவரும் முழு பலத்துடன் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கின்றனர். அவர்கள்
மேடையை விட்டு வெளியேறுகின்றனர். மருத்துவர் மேடையில் நுழைந்து தனது பையை மேஜையில்
வைக்கிறார். பீடத்தின் மேல் ஏறி நின்று தனது கைக்குட்டையால் நெற்றியில் இருக்கும்
வியர்வையை துடைத்துக்கொள்கிறார்.)



கருத்துகள்
கருத்துரையிடுக